Monday, November 14, 2011

75. நிக்கொலாய் மதஸ்தர் பற்றி விளக்கம் தாருங்கள்.

சற்றே கடினமான கேள்விதான்.

வெளி 2:6, 15 என்னும் இரண்டே வசனங்களில் மட்டும் இந்த கூட்டத்தாரைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. எபேசு, பெர்கமு என்னும் சபைகளுக்கு சொல்லப்பட்ட செய்தியில் நிக்கொலாய் மதஸ்தர் பற்றி வாசிக்கிறோம். யோவான் எழுதிய காலத்தில் இருந்தவர்களுக்கு யார் இவர்கள் என்று நிச்சயமாக தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் எந்த ஊரில் இருந்தனர் என்று யோவான் சொல்லவில்லை.

அவர்கள் யார்? அவர்களுடைய பழக்கங்கள் என்ன? ஏன் தேவன் அவர்களை வெறுத்தார்?
அப்போஸ்தலர்களின் காலத்தில் அன்றாட விசாரணை செய்ய எழுபது (70) பேரை சீஷர்கள் நியமித்தனர். இவர்களில் ஒருவன் நிக்கொலா (அப் 6:5) இரத்த சாட்சியாய் மரித்த ஸ்தேவானும் இந்த எழுபது பேர்களில் ஒருவன். ஆனால் இந்த வசனத்தில் நற்சாட்சி பெற்ற ஆட்களில் ஒருவன்தான் இந்த நிக்கொலா என்பதால் நமக்கு இவரா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் எத்தனையோ வைராக்கியமான போதகர்கள் பின்மாற்றம் அடைந்து போனதையும் காண்கிறோம். இந்த பெயரை இவர் கொண்டிருந்ததால் சிலர் இவர்தான் என்று குழப்பும்படி சொல்கின்றனர். இவர் ஸ்தேவானைப்போல பரிசுத்த ஆவியினால்லும் ஞானத்தினாலும் நிறைந்தவர் என்பதால் இவர் என்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப் 2:6ல் சொல்லப்பட்ட நிக்கொலா என்பவர் இந்த இயக்கத்திற்கு எந்த தொடர்பு அற்றவராக இருப்பினும், நிக்கொலா என்ற பெயரை உடைய யாரோ தலைமை வகித்திருந்தார்கள் என்பதில் ஐயம் இல்லை. Nicolaitan என்பதில் Nikan + laos : இதற்கு conquer(வெற்றிபெறு) மற்றும் people(ஜனங்கள்) என்று பொருள் என்று கிரேக்க சொல்-வரலாற்றில் (etymology) காணலாம் என்பதாக வேதாகமக ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படுகிறது; இதில் இந்த இயக்கம் பேராயர்களுக்கு(clergy) சாதமாக மற்றவர்களை அமுக்கி/மட்டம்தட்டி வைத்ததாகவும் விவாதம் உள்ளது. இப்படியான செய்தியை நவீன ஆயர்கள் சொல்கின்றனர்; முதலாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு செய்தி-தகவல் இல்லை. மேலும் சொல்-வரலாற்றை வைத்து வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலும் ஆபத்துகள் உள்ளன. பைபிளில் (வெளிப்படுத்தலில்) இப்படிப்பட்ட செயலை வலியுறுத்தி வேறு வசனங்களும் இல்லை.

பைபிளில் ஒரு ஆதாரம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள் பற்றி சொல்லுவதற்கு முன்பு பிலேயாம் என்பவனின் போதகத்தை பின்பற்றியவர்கள் பற்றி சொல்லி பின்பு "அப்படியே நிக்கொலாய் என்னும் கூட்டத்தாரை" (வெளி 2:14-15) என்பதில் ஒரு தொடர்பைக் காணலாம். யூதர்களில் ரபீ என்பவர்கள் சொல்வதுபோல்
நிகொலா என்ற வார்த்தையானது பிலேயாம் என்பதின் கிரேக்க வார்த்தை என்பதற்கான சாத்தியம். (எப்படி மல்லிகா, Jasmine இரண்டும் வேறு பெயராயிருப்பினும் அர்த்தம் ஒன்றுபோல) இது முதலாம் நூற்றாண்டின் காலத்துக்கும் இந்த வசனத்துக்கும் பொருந்துகிறது என்பது ஒருபார்வை. எனவே இக்கூட்டத்தாருக்கும் பிலேயாமைப்பற்றி சொல்லப்பட்ட வசனத்துக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது.

யோவான் வெளி 2ல் பிலேயாம் என்பவரை இரண்டு பிரச்சனைக்குரியவராக காட்டுகிறார்.
1 - விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது.
2 - வேசித்தனம்.
ஆதி சபைகளுக்கு பெரிய பிரச்சனையானது இந்த அந்நியதேவர்களின் வழிபாட்டுடன் சற்றே அநுசரித்து போன ஜனங்களாகும். அப் 15:20, 29 மற்றும் 1 கொரி 8--10 ஆகியவற்றில் பவுல் இதைப்பற்றி குறிப்பிடுகிறார். பவுல் மற்றும் யோவான் ஆகிய இருவரும் விக்கிரகங்களுக்கு படைத்தவைகள் குறித்து சொல்கின்றனர். பவுல் கடையில் விற்பதை வாங்கி புசிக்கலாம் ஆனால் விக்கிரககோவில்களுக்குள் செல்லாதே என்கிறார்.
பாலியல் பிரச்சனை என்பது சற்றே கடினமான ஒன்று. இதை வெளி 2:20,22-லும் யேசெபேல் என்பவளை குறித்து சொல்லப்பட்டுள்ளது . பழைய ஏற்பாட்டிலும் இந்த பெயரைக் காணலாம் (ஆகாபின் மனைவி). ஆனால் வெளி 2:20ல் சொல்லப்பட்டுள்ள யேசெபேல் அவள் அல்ல, இங்கே சொல்லப்பட்டவள் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டாள். இரண்டாவதாக அவள் தேவ ஊழியர்களை வேசித்தனம் செய்யவும், விக்கிரகங்களுக்கு படைத்ததை புசிக்கவும் செய்தாள் என்று பார்க்கிறோம். மனந்திரும்ப தேவன் தவணை கொடுத்தார் அவளோ திரும்பவில்லை. இதை 1 கொரி 5:1; 6:12-20 மற்றும் எபி 13:4ல் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்.

பழைய ஏற்பாட்டில் யேசெபேல் ஆகாபுக்கு பாலியல் துரோகம் செய்யவில்லை, மாறாக இஸ்ரவேல் ஜனங்களை பாகலை வணங்கும்படி செய்தாள்.
பழைய ஏற்பாட்டில் தேவனைவிட்டு வேறு தேவர்களை பின்பற்றுவதை தேவன் வேசித்தனம் என்று சொல்கிறார். (என் ஜனம் சோரம் போயிற்று).

பேயோரின்( Peor) கூட்டத்தாரிடத்தில் (பிலேயாம் எண் 25:1-18) காணப்பட்ட பாவம் என்னவெனில் மோவாபியர் (மீதியானியர்) பெண்கள் இஸ்ரவேல் ஜனங்களை அந்நிய தேவர்களை வணங்கும்படியும், அவைகளுக்கு படைத்ததை புசிக்கும்ப்படியும் செய்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் செய்தனர்.

இவைகளை பார்க்கும்போது, நிக்கொலா என்னும் கூட்டத்தார் தேவனுடைய ஜனங்களை அன்று காணப்பட்ட கலாச்சாரத்துடன் பிணைக்கும்படி, கொஞ்சம் கலாச்சாரத்துடன் அநுசரித்து போகலாம் (compromise) என்று புகுத்திய கூட்டத்தாரக காணமுடிகிறது. வேறு விதத்தில் சொல்லப்போனால், தேவன் ஒருவரை வணங்குவதை விட்டுவிட்டு, மற்ற சடங்கு சம்பிரதாயங்களில் பங்கு கொண்டால் தவறல்ல என்றும், தேசிய சங்கங்கள் மற்றும் அவர்களின் வழிபாடுகளுடன் சற்றே ஒத்துபோகலாம் என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட போதனைகளில் வேசித்தனமும் அடங்கியிருந்தது. இதை யோவானிடம் இயேசு சொல்லும்போது அந்த சபையின் மேல் பிரியப்படாமல் அதின்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து சொல்லுகிறார்.

இன்றும் உலகில் சபைக்கு சபை வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனவேதான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒரு விக்கிரகமான காரியம் உண்டு.

இன்றும் நிக்கொலாய் கூட்டத்தார் வேறு பெயர்களில் வாழ்கின்றனர். இவர்கள் வேதபுரட்டர்களாயிருந்து, இது செய்தால் தவறல்ல, சரிதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட புரட்டல்களை இயேசு ஒத்துக்கொள்ளமாட்டார். அவைகள் நியாயத்தீர்ப்பினை அடையும்.

Sunday, October 30, 2011

74. Wine மதுபானம் குடிக்கலாமா?

கேள்வி: பவுல் சொல்லும்போது: "நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும்(wine) கூட்டிக்கொள்." எனவே கொஞ்சம் மதுபானம் கொள்வது சரியா?

பதில்: இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.

