Saturday, September 25, 2010

55. சேலா, இகாயோன் என்றால் என்ன பொருள்?


"சேலா" மற்றும் "இகாயோன்" என்பவை பைபிளில் வரும் பாடல்களில் காணப்படும் குறிப்புகளாகும். இதில் சேலா (Selah) என்பது சங்கீதம் (Psalms) மற்றும் ஆபகூக் (Habakkuk) புத்தகத்திலும், இகாயோன் (Higgaion) என்பது சங்கீதத்திலும் வருகின்றது. ஆனால் இவை வரும் எல்லா இடங்களும் பாடல்களில்தான்; ஆபகூக்கிலும் ஒரு பாட்டில்தான் வருகின்றது. அவைகளின் அர்த்தத்தை அறியும் முன்பு, முன்னோட்டமாக...

உங்களில் இசைக்கருவிகள் வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு குறிப்பாக பியானோ (Piano, Keyboard) வாசிப்பவர்களுக்கு நான் சொல்வது புரியும். இன்று "Sheet Music" என்ற ஒரு தாளில் பாடல்களின் குறிப்புகள்(Notes) மற்றும் அந்த குறிப்புகள் தாள அளவீடுகளுக்குள் (Measures) வருகின்றன என்றும் காணலாம். உதாரணமாக மிகவும் பிரபலமான அளவீடுகளில் ஒன்று 4/4 . அதாவது ஒரு அளவீட்டுக்குள் 4 காற்-குறியீடுகள் வரும், அல்லது இரண்டு அரை-குறியீடுகள் வரும், அல்லது ஒரு முழுக்குறியீடு வரும். மேலும் இசையின் அளவின் ஏற்றம் இறக்கங்களும் (Dynamics such as: crescendo, decrescendo [p,f, ppp, mp, mf ... etc] ) வருவதைக் காணலாம். (http://en.wikipedia.org/wiki/Dynamics_%28music%29 )எபிரெய மொழியில் சேலா என்பதற்கு ( סלה celah )
- A technical musical term probably showing accentuation, pause, interruption (இசைக்குறியீட்டின்படி சற்றே நிறுத்தவும்)
- To lift up, exalt ( [தேவனை] உயர்த்தவும்)
என்று பொருள்படும்.

எனவே இப்பாடலை வாசிக்கும்போது அல்லது அந்த குழுவினர் (Choir) பாடும்போது அங்கே சற்றே நிறுத்தி அடுத்தவரியை படிக்கவேண்டும். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே தாவீது இசையில் வல்லவனாகவும் அதை வாசிக்கவும், பாடவும் பெரிய குழுவினரை வைத்திருந்தான் என்றும் அறிவோம். அதில் இப்படி அவன் இசைக்குறியீடுகளைப் பயன்படுத்தியது மிகவும் ஆச்சரியமான விஷயம்!

இகாயோன் என்பதற்கு (הגיון higgayown)
- meditation,
musing , resounding music (தியானிக்கவும், சிந்தனைக்கு, நிரம்பிய இசை)
என்று பொருள்படும்.

சுருக்கமாக சங்கீதம் என்றால் பாடல்; அதை பாட்டாக பாடவேண்டும்; அந்த பாட்டில்:
சேலா என்றால் (இசைக்குறியீட்டின் படி) சற்றே நிறுத்தவும்.
இகாயோன் என்றால் தியானிக்கவும் என்று அர்த்தமாகும்.

சிலர் பழக்கப்பட்டதால், கடகடவென்று வேகமாக சங்கீதத்தை வாசிப்பார்கள். இனிமேல் அந்த இடத்திலாவது ஓடாமல் நிறுத்துங்கள். மீண்டும் அந்த வசனத்தை வாசித்துப்பார்த்து தியானியுங்கள்.


Tuesday, September 14, 2010

54. பைபிள் எப்படி தேவனிடத்திலிருந்து வந்த வாசகங்கள் என்று சொல்லமுடியும்?

தேவனைப்பற்றியும் பைபிளைப் பற்றியுமான உங்களது நம்பிக்கையை தற்காப்பது (Apologetic - defending one's faith) என்பது முக்கியமாகும்.

