Monday, December 28, 2009

27. சிலைகளை வணங்கும் பழக்கம் முதலில் எங்கே ஆரம்பித்தது? எப்போது?

[1] ஆதியாகமம் 31:30 லாபான் யாக்கோபிடம், "இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய்?" என்று கேட்டான். ஏனெனில் ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்திருந்தாள். இங்கேதான் சிலை அல்லது சொரூபத்தைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது.

[2] இனி இந்தப் பழக்கம் எங்கே ஆரம்பித்தது என்று தேடுவோம்:
சிலைகளை லாபான் வணங்கி வந்தான். இந்த லாபான், ரெபெக்காளின்
சகோதரன் . இவர்களுக்கு தகப்பன் பெத்துவேல். (ரெபெக்காள்: ஈசாக்கின் மனைவி/ யாக்கோபின் தாய்)

ஆதியாகமம் 22:20-23 இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; அவர்கள்: ஊத்ஸ், பூஸ், கேமுவேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.

ஆதியாகமம் 11:31
ல் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் குடும்பம் "ஊர்(ur)" என்கிற கல்தேயரின் தேசத்துப்பட்டணத்திலே குடியிருந்தது. இது மெசெப்பத்தோமியாவிலே இருந்தது என்று ஆதியாகமம் 24:10ல் வாசிக்கிறோம்.


மெசெப்பத்தோமியா யூப்ரிடிஸ்-Euphrates (ஐப்பிராத்து) மற்றும் டிக்ரிஸ்-Tigris (இதெக்கெல் ஆதி 2:15) என்ற நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும். இது தற்போதைய ஈராக் பகுதியாகும்.

எனவே மெசெப்பத்தோமியாவில்-தான் இந்தப் பழக்கம் ஆரம்பமானது.

[3] சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே இடங்களை நிம்ரோத் என்பவன் அரசாண்டான். (ஆதி 10:10). நிம்ரோத் என்பவன் காம் என்பவனுக்கு பேரன். காம் என்பவன் நோவாவின் மகன். இந்த பாபேல் என்னும் இடத்தில்தான் ஜனங்கள் ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். இதுவும் மெசெப்பத்தோமியா பகுதியைச் சேர்ந்ததாகும். தொல்பொருள் ஆராய்ச்சியில் "ஊர்" என்ற பகுதியில் இருந்த சிக்குராத் (ziggurat) கோவில்களில் சின் அல்லது நன்னார் என்றழைக்கப்படும் தெய்வங்களை வணங்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு கோவில் சுவரில் நிலா மற்றும் சிலை வழிபாட்டைச் செதுக்கியிருப்பதைக் காணலாம். கி.மு. 3000-2500 என்று கணிக்கப்பட்டுள்ளது.


நிம்ரோத் ஆட்சியில் இந்த சிலைவழிபாடு ஆரம்பமானது.Thursday, December 17, 2009

26. தேவனின் பிள்ளைகள் காதலிப்பது தவறா? அதுவும் உண்மையான அன்புதானே? உண்மையான காதல் என்ன தவறா?

அன்பை நான்கு 'பெரிய வகையாக'ப் பிரிக்கலாம்

[1] Agape = God's love - தேவனின் அன்பு
[2] Philia= brotherly love - சகோதரத்துவ அன்பு
[3] Eros = romantic love - காதல் என்னும் அன்பு
[4] Storge = parents love towards their children. -
குடும்பம்: பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு.

உண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான்
(Agape love). தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.

மனிதர்களின் அன்பு என்பது "காரணங்களை/நிபந்தனைகளை" அடிப்படையாகக் கொண்டு உள்ளது (conditional love). தேவனின் அன்பு நிபந்தனையற்றது (Unconditional love). நாம் கறுப்போ, வெள்ளையோ, குட்டையோ, மிக உயரமோ, ஏழையோ எப்படி இருப்பினும் அவர் நம்மை நேசிக்கிறார். நீங்கள் "ஏன் இவர் அந்த நபரைமட்டும் காதலிக்கின்றார்?" என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கு பதிலாக சில காரணங்கள் இருக்கும் (தோற்றம், குணம், நிறம், பணம்... என ஏதோ). காதல் என்பது Eros என்னும் [3]ம் வகையைச் சேர்ந்தது. அதில் "கண்களின் இச்சை" (lust of the eye) உள்ளது. இச்சை தவறு என்று வேதம் சொல்லுகிறது, என்றால் காதலிப்பது?


பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தன் கண்ணுக்கு பிரியமான ராகேலைத் லாபானின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டான், ஆனால் அதில் சில சிக்கல்கள். சிம்சோனின் பெற்றோர் அவன் விருப்பத்தை எதிர்த்தனர். அவன் மனைவி வேறொருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். தேவன் மோசேயுடன் பேசும்போது கூட "ஒரு பெண் நியமிக்கப்பட்டால்.." என்று வாசிக்கிறோம்.


ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் தேடியதை அறிவோம். யூதர்களின் முறையில் நிச்சயதார்த்தம் செய்தபின்தான் திருமணம் நடைபெற்றது.
ரூத் என்னும் சரித்திரமும் அப்படியே சொல்கின்றது. இயேசுவின் தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள் என்று அறிவோம். இயேசு அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து நமக்கு உதாரணமாக இருந்துள்ளார். கானாவூர் கலியாணத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். தமிழ் நாட்டில் இந்து, முஸ்லீம் என்னும் மதங்களிலும் கூட நிச்சயித்து திருமணம் செய்வது பொதுவான பழக்கம். வெளிநாடுகளில் தேவ பயமில்லை, எனவே நிச்சயம் செய்து திருமணங்கள் நடப்பது மிகவும் குறைவு.

நீங்கள் காதலிப்பதை தேவன் தடை செய்வதில்லை. ஆனால் அதற்குப்பின்வரும் விளைவுகளுக்கு அவர் பொறுப்பும் அல்ல. எனவே அவரிடம் போய் புகார் செய்யாதீர்கள்.

ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் "சேத்" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

II கொரி 6:17,18
17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.


காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்!
எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.


.

Wednesday, December 9, 2009

25. பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

கேள்வி: விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள் (மாற்கு 16:17) இயேசு பிசாசை துரத்தவே அதிகாரம் கொடுத்தார். இப்படியிருக்க, பிசாசினை ஜெபங்களில் கட்டி சபித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல், அக்கினியில் சுட்டெரித்தல் என்பதெல்லாம் சரிதானா?

இரண்டு வசனங்களை முதலில் வாசிப்போம்.
வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

லூக்கா 13:16
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.

மேலே இரண்டு விதமான கட்டுகளைக் காண்கிறோம்.
முதலாவது பிசாசு ஆயிரவருட ஆளுகைக்கு முன்பு கட்டப்படுகின்றான். "பிசாசைக் கட்டவேண்டும்", "பாதாளத்திற்கு அனுப்புதல்" என்னும் உபயோகம் இங்கிருந்து வந்தது.

இரண்டாவது 18 வருட கூனி பிசாசின் கட்டில் இருந்தாள், இயேசுவால் விடுவிக்கப்பட்டாள். நாமும் கூட பிசாசின் பாவக்கட்டில் இருந்தோம். தேவன் நம்மை இரட்சித்தார், இப்போது அந்தக் கட்டிலிருந்து விடுதலையாயிருக்கிறோம். எனவே இங்கே "கட்டு" என்பது அடிமையாயிருப்பது என்றும் பொருள்படும்.

மத்தேயு 12:29. அன்றியும் பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். இங்கே ஒரு உதாரணம்/உவமை சொல்லப்படுகின்றது.
பிசாசின் வல்லமையை ஜெபத்தின் மூலம் கட்டமுடியும். அடுப்பை எரியவிடு என்றால் அடுப்பிலுள்ள விறகு என்பதுபோல், பிசாசைக் கட்டி என்றால் அவன் வல்லமையைக் கட்டி என்றுதான் நான் புரிந்துகொண்டுள்ளேன். வெளி 20:2 ல் கூறப்பட்டுள்ள சம்பவம் 1000 வருட ஆளுகைக்கு முன்பு உண்மையிலேயே கட்டப்படுதல்.

"சுட்டெரித்தல்": எலியா
தன்னை அழைக்க வந்தவர்களை வானத்திலிருந்து அக்கினி இறக்கி சுட்டெரித்தான். மேலும் ஒரு இடத்தில் சீஷர்கள் எலியா செய்ததுபோல் நாமும் அக்கினியால் இவர்களை சுட்டெரிப்போமா என்கின்றனர். எனவே இங்கிருந்து சுட்டெரித்தல் என்கிற உபயோகம் வந்திருக்கக்கூடும். ஆனால் பிசாசை அக்கினியால் நாம் சுட்டெரித்துவிட முடியாது, தேவன் அதற்கென்று ஒரு நாள் வைத்துள்ளார். யோபையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் தேவன் ஒரு வேலி அடைத்து பாதுகாத்தார் என்று வாசிக்கிறோம். அது ஒரு அக்கினிபோன்ற வேலி என்றும் சொல்லப்படுகின்றது. (Wall of fire). நம்மைச்சுற்றி [தேவனின்] அக்கினிமதில்கள் இருந்தால் பிசாசானவன் நம்மைத் தொடமுடியாது.

எனவே [வல்லமையைக்] "கட்டுதல்" என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது, ஆனால் "அக்கினியால் எரித்தல், பாதாளத்திற்கு அனுப்புதல்" என்பவை சரியான உபயோகம் என்று சொல்லமுடியாது.

Monday, December 7, 2009

24. தேவன் அன்பாயிருக்கிறார் (God is Love) என்றால் அவர் ஏன் நரகத்தை உண்டாக்கி மனிதர்களை அங்கே அனுப்பவேண்டும்?இப்படியாக ஒரு கேள்வியினை உலகத்தார் எழுப்புகின்றார்கள்: "If God is love, How could a God of love send people to the lake of fire (or hell)
?". எப்படி அன்பானவர் நரகத்தை உண்டாக்கி மனிதனை அங்கே தள்ளமுடியும்?

