Wednesday, September 30, 2009

6. மோசே ஏன் கானானுக்குள் பிரவேசிக்கமுடியவில்லை? அப்படியானால் என் ஜெபத்துக்கு பதில் வருமா?

அநேகர் தவறாக சொல்லும் கருத்து: "மோசே கன்மலையிடம் பேசாமல் அடித்தான் (அந்த கன்மலை கிறிஸ்து), எனவேதான் பிரவேசிக்க முடியாமல் போயிற்று".
அப்படியல்ல, நம்முடைய பாவங்களினால் நாம் கர்த்தரை சிலுவையில் அறைந்தோம், அவரோ நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்து நம்மை இரட்சித்தார்!

எண் 12:7 ல் "என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்." என்று மிரியாமும், ஆரோனும் (கூடப்பிறந்த சகோதரியும், சகோதரனும்) முறுமுறுக்கும்போது கர்த்தர் சொன்னார். ஆனால் எட்டு அதிகாரங்கள் கழித்து ...கர்த்தர் கூறும் காரணம்:எண் 20:12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

இரண்டு காரணங்கள்:
[1]
[மோசே, ஆரோன்] நீங்கள் என்னை விசுவாசியாமற் போனீர்கள். 
[2] இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணவில்லை.
 

இவ்வளவு பெரிய இஸ்ரவேல் சபைக்கு முன்மாதிரியாக, நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய மோசே செய்த தவறை 5000 வருடங்கள் கழித்து உலகம் முழுதும் நாம் பார்க்கிறோமே. மோசேயின் அவிசுவாசமும், முன்மாதிரியாக இல்லாமல் இருந்ததும் (அதாவது கர்த்தரை பரிசுத்தம் பண்ணவில்லை என்பதும்) காரணங்களாகும்.

சொந்த அனுபவத்தில் ஒரு காரியம் சொல்கிறேன். ஒரு நாள் ஒரு சபையின் போதகர் தமது சபையின் ஜனங்களை மற்றவர்களுக்கு சுவிஷேசம் சொல்ல சனிக்கிழமையன்று ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார். அவரோ அன்று வராமல் வீட்டில் இன்னொருவருடன் காரை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். ஜனங்கள் ஏன் போதகர் வரவில்லை என்று காரணம் தெரியாமல் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். பின் அவரவர் ஒரு திசைக்கு சென்று ஊழியம் செய்தார்கள். அடுத்த நாள் (ஞாயிறு) போதகர் காரை ஓட்டி வரும்போது பாதி வழியில் எஞ்சினில் நெருப்பு பிடித்து முழு காரும் எரிந்து போனது. முன்தினம் அவர் வராமல் போனதால் அவர்
கர்த்தரை பரிசுத்தம்பண்ணவில்லை, உண்மையாயிருக்கவில்லை. அநேகருக்கு அவர் மாதிரியாயிருக்கவில்லை. எனவே தான் தனிமனிதனின் தவறுக்கும், மகா ஜனங்களுக்கு தலைவன் செய்யும் தவறுக்கும் தேவன் இவ்வுலகில் கொடுக்கும் பதில் வேறாயிருக்கிறது. மோசே அப்படியே இரண்டாந்தரம் தண்ணீர் விஷயத்தில் ஜனங்களுக்கு மாதிரியாய் இருக்கவில்லை. மோசே "ஆறு லட்சம் புருஷர்" (பெண்கள், பிள்ளைகள் தவிர) பேருக்கு தலைவனாயிருக்கும் போது அதை எத்தனை பேர் சுட்டிக்காட்டுவார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

காரியம் இப்படி என்றால், என் ஜெபத்தை எப்படி ஆண்டவர் கேட்பார் என்றெல்லாம் சிந்திக்கக்கூடாது. பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். சங்கீதம் 34:18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். என்கிற வேத வசனங்களை மனதில் வைத்துக்கொள்வோம். கர்த்தர் ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவர் என்பதை விசுவாசியுங்கள்.
எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார்:ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
The golden verse: விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம். எனவே நாம் கர்த்தரிடத்தில் விசுவாசமாயிருப்போம்.எண் 23: 19 அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரா என்னும் வார்த்தை நமது இதயத்தில் ஒலிக்கட்டும்.

இயேசுவுடன் மறுரூபமலையில் யார் தோற்றமளித்தனர்? மோசே, எலியாவும். அப்படி என்றால் மோசே எவ்வளவு தயவு பெற்றவன்!


 

Friday, September 25, 2009

5. ஏழாம் நாள் ஓய்வுக்காரர் (Seventh-day adventist) மற்றும் ஓய்வுநாள் பற்றி உங்கள் கருத்து?

"ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிப்பாயாக" என்பது பத்து கற்பனைகளில் ஒன்று. இன்று நாம் அதை வாரத்தில் ஒருநாளாக எடுத்து முதல் நாளில் சபைக்கு சென்று செலவிடுகிறோம்.

