Wednesday, September 11, 2019

9. பரலோகம்/மோட்சம் செல்ல என்ன செய்யவேண்டும்? எவற்றை பின்பற்றவேண்டும்? பைபிளில் இருந்து விளக்கம் கொடுக்கவும்.

கேள்வி: பரலோகம்/மோட்சம் செல்ல என்ன செய்யவேண்டும்? எவற்றை பின்பற்றவேண்டும்? பைபிளில் இருந்து விளக்கம் கொடுக்கவும்.

பரலோகம்/மோட்சம்/சொர்க்கம் போக ஒவ்வொரு மதமும் ஒரு வழியை சொல்லுகிறது. அவைகள் முற்றிலும் வேறுபடுகின்றன.

இந்துக்கள் சொர்க்கவாசல் திறக்கும்நாளில் சிலவற்றை செய்தால் அங்கே செல்லலாம் என்றும், காசி, ராமேஸ்வரம் செல்லவேண்டும் மற்றும் கங்கையில் மூழ்கினால் பாவம் போகும், மோட்சம் செல்லலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்துக்களில் பெரும்பாலோனோர் முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். இஸ்லாமியரிடம் மோட்சமா(ஜின்னா) நரகமா என்று கேட்டால், அல்லாஹ் மட்டுமே அறிவான் என்கின்றனர். அவர்களுக்கு உறுதி இல்லை. இருப்பினும், முஸ்லீம் அல்லாத மற்றவரை கொல்லும்படி தங்கள் உயிரைவிடுபவர்களுக்கு மோட்சம் உண்டு என்று வினோதமான நம்பிக்கை கொண்டுள்ளனர். சிலர் உங்கள் நன்மைகள் தீமைகளைவிட அதிகமாயிருந்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். புத்த மதம் மோட்சம்/நரகம் என்று ஒன்று இல்லை என்றே போதிக்கிறது.

பைபிளில் பரலோகம் செல்ல என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு செல்வோம்.

மற்ற எல்லா மதங்களிலும் இதை செய், அதை செய் என்றும், இவைகளைச் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது மனிதன் மோட்சம் செல்ல பலவற்றை செய்து அதை சம்பாதிக்கவேண்டும் என்று "வேலை"களை அடிப்படையாக கொண்டு போதிக்கிறது.

கிறிஸ்தவம் மட்டுமே இவைகளுக்கு மாறாக போதிக்கிறது. நாம் என்ன செய்தாலும் அதை சம்பாதிக்கமுடியாது. நமக்கு எந்த தகுதியும் இல்லை. அந்த தகுதியை நமக்கு தருபவர் தேவனே. அதற்கு நாம் அவரை விசுவாசிக்க ( அவர்மேல் நம்பிக்கைகொள்ள) வேண்டும். "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" என்று பைபிளில் வாசிக்கிறோம்.  மேலும், "பாவத்தின் சம்பளம் மரணம் (இரண்டாம் மரணமாகிய நரகம்), தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவன்." என்று வாசிக்கிறோம்.  அதாவது: நாம் பாவிகள், நமக்கு சம்பளம் மரணம் (நரகம்). ஆனால் இந்த பாவக் கடனை அடைக்க இயேசுவாகிய தேவனே பூமிக்கு வந்து அந்த தண்டனையை தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் நமக்காக மரித்தார். அவரை நம்பினால் நாம் இரட்சிக்கப்படுவோம். இதுவே மேற்சொல்லப்பட்டுள்ள வசனத்தின் விளக்கம். இது மற்ற மதங்கள் போதிப்பதுக்கு முற்றிலும் மாறானது.

மேலும் எபேசியர் 2:8 "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" என்று வாசிக்கிறோம். இது கிரியைகளினாலே (மனிதன் செய்யும் காரியம் கருமங்களினாலே) அல்ல.  ஒருமனிதன்  தனது அருமைபெருமைகளைப் பேசி பரலோகத்தை சம்பாதிக்க முடியாது. நன்மைகளை செய்து (உதாரணமாக ஏழைகளுக்கு உதவி செய்து) பரலோகம் சம்பாதிக்கமுடியாது. (We are saved by grace; not by our works).

யோவான் 3:16ல் இயேசு சொன்னார்  "தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் (நரகத்துக்கு போகாமல்), நித்திய ஜீவனை அடையும்படிக்கு (பரலோகம் செல்ல) அவரை(இயேசுவை)த் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

யாக்கோபு 2:10. "எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்." எனவே நாம் எல்லாரும் நிச்சயமாக ஒரு நியாயவிதியில் தவறியிருக்கிறோம் (பொய், இச்சை, திருட்டு, கெட்ட வார்த்தை..), அப்படியானால் நமக்கு நரகம்தான். கிரியைகளினாலே பாவத்தை நிவிர்த்தி செய்ய முடியாது என்றால் எப்படி நாம் பரலோகத்தை சம்பாதிக்கமுடியும்?

பைபிளில் சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்ளன் அவரிடம் விசுவாசித்து "இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்." அவனுக்கு நன்மை செய்ய நேரமில்லை. அவன் மனந்திரும்பி தேவனை விசுவாசித்து வேண்டிக்கொண்டான்.  அவனுக்கு இயேசு: மெய்யாகவே இன்று நீ என்னோடுகூட பரதீசில் இருப்பாய் என்றார்.

இயேசு சொன்னார்: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். எனவே பரலோகம் செல்ல இயேசுவே வழி.

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (eternal life, பரலோகம் செல்வது).

யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

1 யோவான் 1:7-10 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

யோவான் 3:3,5. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

அப்போஸ்தலர் 2: 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

லூக்கா 10:25 அப்பொழுது  நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். இயேசுவை ஏற்றுக்கொண்டபின்பு பாவம் செய்யாமல் வாழவேண்டும்.

இவைகளிலிருந்து:
[1] பாவத்திலிருந்து உண்மையாக மனந்திரும்பவேண்டும்.
[2] பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பின் சந்தோஷத்தைப் பெறவேண்டும்.
[3] ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறக்கும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும். அதாவது ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல்.
[4] இயேசுவின்மேல் நம்பிக்கையாயிருக்கவேண்டும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும்.