Wednesday, July 28, 2010

47. விண்வெளி கற்கள் (Asteroids) பற்றி பைபிளில் உண்டா?

பைபிளில் "வெளிப்படுத்தல்" என்ற புத்தகத்தில் இனி நடக்கவிருக்கும் அநேக காரியங்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. கீழே வாசிப்போம்:

வெளி 8:8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று

- இங்கே விண்வெளி மலை ஒன்று கடலில் விழுவதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

வெளி 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

- இங்கே ஒரு Meteor-shower போன்ற ஒரு நிகழ்வு. மரத்தின் காய்கள் உதிருவதுபோல என்பதால் அது எரி/வால் நட்சத்திரத்திலிருந்து எப்படி பொறிகற்கள் விழுமோ அது போன்ற ஒரு சம்பவமாயிருக்கலாம், எரிகற்கள் அல்லது நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதறலாயிருக்கலாம்.

வெளி 8:10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

- இங்கே விண்வெளியிலிருந்து வந்து பூமியில் விழுந்து 33% சேதமடையும் என்று பெரிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வருங்கால நிகழ்ச்சிகளை பயமுறுத்தும் வகையில் விஞ்ஞானமும் சில உண்மைகளை கண்டுபிடித்து சொல்கின்றது. ஆனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இவ்வளவு பெரிய சேதம் வரும் என்பதை
இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.

இன்று (28 ஜூலை 2010) வந்த செய்தி:
மாபெரும் விண்வெளி-கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இது
இன்னும் 172 வருடத்தில் பூமியில் மோதும் சாத்தியம் உள்ளது என்று நாசா சொன்னது. (http://www.csmonitor.com/Science/Cool-Astronomy/2010/0728/Huge-asteroid-on-possible-collision-course-with-Earth-172-years-from-now)

இந்த விண்வெளி-கல் அல்லது விண்வெளி-மலை என்பது பூமியில் மோத சாத்தியங்கள் 1/1000 அதாவது ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு. மோதும் வருடம் கி.பி. 2182. இந்த விண்வெளிகல்லுக்கு 1999-RQ36 என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இது பெரிய வெண்வெளி மலையாகும். நமக்கு இன்னும் 172 வருடங்கள் இருக்கின்றன. இதற்குள் ஏதேனும் செய்யவேண்டும் என்கின்றனர்.

பயப்படத்தேவையில்லை என்றும், தேதி தெரிந்தாலும் அதற்கு இன்னும் 172 வருடங்களுக்குள்ளாக அல்ல என்கின்றனர். இதன் நீளம் 560 மீட்டர் அதாவது அரைக்கிலோமீட்டருக்கும் சற்றே அதிகம். எனவே இது விளையாட்டாக கிடப்பில் வைக்கும் விஷயமில்லை.


இப்படிப்பட்ட ஒரு ஏவுகணை பூமியை தாக்கினால் அங்கே பல மைல்கள் அளவுக்கு பள்ளத்தாக்கு உண்டாகும். ஒரு நகரத்தையே அழித்து, அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு பாதிப்பு இருக்கும்.

ஒரு [நல்ல] செய்தி என்னவெனில் இது கி.பி. 2182ல் தான் இது நடக்கவுள்ளது. இதற்குள் நாம் சில உபாயதந்திரங்களை (strategy) கண்டுபிடிக்கவேண்டும். இந்த விண்வெளி கல்லானது 1999ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை "ஒரு ஆபத்தையுண்டாக்கும் விண்வெளிக் கல்" என "அப்பொல்லோ வகை" யில் பிரித்தனர். ஏனெனில் இதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் அப்போல்லோ போல வருவதாக இருக்கிறதே என அப்போது நினைத்ததால்.

ஸ்பெயினிலும், இத்தாலியிலும், கலிஃபோரினியாவிலுள்ள ஆய்வகங்களிலும் கணினியைப் பயன்படுத்தி ஒரு மாடல் தயார்செய்து அதின் பாதையை துல்லியமாக முன்னறிவிக்கின்றனர். இவர்களது வெளியீடுகள் அறிவியல் பத்திரிக்கையான இக்காரஸ்( Icarus)ல் வந்துள்ளன.

