skip to main |
skip to sidebar
கேள்வி:
நாள் நட்சத்திரம் பார்ப்பது சரியா, தவறா? ஏன்னா இயேசு பிறந்ததை நட்சத்திரத்தைப் பார்த்துதான் அந்த காலத்துல சாஸ்திரிகள் கண்டுபிடிச்சாங்க. இப்போதும் சூரியன், சந்திரன் வைத்து நாம் பகல் இரவு கண்டுபிடிக்கிறோம். எனவே நாள் நட்சத்திரம் பார்ப்பது சரியா, தவறா?
பதில்: தவறு!
பகலில் மழை, மேகமூட்டம் என்று நாள்முழுதும் சூரியன் தென்படாமல் இருந்தாலும் நம்மால் பகல் என்று சொல்லமுடிகின்றது. பகலிலும் சில நாட்களில் நாம் சந்திரனை தெளிவாக வானில் பார்க்கிறோம். இருந்தாலும் நமக்கு இது இரவு அல்ல என்று சொல்லமுடிகின்றது. நிலவு இல்லாவிட்டாலும் இருட்டாருயிக்கும்போது இரவு என்று சொல்லமுடிகின்றது. எனவே இந்த கேள்விக்கு பகல், இரவு என்று கண்டுபிடிக்கிறோம் என்று கொண்டுவருவது தவறான உதாரணம் (குறிப்பு: சூரியன் ஒரு நட்சத்திரம் அதாவது விண்மீன். இது நம்மனைவருக்கும் தெரிந்த ஒன்று) வானத்திலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் அவர் பெயர் சொல்லி அழைக்கிறார். ஆதாம் பூமியிலுள்ள மிருகங்களுக்கும் ஜீவராசிகளுக்கும் பேரிட்டான். ஆனால் விண்வெளியில் (Space) உள்ளவைகளுக்கு ஏற்கனவே தேவன் பேரிட்டாயிற்று.
சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். The heaven, even the heavens, are the LORD'S: but the earth hath he given to the children of men.
எனவே அந்த நட்சத்திரங்களின் பெயர்களை தேவன் மனிதனுக்கு சொன்னாலே அல்லாமல் மனிதன் கண்டுபிடிக்க முடியாது. இன்று மனிதன் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தான் ஒரு பெயர் இட்டு தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் சூதுவாதுகளை செய்கிறான்.
[1] அப்படியானால் இயேசு பிறந்த போது ஒரு நட்சத்திரம் கிழக்கே (Middle East) தோன்றியது என்று சொல்கின்றார்களே என்ற சம்பவத்திற்கு வருவோம். ஒரு அடையாளம் வானத்தில் காணப்பட்டது. ஏனெனில் இங்கே வானத்தையும் பூமியையும் படைத்த குமாரனாகிய தேவனே (God the Son) பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறார் என்பதால். இந்த சாஸ்திரிகள் (Wise men- ஞானிகள்) லூக்கா 2ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள சிமியோன்போல கிறிஸ்து பிறப்பார் என்று முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் (ஆதியாகமம், ஏசாயா... ) நிறைவேறுதலுக்காக காத்திருந்திருக்கக்கூடும்.இவர்கள் ஜோசியர்கள் அல்ல. ஏனெனில் தேவன் ஜோசியர்களை வெறுக்கிறார், அப்படிப்பட்டவர்களுக்கு உத்தரவு கொடார் என்று வாசிக்கிறோம் (உபா 18:14), எனவே இவர்கள் நிச்சயமாக தேவனுக்கு பயந்த ஒரு கூட்டத்தாராக இருக்கவேண்டும். இவர்களுக்கு தேவன் ஏற்கனவே ஒரு நட்சத்திரம் தோன்றுவதுதான் அடையாளம் என்று சொல்லியிருக்கக்கூடும். அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்பது என் விளக்கம்.
சரி, ஆச்சரியமான விஷயம் ஒன்று இங்கே சொல்லப்பட்டுள்ளது. என்ன அது?
"மத்தேயு 2: 2-10 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்...ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."
ஒரு நட்சத்திரத்தைக் கண்டு எருசலேமுக்கு வருகின்றார்கள். ஏரோது ராஜாவிடம் "யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே?" என்று கேட்கிறார்கள். காரணம் ராஜாவாக பிறப்பவர் அரமனையில்தானே பிறக்கவேண்டும் என்ற இயல்பான யோசனை. ஆனால் அங்கே பிறக்கவில்லை. இந்த சாஸ்திரிகளுடைய கணிப்பு தவறாகிப்போனது. பின்பு இந்த நட்சத்திரம் இயேசு பிறந்த இடம்வரைக்கும் முன்னே வழிகாட்டிபோல் சென்றது. பிறகு இடம் வந்தபின்பு நின்று விட்டது.
