Monday, November 26, 2012

77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?

கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ளனர். இயேசுவை அறியாதவர்கள் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள், இறந்து போகிறார்கள். அவர்களுக்கு இயேசுவைப்பற்றி யாரும் சொல்லாமலே இறந்தும் போகிறார்கள். அவர்கள் அநேக நன்மைகள் செய்து இருக்கலாம், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். இவர்கள் அனைவரும் நரகத்துக்கு போவார்களா அல்லது வித்தியாசமான நியாயத்தீர்ப்பு இருக்குமா?

பதில்:
இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக  எழுப்பப்பட்டுள்ளது. பைபிளில் சொல்லப்பட்டுள்ள  சுவிசேஷத்தை கேள்விப்படாதவர்களும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்களா? இப்படி வாய்ப்பு கிடைக்காதவர்கள் நரகத்துக்கு போவது நியாயமாக தோன்றவில்லை என்ற எண்ணம் எழுவது இயல்பு. ஆனால், இன்று தொழில்நுட்பமானது எங்கேயோ சென்றுவிட்டது, இப்படி இயேசுவைக் கேள்விப்படவதர்கள் ஒருவேளை மிகவும் சொற்பமானவர்களாக இருக்கலாம்.


 ஒருமனிதன் வீட்டுக்கு வெளியே வந்து இந்த பூமி, கடல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, இவைகளுக்குப்பின் இதை உருவாக்கிய தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அறிவார்கள். அவர்கள் தேவனுக்கு பக்தியாயிருந்தால் தேவனே அவர்களுக்கு தூதர்கள் அல்லது ஆள் அனுப்பி சத்தியத்தை/சுவிசேஷத்தை தெரியப்படுத்துவார். உதாரணமாக கொர்நேலியுவை சொல்லலாம். அவன் பக்தியுள்ளவன் ஆனால் மெய்யான தேவனை அறியாதவன்.

அப்போஸ்தலர் 10:35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.

சங்கீதம் 4:3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்.

ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

எனவே இப்படி தேவனை அறியாமல் இருப்பது சாத்தியமல்ல.

"எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள்" என்பது முழுக்க தவறு. There is no one good. நல்லவன் ஒருவனும் இல்லை என்று பைபிளில் தெளிவாக உள்ளது (ரோமர் 3:10-12) . நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களின் மற்ற பக்கங்கள் உங்களுக்கு தெரியாது. மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால் நம்மைப்பற்றியே நமக்கு சரியாக தெரியாது. கொடுக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் எப்படி நடந்துகொண்டோம், ஏன் இப்படி செய்தோம், நினைத்தோம், பேசினோம் என்று வருந்துபவர்கள் எல்லாருமே. எனவே பைபிளில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை, இருதயமே மகா திருக்கும், கேடுள்ளதுமாக இருக்கிறது -heart is deceitful and desperately wicked என்பது முழுக்க முழுக்க உண்மை.

மேலும், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னையன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றும், நானே ஆடுகளுக்கு வாசல் என்வழியாய் பிரவேசியாமல் வேறு வழியாய் ஏறுபவன்  கள்ளனும் கொள்ளைக்காரனுமாக இருக்கிறான் என்று தெளிவாக இயேசு சொல்லியிருக்கிறார். இயேசுதான் ஒரே வழி, வேறு வழியில்லை.

இயேசுவைப்பற்றி கேள்விப்படாதவர்களைப் பற்றிய நியாயத்தீர்ப்பைப் பார்ப்போம். இதற்காக பதில் பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக  ரோமர் 2ம் அதிகாரத்தில்
சொல்கிறார்:

14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் (naturally) நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

16. என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

"புறஜாதியார் நியாயம்தீர்க்கப்பட்டு ஆக்கினையை அடைவார்கள், ஏனெனில் தேவனுடைய கற்பனைகளை அவர்கள் அனுசரிப்பதில்லை" என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அது அவர்களின் குற்றச்சாட்டு. ஆனால், புறஜாதிகளுக்கும் நியாயப்பிரமாணமானது அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது என்று பவுல் சொல்கிறார். இங்கே பவுலின் நோக்கம்: யூதர்கள் மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை கேள்விப்பட்டால் மட்டும் போதாது, அதை பின்பற்றவேண்டும் என்கிறார். நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டுவிட்டு பாவத்தில் வாழ்வது நீதியல்ல.

