Friday, March 30, 2018

81. கள்ளத்தீர்க்கதரிசிகள் எப்படி? அதைக் குறித்துச் சொல்லவும்.

(Updated 12 April 2018)

வேதாகமத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் எப்படி தீர்க்கதரிசனம் சொன்னார்கள்: 
  1. தேவனுடைய ஆவி அவர்கள் மேல் இறங்கினதினால் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 
  2. தேவனுடைய சத்தம் கேட்டு பின்பு யாரிடம் சொல்லவேண்டுமோ அவர்களிடம் சென்று சொல்லிவிட்டு சென்றார்கள். 
  3. ஆவிக்குள்ளாகி, தரிசனம் கண்டு பின்பு அதனை தீர்க்கதரிசனமாய் சொன்னார்கள். 
  4. தேவனுடைய மனுஷர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வெளிப்படுத்தல் பெற்று, ஏவப்பட்டு பேசினார்கள். 
எப்படி அறிவது? 

எரேமியா 28:9-ல் "அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவான்" என்று வாசிக்கிறோம். இங்கே எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை சொல்லியபடி வந்தால் என்று புரிந்துகொள்ளவேண்டும், கடந்த மற்றும் நிகழ்காலம் அல்ல. 

தேவனுடைய தீர்க்கதரிசிகளின் சுபாவங்கள்:
  1. தேவனை நோக்கி ஜெபிப்பார்கள்
  2. சுத்த இருதயமுள்ளவர்கள்
  3.  மற்றவர்களுக்காக பரிந்து பேசுபவர்கள்
  4. சாந்தகுணமுள்ளவர்கள்
  5. தேவனுடைய வேதத்தை அறிந்தவர்கள்
  6. தற்காப்புகொள்ளாதவர்கள்
  7. தேவனிடம் அழுது கூப்பிடுபவர்கள்
  8. பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள்
  9. தேவனில் நம்பிக்கையாயிருப்பவர்கள்
  10. நேர்மையானவர்கள்
  11. தேவனுடைய நிகழ்ச்சிநிரல்(agenda) கொண்டவர்கள், தங்களுடையது அல்ல
  12. கீழ்ப்படிதலுள்ளவர்கள்
  13. தாழ்மையானவர்கள்
  14. பொருள், பண ஆசையற்றவர்கள்
  15. எளிமையாய் வாழ்பவர்கள்
தேவனுடைய தீர்க்கதரிசிகள் தங்கள் வாழ்க்கையில் எளிமையாய் வாழ்ந்தார்கள், ஒடுக்கப்பட்டார்கள். வெகுமானம் பெற மறுத்து, பொருளாசையின்றி, தேவனை உயர்த்தி, தங்களைத் தாழ்த்தி வாழ்ந்தனர். யோவான் ஸ்நானகன் சொல்லும்போது அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்கிறான். 

மோசே தேவனுடைய தீர்க்கதரிசி, அவன் தேவன் சொன்ன அற்புதத்தைமட்டும் செய்பவனாயிருந்தான். தேவன் சொல்லாமல் எதையும் செய்யவில்லை. ஆனால் அங்கே எகிப்தில் (ஆப்பிரிக்கா) மந்திரவாதிகள் இருந்தனர். அவர்களும் ஒரு கோலைப்போட்டு அதை பாம்பாக மாற்றியுள்ளனர். (இன்று இந்த அளவுக்கு செய்யும் மந்திரவாதிகள் இருக்கிறார்களா தெரியவில்லை). ஆனால் எரிபந்த கொப்புளங்கள் அந்த மந்திரவாதிகள்மேலும் வந்ததால் அவர்கள் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாமற்போயிற்று. எனவே அற்புதம் செய்யும் அனைவரும் தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்கிற அவசியம் இல்லை

எலியாவைக்குறித்த காரியத்தில் "நாகமான்: இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்”. (ஆனால் கேயாசி பொருளாசையினால் குஷ்டரோகியாகினான்.)

இன்னொரு இடத்தில், அப்பொழுது ராஜா [யெரொபெயாம்] தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான். தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை என்றான்.