'அன்பே கடவுள்' என்று அநேக இடங்களில் வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது எங்கிருந்து வந்தது என்றால்: I யோவான் 4:7,8லிருந்து
7. பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8. அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். (God is Love)

இயேசு மத்தேயு 25:41ல் "அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்." என்று கூறினார்.

"தேவன் பிசாசுக்காகவும், அவனுடைய [விழுந்துபோன] தூதர்களுக்காகவும் மட்டுமே அக்கினிக்கடலை உண்டாக்கினார்".

நீங்கள் பிசாசை பின்பற்றினால், அல்லது பிசாசின் கிரியைகளுக்கு உட்பட்டால், நீங்களே பிசாசின் பின்னாகச் செல்கின்றீர்கள், பிசாசின் பிள்ளைகளாகவும் அவனுடைய கூட்டத்தாராகவும் ஆகின்றீர்கள். எனவே தேவனல்ல, பிசாசே உங்களைத் தனக்கென்றும், தன்னுடைய கூட்டத்தாருக்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நரகத்திற்கு அழைத்துச் செல்கின்றான். நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள்? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்கள்.

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

தேவன் மனிதனுக்காக நரகத்தை உண்டாக்கவில்லை. [மீண்டும் ஒருமுறை படியுங்கள்]. 


மனிதன் பாவத்திலிருந்து விடுபடும்படி தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பினார். இது தேவன் நம்மேல் வைத்த அன்பினால்தான். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவர் அன்பாகவே இருக்கிறார். "நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்புகூருங்கள்" என்று சொல்கின்றார். நம்மை நரகத்துக்கு அனுப்புவது அவரது சித்தமல்ல. ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையவேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கின்றது.

.

Wednesday, December 2, 2009

23. தேவன் ஏன் பிசாசை [சாத்தானை] உண்டாக்கினார்?


எசேக்கியேல் 28:15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
எசேக்கியேல் 28:12 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.

எசேக்கியேல் 28:16,17 உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்;

ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.


தேவன் அவனை உண்டாக்கியபோது அவன் ஒரு பூரண அழகிய தேவதூதன். பாவத்தினால் விழுந்துபோனான்.

அவனை பிசாசாக தேவன் உண்டாக்கவில்லை.

.

Sunday, November 29, 2009

22. இயேசுவின் படமோ, சிலையோ வைத்துக்கொள்ளலாமா? கிறிஸ்து பிறந்த நாளைக் (Christmas) கொண்டாடலாமா? பைபிளில் கொண்டாடச்சொல்லி இல்லையே.

கேள்வி: இயேசுவின் படமோ, சிலையோ வைத்துக்கொள்ளலாமா? கிறிஸ்து பிறந்த நாளைக் (Christmas - கிறிஸ்துமஸ்) கொண்டாடலாமா? பைபிளில் கொண்டாடச்சொல்லி இல்லையே.


[Part A]
[இயேசுவின்] படமோ, சிலையோ வைத்துக்கொள்ளக்கூடாது என்று
கேள்வியும் பதிலும் தொகுப்பில்: 15 வது கேள்வி-பதிலில் கடைசி பகுதியிலும் சிலைபற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
உபாகமம் 16:22 யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
உபாகமம் 7:5 நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
எசேக்கியேல் 8:10 நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.
எசேக்கியேல் 8:12 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் "சித்திர" விநோத (imagery) அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா?

கடைசி வசனத்தில் சித்திரம் (படம்) என்னும் (imagery) வார்த்தையைப் பாருங்கள். கர்த்தர் சிலையையும், அதின் படங்களையும் (சித்திரங்கள், வரைபடங்கள்) வெறுக்கிறார். எனவே படமும், சிலையும் வைத்துக்கொள்ளக்கூடாது!

சும்மா ஞாபகத்துக்குத்தான் என்று சாக்குபோக்கு சொல்லி படம், சிலைகளை/படங்களை வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒரு சந்ததியிலிருந்து மறுசந்ததி வரும்போது (Generations transition) அவர்கள் அந்த சிலை மற்றும் படங்களை [தூபம்/சாம்பிராணி போட்டு] வணங்க ஆரம்பித்துவிட வாய்ப்புகள் மிகவும் அதிகம். இஸ்ரவேல் ஜனங்களின் வரலாறே இதற்கு எடுத்துக்காட்டு.
இதற்காக நீங்கள் என்னுடைய குடும்பத்தினர் படம் என்ற புகைப்படங்களையுமா வைத்துக்கொள்ளக்கூடாது என்ற உச்சத்திற்கு போகக்கூடாது. அவைகளை வைத்துக்கொள்ளுங்கள், அவைகளை வணங்காதீர்கள். ஒருவேளை நீங்கள் கலை உணர்வு உள்ளவராக சிற்பி என்ற தொழிலில் இருக்கலாம். நல்லது, அது ஒரு திறமை. மற்ற தெய்வங்களையோ, வணங்கப்படும் விக்கிரகத்தையோ செய்யாதீர்கள். உங்கள் திறமையை வேறொரு திசையில் வெளியாக்குங்கள்.

[Part B]

இயேசு பிறந்ததைக் (Christmas - கிறிஸ்துமஸ்) கொண்டாடலாமா? கொண்டாடுங்கள் என்று வேதத்தில் இல்லை என்று நீங்கள் சொன்னது சரிதான். என்னுடைய விளக்கம்:
[1] யோபு, எரேமியா தன் பிறந்தநாளைச் சபிக்கிறார்கள்.
[2] ஏரோது தன் பிறந்தநாளன்று விருந்து செய்தான்.
[3] பழைய ஏற்பாட்டில் பார்வோனும் பிறந்த நாளன்று விருந்து செய்தான்.
[4] இயேசு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதாக வேதத்தில் இல்லை. தனக்கு முப்பது வயதாகும்போது ஞானஸ்நானம் பெற்றார் என்று வாசிக்கிறோம். அன்று அவருடைய பிறந்த நாளாயிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்கின்றனர்.

குமாரனாகிய இயேசு திரித்துவ தேவனில் ஒருவர், அவருக்கு துவக்கமும், முடிவும் இல்லை. அப்படியென்றால் பிறப்பு என்பது அவர் பூமிக்கு வந்த தேதி. இயேசுவின் பிறந்த தினம் அன்று:
- தேவதூதர்கள் திரளாகத்தோன்றி தேவனைத் துதித்தார்கள்.
- கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் அவரைப் பணிந்துகொண்டார்கள்.
- லூக்கா 2:15,16 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
இயேசு பிறந்த அந்த நாளை அனுசரிக்கலாம் (Observe), தவறில்லை. கொண்டாலாமா (Celebrate) என்றால், எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதில் பதில் உள்ளது. இந்துக்களைப்போல வெடிவெடித்துக் கொண்டாடக்கூடாது (காரணம், யாரேனும் வெடித்து கிறிஸ்துமஸ் அன்று இறந்து போனால், காயமடைந்தால் என்ற கேள்வி எழுகின்றது). உலகம் என்னும் மாயைக்குள்ளும் சென்றுவிடக்கூடாது (Worldliness). அப்படிச் செய்தால் உங்களுக்கும் உலகத்தாருக்கும் ஒரு வித்தியாசம் இல்லாமல் போகும்.
நாம் மரியாள், யோசேப்பு, குழந்தை-இயேசு என்று சிலைகளைச் செய்யாமலும், கொலு வைக்காமலும் இருக்கவேண்டும். புது சட்டை அணியலாம் தவறில்லை. விருந்து, பல ஆகாரம் சாப்பிடலாம் தவறில்லை. மற்றவர்களுக்கு இனிப்பு கொடுக்கலாமா? கொடுக்கும்போது இயேசு எதற்காக பூமிக்கு வந்தார் என்று சொல்லிக்கொடுத்தால் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் கொடுப்பதில் அர்த்தமில்லை. எஸ்தர் 9-ல் அவர்கள் பூரிம் என்னும் பண்டிகை கொண்டாடும்போது ஒருவருக்கொருவர் வெகுமானங்களை (Gifts) கொடுத்தார்கள், ஏழைகளுக்கு உதவி செய்தார்கள் என்றும் வாசிக்கிறோம் "sending portions one to another, and gifts to the poor". எனவே ஏழைகள், திக்கற்றபிள்ளைகள், விதவைகளுக்கு உதவிசெய்யுங்கள். அது தேவனுடைய பார்வையில் அருமையானதாக காணப்படும்.
அன்று முக்கியமாக சபைக்குச் சென்று பாட்டுப்பாடி தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயேசு இல்லாவிட்டால் நமக்கு இரட்சிப்பு ஏது? உங்களுடைய இருதயத்தில் இயேசு பிறந்திருக்கின்றாரா என்று கேளுங்கள். அதாவது நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படும் அனுபவமே கிறிஸ்து உங்களில் பிறக்கும் உண்மையான "கிறிஸ்துமஸ்" நாளாகும்!!