பவுலின் விவாதம் புறஜாதியார்மேல் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பினைப் பற்றி அல்ல.  யூதர்களும் நியாயப்பிரமாணத்தைக் கேள்விப்பட்டு  அதின்படி செய்யாமல் (அதற்கு கீழ்ப்படியாமல்) போனால் நியாயத்தீர்ப்பு அடைவார்கள். பாவத்தில் வாழ்ந்து யூதர்களாக ஜீவிப்பதால் எந்த விதத்திலும் தேவனுக்கு முன்பாக மேன்மையானவர்களாக முடியாது. ரோமர் 2:13ல் சொன்னபடி: "நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்." புறஜாதிகள் யூதர்களாக மாறினாலும் பிரயோஜனமில்லை, பாவத்தில் ஜீவிக்காமல் இருக்கவேண்டும் என்பதே கருத்தாகும். யூதர்கள் கற்பனையைக் கைக்கொண்டால் நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பார்கள் என்றே நம்புகின்றனர்.


எனவே பவுல் "யூதர்களும், புறஜாதிகளும் தங்கள் செய்யும் கிரியைகளைக்கொண்டே நியாயம்தீர்க்கப்படுவார்கள், மோசேயின் கட்டளைகளை படித்ததால் மட்டும் அல்ல.
நியாயப்பிரமாணமானது புறஜாதிகளுக்கும் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது" என்று  சொல்வதாக நாம் முடிவுக்கு வரலாம்.

ஒருமுறை ஒரு கிராமத்துக்கு என் தந்தை சுவிசேஷம் சொல்ல என்னை அழைத்துச் சென்றார். (அடிக்கடி அப்படியாக நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு செல்வது வழக்கமாயிருந்தது.) அங்கே செல்ல பேருந்து கிடையாது, வயல்-வரப்புகளைத் தாண்டி செல்லவேண்டும்.  அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன். ஒரு வயதான முதியவரிடம் "இயேசுவைத் தெரியுமா?" என்றேன். "எனக்கு  அவங்க வீடு தெரியாது,  கடைக்காரரிடம் கேளுங்கள் அவருக்குத் தெரியும்" என்றார். இயேசுவைப்பற்றி கேள்விப்படாத சிலர் வாழ்ந்த கிராமம் அது. பின்புதான் தேவனைப்பற்றி விளக்க ஆரம்பித்தேன். அதே கிராமத்தில் ஒருவரிடம் "கெட்ட வார்த்தை பேசுவது சரியா?" என்றேன். "தப்புதான்" என்றார்.  "திருடினால்?" என்றேன்... "வரண்டுவது தப்புதான்" என்றார். "பொய், கொலை... என்று சொல்லிக்கொண்டே போகும் போது இதெல்லாம் தவறு என்று யார் இவர்களுக்கு சொன்னது? என்ற எண்ணம் எழுந்தது.   ஆனால் இதெல்லாம் இவர்களுடைய இருதயத்தில் எழுதப்பட்டுள்ளது.

புறஜாதியார் அவர்கள் செய்யும் பாவம் மற்றும் பாவம் அல்லாத கிரியைகளைக் கொண்டே நியாயத்தீர்ப்பு அடைவார்கள். நியாயத்தீர்ப்பு தங்களுக்கு தெரியாத ஒரு அளவுகோல் வைத்து அல்ல தெரிந்த அளவுகோல் வைத்துதான். அந்த அளவுகோல் அவர்களுடைய இருதயங்களில் தலைமுறை தலைமுறையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் புறஜாதியாரில் அவர்களுடைய அளவுகோலின்படி பாவம் செய்யாதவர் யார்?
அப்படியானால் அனைத்து புறஜாதியாரும் பாவிகள் என்பதால் நரகத்துக்கு செல்வார்கள்.

யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் அறிந்த சம்பவம் இங்கே நம் நினைவிற்காக:
அவர்(இயேசு) நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார்... அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார். (இங்கே பாவம் செய்யாதவர் இயேசு மட்டுமே! இல்லையென்றால் அவரும் சென்றிருக்கவேண்டும்.) இங்கே எல்லாரும் பாவிகள் என்று பார்க்கிறோம். எனவே சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்கள் எப்படி நல்லவர்களாகிவிடமுடியும்?

இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டு அதை தள்ளிவிட்டவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் ஜீவிப்பவர்களும் ஆக்கினைத்தீர்ப்பு அடைவார்கள்.

II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. தீட்டும், தீங்குள்ளதொன்றும் அதற்குள் (பரலோகத்திற்குள்) பிரவேசிப்பதில்லை.



I பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? இந்த வசனத்தை சற்றே தியானியுங்கள்.  

அப்படியானால் இயேசுவைப்பற்றிக் கேள்விப்படாமல், எங்கோ தீவில் வசிப்பவர்கள் எப்படி பரலோகம் செல்லமுடியும்? தேவன் அப்படிப்பட்டவர்களை அவர்களுடைய மனசாட்சியைக்கொண்டே நியாந்தீர்ப்பார் என்று ரோமர் 2:15ல் அறிகிறோம்.

படிக்கவும்: கேள்வி-பதில்-24.


Thursday, May 10, 2012

76. Abortion (கருவைக் கலைப்பது) பாவமா?

கேள்வி: கருவைக் கலைப்பது பாவமா?

பதில்: ஆம்.

அமெரிக்காவில் ஒரு நாளில் சுமாராக 400 கலைப்புகள் செய்யப்படுவதாக சொல்லப்படுகின்றன. கருக்கலைப்புகள் இந்தியாவிலும் உள்ளன, ஆனால் வெளியே தெரிவதில்லை. ஏன் அது பாவம்?

[1] அது ஒரு கொலைக்குச் சமம் என்பதால்:
(உலக நாடுகளில்) சட்டத்தின்படி ஒருவர் ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அது ஒரு கொலையாகும். ஒரு கருவுற்ற பெண்ணைக் கொலைசெய்தால் நீதிமன்றத்தில் இரட்டைக்கொலை என்று தீர்ப்பு இன்றும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் கருவை கலைப்பது சட்டப்படி கொலைதானே. இவர்கள் கருக்கலைப்பு தவறல்ல என்று வாதிடுவது எப்படி சரியாகும்? லூக்கா முதலாம் அதிகாரத்தில் எலிசபெத்து கர்ப்பமாயிருக்கும்போது அவள் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று என்று வாசிக்கிறோம்.  அந்த குழந்தைக்கு உணர்வுகள் உண்டு. அதைக் கொல்வது கொலை.

 [2] மனித உரிமையை மீறுகிறது. அந்த குழந்தை பிறக்கவிடாமல் தடுப்பது அந்த மனிதனுக்கு (குழந்தைக்கு) மதிப்பு இல்லை என்றும், என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்றும் சொல்வதாக உள்ளது. இன்றைய விஞ்ஞானமே "தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு தனிச்சுதந்திரம் கொடுக்கவேண்டும், அது பயப்படும்படி சண்டை பெற்றோர் சண்டைபோடாமல் இனிய சூழலில் தாய் இருக்கவேண்டும்" என்ற அளவுக்கு புத்தி சொல்லுகிறது. போகப்போக வயதானவர்களையும் நோயாளிகளையும் கொன்றாலும் தவறில்லை என்று ஒருநாள் ஒரு கூட்டத்தார் முடிவு செய்தால் எங்கே செல்லும் அந்தப் பாதை? அந்த நாடு தீங்கும் சாபமும் உள்ள நாடாகும் அல்லவா?  அப்படி கருவைக்கலைக்க ஒத்துழைக்கும் நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதில் ஐயம் வேண்டாம்.