இப்படி ஒரு பாதை (orbit) ஒரு நட்சத்திரத்துக்கு இருக்க வாய்ப்பிருக்குமா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு ஆள் வழிகாட்டிபோல் மனிதன்/மிருகம் நடந்து செல்லும் வேகத்திற்கு கூடவே சென்றது, இடம் வந்த பின்பு நின்றது என வாசிக்கிறோம். [ வாதத்திற்காக அது ஒரு விஷேசமான தேவதூதனாகக்கூட இருந்திருக்கலாம். ஒருதூதனின் மகிமையால் பூமி முழுதும் பிரகாசித்தது என்று வெளிப்படுத்தலில் படிக்கிறோம். ]
[2] நாள் நட்சத்திரம் பார்க்கலாமா?
உபாகமம் 18:14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
ஏசாயா 2:6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.
மீகா 5:12 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்;
ஏசாயா 47:13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.
தானியேல் 2:27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
எனவே நாள், நட்சத்திரம் பார்ப்பது தவறு.
- வானத்தில் ஒரு அடையாளம் தோன்றும் என்று தேவன் சொன்னால், அந்த அடையாளம் எப்பொழுது தோன்றும் என்று காத்திருப்பது வேறு. உதாரணமாக அவரைக்குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்... அவர் ஒலிவ மலையில் வந்து இறங்குவார்... சந்திரன் இரத்தம்போல மாறும் என அடையாளங்கள்.
- இந்த நட்சத்திரம் இவன் வீட்டுக்கு ஓரத்துல எட்டிப் பாக்குது, அவன் இவனை பாக்கிறான். இந்த ராகு, கேது ஒன்னுக்கொன்னு முறைக்கிறது, அப்படி இல்லாம இருக்கனும் என்றால் பரிகாரம் பண்ணுங்கோ, " அதுக்கு இவ்வளவு செலவாகும்" என்று பிழைப்புக்காக காசு தேடும் கூட்டம் வேறு.
ஒரு செய்தி:இத்தனை வருடங்களாக விஞ்ஞானிகளின் உண்மை சமன்பாடுகள் தவிடுபொடியாய் போயின என்று ஐரோப்பாவில் ஒரு துகள்-முடுக்கி (particle accelerator, collider) என்னும் ஒரு சோதனையின் மூலம் கடந்த வாரம் செய்தி வந்தது. அதாவது matter, anti-matter இரண்டும் மோதினால் இல்லாமல் போகும் என்னும் தங்களுடைய அடிப்படையான சமன்பாடு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி இவ்விரண்டும் மோதியும் matter அங்கே பிழைக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளார்கள். (http://www.csmonitor.com/Science/2010/0519/Matter-vs.-antimatter-particle-accelerator-experiment-says-matter-wins)
"வானங்கள் கர்த்தருடையவைகள்" என்று சங்கீதம் 115:16ல் வாசிக்கிறோம். இருப்பினும் மனிதன் குறைகுடம் போல் தழும்பி அங்குள்ளவைகளை வைத்து ஜோதிடம், எதிர்காலம் கணிப்பது என்பது தவறு மற்றும் முட்டாள்தனம். இன்னும் விஞ்ஞானத்தில் சில பிழைகள் இனிமேலும் நிரூபிக்கப்படும். ஜோசியம், கணிப்பு என்பவையும் பிழை என தேவன் உங்களுக்கு ஒரு நாள் காட்டுவார்.
மேலும் தானியேலில் "மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும் (wise men), குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது" என்று வாசித்தபிறகு மறைபொருளுக்காக இப்படி ஜோசியர், நாள் பார்ப்பவர் என்று தேடிப் போவது தவறேயாகும்! அவர்களால் மறைபொருளை அறிவிக்க முடியாது!!
(இயேசு பிறந்தபோது வந்த ஞானிகள் ஜோதிடர்கள் அல்ல.)
.
updated: Aug 3, 2017
[Part I]
முதலாவதாக தேவன் ஆதாம், ஏவாளுடன் தினமும் ஏதேன் தோட்டத்தில் பகலின் குளிர்ச்சியான வேளையிலே வந்து பேசினார் என்று வாசிக்கிறோம். மனிதன் பாவம் செய்தபின்பு அந்த பேசும் இடைவெளியானது அதிகரித்துவிட்டது. அதன் பின்பு தினந்தோறும் என்று இல்லாமல் சிலசமயங்களில் மட்டும் பேசியதாக அறிகிறோம்.

