Wednesday, July 28, 2010

47. விண்வெளி கற்கள் (Asteroids) பற்றி பைபிளில் உண்டா?

பைபிளில் "வெளிப்படுத்தல்" என்ற புத்தகத்தில் இனி நடக்கவிருக்கும் அநேக காரியங்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. விண்வெளியிலிருந்து வரும் ஆபத்துகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. கீழே வாசிப்போம்:

வெளி 8:8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று

- இங்கே விண்வெளி மலை ஒன்று கடலில் விழுவதைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது.

வெளி 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

- இங்கே ஒரு Meteor-shower போன்ற ஒரு நிகழ்வு. மரத்தின் காய்கள் உதிருவதுபோல என்பதால் அது எரி/வால் நட்சத்திரத்திலிருந்து எப்படி பொறிகற்கள் விழுமோ அது போன்ற ஒரு சம்பவமாயிருக்கலாம், எரிகற்கள் அல்லது நட்சத்திரங்களிலிருந்து வரும் சிதறலாயிருக்கலாம்.

வெளி 8:10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

- இங்கே விண்வெளியிலிருந்து வந்து பூமியில் விழுந்து 33% சேதமடையும் என்று பெரிய அளவில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வருங்கால நிகழ்ச்சிகளை பயமுறுத்தும் வகையில் விஞ்ஞானமும் சில உண்மைகளை கண்டுபிடித்து சொல்கின்றது. ஆனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இவ்வளவு பெரிய சேதம் வரும் என்பதை
இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை.

இன்று (28 ஜூலை 2010) வந்த செய்தி:
மாபெரும் விண்வெளி-கல் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. இது
இன்னும் 172 வருடத்தில் பூமியில் மோதும் சாத்தியம் உள்ளது என்று நாசா சொன்னது. (http://www.csmonitor.com/Science/Cool-Astronomy/2010/0728/Huge-asteroid-on-possible-collision-course-with-Earth-172-years-from-now)

இந்த விண்வெளி-கல் அல்லது விண்வெளி-மலை என்பது பூமியில் மோத சாத்தியங்கள் 1/1000 அதாவது ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு. மோதும் வருடம் கி.பி. 2182. இந்த விண்வெளிகல்லுக்கு 1999-RQ36 என்ற பெயர் சூடப்பட்டுள்ளது. இது பெரிய வெண்வெளி மலையாகும். நமக்கு இன்னும் 172 வருடங்கள் இருக்கின்றன. இதற்குள் ஏதேனும் செய்யவேண்டும் என்கின்றனர்.

பயப்படத்தேவையில்லை என்றும், தேதி தெரிந்தாலும் அதற்கு இன்னும் 172 வருடங்களுக்குள்ளாக அல்ல என்கின்றனர். இதன் நீளம் 560 மீட்டர் அதாவது அரைக்கிலோமீட்டருக்கும் சற்றே அதிகம். எனவே இது விளையாட்டாக கிடப்பில் வைக்கும் விஷயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு ஏவுகணை பூமியை தாக்கினால் அங்கே பல மைல்கள் அளவுக்கு பள்ளத்தாக்கு உண்டாகும். ஒரு நகரத்தையே அழித்து, அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு பாதிப்பு இருக்கும்.

ஒரு [நல்ல] செய்தி என்னவெனில் இது கி.பி. 2182ல் தான் இது நடக்கவுள்ளது. இதற்குள் நாம் சில உபாயதந்திரங்களை (strategy) கண்டுபிடிக்கவேண்டும். இந்த விண்வெளி கல்லானது 1999ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை "ஒரு ஆபத்தையுண்டாக்கும் விண்வெளிக் கல்" என "அப்பொல்லோ வகை" யில் பிரித்தனர். ஏனெனில் இதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் அப்போல்லோ போல வருவதாக இருக்கிறதே என அப்போது நினைத்ததால்.

ஸ்பெயினிலும், இத்தாலியிலும், கலிஃபோரினியாவிலுள்ள ஆய்வகங்களிலும் கணினியைப் பயன்படுத்தி ஒரு மாடல் தயார்செய்து அதின் பாதையை துல்லியமாக முன்னறிவிக்கின்றனர். இவர்களது வெளியீடுகள் அறிவியல் பத்திரிக்கையான இக்காரஸ்( Icarus)ல் வந்துள்ளன.

