Saturday, August 15, 2009

4. தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா?

ஆதியிலே மனுஷனை தேவன் உண்டாகியபோது அவனுக்கு உடைகள் இல்லை. தேவனுடைய மகிமையே அவர்களை மூடி இருந்தது. உடையானது உடலை ( நிர்வாணத்தை) மறைக்க வேண்டும், இதுவே உடையின் நோக்கமாகும். பேஷன்கள் தற்போது அளவுக்கு மீறி செல்வதால் மனுஷன் எல்லையை மீறுவதாகவே கருதுகிறேன். கீழே கொடுக்கப்பட்ட இரண்டு வசனங்களை வாசிப்போம்.

I தீமோத்தேயு 2:8-9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும் (modest), நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

உபாகமம் 22:5. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

முதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்: நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்: உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில்  பெண்ணின் உடை எதுவோ அதை அங்கு அவர்கள் அணியலாம். ஆனால் அது தகுதி உள்ளதாக இருக்கவேன்டும். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)

மூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:
நீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு.
ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது வெறும் பாவாடை அல்லது சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய கூடுதல் உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.

எனவே:
-
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது
- உடையானது
தகுதியான உடையாயிருக்கவேண்டும்.
- உடையானது அவர்கள் தற்போது வாழும் நாட்டின் உடையாக இருக்கலாம்.

இதை எந்த உடை மீறினாலும் அது அருவருப்பாகும்.

3. தற்கொலை செய்துகொள்பவர்கள் நித்திய ஜீவனை (பரலோகம்)அடைவார்களா? அல்லது நித்திய ஆக்கினை அடைவார்களா?


எனக்கு ஒரு வசனம் ஞாபகத்துக்கு வருகிறது:

ஏசாயா 44:20 வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது;

நம்மை தேவனுடைய சித்தம் செய்யவிடாமல் அழிவுக்கு கொண்டுசெல்லும் பிசாசின் தந்திரமே இது!


கீழே உள்ள வசனங்களை வாசிப்போம்:

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இதுக்கே கணக்கு கொடுக்கவேண்டும் என்றால், தற்கொலைக்கு?


ரோமர் 1: 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 32. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.


யூதாஸ் தற்கொலை செய்துகொண்டு (தூக்கு) செத்தான். அவனை கேட்டின் மகன் என்று வாசிக்கிறோம். கொலைபாதகன் நரகத்துக்கு ஏதுவாக இருக்கிறான். தற்கொலையும் ஒரு கொலை. மத்தேயு 5:22 தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். கொலைகூட செய்யத்தேவையில்லை.

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத செயலும் ஒரு தற்கொலைதான் என்று சிலர் கூறுகின்றனர் !!
(யோவான் 3:18.அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.)


நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க வாய்ப்பில்லை.
ஒரு உண்மைச் சம்பவம் இங்கே செய்தியாக:
Monday, August 10, 2009

2. என்ன அர்த்தம்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும் ... வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

இதன் பொருள்: தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் விட அதிகமாய் என்னை நேசிக்காதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

"தேவன் அன்பாகவேயிருக்கிறார். புருஷர்களே உங்கள் மனைவிகளிடத்தில் அன்பு கூருங்கள், மனைவிகளே உங்கள் புருஷருக்கு கீழ்ப்படியுங்கள்" என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.

யோவான் 15:9.
ல் பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
யோவான் 15:12
ல் நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது என்று இயேசு கூறியிருக்க மேலே கூறப்பட்ட வசனத்தை சிலர் தவறாக விளங்கிக்கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில்:
 [1] மத்தேயு 19:29 - forsake (விட்டுவிடுதல்)
[2] மாற்கு 10:19 - forsake (விட்டுவிடுதல்)
[3] மத்தேயு 10:37 - loving more than ( அதிகமாக நேசித்தல்)
[4] லூக்கா 14:26 - hate (வெறுத்துவிடுதல்)

இந்த வசனங்கள் அனைத்தும் வெறுப்பு (hatred) என்கிற அர்த்தத்தில் அல்ல, விட்டுவிடுதல், தேவனை இவை எல்லவற்றைக்காட்டிலும் அதிகமாக நேசித்தல் அல்லது இவைகளை ஒதுக்கி வைத்து விடுதல் என்றே அர்த்தமாகும்.