கள்ளத்தீர்க்கதரிசிகளின் சுபாவங்களும், செயல்களும்: 

இன்று அநேகர் தங்களின் பேர், புகழ், பிரசித்தி (popular) அடையவேண்டும், பணம் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்று மந்திரவாதங்களையும், குறிசொல்லுதலையும் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லி தேவ ஜனங்களை வஞ்சிக்கிறார்கள். நாம் மிகவும் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். என்னிடத்தில் ஒருவர்: இதோ இன்னும் இத்தனை நாட்கள், இத்தனை வருடங்கள் கழித்து உங்களுக்கு இது நடக்கும் என்று சொன்னார். அப்படி ஏதும் நடக்கவில்லை.

 கள்ளத்தீர்க்கதரிசிகள் வெகுமானத்தை (பணம் அனுப்புங்கள் என்று தொலைக்காட்சியில்) கேட்டு, பொருளாசையுடனும் (பலகோடி விலையுயர்ந்த கார், விமானம் சொந்தமாக வாங்கி), என் பெயர் இது என்று சொல்லி தங்களை அறிமுகப்படுத்தி, தங்கள் பெயரை உயர்த்தி, தங்களைப்பற்றி பெருமையாக பேசி, "தீர்க்கதரிசனம் சொல் தேவமனுஷனே" என்று சொல்ல ஆட்களை வைத்துக்கொண்டு,  குறிசொல்லும் ஆவியால் தரிசனம் கண்டு, தனிப்பட்ட மனிதனுடைய கடந்தகாலத்தைபற்றி சொல்லி, சில அற்புதம் செய்து அநேக தேவ ஜனங்களை வஞ்சிக்கின்றனர். இவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளே. ஆனால்
 பிசாசை விரட்டும் தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஊழியக்காரர்கள்.


எரேமியா 6:13; 8:10-ல் "அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்" என்று வாசிக்கிறோம். எசேக்கியேல் 22:25-28-ல் "அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்" என்றும் செப்பனியா 3:4-ல் "அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்" என்றும், மீகா 3:11-ல் "அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்" என்றும் வாசிக்கிறோம். 

ஜனங்களுக்கு இப்படி தங்களைப்பற்றி சொல்வது ஆச்சரியமாயும், பிரியமாயுமிருப்பதினால் அவைகளை விரும்பி செல்கின்றார்கள். ஆவிகளைப் பகுத்தறிய அவர்களுக்கு முடிவதில்லை. பிசாசும் ஜனங்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி ஏமாற்றுகிறான். எரேமியா 5:31-ல் "தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?" என்று வாசிக்கிறோம். ஒருவன் ஆவிகளைப் பகுத்தறிய விரும்பினால் தன்னைத்தானே 12-மாதங்கள் தேவசமுகத்தில் ஆராயட்டும். தேவன் நம்மில் உள்ள குறைகளைக் காட்டுவார். (ஒருமுறை கர்த்தர் எனக்கு சொப்பனத்தில் "உனக்குள் பெருமை உள்ளது" என்று காட்டியபோது மிகவும் வெட்கமடைந்தேன்). ஆவிகள் எப்படி  ஏமாற்றுகின்றன, அவைகள் எப்படி சத்தியத்துக்கு மாறாக உள்ளன, எப்படி செயல்படுகின்றன, எப்படி பல உண்மைகளைக்கூறி ஒரு சில பொய்சொல்கின்றன என்றும் படிப்படியாக காட்டுவார்.

அவர்கள் தேவனின் பெயரைச் சொல்லி அற்புதம் செய்தாலும் நாம் ஏமார்ந்துபோகக்கூடாது என்று தேவன் எச்சரித்துள்ளார். எரேமியா 14:14-ல் "அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை" என்றும், எரேமியா 23:13-ல் "சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள்" என்றும் வாசிக்கிறோம். 