கானாவூர் கலியாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது. தண்ணீரை மதுபானமாக மாற்றவில்லை. ஆங்கிலத்தில் King James Version-ல்
wine என்று மொழிபெயர்த்துள்ளதால் வந்த குழப்பங்கள்தான் இவை. கிரேக்க மொழியில் இங்கே oinos [οἶνος ] என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க திராட்சை பழச்சாறு அதாவது PURE GRAPE JUICE என்றே பொருள்படும். YLT (Young Literal Translation) எனப்படும் மொழிபெயர்ப்பினை பார்க்கவும். தீமோத்தேயு என்பவர் தேவ ஊழியர் இவர் குடிக்க "தண்ணீர்மாத்திரம்" பயன்படுத்தி வைராக்கியமாக இருந்திருக்கிறார். மற்ற பானங்களை குடித்ததாக சொல்லப்படவில்லை.

ஆனால் தீமோத்தேயு சரீரத்தில் பலவீனமாக இருந்திருக்கிறார். எனவே பவுல் அக்கறைகொண்டவராக திராட்சைப்பழம் உடலுக்கு நல்லது என்ற யோசனையில் தீமோத்தேயுவுக்கு அப்படியாக சொல்கிறார். தீமோத்தேயுவுக்கு என்ன பலவீனம் என்று நமக்கு சொல்லப்படவில்லை. கிராமங்களில் "ஒரு ஆட்டுக்கால் சூப் வைத்து குடி" என்று சொல்வது போன்ற ஒரு யோசனையாக எடுத்துக்கொள்ளலாம்.

வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்:

ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!

நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.


இன்று உலக அளவில் "குடிப்பழக்கம் உடலுக்கு கேடு" என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன.

"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்" என்று வாசிக்கிறோமே. எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா? நித்தியத்தை "சிறு துளி பேரிழப்பு" என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.


Saturday, September 24, 2011

73. வட்டி வாங்கலாமா? வாங்க வேண்டாம் என்று வாசிக்கிறோமே..

கேள்வி: வட்டி வாங்கலாமா? பழைய ஏற்பாட்டில் வட்டி வாங்கவேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளதே..

பதில்: வட்டி வாங்காதிருப்பது மேலானது. வேதத்தின்படி வட்டி வாங்கலாம். ஆனால் யாரிடம் வாங்கலாம், யாரிடம் வாங்கக்கூடாது என்பதில்தான் விவரங்கள் உள்ளது.

யாரிடம் வாங்கக்கூடாது?

 [1] உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். (யாத் 22:25)
==> இங்கே "என் ஜனங்களில் ஒருவனுக்கு" என்றார். இப்போது தேவனுடைய ஜனமாகிய உங்கள் சபையில் ஒருவருக்கு என்றும், தேவனுடைய பிள்ளை ஒருவருக்கு என்றும் பொருள்படும்.

[2] கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. (
உபா 23:19 )
==> உன் சகோதரன் அல்லது சொந்தக்காரர்களிடம் வட்டி வாங்காதே.
நெகேமியா என்பவர் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த வசனத்தை மீறி தன் சதோதரரிடம் வட்டி வாங்கியதால் பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து, நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றான்.

[நூற்றுக்கு 1 தான் வட்டியாக ( 1% )அப்போது இருந்தது என்பதை கவனியுங்கள்.]

நீ அவன் (சகோதரன்) கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. (
லேவி 25:36,37)


யாரிடம் வட்டி வாங்கலாம்?

உபாகமம் 23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.

மேலும் இயேசு ஒரு உவமையில் சொல்லும்போது: " அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, ..." என்று வாசிக்கிறோம்.

எதிலும் வட்டி வாங்கக்கூடாது என்று நாம் விவாதித்தால் வங்கியில் உங்கள் சேமிப்பில் அவர்கள் கொடுக்கும் வட்டியையும் நீங்கள் வாங்கக்கூடாது!
எனவே வங்கி(Bank)-ல் சேமிப்பில் போட்டு வட்டி வாங்கலாம். தவறல்ல.அந்நியன் கையில் வட்டி வாங்கலாம். அநியாய வட்டி வாங்கக்கூடாது. மேலும் ஏழைகள், சிறுமைப்பட்டவர்களிடம் வட்டி வாங்காதீர்கள். வட்டி வாங்காதிருப்பது அதைவிட மேல்

ஆனால் வங்கிகள் உங்கள் பணத்துக்கு சேமிப்புக் கணக்கில் வட்டி தருவார்களே, அதை வேண்டாம் என்று சொல்பவர்கள் எத்தனைபேர்?

இயேசு சொன்னார்:
லூக்கா 6:34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
Monday, April 4, 2011

72. இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?

கேள்வி: இயேசு கனிவும் இரக்கமும் உள்ள தேவன் என்றால், ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?

பதில்:
சங்கீதம் 65:2ல் "ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்". என்பதால் எல்லா ஜெபத்தையும் அவர் கேட்கிறார் (hears). ஒரு விதத்தில் நம்முடைய கர்த்தர் நமது எல்லா ஜெபங்களுக்கும் பதில் அளிக்கிறார். ஒரு சில சமயங்களில் அவர் "ஆம்", "இல்லை" அல்லது "காத்திரு" என்று சொல்கிறார்.

நாம் நம்முடைய பாவங்களை மறைத்து வைத்திருந்தால் அது நம்முடைய ஜெபத்தின் பதிலுக்கு ஒரு தடையாக அமையும். சங்கீதம் 66:18ல் "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்" என்று வாசிக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்முடைய ஜெபமானது சுயநலமாகவும், தேவனை மகிமைபடுத்தாமல் இருந்தாலும் அப்படியாகும். சில சமயங்களில் தேவன் நம்முடைய வேண்டுதலுக்கு பதில் தந்தால் நாம் மிகவும் துக்கமுடையவர்களாக காணப்படுவோம் என்று அவர் அறிந்திருப்பின் பதில் தராமல் இருப்பார்.
வேதாகமத்தில் ஒன்று தெளிவாகக் காண்கிறோம். தேவன் எப்பொழுதெல்லாம் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாரோ அப்போதெல்லாம் "சந்தோஷத்தின் நிறைவைக்" காண்கிறோம்.

"கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று மட்டும் சொல்லாமல் "கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" என்று தெளிவாக வாசிக்கிறோம். வேதாகமெங்கிலும் தானியேல், தாவீது, பவுல் என்று ஜெபித்தவர்கள் எல்லாரையும் இதற்கு உதாரணமாக வைக்கலாம்.

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் "எங்களுக்கு புசிக்கும்படி இறைச்சியை தாரும்" என்று மோசேயிடம்
முறுமுறுப்புடன் மன்னாவை விட்டு இறைச்சியை இச்சித்து கேட்டனர். தேவன் அதற்கு பதில் கொடுத்தாலும் அங்கே ஒரு பெரிய அழிவினை கொண்டுவந்தது.

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். எனவே நாம் தேவனிலும் அவருடைய சத்தியத்தில் நிலைத்திருக்கிறோமா, அதாவது அவருக்குப் பிரியமாக வாழ்கிறோமா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இப்படியாக ஒரு உண்மைச் சம்பவம் உண்டு. ஒரு தந்தைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டார். கர்த்தரோ தெளிவாக அவரிடம், "இல்லை, உனக்கு மகனைக்கொடுப்பது என்னுடைய சித்தமல்ல, உன்னுடைய மகள்களே உனக்கு ஒரு மகனைக் காட்டிலும் பெரிதாக இருப்பார்கள்" என்றார். இருப்பினும் தந்தை ரொம்பவே உபவாசித்து, வருத்தி மிகவும் ஜெபித்து கேட்டார். இறுதியாக தேவன் அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார். ஆனால் அந்த மகன் குடிகாரனும் கெட்டகுமாரனுமாக மாறிபோனான். தந்தைக்கோ வயதாகியது, இருதயம் உடைந்து வேதனையுடன் ஏன் தேவனை தொல்லை செய்து ஒரு மகனை கேட்டோம் என்று வருத்தத்துடன் இருந்தார். தன் மகன் நரகத்துக்கு போவான் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் தேவன் சொன்னபடியே அவருடைய வயதான காலத்தில் அவருடைய மகள்கள் அவரை ஒரு மகன் செய்வதைவிட மேலாகவே கவனித்தனர்.


நான் ஒரு பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில் Electronics & Communications  படித்துக்கொண்டிருந்த காலத்தில், கடைசி வருடத்தில் படிப்பவர்களை பல தொழில்நிறுவனங்கள் கல்லூரி வளாகத்திற்கு வந்து அங்கேயே  பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு எல்லாம் வைத்து வேலைக்கு ஆட்கள் எடுத்துச் சென்றனர் (Campus Interview & Selection). நானும் எனது நண்பனும் நன்றாக படிக்கும் மாணவர்களில் ஒருவர்களாக இருப்பினும் இருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. எத்தனையோ நிறுவனங்கள் வந்து போயின. ஜெபித்தும், எதிர்பார்த்த எல்லாவற்றிலும் ஏமாற்றம்.  பல நிறுவனங்கள் வந்துபோன பின்பு இனி நிறுவனங்கள் வராது என்று அறிவித்தனர். நன்கு படிக்காதவர்கள்கூட எங்கோ ஒரு வேலை வாங்கிவிட்டார்களே என்ற எண்ணம் மனதை வாட்டினாலும், சரி பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு சென்றுவிட்டோம்.  அதன்பின்பு ஓரிரு வாரத்தில் ஒரு மிகவும் பெயர்பெற்ற நிறுவனம் பெங்களூரிலிருந்து வருகிறது, அது இதுவரை இங்கு வந்ததில்லை, இதுவே முதல்முறை என்று திடீரென்று அறிக்கை வந்தது. அதைக் கேள்விப்பட்டு இதற்குமுன் வேறு நிறுவனத்தில் வேலை வாங்கியவர்கள் எல்லாரும் போட்டிக்கு வந்து வரிசையில் நின்றனர். நானும் எனது நண்பனும், சரி இதுவே கடைசி வாய்ப்பு, வா செல்வோம் என்று சென்றோம். நேர்முகம் செய்தோம், மிகவும் ஆழமான கேள்விகள், அதிலே அவர்கள் எங்களை பெலசாலிகளாக கண்டார்கள்.  எங்கள் இருவருக்கும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. அதன்பின்பு அந்த வருடத்தில் கல்லூரியிலேயே சிறந்த வேலை எங்கள் இருவருக்கு மட்டும் கிடைத்தது என்று பேச்சு பரவியது. இது 'உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்' என்பதற்கு ஒரு உதாரணம். எனவே நீ கலங்காதே என் மகளே, திகையாதே என் மகனே, நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 30:18 அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.