சிந்தியுங்கள்:
- லூக்கா 2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.இஸ்ரவேல் தேசமும், இந்தியா, சவுதி அரேபியா தேசமும் பூமத்திய ரேகைக்கு (Equator) மேலே இருப்பதால் குளிர் மற்றும் கோடைகாலங்கள் இந்த தேசங்களுக்கு ஒரே சமயத்தில்தான் வரும். இது விஞ்ஞானத்தின்படி உண்மை என்று நம்மனைவருக்கும் தெரியும். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். வயல்வெளி, இராத்திரி, மந்தையைக் காவல் என்று இந்த மூன்று வார்த்தைகளில் அது டிசம்பர் என்னும் குளிர் காலமாக இருக்க வாய்ப்பில்லை என்று சில வேதபண்டிதர்கள் சொல்கின்றார்கள், ஏனெனில் வடக்கே குளிர்காலத்தில் 8 முதல் 10 செல்சியஸ் (8-10* C) என்று வெட்பத்தின் அளவு இருக்கும், எர்மோன் மலைகளில் பனிக்கட்டிகள் (Snow/Ice) காணப்படும். அறுவடை முடிந்தபின்புதான் வயல் காலியாக இருக்கும். அப்போதுதான் மந்தையினை கிடை போடுவார்கள். இலையுதிர் காலம், அதாவது செப்டம்பர்-அக்டோபர். அப்படி என்றால் என்றைக்கு கிறிஸ்துமஸ்?
.

Wednesday, November 25, 2009

21. இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?

தேவன் திரித்துவ தேவன் (Triune God) என்பதை முதலில் நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டும்.
அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற திரித்துவ தேவன்.

திரித்துவம்
ஆதியாகமம் 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: "இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் (one of us) ஆனான்; "
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (In our likeness and in our image).
ஆதியாகமம் 11:7 நாம் (Let us) இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
மேலே நாம், நமது & நம்மில் என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. இவை தேவனின் திரித்துவத்தினை புரிந்துகொள்ளக்கூடிய வசனங்கள்.


எபிரெய பாஷையில் "וַיֹּאמֶר אֱלֹהִים נַֽעֲשֶׂה אָדָם בְּצַלְמֵנוּ כִּדְמוּתֵנוּ וְיִרְדּוּ בִדְגַת הַיָּם וּבְעֹוף הַשָּׁמַיִם וּבַבְּהֵמָה וּבְכָל־הָאָרֶץ וּבְכָל־הָרֶמֶשׂ הָֽרֹמֵשׂ עַל־הָאָֽרֶץ׃" என்று வாசிக்கிறோம்.
God אלהים 'elohiym
said, אמר 'amar
Let us make עשה `asah
man אדם 'adam
in our image, צלם tselem
after our likeness: דמות dĕmuwth


எபிரெய மொழியிலும் "God-elohiym" பன்மையில் கூறப்பட்டுள்ளது.
இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடத்தில் "இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள் என்ற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அன்றியும் பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவர்மேல் வந்து இறங்கினார்". பரிசுத்த ஆவியாகிய தேவனைக் காண்கிறோம். குமாரனாகிய தேவன்[இயேசு] தண்ணீரில், பிதாவாகியதேவன் வானத்திலிருந்து (Heavens)! . மூன்று ஆளத்துவங்களையும் இங்கே காண்கிறோம்.

தேவன் தாம் சிருஷ்டித்தவைகளிலும் திரித்துவத்தை [மறைத்து] வைத்துள்ளார். உதாரணமாக:
- அணு : எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்றினைக் கொண்ட ஒன்று.

- மனுஷன்: ஆத்துமா, சரீரம், ஆவி ஆனால் மனுஷன் ஒருவனே.

- தண்ணீரின் (H2O) மூன்று நிலைகள்: திட, திரவ, வாயு என்று ஒரே சமயத்தில் ஆனால் தண்ணீர்தான்.
- விண்வெளியில் ஒரு புள்ளிக்கு (co-ordinate) போக: நீளம், அகலம், உயரம் (x, y, z) இவை எல்லாம் அளவுதான். எல்லாம் ஓரே நேரத்தில் இருக்கின்றன, ஒரே இடத்தை நோக்கி!

ஆனால் தேவன் ஒருவரே. மனிதன் வைத்துள்ள கணக்கின்படி:
1 x 1 x 1 = 1 என்றும், பூலியன் (Boolean) கணக்கில் 1 AND 1 AND 1 = 1 என்றும் நாம் புரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுக்கலாம்.திரித்துவத்தைக்குறித்து அநேக புத்தகங்கள் வந்துள்ளன.

இயேசு தேவனுடைய குமாரனா?:
[1] மத்தேயு 8:29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். இங்கே
அவர் தேவனுடைய குமாரன் என்று பிசாசுகளே சொல்லுகின்றன.

[2] மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். இங்கே மனிதர்கள் அவரை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகின்றார்கள்.

[3] லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
இங்கே ஒரு தேவதூதன் அவர் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான்.

[4] மத்தேயு 26:63,64 அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 22:70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். இங்கே இயேசுவே நான் தேவகுமாரன் என்று சொல்கின்றார்.

எனவே இயேசு பூமிக்கு வந்தபடியால் தேவனுடைய குமாரனே!

இயேசு தேவனா?
[1] I யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.


[2] II பேதுரு 1:1 நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

[3] ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

 [4] தாவீது சொல்லும்போது சங்கீதம் 110:1ல் கர்த்தர் என் ஆண்டவரை (LORD) நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
(மேலே வசனத்திலே "கர்த்தர்" என்பது பிதாவாகிய தேவனையும், "என்" என்பது தாவீதையும், "ஆண்டவரை" என்பது [குமாரனாகிய] இயேசுவையும் குறிக்கிறது.)

மத்தேயு 22:42-47ல் இயேசு ஒரு கேள்வி கேட்கிறார்:
கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். [நான் தேவன் அல்லவா? என்னை எப்படி தாவீதுக்கு குமாரன் என்று சொல்கிறீர்கள்.]
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

 
[5] யோவான் 20:28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
(அதற்கு இயேசு தோமாவை கடிந்துகொள்ளவில்லை.)

[6] மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார். இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.

[7] தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" 

என்கிறார்.

[8] யோவான் 10:33ல் "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."  இங்கே இயேசுவே தான் தேவன் என்று சொன்னதாக வாசிக்கிறோம். இதற்குமேல் வேறு என்ன வேண்டும்?

மேலே கூறப்பட்ட வசனங்களில் இயேசு தேவன் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.


குமாரன் எப்பொழுது இருந்து இருக்கிறார்?ஆதிமுதல் இருக்கிறார். உலகத்தை அவர் உருவாக்கினார். வெளிப்படுத்தலில் அவர் நான் ஆதியும் அந்தமும் [ ஆல்பாவும், ஒமேகாவும்] என்றார்.
யோவான் 1: ஆதியிலே வார்த்தை [குமாரனாகிய தேவன்] இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் [குமாரனாகிய தேவன்] ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. இங்கே குமாரனாகிய தேவனைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. குமாரனாகிய அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல.

 
I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

இன்னும்
தேவனுக்கே உரிய விசேஷமான தன்மைகள் (attributes) என்னவெனில்:
[1] I இராஜாக்கள் 8:40ல் தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால்
என்று வாசிக்கிறோம்.

இயேசு மனிதருடைய இருதயத்தில் இருந்ததை அறிந்திருந்தபடியால் என்று யோவான் 2:25ல் வாசிக்கிறோம்.

[2]
தேவன் ஒருவருக்கே பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் (authority/power) உண்டு என்று வாசிக்கிறோம்.
நமக்கு எல்லாருக்கும் இயேசு மனுஷருடைய பாவங்களை மன்னித்தார் என்று தெரியும். வாசியுங்கள் மத் 9:6, மாற்கு 2:10, லூக்கா 5:24.

[3]
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று வாசிக்கிறோம்.
ஆனால் இயேசுவை எல்லாரும் பணிந்துகொண்டார்கள். [முக்கியமாக அவர் உயிர்த்தெழுந்தபின்பு]
மத்தேயு 14:33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத்தேயு 8:2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
யோவான் 9:38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.
மத்தேயு 28:9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். (worship)

ஸ்தேவான் மரிக்கும்போது இயேசுவிடம் தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுத்து "கர்த்தராகிய இயேசுவே" என்று ஜெபிக்கிறான்.

மேலே இயேசுவை எல்லாரும் வணங்கியதைப் பார்க்கிறோம். மேலே கூறப்பட்ட அனைத்தும் தேவனுக்குரியவை.

ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது...அந்த வார்த்தை[இயேசு] மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வெளிப்பட்டார் என்பதிலும் இயேசு தேவன் என்று நேரடியாக சொல்லப்பட்டுள்ளது. திரித்துவம் புரியாதவர்களுக்கு இதை விளங்கிக்கொள்வது கடினம்.


எனவே இயேசுவை  தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் சொல்லலாம்..

Friday, November 20, 2009

20. உலகம் 2012ம் வருடம் டிசம்பர் 21ம் தேதி அழியும் என்று சொல்கின்றார்களே. அப்படியா?
விஞ்ஞானம்: நாம் வசிக்கும் விண்மீன்திரளுக்கு (Galaxy) பால்வழி-விண்மீன்திரள் (Milky-way Galaxy) என்று பெயர். விண்மீன்திரள் என்பது பல கோடானகோடி விண்மீன்களைக் கொண்டதாகும். இதில் நமது சூரியனும் ஒரு விண்மீன். இந்தச் சூரியன் என்னும் விண்மீனைத்தான் பூமி உட்பட 10 கோள்கள் சுற்றிவருகின்றன. நமது சூரியக்குடும்பம் இந்த விண்மீன் திரளின் பெரிய வட்டத்தில் சுற்றுகின்றது. அதை ஒருதடவை சுற்றிவர 220-225 மில்லியன் வருடங்களாகும். இதில் ஒரு விண்மீன்திரள் நாள் என்பது 25,625 வருடங்களாகும். இதை ஐந்து 5125 சுழற்சியாக பிரிக்கப்பட்டுள்ளது. (One galactic day of 25,625 years is divided into five cycles of 5,125 years). இந்த அண்டம் (Universe - billions of galaxies) எவ்வளவு பெரியது என்று நீங்களே பாருங்கள்.


