Thursday, October 15, 2009

8. எது சரியான ஞானஸ்நானம்? (Water Baptism) எந்த சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறோமோ, அந்த சபைக்குத்தான் போகவேண்டுமா?


இதைக்குறித்து ஒரு புத்தகமே எழுதலாம்:

ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்படுகிறோம். அதாவது பாவத்திற்கு நாம் மரிக்கிறோம். இனி நான் அல்ல கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்.

[Part A]
[1]தமிழில்
: "ஞானஸ்நானம்". இங்கே ஸ்நானம் என்றால் நீராடல். "கங்கா ஸ்நானம்" என்று இந்துக்கள் கூறும் பொதுவான வார்த்தைகளில் ஸ்நானம் என்னும் வார்த்தையைப் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில்: "Water Baptism". The word Baptize means "To dip under water" (தண்ணீருக்கு கீழே அமிழ்த்தி )
கிரேக்க மொழியில்: "βαπτίζω" Baptizo means "To immerse or dip under water". (தண்ணீருக்குள்ளே மூழ்கி, ஆழ்த்தி )
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிரவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று யோவான் 3:5ல் வாசிக்கிறோம். எனவே ஞானஸ்நானம் மிகவும் முக்கியமான ஒன்று.

மத்தேயும் 3:16. ல் இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே" என்றும்,
அப் 8:38,39 ல் "அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது" என்றும் வாசிக்கிறோம். எனவே தீர்த்தம் தெளிப்பதுபோல் தெளிப்பது வேதத்தின்படி தவறான ஞானஸ்நானம். முழுக்கு ஞானஸ்நானமே சரியானது.


[2] மத்தேயு 3:6 ல் " தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்." ஒரு குழந்தைக்கு அல்லது சிறுவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறு. ஏனெனில் அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அதாவது மனம் திரும்பும் வயது அது அல்ல. எதுவெல்லாம் பாவம் என்றே தெரியாத வயது அது. குறிப்பாக இதை ரோமன் கத்தோலிக்கர்கள் செய்கிறார்கள். அது வேதத்தின்படி தவறு. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது வயது ஏறக்குறைய முப்பது, எனவே குழந்தை, சிறுவர் ஞானஸ்நானம் தவறு.
[3] மத்தேயு 28:19, 20ல் "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" என்று இயேசு கட்டளையிட்டுள்ளார். சிலர் "இயேசுவின் நாமத்தில்" (Jesus name only) ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள் அது தவறு. ஏனெனில் 1 யோவான் 2:22ல் இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து என்று வாசிக்கிறோம். இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அங்கே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் திரித்துவத்தை காண்கிறோம்.
அப் 19:1-6 ல் "அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்." என்னும் வசனத்தை வைத்து சில கூட்டத்தார் இயேசுவின் நாமத்தில் கொடுக்கவேண்டும் என்று வாதிடுகிறார்கள். அது தவறு, எப்படியெனில்...

பவுல் சொன்னார்: யோவான் கொடுத்தது மனம்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம், எனவே நீங்கள் இயேசு கட்டளையிட்ட ஞானஸ்நானம் எடுக்கவில்லையே, என்று அவர்களுக்கு மீண்டும் ஞானஸ்நானம் கொடுக்கிறான். நன்றாக கவனியுங்கள்:
யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.. அப்படியானால் இயேசு எடுத்த ஞானஸ்நானம் தவறா?? இல்லை, இயேசுதான் பாவம் செய்யவில்லையே. காரணம் "இப்படி செய்து தேவனுடைய நீதிகளை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று இயேசு சொல்கிறார். இயேசு எடுத்த ஞானஸ்நானம் தவறல்ல. ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று கட்டளையை முதலாக சொன்னது இயேசுதான். அவர்தான் அதை எப்படி கொடுக்கவேண்டும் என்று சொல்லி வரையறுக்கிறார்(definition). எனவே பவுல் கொடுத்தது இயேசு கட்டளையிட்ட ஞானஸ்நானம்.அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம். நீங்கள் வெறும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்தால் மீண்டும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும். காரணம் திரித்துவம்.

[4] பரிசுத்த ஆவிபெறவேண்டுமென்றால் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று (அப் 19:1-6
வைத்து) சொல்லுவது தவறு. ஏனெனில் நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு தன் உறவின் முறையாரோடும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரோடும் கூட பேதுரு பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளை பேசினார்கள் என்று அப் 10-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அதன் பின்பு அவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். நானும் கூட ஞானஸ்நானம் பெறும் முன்பே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளை பேசினேன்.