இதின் சுற்றுப்பாதையை கிட்டத்தட்ட நன்றாகவே அறிந்திருக்கிறோம். 290 முறை கண்களால் காட்சியும், 13 முறை ரேடார் கொண்டு அளவிட்டும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது சூரியனைச் சுற்ற 14 மாதங்கள் எடுக்கின்றது. இருப்பினும் சூரியனிலிருந்து வெளிவரும் வெளிச்சத்தின் விசை இதுபோன்ற விண்வெளிகற்களின் சுற்றுப்பாதையின்மீது சிறிது அநிச்சயங்களை (uncertainty) உண்டாக்குகின்றன.

வேல்லடோலிட் பல்கலைகழகத்திலிருந்து மரியா யூகேனியா சான்சாதுரியோ (
Maria Eugenia Sansaturio) என்பவர்: "இந்த 1999-RQ36 தாக்கத்துக்கான மொத்த நிகழ்தகவு(probability) 0.00092 அதாவது சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்கு என்கிறார். ஆனால் இதில் 2182ல் இது நடைபெற நிகழ்தகவு 0.00054 அதாவது மொத்த நிகழ்தகவில் பாதிக்கு மேல் என்பது ஆச்சாரியமாகும்.

இதற்கு முன்பே விஞ்ஞானிகள் OSIRIS-REx என்ற விண்வெளிகலத்தை அனுப்பி பரிசோதனைக்காக சில துண்டுகளை சேகரிக்கலாம் என்று பரிந்துரை செய்திருந்தனர். நாசாவைச் சேர்ந்த பில் கட்லிப் என்பவர், "இந்த விண்வெளிக்கற்கள் என்பவை நமது சூரியக்குடும்பம் பிறக்கும் முன்பே இருந்த காலக் குப்பிகள். அப்படிப்பட்ட ஒரு தூய கற்துண்டின் விலையை சாதாரணமாக மதிப்பிடமுடியாது" என்றார்.

இதற்கு முன்னே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லியிருந்த இன்னொரு 300 மீட்டர் நீளமுள்ள அபோஃபிஸ் (Apophis)விண்வெளிக்கல் என்பது இன்னும் 30 வருடத்தில் பூமியை நோக்கி வரும் என்ற பழைய செய்தியில், தற்போது அதினால் உண்டாகும் அபாயத்தைக் குறைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை 13ம் தேதி ஏப்ரல் மாதம் 2029ம் வருடம் அது நம்முடைய தொலைக்காட்சி செயற்கைகோள்கள் பறக்கும் உயரத்தைவிட அருகில் அதாவது பூமியிலிருந்து 18300 மைல் தொலைவில் நம்மை நோக்கிவந்து இடிக்காமல் குறிதவறும், அதன்பின்பு 7 வருடங்கள் கழித்து 2036ம் வருடம் சொல்லப்பட்டுள்ள நிகழ்வு குறிதவறுமா இல்லையா என்பதையும் விஞ்ஞானிகள் கணித்துக்கொண்டு இருக்கின்றனர். எனவெ வெள்ளி 13, ஏப்ரல் 2029 அன்று மோதலில் நிகழ்தகவு 1/45000 எனபதிலிருந்து 1/250000 என குறைத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாமோ, தேவனுக்கு பயந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்வோமாக.

சங்கீதம் 33:9 "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" என்பதை மனதில் கொள்வோம்
-

Thursday, July 22, 2010

46. பைபிளில் பொட்டு வைப்பது, தாலி பற்றி சொல்லப்பட்டுள்ளதா? அதற்கு அர்த்தம் உண்டா, பொட்டு வைக்கலாமா?




பைபிளில் பொட்டுவைக்கும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படவில்லை. தாலியும் இல்லை. ஆனால் நிச்சயம் செய்தபின்பு திருமணம் செய்ததாக வாசிக்கிறோம். நிச்சயம் செய்பவர் தன் காலிலுள்ள ஒரு செறுப்பைக் கழற்றி கொடுத்ததாக "ரூத்" 4ம் அதிகாரத்தில் படிக்கிறோம். இந்த நிச்சயம் செய்யும் பழக்கம் யூதர்களிடமிருந்துதான் இந்தியாவுக்கு வந்தது.