மாயன் காலண்டர்
: இது மெக்ஸிகோ வளைகுடா பகுதி (வட மற்றும் தென்அமெரிக்காவுக்கு இடைப்பட்ட பகுதி) யில் வசிக்கும்
ஆதிவாசிகளினால் எழுதப்பட்ட ஒரு காலண்டர். எப்படி தமிழ் வருடங்கள் 60 வருடங்களைக் கொண்டுள்ளதோ, அதேபோல் இந்த மாயன் ஆதிவாசிகளுக்கு 5125 வருடங்களாகும். இதில் 4 முறை 5125 வருடங்கள் வந்துவிட்டதாம், கடைசியான 5125ம் வருடம் டிசம்பர் 21, 2012ல் முடிந்துவிடுமாம். அதன் பின் அவர்களுக்கு வருடங்கள்/காலண்டர் இல்லை என்று சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு 5125 வருடங்கள் முடியும்போதும் பூமியில் பேரழிவுகள் வருமாம். இந்த தடவை தங்களுடைய காலண்டரே முடியப்போவதால் பூமியே அழியும் என்று மிகப்பெரிய அளவில் பேச்சு நிலவுகின்றது. சிலர் புது ஆரம்பம் இருக்கும் என்று சொல்கின்றனர். அவர்கள் இதற்கு முன் கணித்துக்கூறிய பல சம்பவங்கள் நிறைவேறியிருக்கின்றனவாம்.
விஞ்ஞானம்: சூரியன் இந்த விண்மீன் திரளின் மையத்துடன் நேர்க்கோட்டில் 5125 வருடங்களுக்கு ஒருமுறை வருமாம். வரும் டிசம்பர் 21, 2012ல் விஞ்ஞானிகளின் கணக்கும் மாயன்களின் கணக்கும் ஒத்துப்போவதால் எல்லாரும் இப்போது மாயன் காலண்டரை ஆராய்ச்சி செய்கின்றார்கள். அந்த காலண்டர் துல்லியமானது என்று சொல்லப்படுகின்றது. அன்று சூரியன் பால்வழி விண்மீன் திரள் மையத்தோடு நேர்கோட்டில் வந்தால் விஞ்ஞானப்படி அந்த மையத்தில் ஈர்ப்பு மிக மிக அதிமாயிருப்பதால், பூமியின் அச்சில் ஆட்டம் கண்டு அது மாறக்கூடும், துருவங்கள் நகரக்கூடும், காந்த அலைகள் மாறும், பூமியின் சுற்றும் திசையில்கூட மாற்றம் வரலாம் என்று விஞ்ஞானிகளே சொல்லுகிறார்கள். அப்படி குலுங்கும்போது பூமியதிர்ச்சிகளும், கடல் நீர் உள்ளே புகுதலும், துருவங்களிலுள்ள பனிக்கட்டிகளின் இடமாற்றமும் நடைபெறும், அப்பொழுது தீவுகளும், எந்த நாடு வேண்டுமானலும் இல்லாமல் போகுமாம்.
...ஆனால் NASA-விலிருந்து விஞ்ஞானி ஒருவர் பூமி ஒவ்வொரு குளிர்காலத்திலும் விண்மீன் திரள் மையத்தோடு நேர்க்கோட்டில் வருகின்றது, இது ஒன்றும் புதிதல்ல, ஒன்றும் சம்பவிக்காது. விண்வெளிக் கற்கள் எதுவும் பூமியைத்தாக்கும் என்றால் அவைகள் நம்முடைய தொலைநோக்கிகளுக்கும், கண்களுக்கும் தெரியும் தொலைவில் இருக்கும், அப்படி எதுவும் இல்லை என்று உறுதியுடன் சொல்கின்றார்.

இப்படி ஒரு செய்தி ஜனங்களிடையே பரவுகின்றது. பைபிள் என்ன சொல்கின்றது?
2012ல் உலகம் அழியும் என்று சொல்லப்படவில்லை. இன்னும் குறைந்தது 1000ம் வருங்களுக்கு பூமி அழியாது. ஏனெனில் பூமியில் 1000 வருட ஆளுகை இருக்கும் என்று வேதம் சொல்லுகின்றதே!
ஆனால், பூமியதிர்ச்சிகளும், யுத்தங்களும் பூமி உண்டானதுமுதல் இல்லாத அளவுக்கு வரும் என்று இயேசு ஏற்கனவே சொல்லிவிட்டுப்போனார். ஆனால் அது உபத்திரவகாலத்தில் காணப்படும். அதற்கு முன் இரகசிய வருகை இருக்கும். உபத்திரவகாலத்தில் வானத்திலிருந்து பூமியில் விழும் நட்சத்திரங்களைக்குறித்தும் பூமியில் அதினால் உண்டாகும் சேதங்களைக்குறித்தும் இன்னும் அநேக சேதங்கள், ஆபத்துகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகமானது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரால் மீண்டும் அழியாது.

இரகசிய வருகை எப்போது இருக்கும்? அதான் இரகசியம்-னு சொல்லியாச்சே.
மத்தேயு 24:36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

21 டிசம்பர் 2012-ல் உலகம் அழியாது.


"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" .
Updated 17 Dec 2012: 

நாசாவிலிருந்து முன்கூட்டியே "ஏன் நேற்று உலகம் அழியவில்லை என்று" ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. Tuesday, November 17, 2009

19. இயேசு "யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல்" இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தாரா?

இந்தக் கட்டுரையின் நோக்கம் இயேசு தாம் சொன்னபடியே மரித்து மூன்றுநாள் இரவும் பகலும் கழித்து எழுந்தார் என்று விளக்குவதாகும்.

இயேசுவிடம் யூதர்கள் ஒரு அடையாளம் கேட்டார்கள். அப்பொழுது இயேசு சொன்னார்: மத்தேயு 12:40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

பெரிய வெள்ளி (Good Friday) அன்று அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று வேதத்தில் இல்லை. ஓய்வுநாளுக்கு முன்தினம் இறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
வெள்ளியன்று (12pm-3pm) அவர் இறந்திருந்தால்: வெள்ளி இரவு, சனி பகல், சனி இரவு என்று ஒன்றரை நாள்தான் வரும். வாரத்தில் முதலாம் நாள் ஞாயிறு காலையில் கல்லறையில் அவர் இல்லை.

இதைக்குறித்து வாதிடும் மற்ற மதத்தினர்களுக்கு என்னுடைய செய்தி: "இயேசு உயிருடன் எழுந்தார் என்று நீங்கள் நம்புகின்றீர்கள். மகிழ்ச்சிடையகின்றேன்"

இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னவை (லூக்கா 24:25-49) :
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.

மேலே: "நான் மூன்றாம் நாள்
மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டியதாயிருந்தது" என்று இயேசு உயிர்த்தெழுந்தபின்பு சொன்னார். எனவே மூன்று நாள் இரவும் பகலும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படியானால் கணக்கின்படி வெள்ளிக்கிழமை இறக்கவில்லை என்றே கூறவேண்டும். காரணம் இயேசு பொய் பேசவில்லை. பொய் பேசவேண்டும் என்று அவர் பேசியிருந்தால் அவர் சிலுவையில் அறையப்படாமலே தப்பியிருக்கமுடியும். அநேக இடங்களில் அவரைக்கொல்லும்படி வகைதேடும்போதெல்லாம் அவர் மறைந்துபோனார். ஆனால் அவர் பூமிக்கு மனிதனாக வந்ததே நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமக்கும்படிதானே.

எது ஓய்வு நாள்?
ஏழாம் நாள் ஓய்வு நாள். ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்றால், 52 ஓய்வுநாட்கள் என்று நாம் முடிவுக்கு வரக்கூடாது. பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாட்களைப் பார்ப்போம்.
[1] யாத்திராகமம் 31:15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; (இதுதான் 52 தடவை வருடத்துக்கு வரும்). இது போக...
[2] லேவியராகமம் 16:29-31 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே (07/10), சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும் பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.

[3] லேவியராகமம் 23:4-8 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
3A. முதலாம் மாதம் பதினாலாம் தேதி (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
3B. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்
3C. முதலாம் நாள் (01/15) உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
3D. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் (01/21) பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
[4] அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது;
[5] லேவியராகமம் 23:24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி (07/01) எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.[6] லேவியராகமம் 23:34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் (07/15 - 07/21) கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
6A. முதலாம் நாள் (07/15) சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
6B. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் (07/22) உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

{ Repeats [6] லேவியராகமம் 23:39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் (07/15) கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு (07/15), எட்டாம் நாளிலும் ஓய்வு (07/22). }

எனவே ஏழாம் நாள் தவிர, பல ஓய்வுநாட்களை நாம் காண்கிறோம். இவைகள் பெரிய ஓய்வு நாட்கள் அல்லது விசேஷித்த ஓய்வுநாட்களாகும் . இவை வழக்கமாய் வரும் ஏழாம் நாளைத் தவிர மாதம் பிறக்கும் தேதியினைப்பொருத்து எந்தக் கிழமையிலும் வரலாம்.