[3] உங்களை ஒருவர் கையையும் காலையும் கட்டி ஒரு மூட்டையில் வைத்து ஒரு மிகச்சிறிய அறையில் அடைத்து பின்பு உங்களை இரத்தம் வடிய கொல்லுவது எப்படி சரியாகும்? உங்களுக்கு மற்றவர்கள் அப்படி செய்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதே! அதை ஒரு தாயின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு செய்வது எப்படி சரியாகும்? மத் 7:12 மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். எனவே கருக்கலைப்பு தேவனுடைய கற்பனையை மீறுதல் என்று ஆகின்றது

[4] கருக்கலைப்பு மீண்டும் மீண்டும் பாவம் செய்யத்தூண்டுகிறது. பிரசங்கி 8:11ல் "துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது."  இது பொதுவாக எல்லாப்பாவங்களுக்கு சொன்னாலும், இதற்கும் பொருந்தும். எந்த தவறும் செய்யாதவர்களை கொல்லுவது தவறு என்றால் அந்த வயிற்றிலுள்ள சிசுவைக் கொல்வது எப்படி சரியாகும்?

[5] எல்லாம் சரிதான், ஆனால் திருமணத்துக்கு முன்பு  கருவுற்றதை கலைப்பதில் பரவாயில்லை என்று சிலர் எண்ணலாம். நீங்கள் அங்கே முதலாவதாக வேசித்தனம் என்ற பாவம் நடந்ததை மறந்துவிட்டீர்களே!  தாவீது மற்றவனின் மனைவியிடத்தில் பாவம் செய்தான். அங்கே ஒரு குழந்தை உண்டாகின்றது. இதை சரிசெய்ய தாவீது பத்சேபாளின் கணவனைக் கொன்று அவளை மனைவியாக்கிக்கொள்கிறான். பாவத்துக்குமேல் பாவம். தேவன் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு பேசிய போது அவன் சொல்கிறான்: "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." சங்கீத 51:3.  ஒருமுறை கருக்கலைத்தவர்களைக் கேளுங்கள், நீங்கள் அடுத்தமுறை கலைப்பீர்களா? சற்றே யோசிக்காமல் செய்யலாம் என்பார்கள். அந்த மனசாட்சி நசுக்கப்பட்டுபோனதே. அங்கே ஒரு கெட்ட மாதிரி மற்றவர்களுக்கு வைக்கப்படுகின்றது. வருகிற தலைமுறைக்கு இப்படி ஒரு மாதிரியை வைப்பது தவறு.


[6] அப்படிப்பட்டவர்களிடம் அன்பு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறது.  அன்பு இல்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.  2 தீமோ 3:1-3ல் கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்,.. என்று வாசிக்கிறோம். இவர்களில் ஒருவர்தான் அவர்கள்.

[7]  "ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய(innocent) இரத்தம் சிந்துங் கை." என்று வாசிக்கிறோமே இங்கே அந்த குழந்தை  ஒன்றும் அறியாதது (innocent) , குற்றமற்றது. இந்த வசனத்தின்படி கருக்கலைப்பு தேவன் வெறுக்கும் செயலாக அமைகிறது. மேலும் அதைக்கலைக்கும் வேலையைச் செய்பவர்களும் (மருத்துவர்/செவிலியர் என்றும் சொல்லலாம்)  சாபத்திற்கு ஆளாகிறார்கள் என்று உபாகமம் 27:25ல் வாசிக்கிறோம்: "குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்".


ரவி சகரியாஸ் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்த பதிலைவிட சிறப்பாக வேறு யாரால் சொல்ல இயலும்!





இதை வாசிக்கும் உங்களில் ஒருவர் அப்படிப்பட்ட பாவத்தை செய்திருப்பின் தேவனிடம் அறிக்கையிட்டு மனந்திரும்புங்கள். உங்களை உதாரணமாக வைத்து தேவன் பெரிய காரியங்களைச் செய்வார். நீங்கள் அநேகருக்கு புத்திசொல்லி திருத்தும் ஒரு சாட்சியுள்ளவராக மாற்றப்படுவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!