Friday, March 2, 2018

80. தானியேலில் சொல்லப்பட்டுள்ள எழுபது வாரங்கள் பற்றி விளக்கவும்.

கேள்வி: தானியேலில் சொல்லப்பட்டுள்ள எழுபது வாரங்கள் பற்றி விளக்கவும்.

பதில்:
தானியேலுக்கு போகும் முன்பு, இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில் தானியேல் தீர்க்கதரிசி சொன்னதை குறிப்பிட்டுள்ளார். இது நம்முடைய கட்டுரையின் மையமாகும்.

மத் 24:15-21 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

இங்கே இயேசு உலகத்தின் கடைசி நாட்களில் நடைபெறும் காரியத்தைக்குறித்து சொல்லுகிறார். இது கடைசி காலம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.இப்போது இதைமனதில்கொண்டு தானியேல் புத்தகத்துக்கு செல்வோம். காபிரியேல் என்னும் தேவதூதன் தானியேலுக்கு இப்படியாக சொல்லுகிறான்:
-------------------------------------------
தானி 9:24-27.
24. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

27. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
-------------------------------------------

மேலே, இந்த 70 வாரங்களை 7, 62  மற்றும் 1 என்று பகுதிகளாக 25 மற்றும் 27 வசனங்களில் பிரித்து சொல்கிறான்:

ஒருநாள் என்பதற்கு ஒரு வருடம் நியமிக்கப்பட்டுள்ளது என்று அறிவோம். இதை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம்.
எண் 14:34 நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
எசேக் 4:5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.


தானியேல் 9:25-ம் வசனத்தில் "எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்" என்று வாசிக்கிறோம். 7 + 62 = 69 வாரங்கள்.  அதாவது 69 x 7 x 360 = 173,880 நாட்கள்.

எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டது என்பதை எஸ்றா 1:1-4 மற்றும் எஸ்றா 6:14-ல் வாசிக்கலாம்.  எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (Cyrus king of Persia) ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்...என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.

வரலாற்றுக்குச் சென்றால் இது கி.மு. 445-ம் வருடம் ஆகும். (Sir. Anderson, Robert என்பவர் எழுதிய புத்தகம்)
இதிலிருந்து பிரபுவாகிய மேசியா வருமட்டும் என்கிறதற்கு  69 வாரம், அதாவது 483 வருடங்கள்
  (173880 நாட்கள்) ஆகின்றன. இத்தனை துல்லியமான தீர்க்கதரிசனம் தானியேல் குறிப்பிட்டது அனைவரின் கவனத்தையும் பைபிளுக்கு திருப்புகிறது. இயேசு கழுதையின்மேல் அமர்ந்து எருசலேமுக்கு சென்ற தேதி மிகச்சரியாக இங்கு நிறைவுபெறுகிறது. இது கி.பி. 32, ஏப்ரல் 6. இது ஞாயிற்றுக்கிழமை. அங்கே "முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.

இதற்குப்பின்பு 26-ம் வசனத்தில் "மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல" என்று வாசிக்கிறோம். இங்கேயே தானியேல்: இயேசு மரிப்பது தனக்காக அல்ல, [நம்முடைய பாவங்களுக்காக] என்று சொல்கிறான். இது இயேசுவின் சிலுவை மரணத்தின் முன்குறிப்பு. அப்படியே இயேசு அந்த பஸ்காபண்டிகையின் போது காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார். இச்சம்பவமும்  தானியேல் சொன்னதுபோல் 69 வாரம் முடிந்த பின்பு, நிறைவுபெறுகிறது.

அதே 26-ம் வசனத்தில்  "நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்" என்று வாசிக்கிறோம். இதைத்தான் இயேசுவும் "இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார். இது கி.பி. 70-ம் வருடம் நிறைவேறியது. தீத்து(Titus) என்னும் ராஜா எருசலேமை அழித்துபோட்டு, தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி செய்தான்.யூதர்களின் சிதறடிப்பு இங்கே ஆரம்பித்தது. அவர்கள் உலகமெங்கும் தெறித்து ஓடினர்.

தேவனும் அக்கிரமங்களினிமித்தம் இவர்களை சிதறடிப்பேன் என்று இதற்கு முன்பே சொல்லியிருந்தார். இதை எரேமியா 9:16-ல் "அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்று வாசிக்கிறோம்.

தேவன் இவர்களை மீண்டும் கூட்டிச்சேர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படி 1948-ல் இஸ்ரவேல் என்னும் தேசம் வரலாற்றில் உருவானது. இதை எசேக்கியேல் 20:34-ல் "நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்திலும் கூடிவரச்செய்து, உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்" என்று வாசிக்கிறோம்.