லூக்காவில் வாசியுங்கள்:
லூக்கா 6:1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். [எத்தனை ஓய்வுநாட்கள் புரிந்ததா? see http://www.a4t.org/Sermons/Brown/time_line_calendars.pdf ]

யூதர்களின் வருட அட்டவணையைப் பார்க்கவும். அதில் எங்கெல்லாம் ஓய்வுநாள் என்று பாருங்கள்.
. http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2008&mode=j
. http://www.chabad.org/calendar/view/year.asp?tDate=11/18/2009
நாள், மணிவேளை, ஓய்வுநாள், இதன் ஆரம்பம், முடிவு:
நாள்: யூதர்களுடைய நாள் சாயங்காலம் துவங்கி, மறுநாள் சாயங்காலம் வரைக்குமாகும். உங்களுக்கு இதுவரை தெரியவில்லையெனில் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இங்கே [கலிஃபோர்னியாவில்] என்னுடன் வேலைபார்க்கும் யூதர்களும் எங்களுக்கு நாள் என்பது சாயங்காலம் துவங்கி, அடுத்தநாள் சாயங்காலம் ஆரம்பமாகும் வரை என்றே சொல்கின்றார்கள். வேதாகமத்திலும் ஆதியாகமம் 1 ல் "சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதல் நாள் ஆயிற்று" என்று உறுதிப்படுத்துகின்றது. மேலே கொடுக்கப்பட்டுள்ள யூதர்களின் வருட அட்டவணையும் அப்படித்தான். யூதர்களின் இணையத்தளமும் அதைத்தான் சொல்கின்றது: http://www.jewfaq.org/holiday0.htm

ஓய்வு நாள்: லேவியராகமம் 23:32 சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

மணிவேளை: வேதத்தில் ஆறாம் மணிவேளை என்றால் நம்முடைய தற்போதைய நாட்கணக்கின்படி மதியம் 12 மணியாகும், ஒன்பதாம் மணிவேளை என்றால் மாலை 3மணியாகும்.
விளக்கம்: மத்தேயு 20:1-12 அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணி வேளையிலும் (9am) அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள்; நியாயமானபடி உங்களுக்கு கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம்(12pm) ஒன்பதாம் மணிவேளையிலும்(3pm) அவன் போய் அப்படியே செய்தான். பதினோராம் மணிவேளையிலும்(5pm) அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவனும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள். நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். சாயங்காலத்தில் (6pm), திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் "ஒரு மணி நேரமாத்திரம்" வேலை செய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.


மூன்று நாள் இரவும் பகலும் கணக்கு எப்படி?
யோவான் 19:13,14 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.. அந்த நாள் "பஸ்காவுக்கு ஆயத்தநாளும்" ஏறக்குறைய ஆறுமணி (12pm) நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
மாற்கு 15:42 ஓய்வுநாளுக்கு முந்தின நாள் "ஆயத்தநாளாயிருந்தபடியால்", சாயங்காலமானபோது, கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
யோவான் 19:30, 31 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
லூக்கா 23:53,54
அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; [பெரிய] ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
எனவே இயேசு மரித்தது ஆயத்த நாளில்தான். இதில் சந்தேகமே இல்லை.நன்றாக கவனித்தால் அந்த வாரம் இரண்டு ஓய்வுநாட்கள் வருவதைக்காணலாம். மேலே யோவான் எழுதின சுவிஷேசத்தில் 19:30, 31ல் தெளிவான பெரிய ஓய்வு நாள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஓய்வுநாட்கள் ஒருவாரத்தில் இதற்குமுன் வந்திருக்கின்றது என்பதை லூக்கா 6:1 ல் உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன்.

ஓய்வுநாள் ஆரம்பமாவது சாயங்காலம் என்பதை நினைவில்கொண்டுவரவும். எனவே அந்த பெரிய ஓய்வு நாளில் யூதர்கள் வேலை ஒன்றும் செய்யவில்லை.

லூக்கா 23:55,56 [அதற்கு மறுநாள்] கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

இங்கே பரிமளதைலங்களை ஆயத்தம்பண்ணியது ஒருநாள்.
பின்பு கற்பனையின்படியே (as per commandment அதாவது ஏழாம் நாள்) ஓய்ந்திருந்தார்கள், இது அதற்கு அடுத்தநாள்.
மத்தேயு 28:1 ல் "ஓய்வு நாட்களுக்குப் பின்" என்று கூறப்பட்டுள்ளது:Young's Literal Translation:And on the eve of the sabbaths, at the dawn, toward the first of the sabbaths, came Mary the Magdalene, and the other Mary, to see the sepulchre,

கிரேக்க மொழி:

οψε δε σαββατων τη επιφωσκουση εις μιαν σαββατων ηλθεν μαρια η μαγδαληνη και η αλλη μαρια θεωρησαι τον ταφον
[ σαββατων noun - genitive plural neuter sabbaton]

அதாவது ஓய்வு நாட்கள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில் [6am என்று வைத்துக்கொண்டால்கூட ஞாயிறுநாள் ஆரம்பித்து சுமார் 12மணிநேரம் ஆயிற்று - அதான் நாள் சாயங்காலம் ஆரம்பமாகின்றதே], மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அங்கே அவர் இல்லை.
எனவே:
புதன்கிழமை - அவர் சிலுவையில் அறையப்பட்டார். அன்றே 3:00pm மரித்தார், அடக்கம் செய்யப்பட்டார். [அன்று பஸ்காவுக்கு ஆயத்த நாள்]
வியாழக்கிழமை - "பெரிய ஓய்வுநாள்",
வெள்ளிக்கிழமை - "பரிமளதைலங்கள் ஸ்திரீகள் தயார் செய்தார்கள்",
சனிக்கிழமை - கற்பனையின்படி ஓய்வுநாள்.
இயேசு உயிருடன் எழும்பியது சனிக்கிழமை மாலை அதாவது ஞாயிறு ஆரம்பிக்கும் கொஞ்சம் முன்னே. எப்படியெனில் சாயங்காலம் துவங்கி, சாயங்காலம் வரைக்கும் ஓய்வுநாள் என்று வாசித்தோம். யோவான் 28:1ல் ஓய்வுநாட்கள் முடிந்த சாயங்காலம் என்று வாசித்தோம். அதாவது வாரத்தின் முதல்நாள் ஆரம்பமாகிறது. மரித்த புதன் மாலையிலிருந்து இது மிகச்சரியாக மூன்று இரவுகள் மற்றும் மூன்று பகல்கள், அதாவது 72 மணி நேரம் (24 x 3). மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்றும் சொல்லலாம்.

இதைத்தான் இயேசுவும் உயிர்த்தெழுந்த பின்பு நான் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழவேண்டியதாயிருந்தது என்று [நாம் ஆரம்பத்தில் படித்த பகுதியில்] சொன்னார்.

பெரிய ஓய்வுநாள் வேறொரு பார்வை (யாத்திராகமம் 12:2-8):
"இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் (01/10) தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி (01/14) வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்" என்று வாசிக்கிறோம்.

இயேசுதான் நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி (I கொரிந்தியர் 5:7 நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே).

எனவே 14ம் தேதி சாயங்காலம் அவர் இறந்தார்.

3A. வில் (01/14) அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும் [ஆயத்த நாள்],
3B, 3C. யில் அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே (01/15), கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் இருக்கும் என்று வாசிக்கிறோம். இது பெரிய ஓய்வு நாள். அதாவது இயேசு மரித்து அடக்கம்பண்ணப்பட்ட நாளுக்கு அடுத்த நாள். இதன் பின் ஒரு வேலைசெய்யும் நாள், பின் ஓய்வுநாள் என்று அந்த வருடம் வந்துள்ளது.
"பஸ்கா ஆயத்த நாள் (01/14)" அன்று அவர் இறந்திருக்கிறார் சரி, அவர் சீஷர்களுடன் இராப்போஜனம் எப்போது சாப்பிட்டார்?
யூதர்களுக்குத்தான் நாள் சாயங்காலம் துவங்குகின்றதே, "பஸ்கா ஆயத்த நாள்" துவங்கிய அன்று மாலை சாப்பிட்டார். இரவு காட்டிக்கொடுக்கப்பட்டார். விடிந்து பகலில் (இன்னும் நாள் முடியவில்லை) பஸ்கா ஆயத்த நாள் அன்று சிலுவையில் அறையப்பட்டு, அன்றே அடக்கம்பண்ணப்படுகிறார்.. அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையிலே மரித்து பின்பு அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார். இதை நாம் விசுவாசிக்கவேண்டும்.

Friday, November 13, 2009

18. என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் இத்தனை வருடங்கள் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என் கையிலிருக்கிறதா? (Mans life)

உங்களுக்கு இந்த பதில் ஒரு புதிய பார்வையைத் தரும் என்று நான் எண்ணுகிறேன்.

சங்கீதம் 103:15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற் போயிற்று.
சங்கீதம் 144:4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
புல்லை யார் வேண்டுமானாலும் அறுக்கலாம், ஒரு மாடு எப்பொழுது வேண்டுமானாலும் அதை சாப்பிட்டுவிடும் அல்லது மிதித்து விடும். இவையெல்லாம் மனிதனின் வாழ்நாட்கள் இந்தப்பூமியில் நிரந்தரமல்ல என்பதை வலியுறுத்துகிறது.


என்னுடைய வாழ்க்கையின் நாட்கள் இத்தனை வருடங்கள் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதா? இல்லை என் கையிலிருக்கிறதா?

முதல் கேள்விக்கு பதில்: ஆம்.
இரண்டாம் கேள்விக்கு பதில்: ஆம்.
எப்படி இரண்டுக்கும் ஆமாம் என்று சொல்லுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கவேண்டாம்.

என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் ஒன்றை வைத்துள்ளார். அது மாறாத தேதி அல்ல, மாற்றப்படக் கூடியதேதி. (It is not a constant, It is a variable). அது தள்ளியும் போகலாம், முன்னாக மாற்றப்படவும் முடியும். தேதி தள்ளிப்போன ஒரு ஆள் எசேக்கியா, 15 வருடங்கள் கர்த்தர் கொடுத்தார். (I இராஜாக்கள் 20:6 உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்) தேதி முன்னாக வந்த ஆட்கள் அதிகமான பேர்.