இதின் சுற்றுப்பாதையை கிட்டத்தட்ட நன்றாகவே அறிந்திருக்கிறோம். 290 முறை கண்களால் காட்சியும், 13 முறை ரேடார் கொண்டு அளவிட்டும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சூரியனைச் சுற்ற 14 மாதங்கள் எடுக்கின்றது. இருப்பினும் சூரியனிலிருந்து வெளிவரும் வெளிச்சத்தின் விசை இதுபோன்ற விண்வெளிகற்களின் சுற்றுப்பாதையின்மீது சிறிது அநிச்சயங்களை (uncertainty) உண்டாக்குகின்றன.

வேல்லடோலிட் பல்கலைகழகத்திலிருந்து மரியா யூகேனியா சான்சாதுரியோ (
Maria Eugenia Sansaturio) என்பவர்: "இந்த 1999-RQ36 தாக்கத்துக்கான மொத்த நிகழ்தகவு(probability) 0.00092 அதாவது சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்கு என்கிறார். ஆனால் இதில் 2182ல் இது நடைபெற நிகழ்தகவு 0.00054 அதாவது மொத்த நிகழ்தகவில் பாதிக்கு மேல் என்பது ஆச்சாரியமாகும்.

இதற்கு முன்பே விஞ்ஞானிகள் OSIRIS-REx என்ற விண்வெளிகலத்தை அனுப்பி பரிசோதனைக்காக சில துண்டுகளை சேகரிக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தனர். நாசாவைச் சேர்ந்த பில் கட்லிப் என்பவர், "இந்த விண்வெளிக்கற்கள் என்பவை நமது சூரியக்குடும்பம் பிறக்கும் முன்பே இருந்த காலக் குப்பிகள். அப்படிப்பட்ட ஒரு தூய கற்துண்டின் விலையை சாதாரணமாக மதிப்பிடமுடியாது" என்றார்.

இதற்கு முன்னே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லியிருந்த இன்னொரு 300 மீட்டர் நீளமுள்ள அபோஃபிஸ் (Apophis)விண்வெளிக்கல் என்பது இன்னும் 30 வருடத்தில் பூமியை நோக்கி வரும் என்ற பழைய செய்தியில், தற்போது அதினால் உண்டாகும் அபாயத்தைக் குறைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை 13ம் தேதி ஏப்ரல் மாதம் 2029ம் வருடம் அது நம்முடைய தொலைக்காட்சி செயற்கைகோள்கள் பறக்கும் உயரத்தைவிட அருகில் அதாவது பூமியிலிருந்து 18300 மைல் தொலைவில் நம்மை நோக்கிவந்து இடிக்காமல் குறிதவறும், அதன்பின்பு 7 வருடங்கள் கழித்து 2036ம் வருடம் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு குறிதவறுமா இல்லையா என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துக்கொண்டு இருக்கின்றனர். எனவெ வெள்ளி 13, ஏப்ரல் 2029 அன்று மோதலில் நிகழ்தகவு 1/45000 எனபதிலிருந்து 1/250000 என குறைத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாமோ, தேவனுக்கு பயந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்வோமாக.

சங்கீதம் 33:9 "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" என்பதை மனதில் கொள்வோம்

-

Thursday, July 22, 2010

46. பைபிளில் பொட்டு வைப்பது, தாலி பற்றி சொல்லப்பட்டுள்ளதா? அதற்கு அர்த்தம் உண்டா, பொட்டு வைக்கலாமா?
பைபிளில் பொட்டுவைக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படவில்லை. தாலியும் இல்லை. ஆனால் நிச்சயம் செய்தபின்பு திருமணம் செய்ததாக வாசிக்கிறோம். நிச்சயம் செய்பவர் தன் காலிலுள்ள ஒரு செறுப்பைக் கழற்றி கொடுத்ததாக "ரூத்" 4ம் அதிகாரத்தில் படிக்கிறோம். இந்த நிச்சயம் செய்யும் பழக்கம் யூதர்களிடமிருந்துதான் இந்தியாவுக்கு வந்தது.