ஏசாயா 49:23 நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை.

இதை வாசிக்கும் தேவனுடைய பிள்ளையே, நமது ஜெபங்கள் ஒருவேளை நம்முடைய பார்வைக்கு நன்றாக தோன்றலாம், அவைகளுக்கு பதில் இல்லாமல் இருக்கலாம். தேவன் ஒருவேளை உங்களை ஏழையாக வைத்திருக்கலாம் அதேசமயம் தேவபயமின்றி வாழும் ஒருவன் ஐசுவரியவானாக இருக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகள் தடைபட்டு, மற்றவர்கள் மேலே செல்வது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். இவைகள் எல்லாவற்றிலும் நாம் தேவனை கேள்வி கேட்பதையும், முறுமுறுப்பதையும் விட்டுவிட்டு, பதில் கிடைக்காத ஜெபங்களுக்காக தேவனுக்கு நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

ஏனெனில் இறுதியில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாயிருக்கிறது.

Wednesday, March 30, 2011

71. நாம் ஒரு சபைக்கு போய்கொண்டு வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாமா? இப்படி நாம் போனால் ஆவிக்குரிய வாழ்கையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?

இதற்கு பொதுவான பதில் போகலாம், ஆனால் எந்த சபைக்கு போகிறோம் என்பது முக்கியம். ஏனெனில் சில வேதபுரட்டர்கள் இருக்கும் இடங்களுக்கு போகக்கூடாது. பைபிளுக்கு முரண்பாடாக இருப்பின் அந்த சபைக்கு செல்லவேண்டாம்.

சில இடங்களில் "செல்வச் செழிப்பு பற்றிய சுவிசேஷம் (Prosperity Gospel)" போதிக்கின்றனர். இப்படிப்பட்ட போதர்களை நாம் தொலைக்காட்சிகளில் (குறிப்பாக அமெரிக்காவில்- Joel Osteen ஜோயல் ஆஸ்டீன், ) காணலாம். இவர்கள் "கர்த்தர் உங்களை பணக்காரராக்குவார்" என்ற ஒரே கருத்தை மையமாக வைத்து போதிக்கிறார்கள். இரட்சிப்பைக்குறித்து பேசுவதில்லை. சரியாகச் சொன்னால்: இவர்கள் தங்களது பரமதரிசனத்தை தொலைத்தவர்கள். இவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிந்தையை இழந்து தங்களுக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். பேதுரு சொல்லும்போது (II பேதுரு 2:1) கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் என்று சொல்கிறார்.


உதாரணமாக, சில சபைகளில் குறிசொல்வதற்கு தீர்க்கதரிசிகள் என்ற பெயரில் ஒருவரை அழைத்துவந்து ஒருவருடைய வாழ்வில் இருந்த/இருக்கிற (பிறந்ததேதி, விலாசம், தொழில் போன்ற) காரியங்களைக்குறித்து சொல்லுகின்றதான ஒரு மாயையில் சிக்கியிருக்கிறார்கள். சுவிசேஷம் அங்கே இல்லை. தங்கள் பெயரை பெருமைபடுத்தும் மனிதர்கள் அவர்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பில்லிசூனியம் மாந்தரீகம் தலைவிரித்து ஆடுகிறது, அங்கே அநேக போதகர்கள் இப்படி குறிசொல்வதில் பேர்பெற்று இரட்சிப்பு, பாவம் குறித்து ஏதும் சொல்லுவதில்லை. அவர்கள் தேவசித்தம் செய்யாத கள்ளதீர்க்கதரிசிகள். கடைசி நாட்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று இயேசு முன்கூட்டியே சொன்னவர்கள்.

திரித்துவ தேவனை மறுதலிப்பவர்கள் சபைக்கு செல்லவேண்டாம். (Jehovah Witness - இவர்கள் மிகாவேலும் இயேசுவும் ஒருவரே என்றும், இயேசு என்பவரும் கடவுள்களில் ஒருவர், இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, ஒரு கம்பத்தில் மரித்தார் என்று பைபிளுக்கு முரண்பாடாக சொல்பவர்கள்.)இன்னும் சில போதகர்கள் தொலைக்காட்சிகளிலேயே புகைபிடித்து (Cigar), சிலர் எப்போதாவது குடித்தால் தவறல்ல என்றும் பிரசங்கம் செய்கின்றனர். சிலர் சபைக்கு கூட்டத்தை இழுக்க அங்கேயே பந்தயம் கட்டி விளையாட்டுகள், ஆடையலங்கார போட்டிகள்... போன்றவைகளுக்கு இடம் கொடுக்கின்றனர். அங்கே சென்றால் இது சபையா அல்லது கடைத்தெருவா (Shopping Mall) என்று தோன்றும் அளவுக்கு உலகம் உள்ளே நுழைந்துள்ளது. ஷாப்பிங் போவதற்காக சபைக்கு போகிற சிலர் ஒருபுறம் இருக்க ஜனங்களுக்கு எதற்கு சபைக்கு வருகிறோம், நாம் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம், நம் வாழ்வின் நோக்கம் என்ன, என்பதெல்லாம் மறந்து உலகத்தார் போல இருக்கும் இடங்களும் உண்டு. ஒருமுறை அமெரிக்காவில் அப்படிப்பட்ட இடம் ஒன்றுக்கு தற்செயலாய் சனிக்கிழமை சென்று, இருதயத்தில், ஜனங்கள் இப்படி தரிசனம் இல்லாமல் சீர்கெட்டுபோகிறார்களே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.அப்படிப்பட்ட இடங்களை விட்டு விலகவேண்டும் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.  இயேசுவைக் குறித்து பார்க்கும்போது: இவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன். அப்படிப்பட்ட தேவன் பூமியில் எப்படிப்பட்ட இடத்தில் பிறக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பல பதில்கள் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வுசெய்யச் சொன்னேன்: இவர் ஒரு பளிங்கினால் உண்டாக்கப்பட்ட மாளிகையில் வைரம், இரத்தினம் என விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்ட ஒரு அறையில் பிறந்திருக்கவேண்டும் என்று எல்லாரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இவர் தான் பிறக்க தேர்வு செய்த இடம் என் இருதயத்தை தொட்டது! வானங்கள் மற்றும் பூதலத்தின் மன்னாதி மன்னவன் பாதங்கள் தொட்ட இடம், சத்திரத்தில் இடமில்லை, எனவே ஒரு தொழுவத்தில் [Manger - கால்நடைகளுக்கு தீவனம் போடும் இடம்] பிறக்கிறார். தனது பிறப்பில் தாழ்மையின் உச்சத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.  சீஷர்களுக்கு எளிமையை சொல்லிக்கொடுத்தார்: "வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார். காரியம் இப்படியிருக்க "இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களை பணக்காரராக மாற்றுவார்" என்ற கருத்தையே பிரசங்கம் செய்வது தவறு. கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை தருவார். இது உண்மைதான். ஆனால் அதையே மையமாகவைத்து பிரசங்கம் செய்தால். சுவிஷேசம் அதுவல்ல. சுவிஷேசம் என்பது யோவான் 3:16 - தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். சிலுவைதான் சுவிசேஷத்தின் மையப்பகுதி, அது தவிர வேறு காரியங்களைமட்டும் பேசுபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.எனவே தவறாக பிரசங்கம் செய்யும் இடங்களுக்கும் சபைகளுக்கும் செல்லவேண்டாம்.

நாம் வேறு சபைக்கு போகவேண்டும் என்றால், ஒன்று அந்த சபை இதைவிட ஆவிக்குரிய காரியங்களில் மேலாக இருக்கவேண்டும், அல்லது தற்போது இருக்கும் சபையில் ஏதோ உங்களுக்கு பிடிக்கவில்லை. அல்லது சில சபைகளில் சமுகசேவை, சுவிசேஷ ஊழியம் சிறப்பாக செய்கின்றனர். அப்படிப்பட்ட காரியங்கள் சிலரை ஈர்க்கலாம். அப்படி சேர்ந்து சுவிசேஷம் ஊழியம் செய்யலாம்.
தேவனுடைய வரம் பெற்ற போதகரை சந்திக்க போவது தவறல்ல.  

 உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தடங்கள் வருமா வராதா என்பது செல்லும் சபையைப் பொறுத்தது.