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கட்டளை.
I) மாற்கு 1:30ல் அங்கே சீமோனுடைய (பேதுருவின்) மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; பேதுருவுக்கு தன் வீட்டின் மேல் ஒரு சிந்தை இருந்ததாக நாம் இதன் மூலம் தெரிகிறது. இயேசுவோ இந்த பேதுருவைக்கொண்டு தன் சபையை கட்டி எழுப்ப சித்தம் கொண்டிருந்தார். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு பேதுரு பின்மாற்றம் அடைந்து மீண்டும் மீன் பிடிக்க சென்றார். அங்கே இயேசு தோன்றி யோனாவின் குமாரனாகிய சீமோனே "இவர்களிலும் அதிகமாய் நீ" என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என் ஆட்டுக்குட்டிகளை(சபையை/ஆத்துமாக்களை) மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21)

இங்கு "மனைவியையும் ....
சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும்" காட்டிலும் நீ என்னை நேசிக்கிறாயா? என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.


II) தேவன் ஆபிரகாமை "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்." ஏன்? அவன் தன் மகனை தேவனைக்காட்டிலும் அதிகமாக நேசித்தான். அவனைபலியிட கொண்டு சென்ற பின் தேவன் அவனை தடுத்து நிறுத்தி: "நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்." இங்கே நேசகுமாரன் என்று தேவன் கூறவில்லை!

மத்தேயு 19:27 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; என்றான்.

இதற்காக திருமணம் ஆகாதவர் திருமணம் செய்து பின்பு மனைவியை விட்டுவிட்டுவரவேண்டும் என்று அர்த்தமல்ல. ஒரு காவல் நிலையத்தில் “குடைகளை வெளியே வைத்துவிட்டு உள்ளே வரவும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவர் அதைப்படித்துவிட்டு கடைக்குப்போய் குடைவாங்கிவந்து வெளியே வைத்துவிட்டு உள்ளேபோவது போலாகிவிடும். கர்த்தர் அநேகம்தரம் திருமணமான தம்பதியினரை இருவரையும் முழுநேர ஊழியத்துக்கு அழைப்பார்.

திருமணம் ஆகாதவர்கள் குடும்பகாரியங்களைக்குறித்து கவலைப்படத்தேவையிருக்காது. தேவனுக்காக முழு நேரம் ஊழியம் செய்ய விரும்புவோர், எல்லாவற்றையும் விட்டு தேவனை பின்பற்றினால் அதுவே மேலான சேவையாகும். பரலோகத்தில் சிறப்பான பிரதிபலன் கிடைக்கும். மனைவியுடன் ஊழியம் செய்தால் தவறல்ல. குடும்பத்தை நடத்த தெரியாதவன் சபையை எப்படி நடத்துவான் என்று வசனம் உண்டே. எனவே தேவன் உங்களை எப்படி அழைத்தாரோ அப்படியே செய்யுங்கள். இவை எல்லாவற்றிலும் அன்பே பெரியது. (1 கொரி 13)
1. இயேசுவின் தாயாகிய மரியாள் மரித்தார்களா அல்லது உயிருடன் பரலோகத்துக்கு எலியா, ஏனோக்கைப்போல எடுத்துக்கொள்ளப்பட்டார்களா?


வேதத்தில் இயேசுவின் தாயாகிய மரியாள், இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்றதுபோல் ஏறிப்போனதாக எங்கும் கூறப்படவில்லை.
ஆயினும் அவர்களைக்குறித்து ஒரு தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ளது:

லூக்கா 2:34,35
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.