அக்காலத்தில் தமிழர்களின் கலாச்சாரத்தில் தாலி கட்டும் பழக்கமில்லை. ஆம் இது உண்மை. பின்புதான் மஞ்சள் கயிறு அடையாளமாக வந்தது. வெளிநாட்டவர் நம் நாட்டில் புகுந்து அராஜகம் செய்ய ஆரம்பித்தபோது, தமிழ்ப்பெண்கள் தாங்களுக்கென ஒரு வேலி என்று தங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்திய அடையாளம் மஞ்சள் கயிறு. (அப்போது மஞ்சளும் கயிறும் சுலபமாக கிடைத்ததால். வேறு மாநிலங்களில் கறுப்பு-பாசி என்று...). திருமணமாகதவர்களிலும் சிலர் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு தாங்களே தங்கள் கழுத்துகளில் மஞ்சள் கயிறுகளைக் கட்டினர் என்றும் சொல்லப்படுகின்றது.  எனவே வேற்றான் ஒருவன், ஒரு பெண்ணைக்கண்டு அவள் திருமணம் ஆனவளா இல்லையா என அடையாளம் கண்டுகொள்ளவே தாலி வந்தது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்று தெரியவில்லை. பின்பு அதுவே நாளடைவில் பழக்கத்தில் வந்தது. தாலிக்கும் எந்த மதத்துக்கும் சம்பந்தமில்லை. எப்போது திருமணத்தன்று ஒரு அர்ச்சகர் (புரோகிதர்) மற்றும் தெய்வங்கள் வர ஆரம்பித்ததோ அன்றுமுதல் அது அந்த மதத்துடன் கலக்க ஆரம்பித்தது. ஆண்களும் தாலி கட்டவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கும் திருமணமாயிற்று என்று சொல்லமுடியும் என்று ஒரு கூட்டம் பெண்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதுவும் சரிதானே?

தமிழ்நாட்டில் அதற்கு முன்பு ஒரு வீரசாகசம் செய்து பெண்ணை மணக்கும் பழக்கம்தான் இருந்தது. இப்பழக்கம் இருந்ததற்கு அடையாளமாக சில இடங்களில் காளையை அடக்குவது என்ற நிகழ்ச்சியைக் காணலாம். இன்றும் சில இடங்களில் பொங்கல் பண்டிகையில் காளை மாடுகளை அவிழ்த்து தெருவில் ஓடவிட்டு இளைஞர்கள் பாய்ந்து பிடிப்பதும் காயமடைவதும் காணமுடிகிறது.
இந்துக்கள் பொட்டுவைக்க காரணம் உண்டு. அதற்கு புராணக்கதைகள் உண்டு. இணையதளத்தில் எடுத்தபகுதி (சாய்ந்த எழுத்துக்களில்): "பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவன் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை) தரவேண்டும் என சிவன் கேட்கிறான். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவனின் நெற்றியில் வைக்கிறாள். அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது. ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. தமிழர் பயன்படுத்தும் தாலியானது இரண்டு புலிப்பற்களை பொன் தகட்டால் கோர்த்தது போலிருக்கும். பண்டைநாளில் மணமகன் தானே கொன்ற புலியிடமிருந்து எடுத்துவந்த பற்களிரண்டைப் பொன் தகட்டில் கோர்த்துத் திருமண நாளிலே அதை மணமகள் கழுத்தில் கட்டும் வழக்கம் தமிழரிடையில் - குறிப்பாக, குறிஞ்சிநில மக்களிடையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது."