சிலதீர்க்கதரிசிகள் தங்களோடு பாலியல் கொள்ளவேண்டும் என்று சொல்லியும், முத்தம் கொடுத்தும் அருவருப்பை நடப்பிக்கிறார்கள். எரேமியா 23:14-ல் "எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்" என்று வாசிக்கிறோம். உங்களைக்குறித்த காரியங்களைச் சொல்லி உங்களை முக்கியப்படுத்துவார்கள். உங்கள் வியாபாரம் (business) செழிக்கும் என்றும் சொல்வார்கள். உங்கள் பிறந்ததேதி, விலாசம், வம்சவரலாற்றின் வருடங்கள், மற்றும் பெயர்கள் எல்லாம் சரியாக சொல்லுவார்கள். எரேமியா 23:16-ல் "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்" என்று வாசிக்கிறோம். இப்படி அறிவை உணர்த்தும் வசனம் (word of Knowledge) - அதாவது நிகழ்கால மற்றும் கடந்தகால சம்பவங்களைபற்றி சொல்லும் வரம் தேவன் கொடுக்கிறார். பிசாசும் இப்படி அவர்களுக்கு சக்தி கொடுக்கிறான். அவர்கள் தேவனைவிட்டு தூரம் போனாலும் அந்த வரம் கிரியைச் செய்யும். எனவே அவர்கள் ஜீவியத்தைப் பார்க்கவேண்டும். இவர்கள் தேவசித்தம் செய்யாதவர்கள். இவர்களை அறியேன் என்று இயேசு சொல்லுவார்.

சில கள்ளத்தீர்க்கதரிசிகள் மாயாஜாலம் செய்து (Magic trick) ஜனங்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர். (உதாரணமாக iPad கொண்டு ஒருவரின் படம் வரவழைப்பது). சிலர் தங்கள் பெயரை கைக்குட்டைகளில் எழுதி அதை விற்பனையாக்கின்றனர். சிலர் ஜெபமாலைகள் (இவை பிசாசின் சாமான்கள்) செய்து விற்கின்றனர். அப்போஸ்தலர் 13:6-ல் "அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் (Magic trick) கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். அவன் பவுலை எதிர்த்துநின்றபோது, பவுல் அவனை "சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான்" என்று வாசிக்கிறோம்.  சிலர் நான் உங்களுக்கு போனில் தீர்க்கதரிசனம் சொல்ல $200 (ரூ 12,000) "Seed"-கொடுங்கள் என்று சொல்கிறனர். ஒருவர்  "யார் கள்ளத்தீர்க்கதரிசி, யார் தேவனுடைய தீர்க்கதரிசி" என்று தவறான உபதேசங்களைக்கொண்டு உபதேசம்பண்ணுகிறார். இது கள்ளத்தீர்க்கதரிசிகளின் மிகவும் முன்னேறிய தந்திரம். அதில் பாதி உண்மை, பாதி பொய்; எனவே ஜனங்கள் எளிதில் ஏமார்ந்து விடுகிறார்கள். இப்போது கள்ளத்தீர்க்கதரிசிகள் பலர் தங்கள் வரத்தை மற்றவர்களுக்கு கைகளைவைத்து வழங்குவோம், ஆனால் அது சும்மா அல்ல அதற்கு எங்கள் பள்ளிகளில் சேரவேண்டும் $500 (ரூ 30,000) கட்டவேண்டும் என்று சொல்கின்றனர்.  பண ஆசையுடன் செயல்படும் இவர்கள் தேவனுடைய ஆடுகள் அல்ல. அநேக தீர்க்கதரிசிகள் தேவனிடத்திலிருந்து வரம் பெற்றவர்கள், தற்போது  பவுல் சொன்ன தேமாவைப்போல்  பணஆசைகொண்டு இடுக்கமாண வழியில் செல்லாமல் விசாலமான வழியில் செல்கிறார்கள். இருப்பினும் தேவன் அவர்களுக்கு கொடுத்த வரத்தை திரும்ப எடுப்பதில்லை. இப்படி அற்புதம் செய்தாலும், தேவன் அவர்களை "அறியேன்" என்றே சொல்லுவார். எனவே அவர்களின் ஜீவியத்தைக் கவனியுங்கள். சிலர் உங்கள் பர்ஸ்-ல் பணம் வரும், உங்கள் வங்கிகளில் பணம் வரும் என்று எல்லாம் ஏமாற்றுவர். அப்படி சொல்லுபவர்கள் அல்லது அந்த உபதேசத்தை கைப்பற்றுபவர்கள் கள்ளதீர்க்கதரிசிகள்.

எரேமியா 23:31, 32 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை.

இயேசு சொன்னார்: ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். (மாற்கு 13:22). 