அக்காலத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தில் தாலி கட்டும் பழக்கமில்லை. ஆம் இது உண்மை. பின்புதான் மஞ்சள் கயிறு அடையாளமாக வந்தது. வெளிநாட்டவர் நம் நாட்டில் புகுந்து அராஜகம் செய்ய ஆரம்பித்தபோது, தமிழ்ப்பெண்கள் தாங்களுக்கென ஒரு வேலி என்று தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்திய அடையாளம் மஞ்சள் கயிறு. (அப்போது மஞ்சளும் கயிறும் சுலபமாக கிடைத்ததால். வேறு மாநிலங்களில் கறுப்பு-பாசி என்று...). திருமணமாகதவர்களிலும் சிலர் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு தாங்களே தங்கள் கழுத்துகளில் மஞ்சள் கயிறுகளைக் கட்டினர் என்றும் சொல்லப்படுகின்றது. இப்படி வந்த தற்காப்பு வேலிதான் தாலி. எனவே வேற்றான் ஒருவன், ஒரு பெண்ணைக்கண்டு அவள் திருமணம் ஆனவளா இல்லையா என அடையாளம் கண்டுகொள்ளவே தாலி வந்தது. பின்பு அதுவே நாளடைவில் பழக்கத்தில் வந்தது. தாலிக்கும் எந்த மதத்துக்கும் சம்பந்தமில்லை. எப்போது திருமணத்தன்று ஒரு அர்ச்சகர் (புரோகிதர்) மற்றும் தெய்வங்கள் வர ஆரம்பித்ததோ அன்றுமுதல் அது அந்த மதத்துடன் கலக்க ஆரம்பித்தது. ஆண்களும் தாலி கட்டவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கும் திருமணமாயிற்று என்று சொல்லமுடியும் என்று ஒரு கூட்டம் பெண்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதுவும் சரிதானே?

தமிழ்நாட்டில் அதற்கு முன்பு ஒரு வீரசாகசம் செய்து பெண்ணை மணக்கும் பழக்கம்தான் இருந்தது. இப்பழக்கம் இருந்ததற்கு அடையாளமாக சில இடங்களில் காளையை அடக்குவது என்ற நிகழ்ச்சியைக் காணலாம். இன்றும் சில இடங்களில் பொங்கல் பண்டிகையில் காளை மாடுகளை அவிழ்த்து தெருவில் ஓடவிட்டு இளைஞர்கள் பாய்ந்து பிடிப்பதும் காயமடைவதும் காணமுடிகிறது.

இந்துக்கள் பொட்டுவைக்க காரணம் உண்டு. அதற்கு புராணக்கதைகள் உண்டு. இணையதளத்தில் எடுத்தபகுதி (சாய்ந்த எழுத்துக்களில்): "பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவன் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை) தரவேண்டும் என சிவன் கேட்கிறான். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவனின் நெற்றியில் வைக்கிறாள். அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது. ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. தமிழர் பயன்படுத்தும் தாலியானது இரண்டு புலிப்பற்களை பொன் தகட்டால் கோர்த்தது போலிருக்கும். பண்டைநாளில் மணமகன் தானே கொன்ற புலியிடமிருந்து எடுத்துவந்த பற்களிரண்டைப் பொன் தகட்டில் கோர்த்துத் திருமண நாளிலே அதை மணமகள் கழுத்தில் கட்டும் வழக்கம் தமிழரிடையில் - குறிப்பாக, குறிஞ்சிநில மக்களிடையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது."

இப்போது அநேகர் அழகுக்காக பொட்டுவைக்கின்றனர். பூவும் தலைமுடி நாறாமல் மணம் வீசத்தான். ஆனால் இப்போது அவர்களே மல்லிகைவைத்தால் பேய் பிடிக்கும் என்று நம்புகிற அளவுக்கு போய்விட்டனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பதில்லை. பைபிளில் பொட்டு மற்றும் நெற்றியில் திலகமிடுதல் என்று ஏதும் இல்லை. எசேக்கியேல் 9ம் அதிகாரத்தில் கர்த்தர் "நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்". இங்கே அவர்கள் நெற்றியில் அடையாளமிடு என்று சொல்லப்பட்டுள்ளது, அது அவர்களை வேறுபிரித்துக்காட்டத்தான். இனி வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையிலும் "நெற்றியிலோ" அல்லது "கையிலோ" அவன் ஒரு அடையாளத்தை (முத்திரையை) தரிக்கும்படி கட்டளையிடுவான் என்று வெளிப்படுத்தலில் வாசிக்கிறோம். இது ஒரு மீச்சிறிய-சாதனமாக(micro-chip) இருக்கலாம் என்று அநேகர் சொல்கின்றனர்.

ஒரு தீவிலோ ஒரு நாட்டிலோ அவர்கள் திருமணமானவர்கள் என்பதற்கு பொட்டுவைப்பதுதான் அடையாளம், வேறு அடையாளமே இல்லை என்று இருப்பின் பொட்டுவைக்கலாம். ஏனென்றால் ஒருவர் திருமணமானவர் என எப்படி சொல்வது? அப்படின்னா அங்கே திருமணமான ஆண்களும் பொட்டுவைக்கவேண்டுமல்லவா?