இப்போது அநேகர் அழகுக்காக பொட்டுவைக்கின்றனர். பூவும் தலைமுடி நாறாமல் மணம் வீசத்தான். ஆனால் இப்போது அவர்களே மல்லிகைவைத்தால் பேய் பிடிக்கும் என்று நம்புகிற அளவுக்கு போய்விட்டனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பதில்லை. பைபிளில் பொட்டு மற்றும் நெற்றியில் திலகமிடுதல் என்று ஏதும் இல்லை. எசேக்கியேல் 9ம் அதிகாரத்தில் கர்த்தர் "நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்". இங்கே அவர்கள் நெற்றியில் அடையாளமிடு என்று சொல்லப்பட்டுள்ளது, அது அவர்களை வேறுபிரித்துக்காட்டத்தான். இனி வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையிலும் "நெற்றியிலோ" அல்லது "கையிலோ" அவன் ஒரு அடையாளத்தை (முத்திரையை) தரிக்கும்படி கட்டளையிடுவான் என்று வெளிப்படுத்தலில் வாசிக்கிறோம். இது ஒரு மீச்சிறிய-சாதனமாக(micro-chip) இருக்கலாம் என்று அநேகர் சொல்கின்றனர்.
ஒரு தீவிலோ ஒரு நாட்டிலோ அவர்கள் திருமணமானவர்கள் என்பதற்கு பொட்டுவைப்பதுதான் அடையாளம், வேறு அடையாளமே இல்லை என்று இருப்பின் பொட்டுவைக்கலாம். ஏனென்றால் ஒருவர் திருமணமானவர் என எப்படி சொல்வது? அப்படின்னா அங்கே திருமணமான ஆண்களும் பொட்டுவைக்கவேண்டுமல்லவா?

இன்றும் 2010-ல் ஹவாய் (Hawaii) தீவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும், அவர்கள் வலது காதில் பூ வைத்திருந்தால்  திருமணம் ஆகவில்லை, இடதுகாதில் பூ வைத்திருந்தால் திருமணம் ஆணவர் என்று அர்த்தம்
.

பொட்டு வைப்பது பொதுவாக இந்துக்களின் பழக்கவழக்கம் என்ற கருத்து நிலவுவதால், கிறிஸ்தவர்கள் பொட்டு வைக்காமல் இருப்பதன் மூலம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்று மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்கின்றனர்.


பூஜையிலிருந்து வரும் குங்குமம், விபூதியும் வேண்டாம். அவைகளினால் விக்கிரக ஆராதனையில் பங்குபெற்றதாகிவிடும். அறிவியல் பார்வையிலும் பொட்டுவைக்க வேண்டாம் என கூறுகின்றனர், ஏனெனில் அதிலுள்ள வேதிப்பொருட்கள் (chemicals) சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்கின்றனர்.

பைபிளில் கண்களுக்கு மையிடுதல் பற்றி மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. 

 [1] II இராஜாக்கள் 9:30ல் யேசபேல் என்பவள் (வேதத்தில் கூறப்பட்டுள்ள மிகவும் மோசமான மனைவிகளில் முதல்வரிசையில் ஒருத்தி) தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்தாள்; ஆனால் அன்றே அவள் செத்தாள் என்று அதே அதிகாரத்தில் வாசிக்கிறோம். 
[2] எரேமியா 4:30ல் பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். 
[3] எசேக்கியேல் 23:40லும் வாசிக்கிறோம். 

இங்கே மையிடும் சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு தீமையாகவே முடிகிறது. நன்மை என்று சொல்லப்படவில்லை. 
ஒருவர்: பொட்டுவைக்க, கண்களிலிட, ஏன்... செய்வினை, பில்லிசூனியம் செய்யவும்கூட "மை" பயன்படுத்துகிறார்கள். எனவே பாதுகாப்பா இருக்கனும்னு நான் அந்த-மை பக்கம் போறதே இல்லீங்க என்கிறார்.
 

பொட்டு ஒரு அடையாளத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது, இப்போது அது தேவையில்லை. கிறிஸ்தவர்கள் பொட்டு வைப்பது இல்லை. பைபிளில் அந்தப் பழக்கம் இல்லை. எனவே பொட்டுவைக்கவேண்டாம்.

நல்லவேளை.... ஒட்டகச் சிவிங்கியும் (
பொட்டக சிவிங்கி !), சிறுத்தையும் இவ்வளவு பொட்டு வைத்திருக்கே அதுமட்டும் சரியான்னு விவாதிக்காம போனாங்களே!