இயேசு ஓய்வுநாளிலே வியாதியஸ்தரை சுகமாக்கி, உங்களில் எவனாகிலும் ஆடாவது, மாடாவது, கழுதையாவது குழியில் விழுந்தால் தூக்கிவிடாமல் இருப்பானோ? ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயந்தான் என்று சொன்னாரோ அதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். அனைத்து பரிசேயரும் வேதபாரகரும், ஏழாம் நாள் ஓய்வுக்காரர்போல் இயேசு ஓய்வுநாளை அநுசரிக்கவில்லை என்று குற்றம் சாற்றினர். இயேசுவோ இந்த காரியத்தை செய் என்றும் இனி செய்யதேவையில்லை என்றும் சொல்ல தேவனுக்கு ஞானம் உண்டு.

அப்படியானால் ஏன் ஏழாம் நாள் ஓய்ந்திருக்கவேண்டும் என்று தேவன் சீனாய் மலையில் சொன்னார்? 430 வருஷம் இஸ்ரவேலர் எகிப்திலே இருந்தார்கள். அங்கே ஓய்வு இன்றி அடிமையாய் வேலை செய்து வந்தார்கள். மனுஷன் ஓய்ந்திருக்கவேண்டும் அப்படி ஓயாமல் வேலை செய்தால் அவன் சீக்கிரத்திலே செத்துபோவன். அவனுக்கு இளைப்பாறுதல் தேவை. அது மனுஷனுடைய நலனுக்காகத்தான், தேவனுடைய நலனுக்கு அல்ல. 


இன்னும் சொல்லப்போனால் ஐந்து நாள் தேவன் எல்லாவற்றையும் உண்டாக்கியபின் ஆறாம் நாளும் ஏழாம் நாளும் உள்ளதே என்ன செய்யலாம்....ஒரே குழப்பாயிருக்கே....சரி... ஏழாம் நாளுக்காக மனுஷனை ஆறாம் நாளில் உண்டாக்கி அவனை ஏழாம் நாள் ஓய்ந்திருக்கும்படி செய்வோம் என்றா செய்தார்? அல்ல. மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.

ரோமர் 14:5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; ஏழாம் ஓய்வுக்காரர் ஒரு நாளை மட்டும் விசேஷமாக எண்ணுகிறார்கள். என்னை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாளும் விசேஷமான நாள்தான். தரியு என்னும் ராஜனும் "நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிக்க வல்லவராயிருந்தாரா?" என்று கேட்கிறான். நீ ஏழாம் நாள் ஆராதிக்கிற தேவன் என்று கேட்கவில்லை.

ஓய்வுநாளை மனுஷன் பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும் என்னும் கட்டளையை தேவன் சீனாய் மலையில்தான் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்கள் ஓய்வு நாளைக் கைகொள்ளவில்லையே!! ஆனாலும் அவர்கள் பரலோகத்திலே இருக்கிறார்கள். ஓய்வுநாளை கைக்கொள்ளாத ஏனோக்கை தேவன் உயிரோடே எடுத்துக்கொண்டாரே!!
நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவன் அநேக இடங்களில் கூறுகிறார்.

"ஓய்வுநாள் மனுஷனுக்காகவா" அல்லது "மனுஷன் ஓய்வுநாளுக்காகவா"? கொஞ்சம் யோசித்து பார்க்கவும்.

பேதுரு சொல்கிறார்: "பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே ... விக்கிரகங்களுக்குப்படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்." என்று கூறி முடிக்கிறார்.

ஏழாம் நாள் ஓய்வுக்காரர் ஓய்வு நாளை சரியாக ஆசரிக்கிறார்கள் என்றால் ஓய்வுநாளில் நெருப்புகூட மூட்டக்கூடாது என்ற கட்டளையை பின்பற்றுகிறார்களா? ஒரு அடுப்பாயிருந்தாலும், ஒரு காரை ஸ்டார்ட் (car start) பண்ணுவதாக இருந்தாலும், ஒரு மின் சாதன பொருளை (electricity switch on/off) இயக்கினாலும் நெருப்பு வரும். இவர்கள் இவைகளை செய்வதால் ஓய்வுநாள் ஆசரிப்பை மீறுகிறார்களே.

ஏழாம் நாள் ஓய்வுக்காரர் "நாளுக்கு" முக்கியத்துவம் கொடுப்பது தவறாகும்.

மாற்கு 2:23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.
இயேசு "பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" என்று சொல்கிறார்.

நாம் இன்றும் வாரத்தில் முதலாம் நாள் ஓய்வுநாளாக சபைக்கு சென்று தேவனை ஆராதிக்கின்றதின் மூலம் பரிசுத்தமாக ஆசரிக்கிறோம்.  நாள் முக்கியமல்ல, பரிசுத்தமாயிருப்பதே கருத்தாகும்.

Seventh day Adventists have a wrong understanding.