II தீமோத்தேயு 2:15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.
I பேதுரு 3:15. ...உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

கேள்வி: எப்படி பைபிள் தேவனுடைய வார்த்தை என்று சொல்லுகிறீர்கள்?
இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களிடம்: "நீங்கள் எப்படி ..? பைபிள் தேவனிடத்திலிருந்து வந்ததென்று நம்புகிறீர்களா? பைபிளை ஒரு தடவையாவது படித்தது உண்டா?
மோசேயுடன் தேவன் சீனாய்மலையில் பேசிய வார்த்தைகளைப் படித்துப்பார்த்தீர்களா? தேவனைக்குறித்த உங்களுடைய புரிந்துகொள்ளுதல் என்ன? இயேசுவைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்." என்று கேள்வி எழுப்பிப்பாருங்கள். ஏனெனில் பைபிளை திறந்துகூட பார்க்காமல் கேள்விகேட்பவர்களும் உள்ளனர்.

பைபிள் ஒரு மிகவும் ஆச்சரியமான ஒரு புத்தகமாகும். இதை ஒரு புத்தகம் என்று சொன்னாலும்
- உண்மையிலேயே பைபிள் 66 புத்தகங்கள் (ஆகமங்கள்) அடங்கியது ஆகும்.
- சுமார் 1500 வருடங்களைத்தொடும் காலகட்டத்தில் (span) எழுதப்பட்டது.
- இதை வெவ்வேறு கண்டங்களில் ஆடுமேய்ப்பவர்,
ராஜா, தீர்க்கதரிசிகள், மீன்பிடிப்பவர், வரி வசூலிப்பவர் மற்றும் வைத்தியர் என பல மாறுபட்ட சூழலிருந்த ஏறக்குறைய 40 பேரால் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுதப்பட்டது.
- ஆனால் எல்லாரும் ஒரே கருத்தைச் சொல்கின்றனர்: தேவன் மனிதகுலத்தை மீட்பது பற்றி !! (Redemption of man kind by God)
- II பேதுரு 1:20, 21ல் "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." என்று தெளிவாக பேதுரு சொல்கிறார்.

[a] பைபிள் எனக்கு தரமுடியும் என்று உறுதியோடு சொன்ன அனுபவங்களை எனக்குக் கொடுத்தது.
இது வாசிக்கும் சில சந்தேகக்காரர்களுக்கு பயனாக இருக்காமல் போகலாம். ஆனால் தனிப்பட்ட மனிதனாகிய எனக்கு நிச்சயம் உதவி செய்தது என்பதில் ஐயமில்லை. உதாரணமாக தேவன் பாவங்களை மன்னிக்கிறார் என்பதைப் பற்றி சொல்லமுடியும். அதாவது பாவங்களை அறிக்கையிட்டால் நம்மை மன்னிப்பதற்கு அவர் உண்மையும் நீதியுள்ளவருமாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். மேலும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காத்துக்கொள்ளும் என்று சொல்கின்றது. இதை உண்மையிலேயே பெற்றேன். பாவங்களை அறிக்கையிட்டபின் தேவன்கொடுக்கும் சமாதானம் என்பது எத்தனை கோடி செலவழித்தாலும் கிடைக்காது.

"சத்துருக்களை நேசியுங்கள்" என்ற வார்த்தை எனக்கு மிகவும் சந்தேகமாயிருந்தது, இது எப்படி சாத்தியமாகும் என்பதால் இதை பார்த்துவிடுவோமே என்றேன். எனக்கு அதில் மீண்டும் மீண்டும் வெற்றி அதாவது ஒரு பெரிய சமாதானம் என்று வந்ததால் என்பதால் அது உண்மையென்று தெரிந்தது. மற்றவர்கள் எனக்கு செய்த தவறுகளை அவர்களுக்கு என்னால் மன்னிக்க முடிந்தது என்று சொந்த அனுபவத்தில் கூற முடிகின்றது.