தூரமாக பிரயாணம் செய்யும்போது (இடம்/மொழி தெரியாத இடங்கள்) வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாம். ஏனெனில் நமக்கு ஆராதனைக்கு செல்வது முக்கியம்; Billy Graham என்பவரின் சுவிஷேச பிரசங்கம் San Diego-ல் ஒரு விளையாட்டு மைதானத்தில்(Stadium) வைத்திருந்தபோது ஒருநாள் போய்வந்தேன்.

மேலும் இது சம்பந்தமாக வெறொரு கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டது; அதை கீழே உள்ள இணைப்பில்(link) Part [B]
ல் காணலாம்.
http://tamilbibleqanda.blogspot.com/2009/10/water-baptism.html

எபேசியர் 4:14 "நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்" என்று வாசிக்கிறோம்.
==> ஜாக்கிரதையாயிருக்கவேண்டும்.

எபிரெயர் 5: 12-14 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
==> ஆழமான சத்தியங்களை போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள். சத்திய வசனத்தில் தேறுங்கள். உதாரணமாக:

  • [பாவத்தினின்று] இரட்சிப்பு
  • பிதா, குமாரன், பரிசுத்தாவி ஞானஸ்நானம்
  • அந்நியபாஷையுடன் பரிசுத்தாவியின் அபிஷேகம்
  • மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தல்
  • மாறுபாடான உலகினின்று வேறுபட்டு ஜீவித்தல்
  • பரிசுத்தமாக்கப்படுதல்
  • ஜெயமுள்ள வாழ்க்கை (பாவம், பிசாசு, உலகம்)

எனவே பதிலானது எப்படிப்பட்ட சபை என்பதைப் பொறுத்தது. அடிக்கடி ஒரு சபை என்று செல்லாமல் இருங்கள். நன்றாக ஜெபித்து தேவனிடம் கேட்டு நிலைத்து இருங்கள். அவர் நல்ல மேய்ப்பன். உங்களை வழிநடத்துவார்.

தியானிக்கவும்:
மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

Monday, March 7, 2011

70. வாஸ்து பார்த்து வீடு கட்டலாமா? இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது?


கேள்வி:
வீடு எப்படி கட்டவேண்டும். வாஸ்து பார்த்து கட்டலாமா. இதைபத்தி வேதாகமத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை விளக்கவும்.

பதில்:
நாள் நட்சத்திரம் பார்க்கலாமா என்ற கேள்விக்கு ஏற்கனவே கேள்வி பதில் 40ல் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://tamilbibleqanda.blogspot.com/2010/05/40.html இதுவும் அதேபோன்றதுதான்.

"வாஸ்து சாஸ்திரம்"
என்பது என்ன?

சமஸ்கிருத வார்த்தையாகிய "Vasthu" (வஸ்து) என்றால் " இருக்கக்கூடிய எந்த ஒரு அமைப்போ, பொருளோ ஆகும். எனவே ஒரு பொருளைக்குறித்த அல்லது அமைப்பைக்குறித்த சாஸ்திரம், கூற்றுகள் 'வஸ்து சாஸ்திரம்' அல்லது 'வாஸ்து சாஸ்திரம்' ஆகும். இருப்பினும் தற்போது இந்த வாஸ்து சாஸ்திரம் என்பது குறிப்பாக கட்டிடங்களுக்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இப்போது தமிழ் நாட்டில்அநேகர் இதை வைத்து பிழைப்பே நடத்துகின்றனர். 1960 வரைக்கும் இது கோயில் கட்டிடங்களுக்குத்தான் பெரிதாக பின்பற்றப்பட்டது.

வாஸ்து சாஸ்திரம் என்பதில்: ஒரு சதுர வடிவத்தை 64 (8x8) அல்லது 81 (9x9) கட்டங்களாகப் பிரித்து இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக" இருப்பதாக கூறுகிறது. இங்கே மதங்களையும் கடவுள்களையும் வைத்து நாள் நட்சத்திரம் போல கணிப்பது பைபிளுக்கு ஒத்துப்போகாத ஒன்று.குடிசார் பொறியாளர் (civil engineer) மற்றும் கட்டிட நிபுணர்கள் (architect) இக்காலத்தில் பழங்காலத்தைவிட விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறி இருக்கின்றனர்.
நீங்கள் என்னதான் வாஸ்து சாஸ்திரப்படி வீடுகட்டினாலும் அது ஒரு பூமிஅதிர்ச்சி வரும்போது சுவர்கள் விரிசல்விட்டு இடிந்து விழுந்துவிடும்.
ஏனெனில் தமிழ்நாட்டில் வீடு செங்கல் மற்றும் சிமெண்ட் ஆகியவற்றால் கட்டப்படுகின்றது. ஆனால் கலிஃபோரினியாவில் கட்டிய வீடு பூமியதிர்ச்சி 6.0 ரிக்டெர் அளவு வந்தாலும் விழாது. பூமி அதிர்ச்சியில் விழாமல் இருக்கவேண்டுமென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் மரத்தால் வீடுகளைக் கட்டவேண்டும்; மற்றபடி நமது இஷ்டப்படி கட்ட அரசாங்கம் இங்கே அனுமதிப்பதில்லை. ஒரு நல்ல கட்டிட நிபுணரிடம் சென்றால் இதற்கு சிறப்பாகவே ஆலோசனை கொடுக்கப்படும். உயர்ந்த கட்டிடங்கள் பூமி நகர்வதால் உடையாமலிருக்க சக்கரங்கள் போன்ற அமைப்பு அஸ்திபாரத்தில் அமைக்கப்பட்டு, முழுக்கட்டிடமும் நகரும் ஆனால் உடையாது என்ற அளவுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞானம் சென்றுகொண்டிருக்கின்றது (கீழே படம்). ஆனால் வாஸ்துகாரர்கள் வீட்டில் கஷ்டம் உள்ளது என்பதால் சுவற்றை இடித்து கட்டுங்கள் என்று சொல்லி அங்கே யமன், இங்கே இந்திரன் என்று கொண்டுவருகின்றனர். காற்றுபோக ஜன்னல் எங்கே இருக்கவேண்டும், வாசல் எங்கே இருக்கவேண்டும் என்றுதானே சொல்கிறோம் என்கின்றனர். காற்றுவீசும் திசையைப் பார்த்து அதை யார்வேண்டுமானாலும் சொல்லலாமே என்ற எதிர் கூற்றும் வைக்கப்படுகின்றது. 'இல்லை... இல்லை... அதுபோக வீட்டிலுள்ள கஷ்டங்கள் நீங்கும்' என்று அவர்கள் சொல்வதை நம்பி போகும்போது அது ஜோதிடர் போன்றவர்களை நாடி செல்வது என்பதுபோல் ஆகிறது.

பைபிளில் இரண்டு இடத்தில் வீட்டைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது:
உபாகமம் 22:8 நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும். (பாதுகாப்பு)

லூக்கா 6:48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (இங்கே வெள்ளம், சுனாமி என்ற ஒரு பாதிப்புக்கு கற்பாறை.)


இன்று இதையெல்லாம் விஞ்ஞானம் தாண்டி நாம் விண்வெளியில் பறந்து ஆய்வுசெய்கிறோமே. வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக வீடுகட்டுவதற்கு நிபுணர்கள் (architect) , குடிசார் பொறியாளர்களிடம் (civil engineer) செல்லுங்கள்.

Tuesday, January 18, 2011

69. உயிரினங்களின் தோற்றம் மகாவெடிப்பிலிருந்து என்ற கோட்பாட்டை (Big bang theory) எப்படி மறுப்பது?


கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை (video) பாருங்கள். நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது. முதலாவதாக இன்றைய பரிணாமக்கொள்கையை சொல்லிவிட்டு பின்பு சிருஷ்டிப்பை நிரூபிக்கின்றது. காணொளியிலிருந்து சில கருத்துக்கள்:

[1] வெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை. ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.

[2] சூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா? ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை! சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.

[3] சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை. சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது. 


 [4] எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள் இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.

[5] நான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.