வேதத்தை சற்றே ஆராய்ந்து பார்ப்போம்:
[1]
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
எனவே சராசரியாக 120 வயதுதான் ( சிலர் 130 எல்லாம் தொட்டுள்ளார்கள்), உலகின் சாராசரி (average) வயது 120. இது தேவன் வெளிப்படையாக சொல்லிய வார்த்தைகள்.
இந்தச் சராசரி வயதைத் தாண்டமுடியாது என்பதில் சந்தேகம் இல்லை. (பூமியில் ஏதேனின் நிலமை திரும்பும்வரை).

[2] நீதிமொழிகள் 4:10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
[3] நீதிமொழிகள் 5:8, 9
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
[4] நீதிமொழிகள் 9:11 என்னாலே (தேவனாலே) உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
[5] நீதிமொழிகள் 10:27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
[6] உபாகமம் 5:16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.


இப்ப நீங்களே சொல்லுங்க, உங்கள் ஆயுசின் நாட்கள் எப்படி அதிகமாகும்? எப்படிக் குறையும்?

அப்படி என்றால்.. கீழே இருக்கின்ற வசனத்துக்கு என்ன அர்த்தம்?

[7]யோபு 14:5 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.


அது எப்படி ஆண்டவர் எனக்கு "70" வயசுன்னு குறித்த பிறகும் நான் 60 வயசுல சாகமுடியும்?
[8] பிரசங்கி 7:17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?
[9]எண்ணாகமம் 22:33 கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

காலத்துக்கு முன்னே ஏன் சாகனும் என்பதற்கான காரணம் [7]ல் கூறப்பட்டுள்ளது. காலத்துக்கு முன்னே ஒருவேளை பிலேயாம் மரித்திருப்பான், ஆனால் ஒரு கழுதையின் செயலால் அவன் கொல்லப்படவில்லை.
காலத்துக்கு முன்னே அநேகர் மரித்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் ஆகான், சவுல் (அஞ்சனம் பார்க்கப்போய் [3]வது காரணம்), சிங்கம் கொன்ற கீழ்ப்படியாமல்போன தேவமனுஷன், மோசேயின் கட்டளையால் கல்லெறிந்து கொல்லப்பட்டவர்கள், தற்கொலைசெய்துகொள்பவர்கள் எல்லாரும் காலத்துக்கு முன்னே மரித்தவர்கள்.இன்னும் சில சந்தர்ப்பங்கள் (கட்டாயப்படுத்தப்பட்டவை):
[10] மாற்கு 7:10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.
[11] யாத்திராகமம் 21:14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டு போய்க் கொலைசெய்யவேண்டும்.
[12] லேவியராகமம் 20:27 அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.
[13] யாத்திராகமம் 22:19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
[14] லேவியராகமம் 24:16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
[15] எண்ணாகமம் 35:16 ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும்.

இவைகளைச் செய்தவர்கள் காலத்துக்கு முன்னே நீக்கப்படவேண்டும் என்று புரிகின்றது. இதைத்தானே அரசாங்கம் (சட்டம்)
செய்தது, செய்கின்றது? செய்யவேண்டும்.

இன்னொரு எடுத்துக்காட்டு:
வெண்டைக்காயை பிஞ்சிலேயே பறிப்பார்கள். பழங்களை கனிந்தவுடன் பறிப்பார்கள். எனவே தோட்டக்காரருக்கு பறிக்க அந்த உரிமையுண்டு. அப்படியே நம்முடைய தோட்டக்காரராகிய இயேசுவும் சில சமயங்களில் சீக்கிரம் எடுப்பார், ஏனெனில் அதற்குமேல் இருந்தால் அது கெட்டுவிடும்.


ஆம்! கர்த்தர் குறித்த தேதியில் இறந்துவிடுவோம். நாம் எப்படி ஜீவிக்கின்றோம் என்னும் ஒரு சமன்பாடும் (equation) இதை குறுகச்செய்துவிடுகின்றது, இந்தச் சமன்பாட்டில் எத்தனை அளவுருக்கள்! (parameters in this equation).

.


Wednesday, November 11, 2009

17. தேவனின் பெயர் என்ன? தேவனை உண்டாக்கியது யார்? (What is the name of God?)


[Part A] தேவனின் பெயர் என்ன?
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தால், இரண்டையும் வேறுபடுத்த அதற்கு வேறொரு வார்த்தையைச் சேர்த்து, ஆண் பறவை, பெண் பறவை என்றோ அல்லது இரண்டு பெயர்களை வைத்தோ அழைக்கலாம்.

இந்த உலத்திலேயே
ஒருவேளை ஒரே ஒரு பறவைதான் இருந்தால், அதை "பறவை" என்று அழைத்தால் போதும். ஏனெனில் வேறு எந்த வகையான பறவையும் உலகில் இல்லையே.

அப்படியே இந்த உலத்திலும், இனிவரும் உலகத்திலும், விண்வெளியிலும் (Worlds, Galaxies, space) தேவன் ஒருவரே! அவருக்குப் பெயர் தேவையில்லை. பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் அவர் திரும்பிப் பார்க்கவேண்டும் என்றா? அப்படிப்பட்டச் சிந்தனையே ஒரு சிறுபிள்ளைத்தனமானது.
இந்த உலகில் தெய்வங்கள் என்று மற்றவர்கள் நினைப்பவைகளெல்லாம் பிசாசின் ஆவிகள், விழுந்துபோன தூதர்கள் (fallen angels). அவைகள் அநேகமாயிருப்பதினால் அவைகளின் பெயர்களும் அநேகம்.

வேதத்தில் இருந்து சில பகுதிகள்:யாத்திராகமம் 3:13-15 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM THAT I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். 15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
ஒரு அருமையான பதிலை தேவன் மோசேக்கு சொன்னார். பெயர் இங்கே தேவையில்லை, தேவன் ஒருவர்தான்.


யாத்திராகமம் 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் (Almighty God) என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா (YHWH) என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Jehovah
is translated as "The Existing One" or "Lord." The chief meaning of Jehovah is derived from the Hebrew word Havah meaning "to be" or "to exist." It also suggests "to become" or specifically "to become known". அதாவது 'இருக்கிறவராகவே இருக்கிறேன்'.

ஏசாயா 54:5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்;
நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.


அவருக்கு எப்பொழுது பெயர் தேவைப்பட்டது என்று பார்த்தால், அவர் பூமியில் மனிதனாக பிறக்கும்போதுதான். அநேக மனிதர்கள் இருக்கும் இந்தப் பூமியில் அவரை வித்தியாசப்படுத்தும்படி "இயேசு" (பாவங்களிலிருந்து இரட்சிப்பவர்) என்று பெயர் கொடுக்கப்படுகிறது. அந்தப்பெயரைக்கூட மனிதன் தேர்ந்தெடுத்து அவருக்குச் சூடவில்லை.

இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேறு பெயர்கள்:
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்...அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்
வெளி 19:16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

இப்போதும் அப்பா, பிதாவே என்று அழைக்கும் உரிமையை தேவன் நமக்கு கொடுத்திருக்கிறார். என் நாமத்தினால் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

[Part B] தேவனை உண்டாக்கியது யார்?
தேவனை யாரும் உண்டாக்கவில்லை. நான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று தேவன் மோசேயிடம் சொன்னார். வெளிப்படுத்தின விசேஷத்தில் நான் ஆல்பாவும் (Αα), ஒமேகாவும் (Ωω) ஆதியும் அந்தமுமாக இருக்கிறேன். நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவர் தேவன். நம்முடைய நேரம் என்னும் குறியீட்டுக்கு (time domain) அப்பாற்பட்டவர்.God is Infinite: தேவன் வரையறைக்கு மீறியவர், எல்லையில்லா அளவுள்ளவர்.
God is Omnipresent: தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில்.
God is Omniscient: தேவன் எல்லாம் அறிந்தவர்.
God is Omnipotent: தேவன் எல்லாம் வல்லவர்.


எபிரெய மொழியில் தேவன் என்பதற்கு "El" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இதற்கு அர்த்தம்: supreme god, the father of humankind and all creatures. சர்வ சிருஷ்டிக்கும், மனிதகுலத்துக்கும் பிதா, தேவாதி தேவன்.

கர்த்தர் என்பதற்கு எபிரெய மொழியில் "Adonai" என்ற பதம். இதற்கு Master (எஜமான்) என்று பொருள்.


சிந்தனைக்காக:
ஒருவேளை மாதேவன் என்று ஒருவர் தேவனை உண்டாக்கியிருந்தால், அந்த மாதேவனை உண்டாக்கியது யார் என்று கேட்கப்படும். அவரை உண்டாக்கியது மாமகாதேவன் என்றால் அவரை உண்டாக்கியது யார்......என்று போய்கொண்டே இருக்கும்.
எதுவாயினும் சிருஷ்டிக்கப்பட்டால் அது ஒரு சிருஷ்டி, தேவன் அல்ல!

(குறிப்பு: இயேசுவானவர் சிருஷ்டிக்கப்படவில்லை. அவர் தேவன்; இந்த உலகை உண்டாக்கினார், அவர் ஆதியும் அந்தமுமானவர்; ஆபிரகாமுக்கு முன்னே நான் "இருக்கிறேன்" என்று மோசேயுடன் சொன்ன அதே பதிலை இயேசு சொல்கிறார். இதை கேள்விபதில் 21 மற்றும் 63-ல் வாசிக்கலாம்.)
.

16. ஆதியாகமம் 3:15ல் சொல்லப்பட்டவை புரியவில்லை (Gen 3:15 meaning). விளக்கவும்.
ஆதியாகமம் 3:15: "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்".