[b] இரண்டாவதாக விஞ்ஞானம் பைபிளை உறுதிப்படுத்துகின்றது:
பைபிளும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று அறிவோம். இருப்பினும், முழுதுமாக அப்படியல்ல. பைபிளை கேலி செய்தவர்களாகிய விஞ்ஞானிகள்
தற்போது உண்மைகள் இருப்பதாக நம்புவதால் பைபிளை ஆராய்கின்றனர். பைபிளில் சொல்லப்பட்டவை விஞ்ஞானம் சொல்வதற்கு முன்பே ஆகும்.
- பைபிளில் நட்சத்திரங்களை எண்ணிமுடியாது என்று சொல்லப்பட்டுள்ளது. (எரே 33:22). நீங்கள் என்னதான் நவீன தொலைநோக்கியை கொண்டுவந்தாலும் அங்கிருக்கும் கணக்கற்ற நட்சத்திரங்களை மனிதனால் எண்ணமுடியாது. ஆரம்பகாலத்தில் இதை கேலிசெய்தவர்கள் இதோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை இவ்வளவுதான் என்று ஒரு தொகையையும் குறிப்பிட்டனர். பின்பு ஒரு புதிய தொலைநோக்கி வந்தபின்பு அந்த தொகையை கூட்டினர். தற்போது ஹப்புள்(Hubble) போன்ற நவீன தொலைநோக்கிகள் வந்தபின்பு, இல்லை இல்லை கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் உள்ளன என்கின்றனர்.

உலகம் உருண்டை என்று பைபிளில் சொன்னதை ஒருகாலத்தில் கேலிசெய்தனர். விஞ்ஞானம் அதைக் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளது.

- எபிரெயர் 11:3 ல் "3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."
"என்ன ஒரு முட்டாள்தனம்? காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?" என்று
கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் வன்மையான குறைகளைச் சொல்லிவந்தனர்.

இதோ என் கண் முன்னே இருக்கும் இந்த கணினி, மேஜை, பேனா எல்லாம் எப்படி காணப்படாதவைகளால் உண்டானதென்று சொல்லமுடியும்? நான் இவைகளைக் காண்கின்றேனே, தொடுகின்றேனே! ஆனால் விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னது என்னவென்றால்: காணும் எல்லாவற்றையுமே கடைசியாக அணுஅளவில் பிரிக்கலாம், அணுவையும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது.

ஒருவர் சொன்னார் "
பைபிளில் உள்ளவை உண்மை என்று விஞ்ஞானம் நிரூபிப்பதற்கு பதிலாக, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் உண்மையென்று இப்போது பைபிள் நிரூபிக்கின்றது"

விஞ்ஞானத்தை நிரூபிப்பது என்பது பைபிளின் நோக்கமல்ல. மனித குலமானது [பாவத்திலிருந்து] மீட்கப்படவேண்டும் என்பதே அதின் முக்கிய அம்சமாகும். பரலோகத்துக்கு எப்படி போவது என்று பைபிள் சொல்கின்றது. எப்படி தேவனை அறிவது என்றும், பாடுகளும் கஷ்டங்களும் நிறைந்த உலகில் எப்படி வாழ்வது என்றும் அதிகாரத்துடன் சொல்கின்றது.

[c] பைபிளில் சொல்லப்பட்டவைகளை தொல்பொருள் ஆய்வியல் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்திவிட்டன.
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, காரணம் அப்படி ஒரு பழக்கமே
அக்காலத்தில் இல்லை என்று அநேகர் வாதிட்டனர் (ஆனால் பைபிளில் தெளிவாக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது) . இந்த சந்தேகக்காரர்களுக்கு 1968ம் வருடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மனிதனின் கால் எலும்புகளுடன் சேர்த்து ஒன்பது அங்குல ஆணியுடன் ஒரு மரத்துண்டில் சேர்ந்து இருந்ததை எருசலேமுக்கு வடக்கே எடுத்தது. எனவே பழங்காலத்தில் சிலுவையில் அறையும் பழக்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தியது. [இது இயேசுவின் எலும்புகள் அல்ல, ஏனெனில் அவரை கல்லறையில் வைத்த இடம் வேறு, மேலும் மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கிறார் என்பது நாம் அறிந்த உண்மை. ]
பொந்தியு பிலாத்து (Pontius Pilate the Governor) என்று ஒரு ஆளுநர் இருக்கவே இல்லை என்று வாதமிட்டனர் பலர். ஆனால் 1961ம் வருடம் செசரீயாவில் ஒரு கல்வெட்டில் ரோமனாகிய பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநர் என்று எழுதியிருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர்.

