Thursday, August 17, 2017

78. உண்மையான தெய்வம் (கடவுள்) யார்? எப்படி அறிந்துகொள்வது?

கேள்வி: உண்மையான தெய்வம் (கடவுள்) யார்? பல தெய்வங்கள் உள்ளனவே. எப்படி அறிந்துகொள்வேன்? என் தேடலுக்கு என்ன பதில்? உங்கள் அனுபவம் என்ன?

பதில்: உண்மையான தேவன் "இயேசு கிறிஸ்து".  ஆம், இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். (I யோவான் 5:20).  இதைக்கேட்டவுடனே அநேகருக்கு கோபம் வரலாம்.  உங்களைப்போன்றவர்தான் தேவனுக்குத் தேவை. ஏனெனில் நீங்கள் இதை ஒத்துக்கொள்ளாத ஒருவாரக இருக்கலாம். ஒருவர் தனது வாழ்வில் கேட்கும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று இந்த கேள்வியாகும். நானும் இந்த கேள்வியைக் கேட்டிருக்கிறேன். ஏனெனில் உண்மையான தெய்வம் மட்டுமே நம்மை மோட்சத்திற்கு கொண்டுசெல்லமுடியும் என்ற காரணத்தால், அவர் யார் என்று கண்டறிவது மிகமிக முக்கியம்.

எங்களுடைய சொந்த அனுபவத்தையே இங்கு சுருக்கமாக சொல்கிறேன். நாங்கள் இந்துக்களாயிருந்தோம். மிகவும் வைராக்கியமாக பல தெய்வங்களை வணங்கினோம். அப்பா இராணுவத்தில் ஐந்து வருடம் வட மாநிலங்களில் இருந்தவர். குடிப்பார், புகைபிடிப்பார். அப்போது வீட்டில் அடிக்கடி சண்டையும் சமாதானமும் இல்லாமல் இருந்தது. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் கோவிலுக்கு சென்று மலர்களை வைத்தும், சிலைகளை நீராட்டியும், கொளுக்கட்டை காணிக்கை செலுத்தியும், காக்காவுக்கு சாப்பாடு கொடுத்து பின் சாப்பிடுதல், சனி விரதம், திருநீறு, பட்டை என்று விக்கிரகங்களை வழிபடுவதில் மிகவும் மும்முரமாக  இருந்தோம். தந்தை பூசாரி போல் உடையணிந்து இந்து தெய்வங்களுக்கு வீட்டிலேயே தேங்காய் உடைத்து பூசை எல்லாம் செய்தார். எப்படியாவது எங்க குடும்பம் சந்தோஷமாக நல்லா இருக்கவேண்டும் என்று வேண்டுவார். ஆனால் பலனில்லை. ஏன் நான் வேண்டியது கிடைக்கவில்லை என்று பல தடவை நினைத்தார். சில பரிகாரம் செய்யவேண்டும் என்று யாரோ சொல்ல, எனக்கு மொட்டையடித்து,  பால்குடம் சுமந்து நடந்தே சென்று வேண்டுதல் செய்தும் மாற்றம் ஏதும் இல்லை. அவர் சிறப்பாக மேடைகளில் பேசும் திறன் கொண்டவர். அக்காலத்திலே சற்றே அரசியல் கூட்டங்களுக்கு எல்லாம் செல்வார், சினிமா ஒன்றும் விட்டதில்லை. அவருடைய கிராமமே அவரை பாராட்டும் வகையில் ஒரு நாடகத்துக்கு செந்தமிழில் வசனம் எழுதி அதிலும் சிறப்பாக நடித்தார். பல இடங்களில் சந்தோஷம் சமாதானம் தேடி அலைந்தார். நிம்மதி இல்லை. உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் காணப்படுவதை உணர்ந்தார். அப்போது என் தந்தை கேட்ட  கேள்வியும் இதே போன்றதுதான். நான் உண்மையான தெய்வத்தைதான் வணங்குகிறேனா? இந்த உலகில் உள்ள தெய்வங்களில் உண்மையானது யார்? எப்படி அறிந்து கொள்வேன்?  யார் அது என்கிற தேடல் அவருக்கு உண்டானது.