[6] வேதியியல் பரிணாமமுறையும் (chemical evolution) உயிர் உயிரிலிருந்து வருகிறது என்ற அடிப்படையை நிராகரிக்கமுடியவில்லை. (மில்லரின் ஆய்வுக்கூடசோதனை). புரோட்டீன் (Protein)  உண்டாக அமினோ அமிலம் (amino acid) என்பது தானாக முறைப்படி வந்து அதினதின் இடத்தில் உட்கார்ந்தாலே உண்டாகமுடியும். முரணாக அமினோ அமிலங்கள் புரோட்டினிலிருந்து விழத்தான் செய்கின்றன, தானாக வந்து உட்காருவதில்லை. இந்த சமன்பாடில் ஒரு அமினோ அமிலம் சரியான இடத்தில் இல்லையெனில் முழு புரோட்டீனும் வீணாகும். நமது உடலில் இத்தனை புரோட்டீன்கள் காணப்படுவது நிகழ்தகவுக்கு அப்பாற்பட்டது. ஒரு புரோட்டீனில் 100 அமினோ அமிலம் காணப்பட நிகழ்தகவு என்பது 1/ (1065) க்கும் குறைவாகும். இதை புரிந்துகொள்ளும் முன்பு 7.5 x 1018 மணல் துணுக்குகள் முழுபூமியிலும் உள்ளன. இது விஞ்ஞானத்தின்படி பூமியின் கனஅளவை வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் 1/1065 என்பது ஒரு மாநில லாட்டரி சீட்டு ஒன்றை தற்செயலாக தெருவில் கண்டெடுத்து அது முதல் பரிசை தட்டிச்செல்லும் என்பதாக இருக்கவேண்டும், மேலும் அப்படிப்பட்ட லாட்டரி சீட்டை வாரந்தோறும் கண்டெடுக்கவேண்டும். அப்படியாக 1000 வருடங்கள் கண்டெடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சாத்தியம் தான் 1/(1065) என்பதாகும். அப்படியே புரோட்டீன் அதிசயமாக தற்செயலாக உருவாகினாலும், உயிர்கள் உண்டாக போதுமானதல்ல. ஒரு எளிய "செல்" என்பதற்கே ஆயிரக்கணக்கான புரோட்டீன்கள் தேவைப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரெட் ஹாய்ல் (Fred Hoyle) என்ற கணித விஞ்ஞானி அதிவேக கம்யூட்டரை தன்னுடைய பட்டதாரிகளுடன் பயன்படுத்தி தற்செயலாக ஒரு உயிர் உண்டாவதற்கான நிகழ்தகவு கண்டறிய முனைந்தார். அவர் கணக்கின்படி: அமீபா என்ற உயிரினத்தின் புரோட்டீன் மாத்திரம் உண்டாவதற்கு 1/(1040000). இது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதை விளக்கவேண்டுமென்றால் சூரியகுடும்பத்தையும் தாண்டி அது இருக்கும் அண்டவெளியில் உள்ள ஒரு அணுவை எடுக்க நிகழ்தகவு என்பது 1/(1080) ஆகும் !!!!!! உயிர் தற்செயலாக உண்டாக சாத்தியம் 1/1040000 என்பது மிகவும் கற்னைக்கு அப்பாற்பட்டது என்றார். இதுவே மகாவெடிப்பு கோட்பாட்டையும், டார்விணின் கோட்பாட்டையும் புதைக்க போதுமானது. டார்வின் என்பவரே "Blind watch maker"-ல் ஒரு செல்லில் நியூக்லியஸ் பற்றிய தகவல் மட்டுமே 30 களஞ்சிய புத்தங்களைத் தாண்டும் என்றார். எனவே வெடிச்சிதறலில் இருந்து உயிரினம் உண்டானது என்பதெல்லாம் நகைச்சுவையாக இருக்கின்றது.

[7] தாவரம், மனிதன், விலங்குகள் எல்லாம் "செல்" உடையன. மனித உடலில் மட்டும் "50 million million" (50 trillion) cells, உள்ளன. இன்று மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானிகள் (molecular biologists) சொல்வது என்னவென்றால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு செல் பற்றிய புரிந்துகொள்ளுதல் என்பது சில அம்சங்களைக்கொண்ட ஒன்று. ஆனால் இன்றைய கண்டுபிடிப்பின்படி செல் என்பது ஒரு அண்டவெளி (Universe).  அத்தனை சிக்கலானது (complex).  ஒரு செல் என்பது மட்டும் உயிரோடிருக்க ஒரு சிறு நகரம்(city) செய்யும் வேலைகளைச் செய்கின்றது. செல் மெம்ப்ரேன் என்ற புரோட்டீன்கள் எந்த மூலக்கூறுகள் உள்ளே செல்லவேண்டும், செல்லக்கூடாது என்று முடிவு செய்கின்றன. இவைகள் அழுத்தமானி(pump) போல சத்துப்பொருட்களை இறக்குமதி செய்தும், தேவையற்றதை ஏற்றுமதிசெய்யவும் செய்கின்றன. செல்-க்கு உள்ளே மிகவும் சிக்கலான அமைப்புகள் உள்ளன. Endoplasmic reticulum என்பது ஒரு போக்குவரத்து நிறுவனமாக ribosomes உற்பத்திசெய்யும் பலவிதமான புரோட்டீன்களை கொண்டு செல்கிறது. Golgi body என்பவை புரோட்டீன்களை இந்த மெம்ப்ரேன்களின் வெளிப்பகுதிக்கு கொண்டுசெல்கிறது. இதற்கிடையே lysosome என்பவை இந்த மூலக்கூறுகளை சிறுமூலக்கூறுகளாக உடைக்கும் ஜீரண வேலையை செய்கிறது. Mitochondria என்பவை செல் உட்கொள்ளும் க்ளுகோஸ்-ன் மின்உற்பத்தி நிறுவனம் ஆகும். நியூக்லியஸ் என்பது ஒரு அனைத்து ஆவணங்களின் வங்கிபோல் இது செல் இயங்க உதவுகிறது. இந்த நியூக்லியஸ்க்கு உள்ளே குரோமோசோம்கள் உள்ளன. இவை DNA (DeoxyriboNucleic Acid) நூலகத்தை உள்ளடக்கியுள்ளன. DNA என்பவை உயிர்வாழ பிழை கண்டறிதல், நீக்கம், சரிசெய்தல், தானே மறுபடியும் உருவாக்குதல் போன்ற 1 பில்லியனுக்கும் அதிகமான தகவல் அடங்கியதாகும். இத்தனை உறுப்படிகளும் ஒரே நேரத்தில் உருவாகினால்தான் "செல்" இயங்க முடியும்.

[8] பாக்டீரியாக்கள் என்பவை நகர்ந்து செல்ல அவைகளில் ஒரு மோட்டார் போல் உள்ளன. இவை ஒரு நிமிடத்துக்கு 100,000 சுழற்சிகள் செய்யக்கூடியவையாகும். இந்த பாகங்களில் ஒரு பாகம் செயல் இழப்பின் பாக்டீரியா இறந்துவிடும். நமது தலைமுடியை குறுக்கே வெட்டினால் வரும் குறுக்கு வட்ட அளவு சுமாராக 8 மில்லியன் பாக்டீரியாக்கள் பிடிக்கும். இப்படி பாக்டீரியாக்கள் மிகவும் சிறியதாக இருப்பினும் அவைகளின் அமைப்பு எளிதல்ல.

மகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை. (Intelligence beyond our capacity is involved for this type of design). எனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.

இப்போது இந்த காணொளியைப் பாருங்கள் (Question of Origins):

Sunday, January 9, 2011

68. பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாகவும், புதிய ஏற்பாட்டில் அன்பாகவும் இருப்பதேன்?

பதில்:
அநேகர்களுக்கு பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது தேவன் கோபமானவர் என்றும், புதிய ஏற்பாட்டில் அன்பானவர் என்றும் எண்ணம் தோன்றுகிறது. உண்மையில் அப்படி அல்ல. (Just a wrong perception).

இந்தக் கேள்வியானது அநேக வருடங்களாக கிறிஸ்தவர்களின் மனதிலே தோன்றியது. சபையின் தந்தையர்களின் காலத்தில் "மார்சியன்(Marcion)" என்பவர் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டி பழைய ஏற்பாட்டிலுள்ள தேவன் என்பவர், இயேசு குறிப்பிட்ட பிதாவை விட குறைவாக இருந்தார் என்று சொல்லி, புதிய ஏற்பாட்டில் எங்கெல்லாம் சிருஷ்டிகர் என்பவர் தீமையானவர் என்ற தோற்றம் எழுகிறதோ அதையெல்லாம் நீக்கிப்போடவேண்டும் என்றார். கடைசியாக அவருக்கு லூக்கா எழுதின நிருபத்தின் சுருக்கம் ஒன்றே மிஞ்சியது. ஆனால் சபைகள் எல்லாம் மார்சியனின் மாறுபாடான உபதேசத்தை ஒதுக்கித்தள்ளியும், எல்லா ஆகமங்களும் ஒரே தேவனால் ஏவப்பட்டன (inspired). எனவே எல்லாவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் முடிவு தெரிவித்தன.

உண்மை என்னவெனில் பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் (images) புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தேவனின் பிம்பங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. யோவான் 1:18ல் சொல்லும்போது மிகவும் சரியாக "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." என்கிறார். குமாரனாகிய இயேசுவில் காணப்பட்ட சுபாவங்கள்/குணங்கள்தான் பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவனின் சுபாவம். பிதாவாகிய தேவனுக்கும், குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் அன்புகூரும் அளவில் மாற்றமில்லை. பிதாவைவிட குமாரன் அதிக கண்டிப்பாயிருப்பதுமில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களை எழுதிவர்கள் அனைவரும் பழைய, புதிய ஏற்பாட்டுக்கும் ஒரேபோன்ற தொடர்ச்சியுள்ளது என்றும், பழைய ஏற்பாட்டின் தேவனுக்கும், கிறிஸ்து இயேசுவிடம் கொண்ட அனுபவத்திற்கும் ஒரே போன்றது என்று கண்டனர்.

இதைக்குறித்து மூன்று காரியங்களை விரிவாக பார்க்கலாம்:
[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது.
[2] புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது.
[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம் என்பது காலத்துக்குள்ளும், காலத்தின் முடிவிலும்.

[1] பழைய ஏற்பாட்டில் அன்பு இருக்கின்றது:
தேவன் தன்னைப்பற்றி தான் யார் என்று சொல்லும்போது முதலில் தான் ஒரு நியாயத்தீர்ப்பு செய்யும் தேவன் என்று சொல்லாமல், தான் அன்புள்ளவர் என்று சொல்லுகிறார். யாத்திராகமம் 34:6,7 "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்."
இப்படித்தான் தன்னைப்பற்றி தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் அப்படிப்பட்டவரே! நன்றாக கவனியுங்கள் அந்த வசனத்தில், முதலில்: இரக்கம், கிருபை, அன்பு, உண்மையுள்ளவர் மற்றும் மன்னிக்கிறவர் என்று சொல்லி, பின்புதான்: தேவன் அன்பாயிருக்கிறார் என்று சொல்லி அதை தங்களுக்கு சாதமாக்கிகொண்டு அக்கிரமம் செய்பவர்களை நான் குற்றவாளியாக தீர்ப்பேன் என்று சொல்கிறார்.அப்படிப்பட்டவர்களை நியாயம்தீர்ப்பார்.