காய்பா (Caiaphas the high priest) என்று ஒரு பிரதான ஆசாரியன் அப்போது இருக்கவில்லை என்றும் சந்தேகவாதிகள் குறைகூறினர். ஆனால் 1990ல் பிரதான ஆசாரியனாகிய காய்பாவின் கல்லறையானது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த யூதர்கள் பைபிளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் திருடினால் இன்றும் கட்டைவிரலை வெட்டிவிடும் பழக்கத்தைக் குறித்து இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து புத்தகங்களில் படிக்கும்போது அநேகர் அதை நம்பாமல் கேலிசெய்யும் ஒரு கூட்டத்தாராக இருப்பார்கள். அப்போதும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.
[d] பைபிள் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை தைரியமாகச் சொன்ன ஒரே புத்தகமாகும்.
மற்ற மதங்களின் புத்தகங்கள் இவ்வாறு நிரூபிக்கமுடிவதில்லை, அப்படிச் செய்தால் அவைகள் பொய்யென்றும், அவைகளின் தெய்வங்கள் உண்மையான தேவன் அல்ல என்றும் வெட்ட வெளிச்சமாகிவிடும்.
பைபிளில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் முன்னுரைக்கப்பட்டு அப்படியே நடந்தன. பைபிள் ஒன்றுதான் 100 சதவீதம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை காட்டியுள்ளது. யூதர்கள் உலகின் நான்கு மூலைகளுக்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் எப்படி மீண்டும் ஒன்றாகச் சேருவார்கள் என்றும் சொல்லியிருந்தது. அது அப்படியே நம்முடைய காலத்தில் (May 14, 1948) நிறைவேறியது என்பதை யாரும் மறுக்கமுடியாது (http://en.wikipedia.org/wiki/History_of_Israel). மேலும் அவர்களைச் சுற்றிலும் எதிரிகள் தாக்குவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது இன்றும் நம் கண்களுக்கு முன் நடைபெறுகின்றது. காசாவிலே நடைபெறும் தாக்குதல்களும், துருக்கி இஸ்ரவேலை தாக்குவதும் மறுக்கமுடியாத இன்றைய செய்திகளாகும். பைபிளானது உலகின் கடைசி யுத்தம் மத்தியகிழக்குப் பகுதியில் இருக்கும் என்றும், குறிப்பாக இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் இருக்கும் என்றும் சொல்கின்றது.

அணுகுண்டு பேரழிவு பற்றியும் பைபிளில் சொல்லப்பட்டுள்ளது:

"Zach 14:12 And this shall be the plague wherewith the LORD will smite all the people that have fought against Jerusalem; Their flesh shall consume away while they stand upon their feet, and their eyes shall consume away in their holes, and their tongue shall consume away in their mouth".

[e] ஒரு விஞ்ஞானி சொன்ன உண்மையான புள்ளிவிவரம்:
ஆப்பிரிக்காவிலுள்ள குரங்குகள் எல்லாம் ஒரு ஆங்கில தட்டச்சு (English Type Writer) மெஷின் மேல் வரிசையாக ஓடி அவைகள் எழுத்துப்பிழையின்றி ஒரு புத்தகத்தை மீண்டும் பிரதியாக்க நிகழ்தகவு என்பது
1 in (2 x 10110 ) ஆகும். இயேசுவைப்பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் பற்றி சொல்லும் போது:


தீர்க்கதரிசனங்கள்நபர்கள்
#நிகழ்வுசாத்தியம்கி.பி.31 ல் நிறைவேறஎல்லா வருடங்களிலும் நிறைவேற
1பெத்லகேமில் பிறக்க1:2,00,0001500 5 x 106
2கழுதையின் மேல் ஏறி ராஜாவாக வருவது1:10030,00,000 1 x 109
330 வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்கப்படுவது1:1,0003,00,000 1 x 108
4வன்முறையற்ற தற்காப்பு1:1,0003,00,000 1 x 108
5யோவான் ஸ்நானகன் முன்னறிவிப்பாளராக1:10,00030,00,000 1 x 109
6சிலுவையில் அறையப்படுதல்1:10,00030,000 1 x 107
7கைகளில் ஆணி1:1,0003,00,000 1 x 108
8குயவன் நிலத்தை 30 வெள்ளிக்கு அவர்கள் வாங்கியது.1:1,00,0003000 1 x 106


