Monday, November 14, 2011

75. நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம் தாருங்கள்.

சற்றே கடினமான கேள்விதான்.

வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?
அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer(வெற்றிபெறு) மற்றும் people(ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு(clergy) சாதமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.

பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "அப்படியே நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம். யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல்
நிகொலா என்ற வார்த்தையானது பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

யோவான் வெளி 2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.
1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.
2 - வேசித்தனம்.
ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.
பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.

பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்.
பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).

பேயோரின்( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண் 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும்ப்படியும் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.

இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய கூட்டத்தாரக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.

இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.