ஆதாம் பாவம் செய்தபின்பும் அன்பாகவே தேவன் தோட்டத்திலே வந்து உலாவுகின்றார். அங்கே அவர்கள் மனந்திரும்பவில்லை என்றாலும், அவர்களுக்கு தோலினால் உடைசெய்து கொடுக்கிறார். பழைய ஏற்பாடு முழுவதிலும், அவர் இஸ்ரவேல் ஜனங்களை அன்பின் நிமித்தமே தெரிந்துகொண்டார் என்று சொல்கிறார்; அவர்கள் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதால் அல்ல. அவர்கள் தகுதி அற்றவர்கள். எப்பொழுதெல்லாம் இஸ்ரவேல் ஜனங்கள் முரட்டாட்டம் செய்தனரோ அப்பொதெல்லாம் தம்முடைய தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பி எச்சரித்தார். அவர்கள் அதற்கு கீழ்ப்படியாத பட்சத்தில் அவர்கள் ஒடுக்கப்படும்படி விடுகிறார். அவர்கள் தேவனை நோக்கி கூப்பிடும்போது இரக்கமுள்ளவராக அவர்களை விடுவிக்கிறார்! அப்படியாக அவர்கள் கஷ்டப்படும்போதுகூட ஓசியா 11:8ல் "எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள்ளே திரும்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது." என்று தேவன் சொல்கிறார். ஒருபுறம் அவருடைய நீதி நியாத்தீர்ப்பையும், மறுபுறம் அவருடைய அன்பின் இருதயம் தம்முடைய ஜனங்களுக்காக உடைந்தும், அவர்கள் கஷ்டத்தை விரும்பாமலும் இருக்கிறது.

ஓசியாவிலே சொன்னதுபோல் அவர் விபச்சாரிகளுக்கு கணவர். இங்கே தேவனை விட்டு வேறுதேவர்களை பின்பற்றுதல் விபச்சாரம் செய்வதுபோல் ஆகும். இருப்பினும் அவர் அவர்களை தம்முடைய கரத்திலே அணைக்கும்படிதான் விரும்புகிறார்; அதே சமயம் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் விடுவதும் இல்லை! அவருடைய நோக்கமும் திட்டமும் வெறும் நியாயத்தீர்ப்பு அல்ல; ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் நியாத்தீர்ப்பினால் அவர்களைத் தம்மிடம் ஒரு குடும்பத்தைப்போல மீட்கும்படி அப்படிச் செய்கிறார்.

இப்படி அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டும் பாரபட்சமாக செய்யாமல், யோனா-வில் வாசிப்பதுபோல் நினிவே பட்டணத்தாருக்கும் இரக்கமாயிருந்தார் என்று வாசிக்கிறோமே. யோனா சொல்லும்போது: இதோ நான் தர்ஷீசில் இருக்கும்போதே நான் சொல்லவில்லையா? நீர் கிருபையும், இரக்கமும், அன்புமிகுந்தவர் என்றும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிற தேவன் என்றும் அறிவேன். யோனாவுக்கு தேவன் இரக்கமுள்ளவராக இருந்தது பிடிக்கவில்லை. நாற்பது நாளில் அழியும் என்று சொல்வதில் மகிழ்ச்சி. ஆனால் நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினபோது தேவன் மனதிரங்கி சீரியா தேசத்தார்களாகிய அவர்களை மன்னித்தது யோனாவுக்கு பிடிக்கவில்லை. நீர் ரொம்பத்தான் அன்பாயிருக்கிறீர், ரொம்பவே மன்னிக்கிறீர், என்று ஒரு குற்றச்சாட்டு. யோனாவும், ஓசியாவும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நோக்கில் இல்லை, மன்னிக்கும் செயலில் இருக்கிறார் என்று அறிவுறுத்துகின்றனர். மனம் திரும்பாதவர்களை மன்னிக்கமுடியாது. எனவே அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பி வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக்குறித்து எச்சரிக்கிறார். அந்த தீர்க்கதரிசிகளை கொலைசெய்தால், மேலும் சில தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். அவர்கள் மனந்திரும்பினால் அந்த நியாயத்தீர்ப்பானது அவர்கள்மேல் வராமற்போகும். மனந்திரும்பாவிடில் நியாத்தீர்ப்பை அவர்கள்மேல் அனுப்புவதை தேவன் விரும்பாவிட்டாலும், அவர் நியாயத்தீர்ப்பை அனுப்பியே ஆகவேண்டும். அநேகமுறை அப்படிப்பட்ட கஷ்டத்திலும் அவர்களை மீட்டுக்கொள்ள மீண்டும் ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு "நல்ல" பெற்றோர், தவறு செய்யும் தன் பிள்ளையை ஒரு தண்டனை கொடுத்து திருத்த முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை.

[2] புதிய ஏற்பாட்டிலும் நியாயத்தீர்ப்பு இருக்கின்றது:
புதிய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு((judgment in NIV) என்னும் வார்த்தை 108 முறை வருகின்றது. அவைகள் எல்லாவற்றிலும் அதிகமாக இயேசுதான் நியாயத்தீர்ப்பைக் குறித்துச் சொல்கிறார். அவர் சொல்லும்போது: "உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்(மத் 5:29,30)".
மத்தேயு 7:13-29; 24:45; 25:46 ஆகிய வசனங்களில் எச்சரிக்கை கொடுத்தவரும் இயேசுதான். புதிய ஏற்பாட்டில் மற்றெல்லாரைக்காட்டிலும் அதிகமாக நியாயத்தீர்ப்பைக்குறித்து பேசியது இயேசுதான். வெளிப்படுத்தின விசேஷம் யோவானுக்கு இயேசுவால் கொடுக்கப்பட்டது. பலவிதமான நியாயத்தீர்ப்புகள் குறித்து புதிய ஏற்பாட்டில் உள்ளன. தன்னைத்தானே நியாயம்தீர்ப்பது(யோவான் 9:39; 12:47-49), தேவனின் நியாயத்தீர்ப்பு( யோவான் 8:50), தனிப்பட்டவர்களின் நியாயத்தீர்ப்பு( அப் 12:23) மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு (யோவான் 5:22,27) என உள்ளன. மனிதர் செய்யும் சில காரியங்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது (1 கொரி 6:9-10; கலா 5:19-21) மேலும் விரிவான நியாயத்தீர்ப்பின் காட்சிகள் (வெளி 20:11-15). இங்கே எல்லாம் நியாயத்தீர்ப்பைக்குறித்தும், அவைகளில் பல இயேசுவை உள்ளடக்கியும் உள்ளது. இயேசு இந்தவிஷயத்தில் பிதாவைப்போலதான்.

புதிய ஏற்பாடு கிருபை, அன்பு குறித்து போதிக்கின்றது; ஆனால் அன்பையும் கிருபையையும் அநேகர் புறக்கணிக்கக்கூடும். புதிய ஏற்பாடு கடைசி நியாயத்தீர்ப்புநாள் குறித்தும் சொல்லுகிறது. புதிய ஏற்பாட்டின்படி ஒவ்வொருவரும் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரர்தான், ஆனால் தேவன் இப்போது எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என்று கிருபைமிகுந்தவராய் இருக்கிறார். அந்த கிருபையை ஜனங்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டால், மிகவும் பயங்கரமான முடிவு அவர்களுக்காக உண்டு. எனவே இங்கே பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதுபோலவே, புதிய ஏற்பாட்டிலும் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் எச்சரித்தனர். புதிய ஏற்பாட்டில் தேவன் அப்போஸ்தலர்கள், போதகர்கள், சுவிசேஷகர் என்று அனுப்பி ஜனங்கள் மனந்திரும்பவேண்டும் என்றும் வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகுறித்தும் சொல்கிறார். எனவே இந்த விஷயத்தில் இரு ஏற்பாடுகளிலும் ஒற்றுமைதான் இருக்கின்றது.

[3] நியாயத்தீர்ப்பில் வித்தியாசம்:
பழைய ஏற்பாட்டில் நியாயத்தீர்ப்பு [அவர்கள்] காலத்துக்குள் நடந்தது. இஸ்ரவேலர் பாவஞ்செய்தபோது அவர்கள் மரித்தெழுந்தபின் நரகத்துக்கு போவார்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்கள் மீதியானியராலும், அசீரியராலும் ஒடுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். எனவே பழைய ஏற்பாட்டில் பல நியாயத்தீர்ப்புகளைக் காணலாம். நியாயாதிபதிகளின் புஸ்தகத்திலும், கானானியர், மோவாபியர், அம்மோனியர் மற்றும் பெலிஸ்தியர்கள் எல்லாரும் இஸ்ரவேலை தண்டித்தனர். பிற்காலத்தில் எகிப்தியர், அரேமியர, அசீரியர் மற்றும் பாபிலோனியர்கள் என்று வந்து ஒடுக்கினர். இவை எல்லாம் தாங்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தேறின. நமக்கு தீர்க்கதரிசி சொல்லும் பஞ்சம், வாதைகள், ராணுவம் சூழ்ந்துகொள்ளும் என்னும் எச்சரிக்கைகளை படிக்கும்போது மகிழ்வற்ற செய்தியாயிருக்கலாம், ஆனால் அவை நிஜவாழ்வில் பின்வரும் சம்பவங்கள் (இன்று சில இடங்களில் இருப்பதுபோல). மேலும் மனிதர்கள் மனந்திரும்பவேண்டும் என்று இவைகளை அனுமதிக்கிறார்; அவைகளில் பிரியப்படுவதில்லை.