இயேசு என்பவர் "பெத்லெகேமில் பிறப்பார்" என்று மீகா 5:2ல் வாசிக்கிறோம்.
பெத்லெகேம் என்பது ஒரு மிகவும் சிறிய ஊர் ஆகும். அங்கே இயேசுவின் காலத்தில் சுமார் 300-1000 பேர் இருந்தார்கள். அப்போது உலகின் ஜனத்தொகையானது சுமார் 20கோடி முதல் 30 கோடியாகும். அதாவது விகிதம் என்பது சுமாராக1:2,00,000 முதல் 1:3,00,000 ஆகும். கி.பி. 2006ம் ஆண்டு பெத்லெகேமின் ஜனத்தொகை 29,930. அப்போது உலகின் ஜனத்தொகை 6,564,356,742 அதாவது 1:219,324 ஒருவராக பிறக்க வாய்ப்புகள். (http://en.wikipedia.com/Bethlehem)

இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனங்களில் வெறும் 8 தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களடங்கிய நிலப்பரப்பில் ஒரு காசை இரண்டு அடி ஆழத்தில் மறைத்துவிட்டு ஒருவனின் கண்களைக் கட்டிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் விட அவன் ஒரே தடவையில் நடந்து சென்று தோன்றி எடுப்பதற்கான வாய்ப்புகள் என்று சொல்லப்படுகின்றது. இயேசுவோ முந்நூற்றுக்கும் அதிகமான தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு என்ற ஒருவர் வரலாற்றில் இல்லை என்று நிரூபிக்கப்போன Ph.D. படித்த பல நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப்பின்பு கிறிஸ்தவர்களாக மாறிவிட்டனர் என்பது உண்மையான செய்தியாகும். நீங்களும் நம்பாவிட்டால் ஒரு நூலகத்திற்கு சென்று இயேசுவைப் பற்றிய புத்தகங்களையும், பைபிளையும் வாசியுங்கள், அலசி ஆராயுங்கள், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதுங்கள் அதற்குள் நீங்கள் மாறிவிடுவீர்கள் என்று நான் உங்களுக்கு தைரியமாக சொல்கிறேன்.
பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் பாதிக்கும் மேல் ஏற்கனவே நிறைவேறிவிட்டன. எஞ்சியிருக்கும் தீர்க்கதரிசனங்களும் தேவன் சொன்னதுபோலவே நிறைவேறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.Sunday, September 12, 2010

53. ஏதேன் தோட்டம் இன்னும் அங்கே உள்ளதா இல்லை நோவாவின் நாட்களில் அழிந்ததா? விளக்கம் தரவும்.

"தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று." என்று வாசிப்பதில் நதிகளின் துவக்கம் ஏதேன் என்று தெளிவாக தெரிகிறது.

ஆதி 2:11-14. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர்.

பொதுவாக பல ஓடைகள் ஒன்றுகூடி பின் நதியாக மாறும். இங்கே மாறாக ஏதேனிலிருந்து நான்கு நதிகள் ஆரம்பித்தன என்று பார்க்கிறோம். இதனால் சிலர் இந்த தோட்டம் என்பது ஐப்பிராத்து மற்றும் டிக்ரிஸ் நதிகள் சேரும் இடத்தில் இருக்கலாம் என்றும் சொன்னார்கள்.நதியின் இரண்டு முடிவுகளிலும் தேடி அலைந்தாயிற்று.