35 வது வசனத்திலிருந்து மரியாள் எவ்விதமாக மரிக்கப்போகிறாள் என்பதை அங்கே காண்கிறோம். என்னுடைய புரிந்துகொள்ளுதளின்படி மரியாள் ஒரு இரத்த சாட்சியாக மரித்திருக்கக்கூடும். இயேசுவின் சீடர்களில் அநேகரும் இரத்த சாட்சியாக மரித்தார்கள் ( பவுல், பேதுரு, தோமா, அந்திரேயா ... ). அக்காலங்களில் ரோமர்களின் கொடுங்கோலாட்சியானது கிறிஸ்தவர்களை அழித்துவிட அவர்களின் கை விரோதமாகவே இருந்தது. நீரோ என்னும் ராயன் (emperor) சுமார் கி.பி. 64ம் அல்லது 67ம் வருடம், பவுலை சிரச்சேதம் செய்து கொன்றான். அதே ராயன் பேதுருவை சிலுவையில் அறைந்து கொன்றான். இப்படியாக கிறிஸ்து இயேசுவுக்கு சாட்சிகளாக இருந்த ஒவ்வொருவரையும் கொல்லும்படி போனார்கள். மரியாளும் இரத்த சா
ட்சியாக மரிக்கப்போகிறாள் என்பதையே அந்த வசனமும் சொல்லுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்..சிலர் அவள் ஆத்துமா எவ்வளவு வலி அல்லது பாடுகளுக்குள் செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்கின்றனர்.  எப்படியாயிருப்பினும் அவர்கள் உயிருடன் பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை.

கடைசியாக இயேசுவின் தாயாகிய மரியாளைக் குறித்து நாம் அப் 1:13,14 வாசிக்கிறோம். ஏறக்குறைய 120 பேர் பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். மரியாளும் அவர்களில் ஒருவராக காணப்பட்டார். மரியாளும் அந்நிய பாஷைகளை பேசி பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் நிறைக்கப்பட்டார். இதற்குப்பின் மரியாளைக்குறித்து வேதத்தில் கூறப்படவில்லை.
[ சிறு குறிப்பு: மரியாள்
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள், அந்நிய பாஷைகளை பேசினாள். எனவே அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற கூட்டத்தாரை சேர்ந்திருந்தாள். அவள் ரோமன் கத்தோலிக் அல்ல. :) மரியாளை வணங்குவது பாவமாகும். யாத் 20:1-3 ல் என்னையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் என்று தேவன் சொன்னபிறகும் சிலைகளை (விக்கிரகங்களை) வணங்குவது பாவம். வெளி 21:8ல் ... விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.]


வேதத்திலிருந்து இரண்டு பேர் (எலியா, ஏனோக்கு) மட்டும் உயிருடன் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டதாக வாசிக்கிறோம். இவர்கள் அப்படியே மேலே உயிருடன் சென்றாலும், அவர்களுடைய சரீரமானது மறுரூபம் அடைந்திருக்கக்கூடும் என்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் நாம் இந்த சரீரத்துடன் பரலோகத்துக்குச் செல்ல முடியாது. இயேசுவும் உயிர்த்தெழுந்தபின்பு வேறொரு சரீரம் உடையவராக காணப்பட்டார். அந்த சரீரமானது பூட்டியிருந்த அறைக்குள்ளே பிரவேசிக்கக்கூடிய தன்மையை பெற்றிருந்தது.
நம்முடைய இந்த சரீரமானது பரலோகத்துக்காக உண்டாக்கப்பட்டதல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது: 1 கொரி 15:39, 40 மற்றும் 44ல்.
39. எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.

40. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

44. ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

மேலும்
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே. என்று சொல்கிறார். இவ்விரண்டு பேரும் மரிக்கவில்லை என்று நாம் அறிந்தபடியினாலே, வெளிப்படுத்தின விஷேசத்தில் கூறப்பட்டுள்ள உபத்திரவக்காலத்து இரத்த சாட்சிகளாகிய இரண்டு பேர் எலியா, ஏனோக்கு என்பவர்களாக இருக்கக்கூடும் என்று எண்ணப்படுகிறது. இவர்கள் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

சிலர், இல்லை இல்லை இவர்கள் இரண்டு பேரும் மோசேயும், எலியாவும் என்கிறார்கள். ஏனெனில் இயேசுவானவர் மறுரூபமானபோது அந்த மலையிலே மாற்கு 9:4 "அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்." எனவே இவ்விருவரும் சாட்சிகள் என்கிறார்கள். அங்கே அப்போது பேதுருவும், யோவானும், யாக்கோபும் இருந்தார்களே!
அவர்களும் அதற்கு சாட்சிகள் என்பதாலும், எபிரெயர் 9:27ல் கூறப்பட்ட காரணத்தினாலும் இவ்விரு சாட்சிகளும் எலியாவும் ஏனோக்குமாக இருக்க சாத்தியங்கள் அதிகம்.