பொட்டு வைப்பது பொதுவாக இந்துக்களின் பழக்கவழக்கம் என்ற கருத்து நிலவுவதால், கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்காமல் இருப்பதன் மூலம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.

பூஜையிலிருந்து வரும் குங்குமம், விபூதியும் வேண்டாம். அறிவியல் பார்வையிலும் பொட்டுவைக்க வேண்டாம் என கூறுகின்றனர், ஏனெனில் அதிலுள்ள வேதிப்பொருட்கள் (chemicals) சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்துமாம்.
பைபிளில் கண்களுக்கு மையிடுதல் பற்றி மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. [1]
II இராஜாக்கள் 9:30ல் யேசபேல் என்பவள் (வேதத்தில் கூறப்பட்டுள்ள மிகவும் மோசமான மனைவிகளில் முதல்வரிசையில் ஒருத்தி) தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்தாள்; ஆனால் அன்றே அவள் செத்தாள் என்று அதே அதிகாரத்தில் வாசிக்கிறோம். [2] எரேமியா 4:30ல் பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். [3] எசேக்கியேல் 23:40லும் வாசிக்கிறோம். இங்கே மையிடும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு தீமையாகவே முடிகிறது. நன்மை என்று சொல்லப்படவில்லை.

ஒருவர்: பொட்டுவைக்க, கண்களிலிட, ஏன்... செய்வினை, பில்லிசூனியம் செய்யவும்கூட "மை" பயன்படுத்துகிறார்கள். எனவே பாதுகாப்பா இருக்கனும்னு நான் அந்த-மை பக்கம் போறதே இல்லீங்க என்கிறார்.

பொட்டு ஒரு அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது அது தேவையில்லை. கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பது இல்லை. பைபிளில் அந்தப் பழக்கம் இல்லை. எனவே பொட்டுவைக்கவேண்டாம்.

நல்லவேளை.... ஒட்டகச் சிவிங்கியும் (
பொட்டக சிவிங்கி !), சிறுத்தையும் இவ்வளவு பொட்டு வைத்திருக்கே அதுமட்டும் சரியான்னு விவாதிக்காம போனாங்களே!


Friday, July 16, 2010

45. இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பின்பு இந்துக்கள் நடத்தும் சடங்குகளுக்கு போகலாமா?

முன்னுரை:
மதம் எல்லாம் மனிதன் வகுத்தவை. மனம் மாறுதல் தான் சரி.

இந்துக்கள் சொல்கின்றனர்: "யாரும் இந்துவாக மாறமுடியாது. வெறொரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து மதத்தைத் தழுவினாலும் அவர் இந்துவல்ல. இந்துவாக இருக்க ஒருவர் இந்துகுடும்பத்திலேயே பிறந்திருக்கவேண்டும்". ஆனால் கிறிஸ்துவை பின்பற்றியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது என்று அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கிறோம். யூதர்களின் கலாச்சாரத்திலும் தாய் யூத குலத்தில் பிறந்து வந்திருக்கவேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் யூதர்களாவார்கள் என்கின்றனர் யூதர்கள். இதோ சான்றிதழ் வைத்திருக்கிறேன், ஆகையால்
நான் கிறிஸ்தவன், எனவே பரலோகம் போவேன் என்று சொல்லக்கூடாது. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தும் கிறிஸ்துவை அறியாமலேயே (இரட்சிக்கப்படாமலே) இந்த உலகத்தார் போல் வாழ்ந்தால் பரலோகம் செல்ல இயலாது. நீங்கள் ஒருவேளை சபைக்கு வாரந்தோறும் செல்பவாராயிருந்தாலும் (அற்புதம் அடையாளம் செய்தாலும்), தனிப்பட்ட வாழ்க்கையில் பாவத்தில் ஜீவித்தால் பரலோகம் செல்லமுடியாது. தேவன் அவர்களை நோக்கி "அக்கிரமச் செய்கைகாரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள், நான் உங்களை அறியேன்" என்று அந்நாளில் சொல்லுவார். உண்மையான கிறிஸ்தவன் என்பதற்கு நம் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்து சொன்ன கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்று இயேசு சொன்னார். எனவே,