பழைய ஏற்பாட்டில் இறந்தபின்பு வாழ்க்கையைக்குறித்து கொஞ்சம்தான் வெளிப்படுத்தப்பட்டது, அதுவும் பழைய ஏற்பாட்டின் கடைசி கட்டத்தில். ஜனங்கள் மரணம் எனபதை ஷீயோல் (Sheol) என்னும் மறைவான உலகிற்கு செல்வது என்றும் அங்கே தேவனைத் துதிப்பது என்று எல்லாம் இல்லை என்றும், கொஞ்சம் வாழ்வு இருக்கும் என்று எண்ணினர். அவர்களைப் பொறுத்தமட்டில் முதிர்வயதில் மரிப்பதும், பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பதும், அந்த பிள்ளைகள் தங்கள் பேரையும் புகழையும் கட்டிகாக்கவேண்டும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது; சிறுவயதில் இறப்பது நியாயத்தீர்ப்பென்று எண்ணினர். ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவன் எதிர்காலத்தைக்குறித்து அதிகமாக சொல்லியுள்ளார். எனவே நியாயத்தீர்ப்பு என்பது காலத்தின் கடைசியில் என்றும், மரித்தோர் உயிர்தெழுதல், நித்தியஜீவன், நரகம் எல்லாம் காலத்தின் முடிவில். காலத்தின் முடிவு என்பது கிறிஸ்துவின் வருகையில் இந்த வரலாறு முடிந்துபோகும்.

எனவே, பழைய ஏற்பாட்டில் தேவன் நியாயம்தீர்க்கும் தேவனாகவும், புதிய ஏற்பாட்டில் அன்புள்ள தேவனாகவும் இருக்கிறாரா? இல்லை. இரு ஏற்பாடுகளிலும் தேவன் அன்பாயிருக்கிறார் என்றும் அவரே நீதியுள்ள தேவனாக இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இனி வரவிருக்கும் பயங்காரமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள, தேவன் மனிதர்களுக்கு தன்னுடைய அன்பையும், மன்னிப்பையும் தருகிறார்.

Sunday, January 2, 2011

67. ஆதியாகமம் 6:1-4ல் தேவகுமாரர் யார்? இராட்சதர் யார்?

கேள்வி:
ஆதியாகமம் 6:2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை" அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்...அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
இங்கே "தேவகுமாரர்" யார், "இராட்சதர்" யார்?


பதில்:
ஆதியாகமம் 6:1-4 வரையுள்ள வசனங்களைக்காட்டிலும் வரலாற்றில் சிலர் எழுதிய புத்தகங்கள் ஜனங்களின் மத்தியில் ஒரு விநோத ஆர்வத்தையும், வேறுபட்ட கருத்துக்களையும் எழுப்பியுள்ளது. முதற்பார்வையில் இந்த வசனம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். கடினமானது என்னவெனில் "தேவ புத்திரர்", "மனுஷ குமாரத்திகள்" மற்றும் "இராட்சதர் (அதாவது நெஃபிலிம் என்னும் எபிரெய வார்த்தை)" எனப்படும் வார்த்தைகளில் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்தான். இந்த கூட்டத்தினரினைப் பற்றி தனித்தனியே விளக்கம் கொடுக்க பல பண்டிதர்கள் பெரிய நிலைகளில் எழும்பி விவாதித்தனர்.

மூன்று வாதத்திற்குரிய கூட்டத்தினராக
[1] அண்டவெளியின் கலப்பினங்கள் (cosmological mix - தூதர்கள்-மனிதர்கள் கலவை).
[2] சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர் கலவை.
[3] சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள் (sociological mix).


என்று வார்ப்புரு (label) இடப்பட்டன. இப்படி கொடுக்கப்பட்டுள்ள கலப்பினங்களுக்குள் முதற்பார்வையில் தேவதூதர்கள் மனிதர்களுடன் கலந்தார்கள் என்ற
சாத்தியம், எல்லா பார்வைகளை(view) விட ஒருவேளை மேலோங்கி நிற்கலாம்.

[1] "அண்டவெளியின் கலப்பினங்கள் (cosmological mix- தூதர்கள்-மனிதர்கள் கலவை)"
"1 ஏனோக்கு" எனப்படும் புத்தகமானது சுமார் கி.மு 200-ல் எழுதப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 6:1, 7:6ல் "இருநூறு தூதர்கள் செமாயா என்ற தூதனின் தலைமையில் இருந்தனர். அவர்கள் பூமியிலுள்ள மிகவும் அழகிய குமாரத்திகளை கண்டனர். அந்த ஆசையில் இவர்கள் பூமிக்கு செல்வோம் என்று ஆணைவிடுத்துக்கொண்டு பூமிக்கு வந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு மனைவிகளைக் கொண்டனர். அவர்கள் மனைவிகளுக்கு மாயாஜால மருந்துகள், வேர் மூலிகை மருந்துகள் என்பவைகளைப்பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். பெண்கள் கர்ப்பமடைந்து பிரசவித்தபோது 300 முழம் அளவுக்கு வளரும் இராட்சதர்கள் பிறந்தார்கள். இந்த இராட்சதர் பூமியிலிருந்த ஆகாரத்தை பெரிதளவில் காலிசெய்தார்கள். எனவே மற்ற மனிதர்கள் இவர்களை வெறுக்க ஆரம்பித்தனர். இந்த இராட்சதர்கள் பின்பு பூமியிலிருந்தவர்களையே விழுங்க ஆரம்பித்தனர், விலங்குகளையும், பறவைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. பின்பு பூமியே இவர்களை குற்றப்படுத்தியது." இப்படி ஒரு (கட்டுக்) கதை. இது பைபிளில் இல்லை.

யூதர்களில் புகழ்பெற்ற வரலாற்றாலர் (historian கி.மு.37) "ஜோஸஃபஸ்" என்பவரும் இந்த தேவதூதர்கள்-மனிதர்கள் கலப்பு கொள்கையை பின்பற்றினார். அவர் எழுதும்போது "பல தூதர்கள் பெண்களுடன் துணையாக இருந்து பிள்ளைபெற்றது அநீதியென்று காட்டியது என்றார். அப்படியே கிரேக்க மொழியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தில் "தேவனின் தூதர்கள்" என்ற பதத்தை ஆதி 6:2ல் பயன்படுத்தினர். அதன்பின் அதினால் வந்த பல சிக்கல்கள், தொல்லைகள் நிமித்தம் அந்த பதமானது பயன்படுத்தக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டது.

யோபு 1:6 ல் தேவபுத்திரர் என்ற வார்த்தை வருகின்றது; அங்கே அது "தேவ தூதர்கள்" என்று தெளிவாக புரிந்துகொள்ளும்படி உள்ளது. மனிதர்கள் அல்ல; அதை வைத்துக்கொண்டு ஆதி 6:2ல் சொல்லப்பட்ட தேவகுமாரர் என்பவர்கள் தேவதூதர்கள் என்று உடனே முடிவுசெய்யக்கூடாது.