[1] சத்தம் கேட்கும்: தம்முடைய தீர்க்கதரிசிகளுடன் இப்படியாக பேசுவார். இதற்கு மோசே, சாமுவேல், நாத்தான், ஏசாயா, எரேமியா என்று சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே எல்லாம் தேவன் இவர்களுடன் ஒலி (audio) வடிவில் பேசியிருக்கிறார். பாவம், அக்கிரமம் என்ற சுவர் நமது காதுகளை செவிடாக்கி விடுகின்றது, தேவனையும் நம்மையும் பிரிக்கின்றது (ஏசா 59:2). பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லையே. உதாரணமாக செல்லிடைபேசியானது (Cell-Phone) நிலையத்தூணிலிருந்து (Cell Tower) தூரம் செல்ல செல்ல அது பெறும் சமிக்ஞை (Received signal) யின் வலுவானது குறைந்து கொண்டே போகும். மற்றவர் பேசுவது ஒரு தொலைவுக்குமேல் சென்றபின்பு கேட்க வாய்ப்பில்லை. அப்படியே பாவம் நம்மையும் தேவனையும் பிரிக்கின்றது. மேலும் தேவன் யாருக்கு தம்மை வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறாரோ அவர்களுடன் பேசுகிறார். எலியாவுடன் பேசினார் அங்கே பூமியதிர்ச்சி, அக்கினி என்று முதலில், பின்பு ஒரு அமைதி, அந்த அமைதியில் ஒரு மெல்லிய குரலில் தேவன் எலியாவிடம் பேசினார். மோசேயுடன் முகமுகமாய் பேசினார். நானும் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறேன். நாம் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியால் வல்லமையாக நிரப்பப்படுவோம் அப்போது மெல்லிய சத்தம் கேட்கும். தலைபேசியில் (Head-phone) கேட்பதுபோன்று ஒரு சத்தம் கேட்கும். தேவன் பேசுவது வேத வசனத்துடன் ஒத்துப்போகும். அடிக்கடி அவர் ஒலி வடிவில் பேசுவதில்லை. எனவே அப்படி பேசினால்தான் நம்புவேன் என்று ஒற்றைக்காலில் நிற்பது மிகவும் தவறு.
[2] ஆனால் யோசேப்பிடம் தேவன் ஒலி வடிவில் பேசவில்லை. சொப்பனத்தின்மூலமாக (கனவு-dream) பேசியிருக்கிறார். அப்படி யாரிடம் பேசுகின்றாரோ அவர்களுக்கு அந்த சொப்பனத்தின் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளும்படியான சக்தியும் அநேக இடங்களில் கொடுக்கப்படுகின்றது.
என்னுடன் சொப்பனத்தில் அநேக முறை பேசியிருக்கிறார். சிறுவயதில் (பள்ளி செல்லும் பருவம்) நான் ஒரு கனவு கண்டேன் அதில் நான் ஆற்றில் நீந்துவது போலவும், ஆனால்அந்த ஆற்றின் போக்கில் இழுத்துக்கொண்டு போவதுபோலவும் கண்டு பயந்து விழித்துக்கொண்டேன். தேவன்தான் என்னுடன் பேசினார் என்று சில காலம் கழித்துதான் எனக்கு புரிந்தது; ஏனெனில் அதே சொப்பனமானது திரும்பவும் எனக்கு வந்தது. அப்போது அதின் அர்த்தமும் எனக்குள்ளே யாரோ விளக்கம் கொடுத்ததுபோல் தெரிந்துவிட்டது. ஆறு+நீர் = உலகம். நான் இந்த உலகத்தின் இழுப்பினால் போகிறேன், எதிர் நீச்சல் போட்டாலும் நான் ஜெயிக்கவில்லை. அச்சிறு வயதில் தொலைக்காட்சிபெட்டிக்கு முன் உட்கார்ந்து அதின் வலையில் அகப்பட்ட நிலையிலிருந்தேன். எனவே உலகத்தின் காரியங்களை விட்டு விலகவேண்டும் என்பதை தேவன் அந்த சொப்பனத்தில் எனக்கு சொல்கிறார். இல்லாவிடில் கண்களின் இச்சை என்ற உலகத்தின் ஆற்றில் மூழ்கி சீக்கிரத்தில் ஆவிக்குரிய நிலையில் இறந்து விடும் நிலை வரும் என்பதுஆகும். எனவே நீங்கள் தொலைக்காட்சியில் சினிமா, தொடர்கள் என்று அதில் இழுத்து கட்டப்பட்டவராயின் தேவன் இப்போது உங்களை இந்தக் கட்டுரையின் மூலம் எச்சரிக்கிறார் என்று புரிந்துகொள்ளுங்கள்.
யோபு 33:15-17ல் "கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்" என வாசிக்கிறோம்.