- நாம் இரட்சிக்கப்பட்டிருக்கவேண்டும். (பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுவது)
- ஞானஸ்நானம் பெற்றிருக்கவேண்டும். (ஜலத்தினால் பிறப்பது)
- பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்றிருக்கவேண்டும். (ஆவியினால் பிறப்பது)
- [இவ்வுலகத்தில்] வேறுபாட்டின் ஜீவியம் செய்யவேண்டும்.
- பரிசுத்த ஜீவியம் செய்து பூரணத்தை நோக்கி கடந்து செல்லவேண்டும்.
ஏனெனில் தேவன் சொன்னார்: "நான் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்".
இன்னும் அநேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

பதில்:
இந்துக்கள் நடத்தும் "சடங்கு"களுக்கு போகலாமா என்ற கேள்விக்கு பதில்: சடங்கு சம்பிரதாயங்களில் பங்குபெறக்கூடாது. அது தேவனுக்கு பிரியமானது அல்ல. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள். எனவே அதை மாசுபடுத்தவேண்டாம். இங்கு வேறுபாட்டின் ஜீவியம் என்ற பகுதி பதிலாக அமைகின்றது. வேதத்திலிருந்து இரண்டு பகுதிகளை வாசிப்போம்.

II கொரி 6:14-17 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

I கொரி 8:5-12. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

எனவே நாம் பாவஞ்செய்கிறவர்களாவோம்.

இந்த சடங்குகளில் எல்லாம் மற்ற தெய்வங்களும், பூஜைகளும், மந்திரங்களும், செய்முறைகளும் வருவதால் நாம் ஒதுங்கியிருக்கவேண்டும்.
திருமணங்களுக்குச் செல்லலாம், அங்கே விருந்தில் சாப்பிடலாம். ஆனால் அங்கு விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவற்றை வாங்கவும் கூடாது, புசிக்கவும் கூடாது, புரோதகர் ஓதிய அரிசி மஞ்சள் வாங்கக்கூடாது. நலங்குகளில் (நலுங்கு) பங்குபெறவும் கூடாது. அங்கே சந்தனம் பூசி, ஆரத்தி, குத்துவிளக்கு ஏற்றி எடுக்கப்படுகின்றது. "நாங்கள் இப்போது அதெல்லாம் செய்யக்கூடாது. கோபித்துக்கொள்ளாதீர்கள்." என்று அன்புடன் எடுத்துச்சொல்லி ஒதுங்கி விடுங்கள். இதற்கெல்லாம் அவர்கள் ஒரு காரணம் சொல்லி உங்களை இழுப்பார்கள், இடம் கொடாதிருங்கள்.
ஒருவர் இறந்துவிட்டால் அங்கே செல்லலாம். ஆனால் அங்கு செய்யப்படும் சடங்கு, பூஜைகளில் பங்குபெறவேண்டாம். அதன் பின் நடைபெறும் கருமாதி எல்லாம் போகக்கூடாது. அங்கே வேட்டி, புடவை, சாராயம், பீடி, சுருட்டு என்று வாங்கி போய் வைக்கும் பழக்கம் அநேக இடங்களில் உண்டு. பூப்புநீராட்டு விழா, காது குத்து எல்லாம் பங்குபெறத் தேவையில்லை. நாங்கள் இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்றியதால் இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளையும் சொந்தக்காரர்களால் சந்தித்தோம். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக அமையாமல் பலமுறை அவர்களால் வெறுக்கப்படும்படி அமையும். மனிதனை விட தேவனுக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும். இதை அநேகருக்கு ஏற்றுக்கொள்ளுவது என்பது சிரமமாக இருக்கலாம்.
அதற்காக குழந்தை பிறந்த நாள், வேலையிலிருந்து ஓய்வு பெறும் தினம் என்பவைக்கு போகமல் இருக்காதீர்கள். சென்று வாழ்த்து சொல்லுங்கள்.

உபாகமம் 20:18 அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

இயேசு: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்றார். (
மத்தேயு 7:13, 14)

அவர்கள் வீட்டுக்கு போகலாம், ஆனால் சடங்கு, சாஸ்திரங்களில் பங்குபெறவேண்டாம்.
_____________________________
(Added Aug 16, 2010) :

"கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" என்பதில் நீங்கள் அந்நிய தெய்வங்களுடைய கோயில் திருவிழாக்களுக்கு உதவும்போது நீங்கள் அவர்களுடன் பங்குபெறுகின்றீர்கள் என்று ஆகின்றது. எனவே அப்படிச் செய்யாமல் ஏழைகள், திக்கற்றபிள்ளைகள், விதவைகள் என்பவர்களுக்கு உதவுங்கள்.

"உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்" என்பதால் அவர்களுடைய விக்கிரக வழிபாடுகளுக்கும், பாவங்களுக்கும் உடன்படலாம் என்று அர்த்தமல்ல. சங்கீதம் 1:1ல் ".... பாவிகளுடைய வழியில் நில்லாமலும்....." என்றும் நீதி 1:15ல் "என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக." என்றும்,
நீதி 4:14, 15ல் "துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ" என்றும் வாசிக்கிறோம்.


Monday, July 12, 2010

44. காயீன், ஆபேல், சேத் ஆகியோருக்கு மனைவி யார்?Incest (முறைகேடு) இல்லாமல் எப்படி ஆதாமுக்குப் பின்பு நாம் பிறந்திருக்கக்கூடும்?
பதில்:

ஆதாம் ஏவாள் ஆகியோருக்கு பிறந்தவர்கள் காயீன், ஆபேல் மற்றும் சேத். இவர்களில் ஆபேல் காயீனால் கொல்லப்பட்டான். ஆதாமின் பிள்ளைகள் இவ்விருவர் மட்டுமல்ல.

ஆதியாகமம் 5:3,4 அதன் பின்பு ஆதாம் நூற்று முப்பது (130) வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் (800) உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாமின் வயது 930. (130 + 800)

இங்கே அவன் குமாரரையும் குமாரத்திகளையும் அடுத்த எண்ணூறு வருடங்களில் (இரட்டையர்கள் என்ற பிள்ளைகளை கணக்கில் சேர்க்காவிட்டாலும்) சுமாராக 300க்கும் அதிகமான பிள்ளைகளை பெற்றிருக்கக்கூடும். இதற்கிடையே 100 வயதாகிய அந்த பிள்ளைகளின் குடும்பங்களில் பிறந்த அநேக பிள்ளைகளை கணக்கில் கொண்டுவந்தால் எண்ணிக்கை இன்னும் கூடும். ஆதாமும் ஏவாளும் ஒரு குடும்பத்தையல்ல, ஒரு கிராமத்தையே உருவாக்கியிருந்திருக்கக்கூடும்.

ஆதியாகமம் 4: 17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள். ஆரம்பத்தில் இவர்கள் தங்கள் சகோதரிகளையே தங்களுக்கு துணையாக வைத்திருந்தார்கள். அவர்கள் மூலமாக பிள்ளைகளைப் பெற்றார்கள். அப்போது சகோதரிகளை துணையாக வைக்கக்கூடாது என்ற கட்டளை இல்லை. பிற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை துணையாக வைத்துக்கொண்டதெல்லாம் அநேக குடும்பங்கள் வந்த பிறகு மனிதனுக்கு உண்டான ஆசைகள் அல்லது யோசனைகள்.

உலகம் ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட பின்பு நோவாவின் குடும்பத்தார் 8 பேர்; அவன் சந்ததியில் வந்தவர்கள் தங்கள் சகோதரிகளை (cousins) மனைவியாக கொண்டார்கள். ஆபிரகாம் தன்னுடைய சகோதரியை (half-sister) விவாகம் செய்தான் என்ற ஒரு சம்பவம் இதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆதியாகமம் 20:12 அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்! நான் இந்த வசனத்தை வாசித்தபோதுதான் காயீன், சேத் இவர்களின் மனைவி யார் என்று எனக்கு விளக்கம் கிடைத்தது. இன்னொரு நெருங்கிய உறவு மனைவி உதாரணம்: அம்ராம் தன் அத்தை யோகபாத்தை விவாகம் பண்ணினான். இவர்களுக்கு பிறந்தவர்கள்தான் மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்கள்.

இப்படி நெருங்கின உறவினரை மனைவியாக வைத்திருக்கும் பழக்கம் கானானியர் மற்றும் எகிப்தியர்களிடம் இருந்தது என்று எண்ணாகமம் 18:3ல் வாசிக்கிறோம். எகிப்தில் பார்வோன்கள் தங்கள் சகோதரிகளை மனைவியாக வைத்திருந்தார்கள் என்று வரலாற்றை படித்தால் நாம் அறிவோம்.