I யோவான் 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

பிசாசிடம் குறிகேட்க சென்றால்: 

நீங்கள் குறிகேட்கபோனால் நீங்கள் பிசாசின் வட்டாரத்துக்குள் அடியெடுத்து வைக்கின்றீர்கள். அப்படிசெய்வதினால் பிசாசானவன் உங்களுக்குள் நுழைய கதவை திறக்கின்றீர்கள். உங்கள்மேல் விபூதியோ, தண்ணீரோ தெளித்து உள்ளே நுழைந்துவிடுவான். அவன் உங்கள் எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை சொல்வதுபோல், குறிப்பாக இந்த வருடம் சாவீர்கள் என்றும், வியாதிவரும் என்றும், குருடனாவீர்கள் என்றும் அவர்கள் சொல்லும்போது அது அப்படியே நடக்கும். ஏனெனில் பிசாசானவன் இங்கே, தான் என்னசெய்யபோகிறேன் என்று சொல்கிறான். உங்கள் எதிர்காலத்தை அவன் பார்த்து சொல்வதில்லை. (ஜான் ரமீரஸ் - எழுதிய புத்தகத்திலிருந்து) 

கள்ளத்தீர்க்கதரிசியின் தண்டனை

அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். (எசேக்கியேல் 14:10) 

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது இயேசு அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவார். (மத்தேயு 7:22, 23) 

வெளி 20:10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். 


முடிவாக: 
  1. தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களை உயர்வாக பெருமையாக பேசுவார்கள்.
  2. பேர்சித்தி (தங்கள் பெயர்) - ஊழியங்களுக்கு தங்களின் பெயர் வைத்திருப்பார்கள். எல்லாரைக்காட்டிலும் அதிக ஜனக்கூட்டம் தனக்கு வேண்டும் மற்றும் தான் பெரிய ஆளாக வரவேண்டும் (பெருமையின் ஆவி) என்ற உந்துதல்.
  3. கீழ்ப்படியாமை - இயேசுவின் போதனைகளின்படி வாழாதவர்கள். ஒருவன் என்னைப்பின்பற்ற விரும்பினால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றக்கடவன்.
  4. அற்புதங்கள், அடையாளங்கள் - உடனே நம்பக்கூடாது. அவர்களது ஜீவியத்தைப் பார்க்கவேண்டும்.
  5. உலகம், பணம், நகை, புகழ் - இதன்பின் செல்பவர்கள்.
  6. தவறாக நிறைவேறாத தீர்க்கதரிசனம் சொன்னவர்கள்.
  7. கிறிஸ்து இயேசு தேவனுடைய குமாரன் என்று சொல்லாத ஆவிகளும், அவர் மரித்து மூன்றாம்நாள் உயிரோடு எழுந்தார் என்பதை மறுக்கும் ஆவிகளும்.
  8. தேவனுடைய ஆவியைக்கொண்டு சொல்லாமல், வேறெ ஆவியினால் சொல்லும் அனைவரும். 
  9. பிசாசை விரட்டுபவர்கள் இயேசுவின் நாமத்தில் அதை அதட்டி விரட்டவேண்டும். அந்த ஆவி அவர்களை அலைக்கழிக்கும். இயேசுவின் நாமத்தில் அதட்டி பரிசுத்த ஆவியைக்கொண்டு விரட்டாமல் சும்மா ஃபூ என்று  ஊதுபவர்கள் எல்லாம் சாத்தானின் செயல்கள், அவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள்.
 இவையெல்லாம் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு அடையாளம். எனவே கள்ளத்தீர்க்கதரிசிகளை நம்பாதிருங்கள்.

இயேசு சொல்லும்போது: "இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்" என்றார். இருதயத்தில் தேவனைவிட்டு வேறே ஆவியை பின்பற்றுவது விபசாரம். தேவனுடைய ராஜ்யத்தையும் அவரது நீதியையும் தேடுங்கள். அப்பொழுது உங்களுடைய ஜீவியத்துக்குத் தேவையானவைகளைத் தேவன் கொடுப்பார். நாளையதினத்தைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.


அற்புதம் அடையாளங்களைக் கண்டால் ஜாக்கிரதையாய் அந்த நபரின் வாழ்க்கையையும், அவருடைய உபதேசங்களையும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுபாவங்களையும் ஆராய்ந்து பாருங்கள். இந்நாட்களில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள். எனவே,  (கள்ளத்தீர்க்கதரிசிகளை நோக்கி அல்ல) நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.




Friday, March 2, 2018

80. தானியேலில் சொல்லப்பட்டுள்ள எழுபது வாரங்கள் பற்றி விளக்கவும்.