ஒரு நாள் நான் கல்லூரியில் பயிலும் நாட்களில் ஒரு பரீட்சைக்காக (semester exam) இரவில் வீட்டிலே படித்துக்கொண்டிருந்தேன். அன்று இரவு ஒரு சொப்பனம் கண்டேன், அந்த கனவு மிகவும் பிரகாசமாயிருந்தது. "எங்களுடன் படிக்கும் ஒரு மாணவியின் தந்தை இறந்துவிட்டதால் தேர்வு இல்லையாம்" . காலையில் புறப்பட்டு தேர்வுக்கு சென்றேன். கனவில் கண்ட அதே மாணவியின் தந்தை இறந்துவிட்டார் எனவே அநேக மாணவர்கள் அவளின் ஊருக்கு சென்றுவிட்டனர் என்று கல்லூரியில் ஒருவர் சொன்னதைக் கேட்டு எனக்கு பயங்கர அதிர்ச்சி.
சிலமுறை இயேசுவே சொப்பனத்தில் தோன்றி பேசியிருக்கிறார். என்னுடைய சில ஜெபத்தின் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் இங்கே குறிப்பிட இயலாது. முக்கியமாக தேவன் சொப்பனத்தின்மூலம் பேசும்போது அந்த சொப்பனம் பிரகாசமாயிருக்கும் . இதை நான் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
[3] தரிசனத்தின்மூலமாக (vision) தேவன் பேசுகிறார். சொப்பனம் (dream) என்பது நாம் தூங்கும்போது. தரிசனம் (vision) என்பது நாம் ஜெபம் செய்யும்போது அல்லது நாம் தூங்காமல் இருக்கும்போது. அப்போஸ்தலனாகிய பவுலுக்கு (சவுல்) இயேசு தரிசனம் அளிக்கிறார். சவுலே சவுலே முள்ளில் உதைப்பது உனக்கு கடினமாம் என்றும் அங்கே அவனுக்கு சத்தம் கேட்கின்றது. மேலும் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அநேகருக்கு தரிசனமானார் என்று நாம் வாசிக்கிறோம். தானியேல் என்பவன் சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுகிறான். அநேக தரிசனங்களைக் காண்கிறான். அப்போஸ்தலனாகிய யோவான் பத்மு தீவில் ஆவிக்குள்ளாகி தரிசனங்களைக் காண்கிறான். ஆபிரகாமுக்கு, ஈசாக்கு ஆகியோருக்கு தேவன் தரிசனமாகி பேசினார். யாக்கோபுக்கு சொப்பனம், தரிசனம் என்றும் தேவனுடன் போராடி ஜெயித்தவன் என்றும் அவனுடைய அனுபவங்களைப் பார்க்கிறோம். எசேக்கியேல் அநேக தரிசனங்களை கண்டுள்ளார் என்று சொல்லிக்கோண்டே போகலாம்.
நான் கண்ட முதலாவது தரிசனம் நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஆகும். அப்போதுதான் என் தந்தை இயேசுவை ஏற்றுக்கொண்டிருந்தார். நாங்களோ இந்துக்களாயிருந்தோம். எங்களை ஒரு வீட்டில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். அன்று நானும் கண்களை மூடி மற்றவர்களைப் போல ஜெபம் செய்தேன். அப்போதுதான் தரிசனம் என்றால் என்ன என்று எனக்கு தெரிந்தது. கண்களை மூடியிருந்தாலும் ஒரு காட்சி தெரிகிறது. "ஒரு சிறு பூங்கா இருந்தது, அங்கே ஒரு மரத்தாலான ஒரு சிலுவை உள்ளது. அதில் யாரோ ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு தொங்குகின்றார். அவர் சட்டை அணிந்திருக்கவில்லை. அவரது தலை கீழே சாய்ந்ததுபோல் இருக்கின்றது. ஆனால் அவர் சிலுவையிலே உயிரோடிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பூங்காவிலே நான் சிறுவனாக மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன்". ஜெபத்தை நடத்தியவர் யாரேனும் தரிசனம் கண்டால் சொல்லுங்கள் அதற்கு விளக்கம் நான் தருகிறேன் என்றார். சிலர் அவர்கள் கண்ட தரிசனத்தை சொன்னார்கள். கடைசியாக சிறுவனாகிய நான் சொன்னேன். அப்போது அவர் அதின் அர்த்தத்தைச் சொன்னார். இன்னும் அந்த தரிசனம் இப்போதுதான் பார்த்ததுபோல் உள்ளது.
