Thursday, May 10, 2012

76. Abortion (கருவைக் கலைப்பது) பாவமா?

கேள்வி: கருவைக் கலைப்பது பாவமா?

பதில்: ஆம்.

அமெரிக்காவில் ஒரு நாளில் சுமாராக 400 கலைப்புகள் செய்யப்படுவதாக சொல்லப்படுகின்றன. கருக்கலைப்புகள் இந்தியாவிலும் உள்ளன, ஆனால் வெளியே தெரிவதில்லை. ஏன் அது பாவம்?

[1] அது ஒரு கொலைக்குச் சமம் என்பதால்:
(உலக நாடுகளில்) சட்டத்தின்படி ஒருவர் ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அது ஒரு கொலையாகும். ஒரு கருவுற்ற பெண்ணைக் கொலைசெய்தால் நீதிமன்றத்தில் இரட்டைக்கொலை என்று தீர்ப்பு இன்றும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் கருவை கலைப்பது சட்டப்படி கொலைதானே. இவர்கள் கருக்கலைப்பு தவறல்ல என்று வாதிடுவது எப்படி சரியாகும்? லூக்கா முதலாம் அதிகாரத்தில் எலிசபெத்து கர்ப்பமாயிருக்கும்போது அவள் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று என்று வாசிக்கிறோம்.  அந்த குழந்தைக்கு உணர்வுகள் உண்டு. அதைக் கொல்வது கொலை.

 [2] மனித உரிமையை மீறுகிறது. அந்த குழந்தை பிறக்கவிடாமல் தடுப்பது அந்த மனிதனுக்கு (குழந்தைக்கு) மதிப்பு இல்லை என்றும், என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்றும் சொல்வதாக உள்ளது. இன்றைய விஞ்ஞானமே "தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு தனிச்சுதந்திரம் கொடுக்கவேண்டும், அது பயப்படும்படி சண்டை பெற்றோர் சண்டைபோடாமல் இனிய சூழலில் தாய் இருக்கவேண்டும்" என்ற அளவுக்கு புத்தி சொல்லுகிறது. போகப்போக வயதானவர்களையும் நோயாளிகளையும் கொன்றாலும் தவறில்லை என்று ஒருநாள் ஒரு கூட்டத்தார் முடிவு செய்தால் எங்கே செல்லும் அந்தப் பாதை? அந்த நாடு தீங்கும் சாபமும் உள்ள நாடாகும் அல்லவா?  அப்படி கருவைக்கலைக்க ஒத்துழைக்கும் நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதில் ஐயம் வேண்டாம்.

[3] உங்களை ஒருவர் கையையும் காலையும் கட்டி ஒரு மூட்டையில் வைத்து ஒரு மிகச்சிறிய அறையில் அடைத்து பின்பு உங்களை இரத்தம் வடிய கொல்லுவது எப்படி சரியாகும்? உங்களுக்கு மற்றவர்கள் அப்படி செய்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதே! அதை ஒரு தாயின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு செய்வது எப்படி சரியாகும்? மத் 7:12 மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். எனவே கருக்கலைப்பு தேவனுடைய கற்பனையை மீறுதல் என்று ஆகின்றது

[4] கருக்கலைப்பு மீண்டும் மீண்டும் பாவம் செய்யத்தூண்டுகிறது. பிரசங்கி 8:11ல் "துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது."  இது பொதுவாக எல்லாப்பாவங்களுக்கு சொன்னாலும், இதற்கும் பொருந்தும். எந்த தவறும் செய்யாதவர்களை கொல்லுவது தவறு என்றால் அந்த வயிற்றிலுள்ள சிசுவைக் கொல்வது எப்படி சரியாகும்?

[5] எல்லாம் சரிதான், ஆனால் திருமணத்துக்கு முன்பு  கருவுற்றதை கலைப்பதில் பரவாயில்லை என்று சிலர் எண்ணலாம். நீங்கள் அங்கே முதலாவதாக வேசித்தனம் என்ற பாவம் நடந்ததை மறந்துவிட்டீர்களே!  தாவீது மற்றவனின் மனைவியிடத்தில் பாவம் செய்தான். அங்கே ஒரு குழந்தை உண்டாகின்றது. இதை சரிசெய்ய தாவீது பத்சேபாளின் கணவனைக் கொன்று அவளை மனைவியாக்கிக்கொள்கிறான். பாவத்துக்குமேல் பாவம். தேவன் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு பேசிய போது அவன் சொல்கிறான்: "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." சங்கீத 51:3.  ஒருமுறை கருக்கலைத்தவர்களைக் கேளுங்கள், நீங்கள் அடுத்தமுறை கலைப்பீர்களா? சற்றே யோசிக்காமல் செய்யலாம் என்பார்கள். அந்த மனசாட்சி நசுக்கப்பட்டுபோனதே. அங்கே ஒரு கெட்ட மாதிரி மற்றவர்களுக்கு வைக்கப்படுகின்றது. வருகிற தலைமுறைக்கு இப்படி ஒரு மாதிரியை வைப்பது தவறு.


[6] அப்படிப்பட்டவர்களிடம் அன்பு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறது.  அன்பு இல்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.  2 தீமோ 3:1-3ல் கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்,.. என்று வாசிக்கிறோம். இவர்களில் ஒருவர்தான் அவர்கள்.

[7]  "ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய(innocent) இரத்தம் சிந்துங் கை." என்று வாசிக்கிறோமே இங்கே அந்த குழந்தை  ஒன்றும் அறியாதது (innocent) , குற்றமற்றது. இந்த வசனத்தின்படி கருக்கலைப்பு தேவன் வெறுக்கும் செயலாக அமைகிறது. மேலும் அதைக்கலைக்கும் வேலையைச் செய்பவர்களும் (மருத்துவர்/செவிலியர் என்றும் சொல்லலாம்)  சாபத்திற்கு ஆளாகிறார்கள் என்று உபாகமம் 27:25ல் வாசிக்கிறோம்: "குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்".


ரவி சகரியாஸ் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்த பதிலைவிட சிறப்பாக வேறு யாரால் சொல்ல இயலும்!





இதை வாசிக்கும் உங்களில் ஒருவர் அப்படிப்பட்ட பாவத்தை செய்திருப்பின் தேவனிடம் அறிக்கையிட்டு மனந்திரும்புங்கள். உங்களை உதாரணமாக வைத்து தேவன் பெரிய காரியங்களைச் செய்வார். நீங்கள் அநேகருக்கு புத்திசொல்லி திருத்தும் ஒரு சாட்சியுள்ளவராக மாற்றப்படுவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!