வித்து என்றால் விதை, அதாவது சந்ததி (seed, offspring, generation) என்று பொருள்.
ஏவாள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டபின்பு தேவன் சர்ப்பத்துக்கு(பிசாசு) ஒரு அறிவிப்பு சொல்கின்றார். "உனக்கும் ஸ்திரீக்கும், ஸ்திரீயின் சந்ததிக்கும், உன் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்". இங்கே 'அவர்' என்று இயேசுவைக்குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இதுவே இயேசுவின் பிறப்பைக்குறித்த முதலாவது முன்னறிவிப்பு.
[1] ஸ்திரீயின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை - இந்த உலகத்தில் காணப்படும் "பாவம்". (இன்றும் பாம்பைப் பார்த்தால் பகையினால் அடித்துக் கொல்லுகிறார்கள் என்று சிலர் விளக்கம் சொல்கின்றனர்.)
[2] ஸ்திரீயின் வித்து - இயேசு கிறிஸ்து. கலாத்தியர் 4:5 ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் ... தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
[3] அவர் உன் தலையை நசுக்குவார் -
இயேசு பிசாசின் கிரியைகளையும் வல்லமையையும் சிலுவையிலே அழிப்பார். ஏனெனில் I யோவான் 3:8ல் "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்" என்று வாசிக்கிறோம்.[4] நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் - இது இயேசுவின் சிலுவையின் பாடுகளைக் குறிக்கிறது.

எபிரெயர் 2:14,15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.

இன்னொரு சிறுகுறிப்பு: பிசாசைக்குறித்து அல்ல, பாவத்தினால் நாம் தேவனுக்கு பகைஞராய், சத்துருக்களாய் இருந்தோம். நம்மை அவருடன் சமாதானப்படுத்தின (ஒப்புரவு) நிகழ்வும் சிலுவையிலேதான். எபேசியர் 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
(மேலே படத்தில் சிங்கத்தின் மடியில் ஆட்டுக்குட்டி படுத்து இருப்பது ரொம்பவே அழகாதான் இருக்கு).


.

Tuesday, November 10, 2009

15. மரியாளை வணங்கக்கூடாது (worshiping Mary is sin) என்று ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எப்படி விளக்குவது?முன்னோட்டமாக:
கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபடத்தொடங்கினது. அப்போது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். இதை உதாரணமாகக் காட்டி: பாருங்கள் அங்கே அவர்களுக்கு தேவையான திராட்சரசத்தை மரியாள்தான் இயேசுவிடமிருந்து வாங்கிக்கொடுத்தாள். எனவே நம்முடைய தேவைக்கு தாயிடம் கேட்டாள், மறுக்காமல் கிடைக்கும் என்று ரோமன் கத்தோலிக்கர்கள் சொல்கின்றார்கள். இது தவறான புரிந்துகொள்ளுதல். இயேசு செய்த மற்ற ஆயிரக்கணக்கான அற்புதங்களில் ஏன் மரியாளிடம் யாரும் போகவில்லை? மரியாள் ஒரு மனிதர்.

நான் கொடுக்கும் 10 காரணங்களை படியுங்கள்:

[1] யோவான் 14:6 இயேசு சொன்னார்: "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்". என்னாலேயல்லாமல் ஒருவனும் வேறு வழியாக பரலோகம் செல்லமுடியாது.
நான்தான் வழி. மரியாள் அல்ல.

[2] கானாவூர் கலியாணத்தில் (யோவான் 2:4) இயேசு சொன்னார், "ஸ்திரீயே (Woman), உனக்கும் எனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லையே". அம்மா அல்லது தாயே (Mummy/Mom/Mother) என்னும் வார்த்தைகளை அவர் சொல்லவில்லை. ஸ்திரீயே - Woman என்றார். இங்கே "ஸ்திரீயே" என்னும் வார்த்தை மிகவும் மரியாதைக்குரிய கனம்பொருந்திய வார்த்தையாகும். (Madam என்னும் மரியாதைச் சொல் போல)ஆனால் அதில் உறவு இல்லை. தேவனுக்குத்தான் அம்மா, அப்பா, ஆதி, அந்தம் (துவக்கம் மற்றும் முடிவு) இல்லையே.
தாய் என்னும் உறவை இங்கு இயேசு மறுக்கின்றார். அவர்தான் மரியாளை அவளுடைய தாயின் கர்ப்பத்தில் உண்டாக்கினார். எனவே "மரியாள் ஆண்டவருக்கு தாய், அவளிடத்தில் தான் கேட்கவேண்டும்" என்பது தவறு.

[3] மாற்கு 3:33 இயேசுவைக் காணவில்லையென்று மரியாளும், யோசேப்பும் தேடிவரும் நேரத்தில், அங்கே ஜனங்கள் "உம்முடைய தாயாரும் சகோதரரும் உம்மைத் தேடுகிறார்கள்" என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! என் பிதாவின் சித்தம் செய்பவர்களே எனக்கு தாயாரும் சகோதரரும் என்றார்.
தாய் மற்றும் சகோதரர்கள் என்னும் உறவையும் இங்கே மறுக்கின்றார். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில்(God the father) நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார்.

[4] யோவான் 19:26 ல் இயேசு சிலுவையில் தொங்கும்போதும், "அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்." தெளிவாக ஸ்திரீயே என்றுதான் அழைக்கிறார். இங்கேயும் அந்த உறவு இல்லை.


[5] 1 தீமோ 2:5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும்
மத்தியஸ்தரும் (mediator) ஒருவரே. அவரே இயேசு என்று வாசிக்கிறோம். இயேசுதான் மத்தியஸ்தர், குறுக்கே மரியாளை மத்தியஸ்தராக கொண்டுவருவது தவறு.

[6] லூக்கா 2:35 ல் மரியாள் ஒரு பட்டயத்தால் கொல்லப்படுவாள் என்று பார்க்கிறோம். அவளும் சீஷர்களைப்போல இரத்த சாட்சியாக மரித்தாள்.

[7] அப் 2-ம் அதிகாரத்தில் மரியாள்
பெந்தெகொஸ்தே என்னும் நாளில் 120 பேரில் ஒருவராக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றாள். அந்நிய பாஷைகளில் பேசினாள். அந்த கூட்டத்தாரை அவள் சேர்ந்திருந்தாள். கத்தோலிக்க கூட்டத்தாரை அல்ல.

[8] யோவான் 14:13,14 "நீங்கள்
என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." என் நாமத்தில் என்று இயேசு சொன்னார். மரியாளின் நாமத்தில் கேட்பது தவறு.

[9] இயேசு பூமிக்கு வர மரியாள் ஒரு பாத்திரமாக இருந்தாள். அவள் ஒரு பாக்கியமான பெண்தான்! அதில் சந்தேகமில்லை. சோறு சமைக்கவேண்டும் என்றால் ஒரு பாத்திரம் (cooker) தேவைப்படுகின்றது. சமைத்தப்பின்பு சோறுதான் சாப்பிடவேண்டும். பாத்திரத்தை (cooker) அல்ல. மரியாள் பாத்திரம், இயேசு அந்த உணவு. மரியாளை வழிபடுவது பாத்திரத்தைக் கடித்து சாப்பிடுவதுபோல் இருக்கின்றது.

[10] யாத் 20:3, 4 "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்". இதற்குப்பின்னும் சிலைகளை வைத்து வணங்கினால் (மரியாள் சிலையானாலும், இயேசுவின் சிலையானாலும்) பரலோகம் செல்ல வாய்ப்பில்லை என்று வெளி 21:8ல் சொல்லப்பட்டுள்ளது.இயேசுதான் மரியாளை உண்டாக்கினார், எனவே அவர்தான் மரியாளுக்கு அப்பா. அப்படியானால் அவர் மரியாளுக்கு மகன் என்பது சரியாகாது.

மாற்கு 12:35. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அதுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.


மரியாளை வணங்குங்கள் என்று பைபிளில் எங்கேயும் இல்லை. வெளி 21:8-ல்: பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

மரியாளை வணங்குவது பாவம்.

அந்தோனியாரின் சிலையை வணங்குவதும் பாவம்.
இயேசுவின் சிலையை வணங்குவதும் பாவம்.
எந்த சிலையையோ படத்தையோ வணங்கினாலும் பாவம். அப்படிச் செய்பவர்கள் நரகத்துக்கு பங்கடைவார்கள்.


Monday, November 9, 2009

14. பரிசுத்த ஆவி (Holy Spirit), தேவனுடைய ஆவி, கர்த்தருடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி என்ன வித்தியாசம்?

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி - என்னும் திரித்துவத்தை நாம் முதலில் ஞாபகத்தில் கொண்டு வரவேண்டும்.

கிறிஸ்து, குமாரன், இயேசு, மனுஷகுமாரன், தேவகுமாரன் - எல்லாம் இயேசுவையே குறிக்கின்றது.

"II கொரி 3:17 கர்த்தருடைய ஆவியானவர் எங்கே உண்டோ அங்கே விடுதலையுண்டு."
- இங்கே சொல்லப்பட்ட "கர்த்தருடைய ஆவியானவர்" பரிசுத்த ஆவியாகிய தேவன். இயேசு சொன்ன தேற்றரவாளனும் அவரே. ("Spirit of the Lord", "Spirit of God", "The Comforter" and "
Holy Spirit" are the same.)

"ரோமர் 8:9. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."

- இங்கே சொல்லப்பட்ட "தேவனுடைய ஆவி"யும் பரிசுத்த ஆவியாகிய தேவனே.
- ஆவியும், மனதும்(சிந்தனையும்) ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டவை.

- "கிறிஸ்துவின் ஆவி" என்று இங்கே சொல்லப்பட்ட வார்த்தையானது, கிறிஸ்து இயேசு கொண்டிருந்த ஆவி அதாவது மனது அல்லது சிந்தை என்று பொருள். கிறிஸ்துவின் சிந்தையானது தாழ்மை (பிலி 2:5-7), அவர் அடிமையின் ரூபம் எடுத்து சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். நமக்கு கிறிஸ்துவின் சிந்தையில்லாவிட்டால் நாம் அவருடையவர்கள் அல்ல. கிறிஸ்துவின் ஆவி என்று வேதத்தில் இங்கே மட்டும்தான் வருகின்றது.