ஒருநாள் அவருடைய அலுவலகத்தில் அவருடன் வேலை செய்த ஒருவர்  நீங்கள்  சிறப்பாக தமிழ் பேசுகிறீர்கள், எல்லாம் சரி, இந்த புத்தகத்தை வாசியுங்கள் என்று "புதிய ஏற்பாடு" என்ற புத்தகத்தை கொடுத்தார். அதை படித்தபோது, இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட இவர் யார்?  குருடரை சுகமாக்கினார், ஊமையை பேசவைத்தார், செத்தவனையே உயிராக்கியிருக்கிறாரே என்று அவரிடம் விசாரித்தார். சுமார் 1978 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு என்பவர் வாழ்ந்தார் என்று சொல்லி பின்பு அவர் நம்முடைய பாவம், தவறுகளுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார். அவர் மூன்றாம் நாளில் உயிரடைந்தார், இன்றும் உயிரோடிருக்கிறார், அவரே மெய்யான தேவன், அவர் சமாதானம் தருவார் என்று சொன்னார். அப்போது என் தந்தை, அப்படியா அவர் உயிரோடிருக்கிறார் என்றால் நான் அவரை பார்க்கவேண்டும், அவரிடம் அழைத்து சென்று காட்டுங்கள் என்று கேட்டார். நீங்கள் அவரை பார்க்கமுடியாது நீங்கள் பாவியாக இருக்கிறீர்கள், உங்கள் பாவங்களை அவருக்கு அறிக்கையிடுங்கள், ஏனெனில் அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே சுவராக உள்ளது. அந்த சுவரைக் கட்டியது நீங்கள்தான்; அதை நீங்கள்தான்  எடுக்கவேண்டும் என்றார். சரி, அதை செய்துவிடுவோம் என்று சொல்லி அவர் தனியே முழங்கால் படியிட்டு தான் செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் மன்னிப்பு கேட்டார். அப்படி செய்யும்போது தான் சிறுவயதுமுதல் செய்த அத்தனை தவறுகளும் அவர் கண்ணுக்கு முன் கொண்டுவரப்பட்டன, அவை ஒவ்வொன்றையும் மன்னியுங்கள் என்று தேவனிடம் அறிக்கையிட்டார். அப்போது அவருடைய மனதின் பாரமெல்லாம் காணாமல்போய் ஒரு சமாதானம் வந்தது. அப்போது இதில் ஏதோ உண்மை உள்ளது என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது.

ஒரு நாள், எனது தந்தையை அவரது நண்பர் சபையில் வருடகடைசி முழு இரவு ஜெபம் நடக்கவுள்ளது, அங்கே பாடல், இசைக்கருவிகள் உண்டு என்று அழைத்துச் சென்றார். உற்சாகத்துடன் அவரும் சென்று ஜனங்களுடன் பங்கேற்றார்.  அங்கே  போதகர் "இயேசு நம் மத்தியில் வந்திருக்கிறார். நாம் எழுந்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்" என்று சொன்னார். அப்போது எனது தந்தை "எங்கே அந்த இயேசு?" என்று மேடை மற்றும் சுற்றி எல்லா பக்கத்திலும் பார்வையை செலுத்தினார். அவர் உண்மையான தேவன் என்கிறார்களே, இங்கே வந்திருக்கிறார் என்று சொல்கிறார்களே, எங்கே, எங்கே அவர் என்று ஆர்வத்துடன் தேடும் போது...