எண் 18:3 நீங்கள் குடியிருந்த "எகிப்து தேசத்தாருடைய" செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற "கானான் தேசத்தாருடைய" செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும் இருக்கவேண்டும் என்று தேவன் சொன்னார்.
Incest - Incest (முறைகேடு) is sexual intercourse between close relatives.கீழே சொல்லப்பட்ட உறவிடம் திருமணமோ, பாலியலோ கூடாது.
No Marriage or sexual relationship with the following:
(எண்ணாகமம் 18, உபாகமம் 27 லில் இருந்து)
* ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை. * உன் தகப்பனையாவது உன் தாயையாவது. * உன் தகப்பனுடைய மனைவியை. [இரண்டு மனைவிகள் இருப்பின்] * உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை. * உன் குமாரனுடைய மகள்; உன் குமாரத்தியினுடைய மகள். [பேரன் பேர்த்திகள்/ தாத்தா பாட்டி] * உன் தகப்பனுடைய [இரண்டாவது] மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தி. * உன் தகப்பனுடைய சகோதரி [அத்தை]. * உன் தாயினுடைய சகோதரியை [பெரியம்மா, சின்னம்மா] * உன் தகப்பனுடைய சகோதரன் (பெரியப்பா/ சித்தப்பா) அல்லது இவரின் மனைவி. * உன் மருமகள் / மருமகன் (மாமனார், மாமியார்). * உன் சகோதரனுடைய மனைவியை [கொளுந்துயாள்]. * ஒரு ஸ்திரீயையும் மற்றும் அவள் மகளையும். * ஒரு ஸ்திரீயுடைய குமாரரின் மகளையும், அவளுடைய குமாரத்தியின் மகளையும். * உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் விவாகம்பண்ணலாகாது. * பிறனுடைய மனைவியுடன். * ஆணோடு ஒரு ஆண் /பெண்ணோடு ஒரு பெண். * ஒரு மிருகத்துடன்.

மேலே சொல்லப்பட்ட முறைகேடுகளை (Incest) கானானியர், எகிப்தியர் செய்துவந்தனர்.
இன்றும் உலகில் சில இடங்களில் அறியாமலோ அறிந்தோ நடக்கிறது.

உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு இரட்டையர்கள் பிறந்தபோது அவர்களை தத்தெடுத்து சென்றுவிட்டனர் இரு குடும்பத்தினர். அநேக வருடங்கள் கழித்து இவ்விருவரும் தற்செயலாய் சந்தித்தபோது ஈர்க்கப்பட்டனர். இருவரும் பின்பு திருமணம் செய்துகொண்டனர். பின்புதான் தாங்கள் இருவரும் சகோதர சகோதரிகள் என்று தெரிய வந்தது. பின்பு இதை சிலர் நீதிமன்றத்துக்கு புகார் கொடுக்க நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ரத்துசெய்தது. இந்த செய்தி ஜனவரி 11, 2008ம் வருடம் வெளியானது. (http://www.nydailynews.com/news/national/2008/01/11/2008-01-11_twin_brother_sister_marry_one_another.html)

இன்னொரு சம்பவத்தில் ஒரு தாய் ஒரு மகனைப் பெற்றிருந்தாள். பின்பு அந்த கணவனை பிரிந்தாள். அந்த மகன் அந்த கணவருடன் வாழ்ந்தான். பின்பு இந்த தாய் வேறொருவருடன் வாழ்ந்து ஒரு பெண்ணைப் பெற்றாள். அந்த மகனும் (28 வயது) மகளும் (20 வயது) ஒருவரை ஒருவர் சந்தித்தபோது ஈர்க்கப்பட்டு மூன்றே வாரத்தில் திருமணமும் செய்துகொண்டனர். ஒருநாள் அவர்களது தாயார் 2006ம் வருடம் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். நீதிமன்றமும் இவர்களைப்பிரித்து தீர்ப்பு சொல்லிற்று. இந்த செய்தி பிப்ரவரி 18, 2008ல் வெளிவந்தது. (http://www.dailymail.co.uk/femail/article-514809/How-fell-love-brother-sister-grew-apart-met-20s.html) .