[5] எல்லாரும் எல்லாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடாது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்கச்சொல்லி கட்டளையிட்டார். தற்போது கர்த்தருடைய ஊழியக்காரர்கள் (சபையின் போதகர்கள்) கொடுக்கலாம்.
[6] ஞானஸ்நானம் கொடுப்பவர் பரிசுத்த ஆவி பெற்றவராயிருக்கவேண்டும். வேதாகமத்தில் ஞானஸ்நானம் கொடுத்த அனைவருமே (பிலிப்பு முதற்கொண்டு அப் 1:13) அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நியபாஷைகளை பேசியவர்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறாதவர், ம்ற்றவர்களுக்கு எப்படி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக்குறித்து கூறமுடியும்? அப்படி கொடுக்கும் ஞானஸ்நானம் திரித்துவம் இல்லாத ஒருவர் கொடுப்பது போலாகிவிடும், அது முழுமையாயிராது.

எனவே [1] முதல் [6] வரை சொல்லப்பட்ட விவரங்களை பின்பற்றாத ஞானஸ்நானம் தவறானது.

[Part B]
எந்த சபையில் ஞானஸ்நானம் எடுக்கிறோமோ, அந்த சபைக்குத்தான் போகவேண்டுமா?
அப்படி வேதத்தில் எங்கும் சொல்லவில்லை. ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையுண்டு. எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் நாமத்தினால் கூடியிருக்கிறார்களோ அங்கே நான் இருக்கிறேன். சபை கூடுதலை விட்டு விடாதிருங்கள் என்று வேதம் தெளிவாக கூறுகிறது. உங்களுடைய இரண்டாவது கேள்விக்கு பதில் "இல்லை". கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணிக்கேளுங்கள். அவர் நல்ல மேய்ப்பன், அவர் வழி நடத்துவார்.

[ஒரு சிறு குறிப்பு: I கொரிந்தியர் 10:2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எனவே
ஞானஸ்நானம் செங்கடலை கடக்கும் அனுபவத்திற்கு நிழலாட்டமாயிருக்கிறது. செங்கடலை கடந்தபின் எப்படி வனாந்தரவழியாய் இஸ்ரவேல் ஜனங்கள் போனார்களோ அப்படியே கர்த்தர் சில சோதனைகள் வழியாய் நம்மை வழிநடத்தி, நம்முடைய இருதயத்திலுள்ளதை நமக்கு காட்டுவார். அவைகளை நாம் திருத்திக்கொண்டு கானானுக்குள் (பரலோகம்) பிரவேசிப்போமாக. உபாகமம் 8:2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. ]


சரியான ஞானஸ்நானம் எடுக்கவிட்டால், மீண்டும் சரியான
ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்.
=================================
[Part C] நவம்பர் 22, 2009
கேள்வி: ஞானஸ்நானம் இயேசுவின் நாமத்தில் எடுத்தால் என்ன? ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும் என்று பைபிளில் வாசிக்கிறோமே?

ஒருமைத்துவம் (Oneness) என்னும் கூட்டத்தாரால் "இயேசுவின் நாமத்தில்" என்பது திரிக்கப்பட்டு இப்போது ஞானஸ்நானம் என்னும் வரைமுறையையும் மாற்றுகின்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்று சொன்னது உண்மைதான். ஆனால் பேதுரு பிரசங்கம் பண்ணும்போதே கொர்நேலியு வீட்டில் எல்லாருக்கும் பரிசுத்த ஆவி அபிஷேகம் கிடைத்தது. அதன்பிறகுதான் அவர்களுக்கு ஞானஸ்நானம் பேதுரு கொடுத்தார். அப்படியானால் மேலே பேதுரு சொன்னது தவறு என்று நிரூபிப்பது சரியா, தவறா? இந்தக் கூட்டத்தார் பேதுரு இங்கே ஞானஸ்நானத்துக்குரிய சூத்திரத்தைக் கொடுக்கின்றார் என்று சொல்கின்றனர். இந்த சூத்திரத்தை கொடுக்கும் அதிகாரம் தேவனுடைய குமாரன் ஒருவருக்கே உரியது, வேறொருவருக்கும் இல்லை. "இயேசுவின் நாமத்தில்" என்றால் "இயேசுவின் அதிகாரத்தில்" ( Authority/Power) ஞானஸ்நானம் என்று பொருள்படும். இயேசு அதிரகாரப்படுத்திய அல்லது அமல்படுத்திய ஞானஸ்நானம் என்றுதான் பேதுரு சொன்னதின் அர்த்தம்.