எனவே, மேசியா சங்கரிப்பு, நகரம் மற்றும் பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படுதல், யூதர்களின் சிதறடிப்பு, மீண்டும் கூட்டிச்சேர்த்தல் ஆகியவை 26-ம் வசனத்தில் அடங்கும்.

அதே வசனத்தில், இதன்பின்பு “முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.” என்று வாசிக்கிறோம்.  இதற்கு சான்றாக இன்றும் நம் கண்கூடாக இஸ்ரவேல் தேசத்தை சுற்றி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கிறோம். எனவே இந்த வசனம் நமது காலத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

குறிப்பு: அந்திக்கிறிஸ்து வெளிப்படும்முன் இயேசுவின் இரகசியவருகை (திருடன் வருகிறவிதமாக) இருக்கும்.

இதற்குபின்பு 27-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஒருவாரம் (70ம் வாரம்) இன்னும் நிறைவேறவில்லை. அவன் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி  (மூன்றரை வருடம்) சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவான்; (தமிழில் மொழிபெயர்த்தவர்கள் "அவர்" என்று குறிப்பிட்டுள்ளனர். சரியான வார்த்தை சிவப்பு எழுத்தில் காட்டியுள்ளதுபோல் "அவன்" என்பதாகும்) அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான்.  இயேசு சொன்னதை நினைவுகூருவோம்.  மத் 24:15-21 "பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே ...  உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்". இது கடைசிகாலம். மேலும் இங்கே உபத்திரவகாலம் 7 வருடம்  என்று காண்கிறோம். இந்த உபத்திரவகாலம் இருபகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

 அந்திக்கிறிஸ்துவைக்குறித்து 27-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இன்று யூதர்களுக்கு கோயில் இல்லை. எனவே அவர்கள் இன்று பழைய ஏற்பாட்டின்படி பலிசெலுத்துவதில்லை. அந்திக்கிறிஸ்து அவர்களுடைய ஆலயத்தை திரும்பகட்ட உதவி  செய்தபின்பு, யூதர்கள் பலி மற்றும் காணிக்கைகளை செலுத்துவார்கள். மூன்றரை வருடம் கழித்து அவன் அருவருப்பை நடப்பிப்பான். பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவான்.

மேலும் II தெச 2:4-8ன்படி அவன் [அந்திக்கிறிஸ்து] எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். [இது பாழாக்கும் அருவருப்பு]. அந்த அக்கிரமக்காரனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். இது அவர் ஒலிவமலையில் எல்லாரும் காணும்படி வெளிப்படையான வருகையின்போது நடைபெறும்.

தானி 9:27-ம் வசனம் குறித்து, தானியேல் 12:11-ல் புதைபொருளாக சொல்லப்பட்டுள்ளது..
6. சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
7. அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.
8. நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
9. அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
10. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
11. அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.


தானி 12:7-ம் வசனத்தில் ஒருகாலமும்(1), காலங்களும்(2), அரைக்காலமும்(1/2) என்று மொத்தம் மூன்றரை ஆண்டுகள் (நமது கடைசி 70ம் வாரத்தில் பாதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே உபத்திரவகாலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகளில் பரிசுத்த ஜனங்களின் வல்லமை (power)  சிதறடித்தல் முடிவுபெறும்போது இவை நிறைவேறித்தீரும் என்கிறார். எனவே உபத்திரவகாலத்தின் மூன்றரை ஆண்டுகளுக்குபின்பு  (அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் - அந்திக்கிறிஸ்து) பாழாக்கும் அருவருப்பை நடப்பிப்பான்.  இது 1290 நாள் (சுமார் மூன்றரை வருடங்கள்) செல்லும் (தானி 12:11). இதுவே மகா உபத்திரவகாலம். இதைத்தான் இயேசு மத்தேயு 24-ல் குறிப்பிடுகிறார்.

தானி 9:24-ம் வசனத்தில் "நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்"என்று சொல்லப்பட்டுள்ளது, இது இயேசுவின் ஆயிரவருட ஆளுகை. இந்த 70 வாரம் முடிவில் (அதாவது உபத்திரவகாலத்தின் முடிவில்) ஆரம்பமாகும் என்பதை குறிப்பிட்டுள்ளது.

நாமோ கடைசி காலத்தில் வந்திருக்கிறோம். நம்மை நாமே ஆராய்ந்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவோமாக.


சம்பந்தப்பட்டவை கேள்வி-பதில்: 13