[4] ஆவியானவர் பேசினார் என்று அப்போஸ்தல நடபடிகளில் வாசிக்கிறோம். யோவான் ஸ்நானகனுடன் பேசினார் (யோவான் 1:33). பிலிப்பு என்பவனுடன் பேசினார் (அப் 8:29). பேதுரு ஜெபிக்கும்போதும் ஆவியானவர் பேசினார் என்று வாசிக்கிறோம் (அப் 10:19). அகபு என்பவன் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவர் சொல்லுகிறார் என்று சொன்னான். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுவதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என வெளிப்படுத்தல் முழுவதும் வாசிக்கிறோம்.
என்னுடைய ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும் (செவிகொடுக்கும்) என்று வாசிக்கிறோம். மேலும் "வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" என்று ஏசாயா 30:21ல் வாசிக்கிறோம். எனவே உங்கள் காதுகளில் கேட்கும் சத்தமாக இருக்கும்.
[5] பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதல்: "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்" என்று யோவான் 16:8ல் வாசிக்கிறோம். சில சமயங்களில் கோபத்தில் ஏதேனும் வார்த்தைகளைச் சொல்ல நினைக்கும் போது "அப்படிச் சொன்னால் அது நன்றாயிருக்காது. மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற பரிசுத்த ஆவியினை துக்கப்படுத்தாதே. இதைச் செய்யாதே. அங்கே போகாதே" என்று நமக்கு உணர்த்துவது ஆவியானவர். எனவே இதுவும் தேவன் நம்மோடு பேசுவது ஆகும். இப்படி கெட்டவழிகளில் இருந்து நாம் விலகவேண்டும் என்று தேவன் காட்டும்போது கீழ்ப்படிதல் அவசியமாகும்.
[6] மேலும் யாரெல்லாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகின்றார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் என்று ரோமர் 8:14ல் வாசிக்கிறோம். தேவன் உங்களை சில அனுபவங்கள்மூலம் கொண்டுசெல்லும்போது அது தேவன்தான் வேறு சாத்தியமே இல்லை என்று உங்களுக்கே புரியும் . என்னுடைய ஒரு சிறு அனுபவத்தை கேள்விபதில் 35ல் (ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் சம்பவம்) குறிப்பிட்டுள்ளேன்.
[7] வேதத்தை வாசிக்கும்போது ஒரு வசனம் குதித்து எழும் அல்லது இருதயத்தைக் குத்தும் அல்லது தொடும். வசனத்தை வாசிக்கும்போது நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள். உங்களுடைய தேடலுக்கு அது பதிலாக அமையும். அப்படியென்றால் தேவன் உங்களுடன் வசனத்தின் மூலமாக பேசியுள்ளார். (எபி 4:12 தேவனுடைய வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று வாசிக்கிறோம்). என்னிடம் அநேகமுறை தேவன் வசனத்தின் மூலம் பேசியிருக்கிறார்.ஒருமுறை தேவன் எனக்கு பதில் தர தாமதித்தபோது முட்டாள்தனமாக ஒரு காரியத்தை செய்துவிட்டு தேவன்பேரில் கோபமாயிருந்தேன். நீர் பதில் அளிக்கவில்லை எனவேதான் இப்படி செய்ய நேர்ந்தது என்று தேவனை குறை சொல்ல ஆரம்பித்தேன். அநேக மாதங்களாக தேவன்மேல் ஒரு வருத்தம். ஒருநாள் தேவன் என்னுடன் நீதிமொழிகள் 19:3 மூலம் "மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்." என்று வசனத்துடன் பேசியபோது ஈட்டியால் என் இருதயம் குத்தி பிளக்கப்பட்டதுபோல் இருந்தது. மிகவும் துக்கமடைந்து தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். அதுபோல் கருக்குள்ள பட்டயம் வேறு எதுவும் இல்லை.
ஒருமுறை நண்பர் ஒருவர்: வேறு வேலைதேடுகிறேன். வேறு நிறுவனத்துக்கு போகலாம் என்று இருக்கிறேன் மாதக்கணக்காக முயற்சிக்கிறேன் ஒன்றும் வாய்க்கவில்லை; மிகவும் சோர்வுற்றிருக்கிறேன் என்றார். ஒருநாள் வழக்கமான உபவாசதினம் அன்று வீட்டில் அவருக்காக ஜெபித்துவிட்டு வேதத்தில் தற்செயலாக மீகா 2ம் அதிகாரம் வாசிக்கும்போது குறிப்பாக 7ம் வசனம் வாசிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் என்மேல் வல்லமையாய் இறங்கியதால் நான் அந்நியபாஷை பேசினேன். உடனே அந்த வசனத்தை அவருக்குதொலைபேசியில் தெரிவித்தேன். அந்த வசனத்தில் அவருடைய பெயரும் வருகின்றது; வாசித்த அவர் தொலைபேசியில் அழுதுவிட்டார். அடுத்த வாரமே அவர் விரும்பிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இப்படி பல சம்பவங்கள் சொல்ல முடியும்.