(spirit of Christ means the spirit that Christ had, or the mind of Christ, which is humility)
- நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது "கிறிஸ்துவின் ஆவியினை" / மனதைப் பெறுகிறோம். அங்கே மனதிலிருக்கும் பாவச்சுமை நீக்கப்பட்டு ஒரு சமாதானம் வருகின்றது.
- நாம் பரிசுத்த ஆவியினைப் பெறும்போது "தேவனுடைய ஆவி" அதாவது பரிசுத்த ஆவியாகிய தேவன் நம்மில் வாசம் செய்கிறார்.


Sunday, November 8, 2009

13. இயேசுவின் இரண்டாம் வருகை (Second Advent), இரகசிய வருகை(Secret advent) பற்றி சொல்லுங்கள்.

[1] இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.


[2] இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:
சுருக்கமாகச் சொன்னால், நாம் தற்போது கிருபையின் காலத்தில் (Period of grace) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இயேசுவின் இரகசிய வருகையுடன் முடிவடையும். அதன் பின்பு உபத்திரவகாலம் இருக்கும். அதற்குப்பின்பு ஆயிரவருட இயேசுவின் ஆளுகை அல்லது அரசாட்சி இந்தப் பூமியில் நடைபெறும். இயேசு சொன்னார்: "பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் (mansions) உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்"; மேலும்:யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை (a place) ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

எபிரெயர் 9:28 தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

இயேசுவின் இரண்டாம் வருகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.


 * இரகசிய வருகை / திருடன் வருகிறவிதமான வருகை: (Secret Advent)
 * உபத்திரவ காலத்தின் வருகை (Tribulation Martyr's Harvest)
 * வெளிப்படையான வருகை (Public Advent)

 இவை எல்லாமே இரண்டாம் வருகைதான். 
. எப்படியெனில் இரகசிய வருகையில் செல்பவர்களுக்கு அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையில் போகாதவர்கள் இன்னும் அவரை சந்திக்கவில்லை.
. உபத்திரவகாலத்தில் மரிப்பவர்களுக்கும் அது இரண்டாம் வருகை ஏனெனில் அப்போதுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துவை இரண்டாம் வருகை. 

. எஞ்சி இருப்பவர்களுக்கு வெளிப்படையான வருகைதான் இரண்டாம் வருகை.

 [2-A] இரகசிய வருகை / திருடன் வருகிறவிதமான வருகை: (Secret Advent)
திருடன் வருகிற விதமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரமாகஇருக்கும்.
திருடன் வந்து விட்டு போனபின்பு எப்படி எல்லாரும் திருட்டை அறிந்துகொள்கிறார்களோ அப்படியே இரசியவருகை நடந்து முடிந்தபின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுவார்கள். இந்த வருகையில் முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள், இரண்டாவதாக உயிரோடிருக்கும் நாமும் அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபப்படுவோம். இந்த இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் (twinkling of an eye) நடைபெறும். எனவே இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.

I தெசலோனிக்கேயர் 4:14-18
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
I தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே
திருடன்வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
1கொரிந்தியர் 15:50-54
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது [1] மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; [2] நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.


[2-B] உபத்திரவ காலத்தின் வருகை (Tribulation Martyr's Harvest)
கர்த்தருடைய வருகைக்குப்பின் உபத்திரவகாலம் இருக்கும். இது சுமார் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.[3.5 years+3.5 years]. உபத்திரவம் ஏழு வருடங்கள் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

[ வருடங்களும், ஸ்திரீ, ஆண்பிள்ளையின் அர்த்தமும்:
ஸ்திரீ பெற்ற ஆண்பிள்ளை சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வெளி 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (1260 days/360 = 3.5 years)வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (1260 days/360 = 3.5 years)
(Jewish calendar: see http://www.webexhibits.org/calendars/calendar-jewish.html)

ஸ்திரீயானவள் - கைவிடப்பட்ட கூட்டத்தார் (பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டபின்) என்றும்,
ஆண்பிள்ளை - இரகசிய வருகையில் சென்ற கூட்டத்தார்
என்றும் ஞானார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்திரீக்கும் ஆண்பிள்ளைக்கும் உள்ள எடையின் விகிதம் 1:20 என்று வைத்துக்கொண்டால்கூட உலகில் உள்ள சபையாரில் 20 ல் ஒரு பங்கு மட்டும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். நிச்சயமாக இது இயேசுவும் மரியாளும் அல்ல, ஏனெனில் யோவான் பத்மு தீவில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஆவிக்குள்ளாகி காண்கிறார். இதற்கு முன்பே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தாயிற்று.]
இந்த உபத்திரவகாலத்தில் அந்திக்கிறிஸ்து பூமியில் வலுசர்ப்பமாகிய பிசாசின் சக்தியுடன் ஆளுவான். இந்த உபத்திரவகாலத்தில் கைவிடப்பட்ட கூட்டத்தாரை
அந்திக்கிறிஸ்து உபத்திரவப்படுத்துவான் (வெளி 12:17). இங்கு அநேகர் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இவர்களை அழைத்துக்கொண்டு போகும்படி இயேசு மீண்டும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். பின்பு யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவாலயம் கட்ட உதவியாயிருப்பான். [இப்போது அங்கே தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவாலயம் கி.பி. 70ம் வருடம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இயேசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. அங்கே தற்போது ஒரு மசூதி இருக்கின்றது. see paragraph 3 on http://en.wikipedia.org/wiki/Temple_in_Jerusalem] அதன்பின் தன்னை வணங்கவேண்டும் என்று சொல்லுவான் II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். அப்பொழுது யூதர்கள் அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துபோட்டுவிடுவார்கள். அவன் யூதர்களை துன்புறுத்துவான். இந்த யூதர்களில் 144000 பேர் முத்திரையாக பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7).

வெளி 7:9-14
.
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 14: 14-20 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

[2-C] வெளிப்படையான வருகை (Public Advent)
உபத்திரவ காலம் முடிந்த பின்பு, இயேசு ஒலிவமலையில் வந்து இறங்குவார். ஒலிவமலை இரண்டாக பிரியும் (கீழே பார்க்கவும்). அவரை இதுவரை விசுவாசிக்காத யூதர்கள் தங்கள் ஒரே பேறான குமாரனுக்காக அழுது புலம்புவது போல் அழுவார்கள். அவரைக் குத்தினவர்களின் (யூதர்கள்) கண்கள் அவரைக்காணும். இயேசுவே மேசியா என்று அப்பொழுது அறிந்துகொள்ளுவார்கள். சகரியா 12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்திக்கிறிஸ்து மற்றும் அவன் சேனைகளை அவர் தமது வாயிலிருந்து புறப்படும் பட்டயத்தால் ஜெயிப்பார். (அர்மகெதோன் யுத்தம். Battle of Armageddon வெளி 16:16வெளி 19:13-21)

மத்தேயு 24:29,30. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.சகரியா 14:3-5
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.


[3] ஆயிரவருட ஆளுகை, நியாயத்தீர்ப்பு, நித்தியம்:
அந்திக்கிறிஸ்துவின் சேனையை வென்றபின்பு பழைய பாம்பாகிய பிசாசென்னும் வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தில் ஆயிரவருடம் அடைக்கப்படுவான்.

வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

1000 வருட ஆளுகை இந்த பூமியில் இதன்பின்பு துவங்கும். அப்பொழுது ஏதேனில் இருந்த நிலமையை மீண்டும் பூமியில் இயேசு கொண்டுவருவார். ஏசாயா 11:6-9
6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆயிரவருட ஆளுகைக்குப்பின்பு பிசாசானவன் பாதாளத்திலிருந்து திறந்துவிடப்படுவான். இவன் தன் சேனைகளோடு (கோகு, மாகோகு) கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணவருவான்.  இதற்குப் பின்பு பிசாசும் அவன் சேனையும் ஆதிமுதலாக அவர்களுக்கென்று உண்டாக்கிவைக்கபட்டிருந்த அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். இதன் பின்பு "வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு" இருக்கும். பூமி மரித்தோரை ஒப்புவிக்கும். தாங்கள் செய்த கிரியைக்கான பலனை அடையும்படி பரலோகத்துக்கும் நரகத்தும் ஜனங்கள் வேறுபிரிக்கப்படுவார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் தேவனோடிருப்பார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் நரகம் என்னும் அக்கினிக்கடலில் வாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

இன்று நீ இறந்துபோனால்(மரித்தால்) எங்கே போகுவாய்? என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். பரலோகம் போகமுடியும் என்று உறுதியாய் உங்களால் சொல்லமுடியாவிட்டால், இயேசுவிடம் முழங்கால் படியிட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

இப்போது நீங்கள் இருக்கும் இடத்திலேயே முழங்கால்படியிட்டு கண்ணீரோடு அவரிடம், "இயேசுவே, நீர் மெய்யான குமாரனாகிய தேவன் என்றும், நீர் சிலுவையிலே என்னுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்து
உயிர்த்தெழுந்தீர் என்றும் விசுவாசிக்கிறேன். நான் பாவியாகிய மனுஷன், என் பாவங்களை மன்னியும். இந்த பாவம் என்ற பாரச்சுமையை என்னிலிருந்து நீக்கும். உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும். என் இருதயத்தில் வாரும். நான் இனி உம்முடைய பிள்ளையாக பாவம் செய்யாமல் ஜீவிப்பேன். இனி இந்த உலகத்தார் போல ஜீவிக்கமாட்டேன். என்னை உம்முடைய மகனாக/மகளாக ஏற்றுக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்". என்று ஜெபியுங்கள், அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

இந்தத் தலைப்பில் புத்தகங்கள் எழுதலாம். மேலே கூறப்பட்டவை ஒரு சுருக்கமாகும்.