ஐப்பிராத்து என்ற ஒரே ஒரு நதிமட்டும் அதே பெயரால் அறியப்பட்டுள்ளது. இது துருக்கியின் மலைகளில் ஆரம்பிக்கின்றது, பின்பு டிக்ரிஸ் என்ற நதியுடன் ஈராக்/குவைத் எல்லைக்கருகில் இணைந்துவிடுகின்றது. அநேகர் டிக்ரிஸ் நதிதான் இதெக்கெல் என்று சொல்கின்றனர். இது நம்மை ஏதேன் தோட்டமானது துருக்கியில் இருந்திருக்கவேண்டும் என்று யூகிக்க வைக்கின்றது. ஏனெனில் ஐப்பிராத்து நதியானது துருக்கியில் ஆரம்பிக்கின்றது. இந்த டிக்ரிஸ் நதியும் துருக்கியின் மலைகளில்தான் ஆரம்பிக்கின்றது. இவ்விரண்டு நதிகளும் இந்த மலையில்தான் ஆரம்பிக்கின்றது என்றால் மற்ற இரண்டு நதிகளும் இங்குதான் ஆரம்பிக்கவேண்டும் என்று நமக்கு தெரியும். ஆனால் வேதாகமத்தில் மற்ற இரண்டு நதிகளாகிய பைசோன், கீகோன் பற்றி அதன்பின்பு சொல்லப்படவில்லை. ஆனால் தானியேல் புத்தகத்தில் இதெக்கெல் என்னும் ஆற்றைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. (தானி 10:4). செயற்கைக் கோள்கள் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஒரு நதி வற்றியிருப்பதைக் தொல்பொருள்துறையினர் கண்டுபிடித்தனர். இதுவே பொன்விளைந்த ஆவிலா தேசத்தில் ஓடிய பைசோன் நதி என்று கருதுகின்றனர். இந்த நதி சுமாராக கி.மு. 3500-2500 ல் வற்றியிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. (http://www.creationism.org/caesar/eden.htm). சவுதி அரேபியாவை ஆவிலா தேசம் என்றும் யூகமாக சொல்கின்றனர்.

கீகோன் எத்தியோப்பியாவைச் சுற்றி ஓடும் என்றால் அது நைல் நதி இல்லை. எனவே வரைபடமானது இப்படியாக வரையப்பட்டு சாத்தியங்கள் அலசப்பட்டன.


நான்கு நதிகளும் பொதுவாக மகாச் நிலச்சரிவு என்ற அமைப்பிற்குள் உள்ளன. பூமியில் கண்டங்கள் இடம் பெயர்ந்தபோது இவைகளில் இரண்டு வற்றியும் மறைந்தும் போயிருக்கவேண்டும்.

முக்கியமாக ஏதேன் தோட்டத்தின் அளவு பைபிளில் சொல்லப்படவில்லை. எனவே ஆறுகளின் தோற்றம் தெற்கு லெபனோன் என்றும் குறிப்பாக எருசலேமுக்கு அருகே என்றும் சொல்லப்படுகின்றது. அதாவது தற்போதைய இஸ்ரவேல் தேசம். இஸ்ரவேல் தேசம் முழுவதும் ஏதேன் தோட்டமாக இருந்ததா என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஆனால் "தேவன் உருவாக்கிய ஏதேன் தோட்டம்" என்பது இப்போது இல்லை. நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்தில் இரு நதிகள் அழிந்து போனதுபோல் தோட்டமும் அழிந்து போயிருக்கவேண்டும். எசேக்கியேல் 31:18ல் சொல்லப்பட்டது போல ஏதேனின் விருட்சங்கள்
பூமியின் தாழ்விடங்களுக்கு இறக்கப்பட்டன. (வெள்ளம், நிலச் சரிவு). ஏதேனின் நிலைமையை தேவன் 1000 வருட ஆளுகையில் பூமியிலெங்கும் மீண்டும் கொண்டுவருவார்.


Tuesday, September 7, 2010

52. "கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்" முடிந்துவிட்டதா, இனிமேலா, எப்படி சாத்தியம்?

கேள்வி:
"கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11
இப்படியாக சொன்ன பஞ்சத்தின் காலம் இனி தான் வரும் என்கிறார்கள் கிறிஸ்தவ மண்டல போதகர்கள். அதாவது ஒரு மொபைல் ஃபோனிலிருந்து இன்னோரு மொபைல் ஃபோனிற்கு முழு வேதத்தை அனுப்ப ஏறக்குறைய 6 விநாடிகளே சமயம் எடுக்கிறது. இணைய தளம் என்று எடுத்துக்கொண்டால், ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இணைய தளத்தில் கிறிஸ்தவம் குறித்தும், வார்த்தைகளை குறித்தும் வாசிக்க நேரிடுகிறது. டெக்னாலஜி இவ்வுளவு முன்னேறிய பிறகு தான் வசனத்தின் பஞ்சம் ஏற்படுமா. தீர்க்கதரிசி எந்த காலத்தை குறித்து சொல்லி யிருக்கிறார், அந்த காலம் நிறைவேறி விட்டதா, இனிமேல் தானா?