தேவன் வசனத்தின் மூலம் பேசுகிறார். வேறுபுத்தகங்கள் மூலமாக பேசுவதில்லை.
[8] தீர்க்கதரிசனத்தின் மூலமாக தேவன் பேசுவார். ஒரு சபைக்குச் சென்றால் தீர்க்கதரிசனம் பெற்ற ஒருவர் ஆவியினால் நிறைந்து சொல்லும் தீர்க்கதரிசனம் தேவன் சிலருடன் பேசுவது ஆகும். என்னுடன் தேவன் அப்படியாக அநேக முறை தீர்க்கதரிசனத்தின்மூலம் பேசியுள்ளார். ஒரு முறை சபைக்கு சென்று தேவன் என்ன எல்லாரோடும் பேசுகிறார் என்னோடு பேசுவதில்லையே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அதே ஜெபக்கூட்டத்தில் ஒரு சகோதரி தீர்க்கதரிசனத்தில், "நான் உன்னோடு பேசுவேன். நீ எனக்காக தனியே என் சமுகத்தில் காத்திரு என்று தேவன் சொல்கிறார்" என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார். ஆம் என்னிடத்தில் உள்ள குறை அதுதான், எனக்கு கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்க பொறுமையில்லை. காத்திருப்பதைக்குறித்து இங்கே:
1910ல் சகோதரன் B. C. பெவிங்க்டன் என்பவர் ஒன்பது வருடம் படுக்கையில் வியாதியாயிருந்த ஒரு சகோதரிக்காக ஜெபிக்கும்படி அழைக்கப்பட்டார். அவள் இயேசுவை ஏற்றுக்கொண்ட தேவனுடைய பிள்ளை, அவள் கணவரோ மோசமான அவிசுவாசி. அவள் கணவர் வயல்வெளியிலிருந்து வந்து ஜெபித்துக்கொண்டிருந்த அவரை வீட்டைவிட்டு வெளியேபோகச்சொல்லி துரத்திவிட்டார். அவரோ வெளியே சென்று சற்றே தள்ளி இருந்த வைக்கோல்போரில் மறைந்துகொண்டு இருந்து 72 மணிநேரம் தொடர்ந்து தேவன் சுகமாக்கவேண்டும் என்று ஜெபம் செய்துகொண்டிருந்தார். தேவன் அவளை சுகமாக்கிய சில மணி நேரத்தில் அவள் எழுந்து தன் கணவனுக்காக சமையல் செய்து தண்ணீர்பிடிக்க ஒரு வாளியையும் எடுத்துக்கொண்டு அழைக்க வெளியே சென்றாள். அவள் கணவர் அவளைக் கண்டு மிகவும் இருதயம் நொறுங்கியவராகி, பெவிங்க்டனைத்தேடி வைக்கோல்போரில் இருப்பதைக் கண்டுபிடித்து ஆண்டவரை ஏற்றுக்கொண்டார் என்று வாசித்தேன். (மேலும் 5 நாள், 9 நாள் என்று பல வியாதியஸ்தருக்காக ஜெபங்கள் செய்துள்ளார். இவருடைய புத்தகத்தை வாசியுங்கள். REMARKABLE INCIDENTS And MODERN MIRACLES Through PRAYER And FAITH By G. C. Bevington)
எனவே தேவ சமுகத்தில் காத்திருக்க பழகவேண்டும்.
[9] சபையில் போதகர்கள் செய்யும் பிரசங்கம் மூலம் தேவன் பேசுகிறார். சபையில் சிலருடன் தேவன் பேசியிருக்கிறார் என்று சிலசமயம் அந்த போதகருக்குக்கூட தெரியாமல் இருக்கலாம். சில சம்பவங்களையோ வசனங்களையோ அவர் எடுத்து பேசுவது உங்கள் கவனத்தை ஈர்த்து தேவன் நம்முடன் இதை சொல்லுகிறார் அல்லது எச்சரிக்கிறார் என்று புரியும்.
[10] தேவதூதர்களை அவர் அனுப்பி உங்களுக்கு சில விஷயங்களைச் சொல்லுவார். இதற்கு வேதத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் அநேகம். சிம்சோனின் பெற்றோர். கிதியோன். யோசேப்பு (மரியாள்), கொர்நேலியு, தானியேல்... என சொல்லலாம். என்னுடைய தந்தையும் பகலில் இரு தூதர்கள் வந்து தனது நெற்றியில் ஏதோ எழுதிவிட்டு அப்படியே சிறகடிக்காமல் மேலே சென்றார்கள். அவர்கள் தன்னைத் தொட்டபோது ஐஸ்பெட்டியில் வைத்ததுபோல் சரீரம் இருந்தது என்று சொன்னார். இந்த நூற்றாண்டிலும் அநேகர் தேவதூதர்களை சந்திக்கின்றனர்!