கேள்வி: தானியேலில் சொல்லப்பட்டுள்ள எழுபது வாரங்கள் பற்றி விளக்கவும்.

பதில்:
தானியேலுக்கு போகும் முன்பு, இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில் தானியேல் தீர்க்கதரிசி சொன்னதை குறிப்பிட்டுள்ளார். இது நம்முடைய கட்டுரையின் மையமாகும்.

மத் 24:15-21 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

இங்கே இயேசு உலகத்தின் கடைசி நாட்களில் நடைபெறும் காரியத்தைக்குறித்து சொல்லுகிறார். இது கடைசி காலம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.



இப்போது இதைமனதில்கொண்டு தானியேல் புத்தகத்துக்கு செல்வோம். காபிரியேல் என்னும் தேவதூதன் தானியேலுக்கு இப்படியாக சொல்லுகிறான்:
-------------------------------------------
தானி 9:24-27.
24. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.

25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

27. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
-------------------------------------------

மேலே, இந்த 70 வாரங்களை: 7, 62  மற்றும் 1 என்று மூன்று பகுதிகளாக 
பிரித்து  25 மற்றும் 27 வசனங்களில் சொல்கிறான்:

ஒருநாள் என்பதற்கு ஒரு வருடம் நியமிக்கப்பட்டுள்ளது என்று அறிவோம். இதை நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம்.
எண் 14:34 நீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்.
எசேக் 4:5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்கவேண்டும்.


தானியேல் 9:25-ம் வசனத்தில் "எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்" என்று வாசிக்கிறோம். 7 + 62 = 69 வாரங்கள்.  அதாவது 69 x 7 x 360 = 173,880 நாட்கள்.

எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டது என்பதை எஸ்றா 1:1-4 மற்றும் எஸ்றா 6:14-ல் வாசிக்கலாம்.  எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (Cyrus king of Persia) ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்...என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.

வரலாற்றுக்குச் சென்றால் இது கி.மு. 445-ம் வருடம் ஆகும். (Sir. Anderson, Robert என்பவர் எழுதிய புத்தகம்)











இதிலிருந்து பிரபுவாகிய மேசியா வருமட்டும் என்கிறதற்கு  69 வாரம், அதாவது 483 வருடங்கள் (173880 நாட்கள்) ஆகின்றன. இத்தனை துல்லியமான தீர்க்கதரிசனம் தானியேல் குறிப்பிட்டது அனைவரின் கவனத்தையும் பைபிளுக்கு திருப்புகிறது. இயேசு கழுதையின்மேல் அமர்ந்து எருசலேமுக்கு சென்ற தேதி மிகச்சரியாக இங்கு நிறைவுபெறுகிறது. இது கி.பி. 32, ஏப்ரல் 6. இது ஞாயிற்றுக்கிழமை. அங்கே "முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.



இதற்குப்பின்பு 26-ம் வசனத்தில் "மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல" என்று வாசிக்கிறோம். இங்கேயே தானியேல்: இயேசு மரிப்பது தனக்காக அல்ல, [நம்முடைய பாவங்களுக்காக] என்று சொல்கிறான். இது இயேசுவின் சிலுவை மரணத்தின் முன்குறிப்பு. அப்படியே இயேசு அந்த பஸ்காபண்டிகையின் போது காட்டிக்கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறார். இச்சம்பவமும்  தானியேல் சொன்னதுபோல் 69 வாரம் முடிந்த பின்பு, நிறைவுபெறுகிறது.

அதே 26-ம் வசனத்தில்  "நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்" என்று வாசிக்கிறோம். இதைத்தான் இயேசுவும் "இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று தீர்க்கதரிசனமாக உரைத்தார். இது கி.பி. 70-ம் வருடம் நிறைவேறியது. தீத்து(Titus) என்னும் ராஜா எருசலேமை அழித்துபோட்டு, தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி செய்தான்.யூதர்களின் சிதறடிப்பு இங்கே ஆரம்பித்தது. அவர்கள் உலகமெங்கும் தெறித்து ஓடினர்.

தேவனும் அக்கிரமங்களினிமித்தம் இவர்களை சிதறடிப்பேன் என்று இதற்கு முன்பே சொல்லியிருந்தார். இதை எரேமியா 9:16-ல் "அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்று வாசிக்கிறோம்.