பதில்:

ஆமோஸ் 8:11ல் "கேட்கக் கிடையாத பஞ்சம்"- famine of hearing". என்று வாசிக்கிறோம்
.
எபிரெய மொழியில் "Shama` - to hear" என்று சொல்லப்பட்டுள்ளது.

שמע shama` - hearing
דבר dabar - the words
יהוה Yĕhovah - of the Lord.

இங்கே கேட்க என்பதால், ஒருவர் சொல்லவேண்டும் அல்லது பேசவேண்டும் அதாவது போதிக்கவேண்டும் என்று சொல்லலாம்.

முதலாவதாக:
சாமுவேல் சிறுவனாக இருந்த காலத்தில் (கி.மு. 1020 - 1000) "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை." என்று
I சாமுவேல் 3:1ல் வாசிக்கிறோம்.

இரண்டாவதாக:
ஆசா அரசாண்டகாலத்தில் (கி.மு. 913 - 873)
"இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை." II நாளாகமம் 15:3ல் வாசிக்கிறோம்.

கடைசியாக:
ஆமோஸ் வாழ்ந்த காலம் என்பது: ஆமோஸ் 1:1ல் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும்... (கி.மு. 783 - 742). இது சாமுவேலுக்கும், ஆசாவுக்கும் பின்பு ஆகும். (http://www.crivoice.org/israelitekings.html)

எனவே முதல் இரண்டு சம்பவத்தை வைத்து ஆமோஸ் 8:11ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று சொல்லக்கூடாது.

"வானமும் பூமியும் ஒழிந்துபோகும் என் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது" என்றால் அவைகள் எங்கே எழுதப்பட்டுள்ளன? பரலோகத்திலே!! லூக்கா 10:20ல் "...உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்று இயேசு சொன்னதை நினைவுபடுத்துங்கள். எனவே அவருடைய வார்த்தையாகிய வசனம் அல்லது இந்த வேதாகமம் பூமியே ஒழிந்தாலும் எப்போதும் அழியாமல் பரலோகத்தில் இருக்கும்.

ஆமோஸ் சொல்லும் பஞ்சமானது கடைசிகாலத்தில் நடக்கவிருக்கும் சம்பவமாகும்.
இன்றும் சீனாவில் அநேக இடங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள். எனவே இவர்கள் ஜெபிக்கவேண்டுமென்றால் மறைமுகமாக ஒரு வீட்டில் கூடி ஜெபிக்கின்றார்கள் (a.k.a. underground). நாளுக்கு நாள் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரவங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஒருகாலத்தில் (கி.பி. 1960ல்) அமெரிக்காவானது கிறிஸ்தவர்களின் நாடாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்; காரணம் அன்று அனைவரும் சபைக்குச் செல்லவேண்டும் என்பதால். ஆனால் தற்போதோ சுதந்திரம் (freedom) என்ற வார்த்தையில் பறிபோகிவிட்டது. அநேக அலுவகங்களிலும் யாரும் சமயத்தைக்குறித்தும் பேசக்கூடாது என்ற கட்டளைகள் வந்துள்ளன. ஜனங்களும் பைபிளின்படி செய்யாமல், உலகம் போகிற போக்கிலே செல்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக "அந்தகாரத்தின் ஆவி"யானது இந்த உலகை ஆக்கிரமிக்கின்றது.

யோவான் 9:3ல் இயேசு சொன்னார், "இதோ ஒருவனும் கிரியைச் செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது". இதன் அர்த்தம் யாரும் வெளிப்படையாக சுவிஷேசத்தை கொண்டுசெல்லமுடியாது, பிரசங்கிக்க முடியாது என்பதாகும்.

இயேசு சொன்னதைத்தான் ஆமோஸ் அப்போது தீர்க்கதரிசனமாக உரைத்தான்.

மேலும், சபையானது இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டபின்பு அந்திக்கிறிஸ்துவின் ஆளுகையில் நிச்சயமாக கர்த்தருடைய வசனம் கேட்கக்கூடாத காலமாயிருக்கும். அதாவது பிரசங்கம் செய்து கேட்கக்கூடாத காலமாயிருக்கும்.