[11] சமீபத்தில் (05/26/2010 அதிகாலை) ஒரு சொப்பனத்தில் வேறுவிதமாய் தேவன் பேசினார். அப்பொழுது நான் தூங்கினாலும் ஆவிக்குள்ளானேன். ஒரு சத்தம் கேட்டது, அதை நானும் பின்பு தீர்க்கதரிசனமாக சத்தமாக உரைக்கிறேன், எல்லாமே சொப்பனத்தில் தான் . "நான் அவனை விடுதலையாக்குவேன். அவனுடைய காயத்தைக் கட்டுவேன். அமர்ந்த தண்ணீரண்டைக்கு வழி நடத்துவேன்" என்று பேசினார். இந்த பதில் சில வருடங்கள் ஜெபித்து காத்திருந்தபின்பு தேவன் எனக்கு கொடுத்தார்; சகோதரன் ஒருவருக்கான பதில் இது. எனவே சொப்பனத்தில் ஒருவர் தீர்க்கதரிசனம் உரைப்பதும் அப்போது நீங்களும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதும் தேவன் பேசும் வழிகளில் ஒன்று.
[12] கடைசியாக: உங்கள் குடும்பத்தில் ஒருவர் இயல்பாக சொல்லும் சில வார்த்தைகள் தேவன் பேசியது போல் இருந்தது என்று பின்புதான் புரியும். உதாரணமாக இயேசுவானவர் காட்டிக்கொடுக்கப்படும் முன்பு பிரதான ஆசாரியனாகிய காய்பா என்பவன் தற்செயலாய் அநேகருக்காக ஒருவர் மரிப்பது நலமாயிருக்கும் என்று சொன்னான். அவன் தற்செயலாய் சொல்லவில்லை என்று பின்பு யோவான் எழுதுகிறார். எனவே காரியங்கள் நடந்து நிறைவேறிய பின்பே நமக்கு தெரியவரும்.
முக்கியமாக:
தேவன் பேசுவதை சிலர் தவறாக புரிந்துகொள்கின்றார்கள். நாம் பரிசுத்த ஆவியில் நிரம்பியிருக்கும்போது தேவன் ஒலி வடிவில் பேசுவது எப்போதும் சரியாகவே இருக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். சிலர் வசனங்களையோ, மற்றவர் சொல்வதையோ கேட்டு தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புகளுண்டு. எனவே மிகவும் கவனமாயிருக்கவேண்டும். நாம் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது.
[Part II]
தேவன்தான் பேசினாரா?
[அ] தேவன் உண்மையுள்ளவர்:உபாகமம் 4:35-38 கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது. உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
அவர் நமது பிதாக்களிடத்தில் அன்புகூர்ந்தார். இன்றும் இயேசுவானவர் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
[ஆ] இருதயம் தத்தளிக்கிறது. அவர் பேசுவதை தவிர்க்க முடியாது.
யோபு 37:1-4 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள். அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
[இ] அவருடைய சத்தத்துக்கு ஒரு இனிமை உண்டு.
தேவன் பேசும்போது ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கும். அவருடைய சத்தம் இனிமையாகும். உன்னதப்பாட்டு 2:1ல் O my dove, that art in the clefts of the rock, in the secret places of the stairs, let me see thy countenance, let me hear thy voice; for sweet is thy voice, and thy countenance is comely. உமது சத்தம் இனிமையானது என்று பரிசுத்த ஆவியானவரை இங்கு புறாவுக்கு ஒப்பிடலாம். புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்கினார் என்று படிக்கிறோம் .
[ஈ] அவருடைய சத்தம் சமாதானம் தரும்.
சங்கீதம் 85:8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
[உ] வேதாகமத்திலுள்ள வசனத்துக்கு மாறாக அல்லது விரோதமாக பேசமாட்டார்.
அங்கே போய் திருடு என்றோ, கெட்டவார்த்தையால் அவனைத் திட்டு என்றோ, இந்த பாவத்தைச் செய் என்றோ, நீ ஒரு தற்கொலைபடைபோல் வெடித்துச் சிதறு அப்போது பரலோகம் கிடைக்கும் என்றோ என்றோ தேவன் ஒருபோதும் பேசமாட்டார். அப்படி வஞ்சித்து பேசுபவை எல்லாம் பிசாசுதான்.