தேவன் இவர்களை மீண்டும் கூட்டிச்சேர்ப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படி 1948-ல் இஸ்ரவேல் என்னும் தேசம் வரலாற்றில் உருவானது. இதை எசேக்கியேல் 20:34-ல் "நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்திலும் கூடிவரச்செய்து, உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன்" என்று வாசிக்கிறோம்.

எனவே, மேசியா சங்கரிப்பு, நகரம் மற்றும் பரிசுத்த ஸ்தலம் அழிக்கப்படுதல், யூதர்களின் சிதறடிப்பு, மீண்டும் கூட்டிச்சேர்த்தல் ஆகியவை 26-ம் வசனத்தில் அடங்கும். இவை 69-ம் வாரத்தில் நிறைவுற்றன.

அதே வசனத்தில், இதன்பின்பு “முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.” என்று வாசிக்கிறோம்.  இதற்கு சான்றாக இன்றும் நம் கண்கூடாக இஸ்ரவேல் தேசத்தை சுற்றி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கிறோம். எனவே இந்த வசனம் நமது காலத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

குறிப்பு: அந்திக்கிறிஸ்து வெளிப்படும்முன் இயேசுவின் இரகசியவருகை (திருடன் வருகிறவிதமாக) இருக்கும்.

இதற்குபின்பு 27-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஒருவாரம் (70ம் வாரம்) இன்னும் நிறைவேறவில்லை. அவன் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி  (மூன்றரை வருடம்) சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவான்; (தமிழில் மொழிபெயர்த்தவர்கள் "அவர்" என்று குறிப்பிட்டுள்ளனர். சரியான வார்த்தை சிவப்பு எழுத்தில் காட்டியுள்ளதுபோல் "அவன்" என்பதாகும்) அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான்.  இயேசு சொன்னதை நினைவுகூருவோம்.  மத் 24:15-21 "பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே ...  உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்". இது கடைசிகாலம். மேலும் இங்கே உபத்திரவகாலம் 7 வருடம்  என்று காண்கிறோம். இந்த உபத்திரவகாலம் இருபகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

 அந்திக்கிறிஸ்துவைக்குறித்து 27-ம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இன்று யூதர்களுக்கு கோயில் இல்லை. எனவே அவர்கள் இன்று பழைய ஏற்பாட்டின்படி பலிசெலுத்துவதில்லை. அந்திக்கிறிஸ்து அவர்களுடைய ஆலயத்தை திரும்பகட்ட உதவி  செய்தபின்பு, யூதர்கள் பலி மற்றும் காணிக்கைகளை செலுத்துவார்கள். மூன்றரை வருடம் கழித்து அவன் அருவருப்பை நடப்பிப்பான். பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவான்.

மேலும் II தெச 2:4-8ன்படி அவன் [அந்திக்கிறிஸ்து] எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். [இது பாழாக்கும் அருவருப்பு]. அந்த அக்கிரமக்காரனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். இது அவர் ஒலிவமலையில் எல்லாரும் காணும்படி வெளிப்படையான வருகையின்போது நடைபெறும்.

தானி 9:27-ம் வசனம் குறித்து, தானியேல் 12:11-ல் புதைபொருளாக சொல்லப்பட்டுள்ளது..
6. சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
7. அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.
8. நான் அதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
9. அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
10. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான். ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
11. அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.


தானி 12:7-ம் வசனத்தில் ஒருகாலமும்(1), காலங்களும்(2), அரைக்காலமும்(1/2) என்று மொத்தம் மூன்றரை ஆண்டுகள் (நமது கடைசி 70ம் வாரத்தில் பாதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே உபத்திரவகாலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகளில் பரிசுத்த ஜனங்களின் வல்லமை (power)  சிதறடித்தல் முடிவுபெறும்போது இவை நிறைவேறித்தீரும் என்கிறார். எனவே உபத்திரவகாலத்தின் மூன்றரை ஆண்டுகளுக்குபின்பு  (அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் - அந்திக்கிறிஸ்து) பாழாக்கும் அருவருப்பை நடப்பிப்பான்.  இது 1290 நாள் (சுமார் மூன்றரை வருடங்கள்) செல்லும் (தானி 12:11). இதுவே மகா உபத்திரவகாலம். இதைத்தான் இயேசு மத்தேயு 24-ல் குறிப்பிடுகிறார்.