அவருடைய தலைக்கு மேல் ஒரு பெரிதான இடிமுழக்கம் கேட்டது. அண்ணார்ந்து பார்த்தபோது, வானத்திலிருந்து ஒரு ஒளி அவரை நோக்கி வந்தது. அது பிரகாசமாயிருந்தது. அந்த ஒளி  அருகில் வர வர அந்த ஒளியிலே ஒருவர் இருந்தார். அவர் ஒரு ராஜாவைக்காட்டிலும் மேலாக பல நட்சத்திரங்கள் மின்னுவது போல் ஆடை அணிந்திருந்தார். அவருடைய சரீரத்திலிருந்து டியூப் லைட் (குழல் விளக்கு) போல் வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. நமது சரீரம் போல் இல்லை. அவர் சுமார் பத்து அல்லது பதினைந்து அடி உயரத்தில் வந்த பின்பு அப்படியே அந்தரத்தில் நின்றுகொண்டு, புன்னகைத்தபடியே, சிரித்தபடியே, "வா, மகனே, வா...நானே உன்னை உருவாக்கினேன். நீ தேடும் அவர் நானே. நானே மெய்யான தேவன்" என்று சுமார் 30 நிமிடங்கள் இருவரும் உரையாடினர். இந்த உரையாடலின் போது  ஜனங்கள் ஆராதிப்பதை அவர் காணமுடிந்தாலும் அவருடைய பார்வை எல்லாம் இயேசுவின் மேல். உள்ளத்தில் அளவில்லா மகிழ்ச்சியுடன் காலையில் வீட்டிற்கு வந்து அனைத்து சிலைகளையும் படங்களையும் தெருவில் எறிந்து மண் எண்ணையை ஊற்றி எரித்தார். நானும் அம்மாவும் அவரிடம் வாக்குவாதம் செய்தோம். உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கோபப்பட்டு பேசினோம். அவரோ, நான் உண்மையான தேவனை கண்டுபிடித்துவிட்டேன் அவர் என்னோடு பேசினார், நான் அவரோடு பேசினேன். என்னை "மகனே" என்று அழைத்தார். இந்த விக்கிரகங்கள் உண்மையான தெய்வங்கள் அல்ல, இவைகளை நாம் வணங்கக்கூடாது, சிலைகள் பேசுவதில்லை, இயேசு பேசுகிறார் என்று தெளிவுடன் கூறினார். அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது, அவர் குடிப்பதில்லை, புகைப்பதில்லை, அவருடைய குணம் எல்லாம் மாறியது, அவர் புதிய மனிதனாக மாறியதை எந்த விளக்கம் கொண்டும் என்னால் விளக்கமுடியாது.

ஆனால் நானும் எனது அம்மாவும்  எங்கள் தெய்வங்களை விடவில்லை, கோயில்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டுவந்தோம். எனது தந்தையோ எங்களுக்காக ஜெபித்து வந்தார். ஒரு நாள் எனது தாயாரிடம் இயேசு தரிசனமாகினார்.  அப்போது நாங்கள் வணங்கிய தெய்வங்கள் ஆவிகள் போன்று கருப்பான தோற்றத்துடன்  எனது தாயாரிடம்: ஆமாம் அவரே மெய்யான தேவன் என்று சொல்ல, பின்பு இயேசு மறைந்தார். இதன்பின் என் தாயார் முழுதுமாக மாறிப்போக,  நான் நம்பிக்கையில்லாத சிறுவனாக இவர்களுக்கு என்ன ஆனது என்று எண்ணினேன். (ஏனெனில் இந்த விவரங்கள் எனக்கு அப்போது சொல்லப்படவில்லை.)  பல கிறிஸ்தவ சிறுவர்களுடன் பள்ளியில் (4ம் வகுப்பில்) வாக்குவாதமும், இயேசுவை கிண்டலும் செய்பவனாயிருந்தேன். ஒரு  வீட்டில் வாரந்தோறும் ஜெபக்கூட்டம் நடைபெறும்.  நாங்கள் சுமார் 2 கி.மீ. நடந்து அங்கே செல்ல வேண்டும். எனது பெற்றோர் எங்களை அங்கே அழைத்து செல்வது வழக்கம். ஒரு நாள் அங்கே கண்களை மூடி ஜெபிக்கும்போது சிறுவனாகிய நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன். அதில், இயேசுவை சிலுவையில் உயிருடன் அறைந்தவராக கண்டேன். அவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனாகிய என்னை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கே அவருடைய பார்வையில் அன்பும், இரக்கமும் கண்டேன். இப்படியாக மெய்யான தேவனை நாங்கள் கண்டறிந்தோம்.