[ஊ] தேவன் ஒரு புத்தசாமியாரைக் கொண்டோ, இந்து சாமியாரைக்கொண்டோ, திரித்துவ தேவனை மறுதலிக்கும் ஒரு கூட்டத்தாரைக்கொண்டோ, Mormons என்ற அமெரிக்காவில் வசிக்கும் ஒரு கூட்டத்தாரைக்கொண்டோ, யெகோவா சாட்சிகள் கூட்டத்தாரைக்கொண்டோ, பகவத் கீதையைக் கொண்டோ, குறான் கொண்டோ, உபநிஷத் மூலமோ பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள்/அவைகள் இயேசு கிறிஸ்துவை [குமாரனாகிய] நித்திய தேவன் என்று நம்புவதில்லை. இப்படி தேவனை மறுதலிக்கும் சமயத்தாரைக்கொண்டு தேவன் பேசுவதில்லை. சில சமயங்களில் இவர்கள் மூலமாய் பிசாசானவன் பாதி உண்மையையும் பாதி பொய்யும் கலந்து பேசுவதால் அநேகர் வஞ்சிக்கப்படுகின்றனர்.
தேவன் எப்படி பேசுகிறார் என்பதைப் பார்க்கிலும், நாம் அதற்கு எப்படி கீழ்ப்படிகிறோம் என்பது முக்கியமாகும்.
"ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது" என்னும் இயேசுவின் வசனங்கள் எப்போதும் காதுகளில் ஒலிக்கட்டும்.
நானும் தேவன் எப்படியெல்லாம் பேசுவார் என்று தேடி ஒரு காலத்தில் அலைந்தேன். இதை வாசிக்கும் உங்களுக்கு இந்த பதில் நிச்சயமாக பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.
உண்மையான கடவுள் (தேவன்) யார்?
இயேசு சொன்னார் "மாற்கு 12:25 மரித்தோர் உயிரோடே எழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்;"
இப்படிப்பட்ட வசனத்திலிருந்து நாமெல்லாரும் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல சிறகுகளோடு இருப்போம் என்று அநேகர் நமக்கு சொல்லியுள்ளார்கள். பறக்க சிறகு தேவை என நினைப்பதால், இப்படிப்பட்ட எண்ணம் எழலாம். ஆனால் விமானம் பறந்து செல்கின்றது, சிறகடிக்காமல்! நானும் விமானத்தில் பறந்து சென்றேன், பறவைபோல் சிறகடிக்காமல். தேவதூதர்களும் சிறகடிக்காமல் அப்படியே மேலே செல்கின்றனர் என்ற உண்மைச் சம்பவமும் உண்டு. எனவே பறக்க சிறகுகளை அடிக்கவேண்டும் என்று சொல்ல இயலாது.
முதலாவதாக மேலே ஒரு கேள்வி: ஒரு பெண் ஏழு சகோதரர்களுக்கு மனைவியாயிருந்தாள். உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள்? என்று இயேசுவிடம் கேட்டார்கள். ஒரு மிகவும் நல்ல கேள்வி இங்கே கேட்கப்பட்டுள்ளது! இயேசு கணவன்-மனைவி என்னும் பந்தம் பரலோகத்தில் இல்லை என்று சொல்வதற்காக அவர்கள் தேவதூதர்களைப்போல கொள்வனையும் கொடுப்பனையும் (getting married) இல்லாமல் இருப்பார்கள் என்றார். இங்கே தேவதூதர்களின் ஒரு தன்மை (திருமணமின்றி இருப்பது) சொல்லப்பட்டுள்ளது. எனவே தேவதூதர்களின் மற்ற அம்சங்களை நமது இந்த கேள்விக்கு பதிலாக ஒப்பிடக்கூடாது.
இரண்டாவதாக இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவருக்கு சிறகுகள் இல்லை. அவர் பூட்டியிருந்த அறைக்குள் பிரவேசிக்கும் சரீரத்தைக்கொண்டிருந்தார். அவர் ஒலிவமலையிலிருந்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று அப்போஸ்தலருடைய நடபடிகளில் வாசிக்கிறோம்.
இன்னொரு வசனம் ஆதியாகமத்தில்: தேவன் மனிதனை தன்னுடைய சாயலின்படியே உண்டாக்கினார். அங்கே சிறகு இல்லை. "அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்" என்றும் "பரலோகத்தில் நாம் அவரைபோல இருப்போம்" என்றும் வேதத்தில் சொல்லப்படுள்ளது. எனவே நமக்கு அநேகமாக சிறகுகள் இருக்காது என்று நான் நினைக்கின்றேன்.
(இருந்தாலும் சந்தோஷம்தான்)
.