உதாரணத்திற்கு ஒரு காவல்துறை அதிகாரி ஒரு திருடன் ஓடும்போது "ஓடாதே, நில்" என்று அதிகாரத்துடன் கூறுகின்றார். அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது "சட்டம்" ஆகும். ஓடாதே நில் என்னும் சூத்திரம் அல்ல. பேதுரு அந்த அதிகாரத்தைத்தான் பயன்படுத்துகின்றார். அந்த அதிகாரத்தைக் கொடுத்தது இயேசுதான். அவர் அதை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் கொடுக்கச் சொன்னார். அவர் சொன்னபின்பு அதை மாற்றும் அதிகாரம் வேறு ஒருவருக்கும் கிடையாது! அப்போஸ்தல நடபடிகள் அதை மாற்றவில்லை. அங்கேயும் அந்த ஞானஸ்நானத்துக்கு அதிகாரம் கொடுத்தவர் யார் என்பதைத்தான் கூறுகின்றது.

சிலர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது வெறும் "தலைப்புகள்"(titles) "பெயர்களல்ல(name)" என்று சொல்கின்றனர். இதைக்கூறுபவர்கள் முக்கியமான ஒரு கருத்தினை கவனிக்கத் தவறுகிறார்கள். நீங்கள் பாஸ்டர் பவுல் என்று வைத்துக்கொள்வோம். இங்கே பாஸ்டர் என்பது "தலைப்பு". பவுல் என்பது "பெயர்". பாஸ்டர் என்பது நீங்கள் யாரென்றும், என்ன செய்கின்றீர்கள் என்றும் சொல்கின்றது. பிதா என்பதும் அவர் யாரென்பதைக் குறிக்கின்றது.
குமரானின் நாமத்தில் என்று சொன்னால் அதற்கு "இயேசு" என்பது பதில். இயேசுவின் நாமத்தில் என்று சொன்னால் அதற்கு "குமாரன்" என்று பொருளா? இல்லையா? எனவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம் என்று சொல்லி கொடுங்கள். உங்கள் லாஜிக்கில்(Title Vs name) தப்பு வராது.

இந்தக்கூட்டத்தார் சொல்லும் இன்னொரு தவறான கருத்து என்னவென்றால் 'இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாவிட்டால் இரட்சிப்பு இல்லை'. அப்படி சொல்வதினால் திரித்துவத்தை மறுதலிக்கின்றார்கள். முதலில் மனந்திரும்பவேண்டும் பின்பு பாவங்களை இயேசுவிடம் அறிக்கைச் செய்யவேண்டும். இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.


முக்கியமாக இந்த ஞானஸ்நான விஷயத்தில் இயேசு சொன்னபிறகு அதை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.


.

Tuesday, October 6, 2009

7. புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?

புகைபிடிக்கும் பழக்கம் குறித்து வேதத்தில் தேடினால் யாரும் புகை பிடித்ததாக தெரியவில்லை. கீழேயுள்ள வசனங்களில் நன்றாகவே நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.

எண்ணாகமம் 3:4 ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் அந்நிய தூபம் /அக்கினி கொண்டுவந்து இறந்து போனார்கள். 

எரேமியா 19:13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ புகைபிடித்தால் தீட்டுப்பட்டவன்.

நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. எனவே புகைபிடித்தால், நீ பேலியாளின் மகன் (ungodly man) . இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. 

தானியேல் 1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். புதிய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களாகிய நாம் அதைவிட மேலான தீர்மானத்துடன் இருக்க முயற்சிக்கவேண்டும். 

I கொரிந்தியர் 3:16-17 16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். புகைபிடிப்பதால் (அந்நிய அக்கினி கொண்டு வந்தது போல்) நாம் தேவனுடைய ஆலயத்தை கெடுக்கிறோம். தேவனுடைய ஆலயமாகிய இந்த சரீரத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம். 

1 தெசெலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சரீரம் முழுவதும் என்னும் வார்த்தைகளை கவனியுங்கள்.

எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், (பரிசுத்த) ஆவியினால் நிறைந்து இருங்கள்; புகையினால் நிறைந்து இருக்காதீர்கள். கடைசியாக முக்கியமான வசனம்: 

யோபு 2:10 இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை !!! (amazing!) 

கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படவேண்டுமென்றால், புகை பிடிக்காதீர்கள் !!