இப்படிப்பட்ட முறைகேடுகளை இந்தக் காலத்தில் செய்தால் அது பாவமாகும். திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வேசித்தனம் என்றழைக்கப்படும். அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

ஆபிரகாம் மற்றும் அம்ராம் (மோசேயின் தந்தை) ஆகியோர் மேலே கூறப்பட்டுள்ளவைகளில் அடங்குவர். ஆனால் மோசே சீனாய் மலையில்தான் இப்படிப்பட்ட கட்டளைகளைப் பெற்றான். எனவே அதற்கு முன் வந்த கணக்கில் அடங்காத பலரை "தேவனின் கட்டளையை மீறியவர்கள்" என்று சேர்க்கமுடியாது. ஏனெனில்
இவர்கள் நியாயப்பிரமாண காலத்துக்கு முன் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு அப்படிப்பட்ட பிரமாணம் கொடுக்கப்படவில்லை. தேவனும் "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்" என்கிறார்.
தற்போது, மருத்துவத்துறையில் நெருங்கிய உறவை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஊனத்துடன் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் யூதர்களோ, "தேவன் எங்களுக்கு இதை எப்போதோ சொல்லிவிட்டார்" சொல்லி என்று புன்னகை பூக்கின்றனர்.

மருத்துவத்துறை சொல்லும் நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் வரும் குறைகள்:
* Reduced fertility both in litter size and sperm viability (விந்துவின் அளவிலும் விரையத்திலும் குறைவு ஏற்படுவதால் பிள்ளைப்பேறு குறைவு)
* Increased genetic disorders ( ஊனம் உயர்வு)
* Fluctuating facial asymmetry (முகம் ஒத்திசைவாயிராமல்/ இணக்கமாயிராதிருத்தல்)
* Lower birth rate (பிறப்பின் விகிதம் குறைவு)
* Higher infant mortality (சிறுவயதில் மரணம் என்பது உயர்வு)
* Slower growth rate (வளர்ச்சி விகிதம் குறைவு)
* Smaller adult size (குள்ளமான ஆள்)
* Loss of immune system function (நோய் எதிர்ப்புசக்தி இழப்பு)

நெருங்கிய உறவில் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரேவகையான/பொதுவான மரபணுவின் (genes)
அளவு விகிதம்:* Identical twins → 50%
* Father/daughter – mother/son – brother/sister → 25%* Half-brother/half-sister → 12.5%
* Uncle/niece – aunt/nephew → 12.5%
* Double first cousins → 12.5%
* Half-uncle/niece → 6.25%
* First cousins → 6.25%
* First cousins once removed – half-first cousins → 3.125%
* Second cousins – first cousins twice removed → 1.5625%
* Second cousins once removed – half-second cousins → .78125%
நாம் இப்படியாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது. நீ இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளையானால் நீ ஒரு தேவனுடைய பிள்ளையைத்தான் திருமணம் செய்யவேண்டும். அதில் ஜாதி எல்லாம் பார்க்கக்கூடாது. நாம் அனைவரும் இரட்சிக்கப்பட்டபின்பு பரிசுத்த ஜாதி (Holy Nation) என்று அழைக்கப்படுகிறோம். (1 பேதுரு 2:9). இந்தியாவில்தான் இந்த ஜாதிப்பிரச்சனைகள்... 

காயீனுக்கும், சேத்துக்கும் மனைவிகள் அவர்களது சகோதரிகளே....
சிந்தனைக்கு:
சரி... நாம் 100 வயதில் இப்படி சுருக்கமும், பார்வை மங்கியும், கோலூன்றியும் இருக்கிறோமே. 900 வயதில் அவர்கள் பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார்கள்?

ஒரு மனிதரைப் பார்த்தால் நாம் சுமாராக இவருக்கு வயது 40 இருக்கும் என்றும் நம்மால் சொல்லமுடிகிறது. தற்போது நடைபெறும் இந்த கி.பி. 2010 வருடத்தில் 40 வயதுள்ள ஒரு மனிதரை நாம் அப்படியே ஆதாமின் காலத்தில் கொண்டுபோய் நிறுத்தினோம் என்றால் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள், "இதோ அங்கே நிற்கின்றார் பாருங்க அவருக்கு சுமாரா 500 வயசு இருக்கும்" என்று சொல்வார்கள். "அடடா... 400 வயசுதான் ஆகிறது, இந்த வாலிப வயசு பையன் இறந்துவிட்டாரே" என்றும் சொல்வார்கள்.
900 வயதுள்ளவர் இப்போதுள்ள 100 வயது மனிதர்போல் இருந்திருப்பார். ஏனெனில் அக்காலத்தில் உடலின் முதுமை என்னும் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது.
.