அனுபவங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப்போடுகின்றன. இப்படிப்பட்ட அனுபவங்கள் மூலம் மெய்யான தெய்வத்தைக் கண்டடைகிறோம். என்னதான் இருந்தாலும், எத்தனைபேர் வந்து சொன்னாலும் ஒருவரால் ஏற்றுக்கொள்வது கடினம். அவர்களுக்கு ஒரு தேவை ஏற்படும்போது, உதாரணமாக வியாதியிலிருந்து விடுதலை, சமாதானம் மற்றும் வாழ்வின் முக்கிய தேவையின் தேடலின்போது, இப்படிப்பட்ட சாட்சிகள், அனுபவங்கள் மூலம் அவர்கள் கடந்து செல்லும்போது மெய்யான தேவனை அறிய வாய்ப்பு கிடைக்கிறது.

எரேமியா 29:13 ல் "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." என்று தேவன் சொல்கிறார்.

இன்றும் இந்தியாவில் அநேகர் தாங்கள் வணங்கும் தெய்வத்தின்மேல் மிகவும் வைராக்கியமாய் இருக்கிறார்கள். இந்த வைராக்கியம் மிகவும் நல்லது. அப்படிப்பட்டவர்கள் மெய்யான தேவனைக் கண்டுபிடிக்கும் செயலில் முழு இருதயத்தோடும் தேடவேண்டும். அப்போது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிச்சயம் வெளிப்படுவார். எதையும் ஆராய்ந்து பார்த்து இது உண்மையா என கண்டறியவேண்டும். சும்மா கடமைக்குத் தேடுகிற எல்லாருக்கும் அல்ல, முழுஇருதயத்தோடும், முழு பாரத்தோடும் தேடுபவர்கள் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் கண்டடைவார்கள். நாம் செல்லும் பாதை சரிதானா என சோதித்துப்பார்க்கவேண்டும். செல்லும்பாதை தவறானால் அந்தப்பாதை முடியும் இடம் நரகம் என்றாகிவிடும். நாம் அங்கே செல்லக்கூடாது.  இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். (மத் 7:13).

நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார். நானும் ஒரு வழி என்று சொல்லவில்லை, நானே வழி என்கிறார். மேலும் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார். இதில் வேறு வழியில்லை என்றாகிறது.

மேலும் நானே  ஆடுகளுக்கு வாசல் என்று கூறி பரலோகம் செல்ல நானே வழி என்பதில் தெளிவாக உள்ளார்.

நானே தேவன், என்னைத்தவிர வேறு தேவன் இல்லை: (பைபிளில்)


ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44:8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

ஏசாயா 45:5
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஏசாயா 45:6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
ஏசாயா 45:21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள் துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.


இயேசுவானவர் பூமியை சிருஷ்டித்தார், அவர் உலகம் தோன்றும் முன்னே இருந்தார் என வேதத்தில் வாசிக்கிறோம். மேலும், இயேசு, தான் தேவன் என்று வெளிப்படையாகச் சொன்னார் (யோவான் 10:33). வருத்தப்பட்டு [பாவ] பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். அவரிடத்தில் நீங்கள் வாருங்கள், உங்கள் வீட்டில் சமாதானம் கிடைக்கும்.

o ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு விலகி தேவனிடத்திற்கு மனந்திரும்ப வேண்டும். (I தெச 1:9).
o உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிடவேண்டும். அப்போது பாவ மன்னிப்பை பெறுவீர்கள். பாவங்களை மன்னிக்க அவர் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது என்று வேதத்தில் வாசிக்கிறோம். பாவத்துடன் ஒருவரும் பரலோகம் செல்ல முடியாது. பாவிகள் நரகத்தில் பங்கடைவார்கள் என்று பைபிளில் உள்ளது.