ஆனால் பைபிளில் எங்குமே தேவதூதர்கள் மனிதர்களை திருமணம் செய்ததாக இல்லை. மிக மிக முக்கியமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் தேவதூதர்களைப்போல திருமணம் செய்யாமல் (கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி) இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார். மிகவும் முக்கிய பதிப்பான ஆல்பிரட் ரால்ஃப்ஸ் என்பவரின் பதிப்பு, தூதர்கள் கலப்பைப்பற்றி சொல்லவில்லை. பூமியிலே தேவதூதர்கள்தான் பிரச்சனை உண்டாக்கினார்கள் என்றால் தேவன் ஏன் பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவேண்டும்; பரலோகத்தில் ஒருபகுதியில் பேரழிவை உண்டாக்கியிருக்கலாமே; குற்றவாளிகள் மேலேயிருந்து தானே வந்தார்கள்;  சிலர் 1 பேதுரு 3:18-20, 2 பேதுரு 2:4 மற்றும் யூதா 6,7 ஆகிய வசனங்களை கொண்டுவந்து "மனிதர்கள்-தூதர்கள்" கொள்கையை ஆதரிக்கின்றனர். ஆனால் அந்த வசனங்களில் தூதர்கள் திருமணம் செய்ததைப் பற்றி சொல்லவில்லை. மேலும், சோதோம் கொமோராவின் பாவம் என்பது ஆதி 6:1-4ல் சொல்லப்பட்டதுதான் என்று விவாதிப்பது தவறான ஒப்பிடுகையாகும். அங்கே தூதர்களின் பாவத்தை சோதோம் கொமோராவின் பாவத்துடன் ஒப்பிடவில்லை; பதிலாக, சோதோம் கொமோராவின் பாவத்தை அதைச்சுற்றியுள்ள பட்டணங்களுடன் (அத்மரா, செபோயீம் உபாகமம் 29:23, ஓசியா 11:8) ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே யூதா குறிப்பிட்ட தூதர்களின் பாவங்களும் (யூதா 6), அந்த பட்டணங்களின் பாவங்களும் (யூதா 7) மற்றவர்களின்மேல் வரும் நியாயத்தீர்ப்பைக்குறித்து நமக்கு உணர்த்துகின்றன. யூதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்களின் விழுகை என்பது பிசாசாசின் (லூசிபர்) விழுகையைப் பற்றியதாகும். இந்த விழுகையையும் ஜலப்பிரளயத்து காலத்தையும் இணைப்பது தவறாகும். அப்படி இணைத்தால் அந்த பட்டணங்களின் பாவத்தையும் ஜலப்பிரளயத்துடன் இணைக்கும்படி வரும், அது பொருந்தாமல் போகிறது. யூதா-வில் ஒரே நேரத்தில் நடந்தவைகள் குறிப்பிடப்படவில்லை; அடுத்தடுத்து நடந்தவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தூதர்கள் பைபிளில் பழைய ஏற்பாட்டிலும், புதியஏற்பாட்டிலும் செய்தி சொல்லும்படி தேவனால் மனிதர்களிடத்திற்கு அனுப்பப்பட்டனர். கிதியோன், சிம்சோனின் பெற்றோர் (மனோவாவின் மனைவியிடம் முதலில்), எலியா, தாவீது, சகரியா, ஏசாயா, மரியாள், கொர்நேலியு என்று பல உதாரணங்களை வைக்கலாம்.
"இராட்சதர்" என்பவர்கள் தூதர்-மனிதர்களின் கலவை என விவாதிப்பது பைபிளுடன் பொருந்தவில்லை. தூதர்கள் மனிதனுடைய அழிந்துபோகும் மண்ணின் சரீரத்துக்கு மாறிவந்து மணம் செயதது என்பது எல்லாம் யூகத்துக்கு அடுத்தவையாகும். மேலும் "1 ஏனோக்கு" என்ற புத்தகத்தை சாட்சியாக கொண்டுவருவதும், வேதத்திலுள்ளதை மாற்றாக பிரதிபலிப்பதும் தவறாகும். எனவே இது நிச்சயம் சாத்தியமல்ல.

[2] "சேத்தின் புத்திரர் மற்றும் காயீனின் புத்திரர்":
இந்த பார்வை "தேவகுமாரர்" என்பவர்களை சேத்தின் வம்சவழி என்று அடையாளப்படுத்துகின்றது. ஏனெனில் இவர்கள் தேவனை தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் (ஆதி 4:26). "மனுஷ குமாரத்திகள்" என்பவர்கள் காயீனின் சந்ததி; இவர்கள் தேவபயமில்லாமல் வாழ்ந்தவர்கள். ஆதி 6:2,3 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அப்படியென்றால் அங்கே காணப்பட்ட பாவம் "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்பட்டது (unequally yoked)" என்பது ஆகும்.இந்த கலவையில் வந்தவர்கள் எப்படி பேர்பெற்ற மனிதர்களானார்கள்? இதற்கு எந்த சாட்சியும் இல்லாததால், இந்த சாத்தியமும் முதற்பார்வையில் சந்தேகத்துக்குரியது. ஆயினும் சாத்தியங்கள் உண்டு.

[3] "சமுக அந்தஸ்த்தில் கலந்தவர்கள்": (sociologically mixed)
"தேவ புத்திரர்" என்பது ஆரம்பநாட்களில் ராஜாக்கள், கனவான்கள், அதிபதிகள் மற்றும் ஞானிகள் போன்ற மதிப்புக்குரியவர்களுக்கு மத்தியகிழக்கு பகுதியில் காணப்பட்ட வழக்கச்சொல். இப்படிப்பட்ட அதிகாரப்பெயர் பெறுவதற்கு அவர்கள் மிகவும் உந்தப்பட்டு பேர்பெற்றவர்களாக (ஆதி 6:4) இருக்க விரும்பினர். இப்படியாக அறியப்படுவதற்கு அவர்கள் எந்த பகுதிகுயில் இருந்தார்களோ அந்த பகுதிக்கு தானே பொறுப்பென்றும், அதிகாரி என்றும் காட்டுவதற்கு அநியாயமுறையில் தாகத்துடன் இருந்தனர். இப்படியாக அவர்கள் அநீதியாகவும் இச்சையுடனும் காணப்பட்டனர். (ஆதி 6:5-6; ஆதி 10:8-12) மேலும் பல மனைவிகளையும் தங்களுக்கு கொண்டனர் (ஆதி 6:2). இப்படியாக சொல்லப்படும் கருத்துக்கு என்ன ஆதாரம்?

ஆறு ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன:
[அ] முற்கால அராமிய மொழிபெயர்ப்புகள் "தேவ புத்திரர்" என்பதை "கனவான்களின் புத்திரர்" என்று சொல்கின்றது. (Onkelos மொழிபெயர்ப்பில்)
[ஆ] கிரேக்க மொழிபெயர்ப்பில் "ராஜாக்களின் புத்திரர் அல்லது கர்த்தாக்களின் புத்திரர்" என்று சிம்மாச்சஸ் (Symmachus) -ல் கொடுக்கப்பட்டுள்ளது.
[இ] எபிரெய மொழியில் தேவர்கள் (elohim--gods) எனபது நியாதிபதிகள் மற்றும் அதிபதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் அவனை தேவர்களிடத்தில் (நியாயாதிபதிகளிடத்தில்-gods-elohim) கொண்டுபோகவேண்டும். (ஆதியாகமம் 21:6, யாத் 22:8 மற்றும் சங்கீதம் 82:1, 6)
[ஈ] அமைப்பின்படி, "காயீன் வழிவந்த லாமேக்கு" (ஆதி 4:19-24) மற்றும் "தேவபுத்திரர்" (ஆதி 6:1-4) இரண்டும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரண்டிலும் பெண்கொள்ளுதலும், பிள்ளைப்பெறுதலும், "பேர்"பெறுதலும் காணப்படுகின்றன. முதற்பகுதியானது லாமேக்குடைய அதிகார தீர்ப்புடனும், பின்புவரும் பகுதியானது தேவனால் வந்த தீர்ப்புமாயிருக்கிறது. லாமேக்கு இருமனைவிகளை கொண்டிருந்தான்; தன்னுடைய அதிகாரத்தைக்கொண்டு கட்டளைகளை இட்டான்.
[உ] மத்தியக் கிழக்குபகுதியில் ஜனங்கள் தேவர்கள்(gods) மற்றும் தேவதைகளின்(goddess) பெயர்களை தங்களுக்கு பயன்படுத்தியதாக கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. இப்படி தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டதால் எகிப்து மற்றும் மெசப்பதோமியா பகுதியில் தங்களுக்கு கிடைத்த மரியாதைக்காக அப்படிச் செய்தார்கள். எனவே அவர்கள் "தேவபுத்திரர்" என்ற பட்டத்தை கொண்டிருந்தனர்.
[ஊ] கடைசியாக, நெஃபிலிம்/கிப்போரோம் என்று சொல்லப்பட்டுள்ள இராட்சதர் (ஆதி 6:4). இந்த "நெஃபிலிம்" ஆதியாகமம் 6:4-லும், எண்ணாகமம் 13:33ல் ஏனாக்கின் புத்திரர் என்பவர்கள் பார்வையில் தாங்கள் வெட்டுக்கிளிகள் போல என்ற வசனத்திலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மூலபாஷையான எபிரெய மொழியில் நெஃபிலிம் என்ற வார்த்தைக்கு "விழுகை(fall)" என்று பொருள். இருப்பினும் ஆதி 6:4ல் "நெஃபிலிம்" என்னும் பதம் "கிப்போரோம்" என்ற பதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதற்கு "பராக்கிரமசாலிகள், பலசாலிகள், செல்வம் மற்றும் அதிகாரமுடையவர்கள்" என்று பொருள்படும். ஆதி 10:8ல் நிம்ரோத் கர்த்தருக்குமுன்பு பலத்தவேட்டைக்காரனாயிருந்தான் என்பதில் அவன் கிப்போரோம்- ஆக இருந்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன் சிநெயார் தேசத்தில் ராஜாவாயிருந்தான்.

எனவே "நெஃபிலிம்/கிப்போரோ"ம் என்றால் இராட்சதர் என்று அர்த்தமல்ல, ஆனால் "இளவரசர்கள், வல்லுநர்கள், பெரியோர்" என்றே பொருள்படும். எனவே ஆதியாகமம் 6:1-4ல் பேராசைகொண்ட ஆளுபவர்கள் அதிகாரத்தையும், பெண்களையும், நாட்டையும் இஷ்டத்துக்கு பயன்படுத்தினர். இந்த துர்பிரயோகம் தேசத்தைக் கெடுத்ததுமட்டுமன்றி, தேவனையும் துக்கப்படுத்தினது. தேவனுடைய இருதயத்துக்கு அது விசனமாயிருந்தது என்று உடனே அடுத்த வசனமான ஆதி 6:6-ல் வாசிக்கிறோம். எனவே ஜலப்பிரளயமானது தேவனின் தீர்ப்பாக இருந்தது; அது அவர்களின் இச்சைகளையும், அதிகார துர்பிரயோகத்தையும், அநீதியான காரியங்களையும், பாலியல் பாவங்களையும் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட முற்றுப்புள்ளியாகும்.

இதற்கும் சாத்தியங்கள் [அதிகம்].

 
குறிப்பிகள்:
-- கெய்சர் என்னும் விரிவான கட்டுரை 1983.
-- Gesenius's Lexicon