என்ன வாழ்க்கை இது என்ற சிந்தனை உங்களுக்கு உள்ளதா? வாழ்க்கையில் ஏதோ ஒன்று இல்லாததுபோல் உள்ளதே என்ற எண்ணத்துடன் இருக்கிறீர்களா? உங்களுக்குள்ளே ஒரு வெற்றிடம் காணப்படுகிறதா? அதை நிரப்ப தேவன் ஒருவரால் மட்டுமே முடியும். நீங்கள், இயேசுவிடம் இப்படியாக: நீர் மெய்யான தேவன் என்கிறார்களே, அப்படியானால் நான் அதை நம்பும்படி என்னை வழிநடத்தும், அப்போது மரிக்கும்வரைக்கும் உம்மையே பின்பற்றுவேன், மற்றவர்களுக்கு நற்சாட்சியாயிருப்பேன் என்று கருத்தோடும் உண்மையோடும் ஜெபியுங்கள். உங்களுக்கு நிச்சயம் தேவன் பதில் தருவார்.

குறிப்பாக பூமியிலுள்ள எந்த தெய்வத்தாலும் செய்யமுடியாத காரியத்தை இயேசு ஒருவரால் மட்டுமே செய்யமுடியும். இதன்மூலம் அவரே உண்மையான தேவன் என்று அறிந்துகொள்ளமுடியும். குறிப்பாக அவர் செய்த, இன்றும் செய்கிற அற்புதங்கள்: மருத்துவரால் கைவிடப்பட்டவர்கள் முழுசுகம் பெறுதல், குருடர் பார்வை, பிறவி ஊமை பேசுதல், செவிடு கேட்பது, சப்பாணி நடப்பது மற்றும் மரித்தோர் மீண்டும் உயிர்பெறுதல் போன்றவை அடங்கும்.  

இவ்வெல்லாவற்றிக்கும் மேலாக நம்மை பரலோகம் (மோட்சம்) கொண்டுசெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடியும். வேறு எந்த தெய்வத்தாலும் முடியாது, ஏனெனில் அவைகள் தெய்வங்கள் அல்ல.

எனவே அனுபவங்களின் மூலம் மெய்யான தேவனைக் கண்டடைகிறோம். அவரைக் கண்டு நம்புகிறவர்களைப் பார்க்கிலும், காணாமல் நம்புகிறவர்கள் பாக்கியவான்கள். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுவையும் விசுவாசிப்பதே நித்தியஜீவன் என்று இயேசு சொன்னார். இங்கே நான் பிதா, குமாரன், பரிசுத்தாவி என்னும் திரித்துவத்துக்குள்ளாக ஆழமாக செல்லவில்லை. இயேசுவே மெய்யான தெய்வம். சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

.
சம்பந்தமானவை: கேள்வி பதில் 58

3 comments:

Unknown said...

Finally u r returned! I missed past 6 years!!! Plz write more!!! Really touching testimony from u!!! Thanks!!
-Prince Martin

Murugan Mark said...

YOU HAVE NOT MENTIONED THE GOD THE FATHER. ACTUALLY GOD IS GOD ONLY BUT WE HAVE TO UNDERSTAND ABOUT GODHEAD.

manendran said...

அருமையான விளக்கம்.
ஏன் உலகத்தில் உள்ளவர்கள் பிசாசை தெய்வமாக வணங்ககிறார்கள்? இதை உணர்ந்துகொள்ள அவர்களுக்கு ஏன் முடிவதில்லை?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.