தானி 9:24-ம் வசனத்தில் "நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்"என்று சொல்லப்பட்டுள்ளது, இது இயேசுவின் ஆயிரவருட ஆளுகை. இந்த 70 வாரம் முடிவில் (அதாவது உபத்திரவகாலத்தின் முடிவில்) ஆரம்பமாகும் என்பதை குறிப்பிட்டுள்ளது.

நாமோ கடைசி காலத்தில் வந்திருக்கிறோம். நம்மை நாமே ஆராய்ந்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாவோமாக.

Reference: Sir. Anderson, Robert என்பவர் எழுதிய புத்தகம்.

 
சம்பந்தப்பட்டவை கேள்வி-பதில்: 13

Thursday, January 4, 2018

79. எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டவைதானே, நமது சுய இஷ்டம், சுய முடிவுக்கு இடமில்லை அல்லவா?

கேள்வி: நான் ஒரு அறிவியல் விஞ்ஞானி. கடவுள் இல்லை என்று சொல்பவன். எப்படி நமக்கு சுயஇஷ்டம் உண்டு என்று சொல்லமுடியும்? தேவனுக்கு எல்லாம் தெரியுமென்றால், அவருக்கு காரியங்களின் எல்லா விளைவுகளும் முன்பே தெரியுமே. நாம் அவரை ஆச்சரியப்படவைக்க ஒரு முடிவும் செய்ய முடியாதே. அப்படியானால் நியாயத்தீர்ப்பு என்பது அநீதியானது அல்லவா? நான் எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டவை, நமது சுய இஷ்டம் இல்லை என்று சொல்பவன்.

பதில்:

 


பகுதி I [ரவி சகரியாஸ் என்பவரின் கேள்வி பதில் நிகழ்விலிருந்து பெரும்பகுதி]

 determinism  Vs. free-will (முன்தீர்மானிப்பு Vs. சுயசித்தம்)  என்பது கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. நீங்கள் பைபிளில் நம்பிக்கை அல்லாதவர். உங்களுக்கு கிறிஸ்தவம் சுயசித்தம் பற்றி சொல்கிறது என்று தெரியும், எனவே அதற்குள்ளாக நாம் செல்லவேண்டாம். உங்களுக்கு தெரிந்தவற்றிலிருந்தே சொல்கிறேன்.

ஜான் போல்கிங்ஹோம் (John Polkinghome) என்பவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  இயற்பியல் விஞ்ஞானியாயிருக்கிறார் (physicist at Cambridge University). இவர் உலக அளவில்  மீச்சிறுஅளக்கை விஞ்ஞானிகளில் முன்னோடியான ஒருவர்.  நீங்கள் சொன்ன முடிவுக்கு எதிர்முடிவுக்கு இவர் வந்தார். இவரை நாம் தவறாக எடைபோட இயலாது. இவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட தகவல்கள் தவறு என்றோ அல்லது இவருக்கு அறிவு போதாது என்றோ நீங்கள்தான் முடிவுக்கு வரவேண்டும்.

டேவிட் பெர்லின்ஸ்கி (David Berlinski) என்பவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? கடவுள் (இருக்கிறாரோ இல்லையோ தெரியாது என) நடுத்தர நம்பிக்கை (Agnostic) கொண்டவர். முன்னோடி இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர். இவர் டாக்கின்ஸ் என்பவர் "God's delusion" என்ற புத்தகத்தை எழுதியபின்பு, இவர் "Devil's delusion" என்ற புத்தகத்தை எழுதினார். அதில் "விஞ்ஞான பொருள்சார் உலகப்பார்வை" கொண்டவர்களைக்குறித்து இப்படியாகச் சொல்கிறார்:

o இவர்களில் யாராவது கடவுள் இல்லை என்பதற்கு நிரூபணங்கள் கொடுத்ததுண்டா? பதில் சற்றும் அருகில் வரவில்லை.

o மீச்சிறுஅளக்கை அண்டவியல்(Quantum Cosmology), இந்த அண்டம் எப்படி வந்தது என்றோ, அது ஏன் இருக்கிறது என்றோ விளக்கியது உண்டா?  சற்றும் அருகில் வரவில்லை.

o நமது அறிவியல் ஏன் நமது அண்டம் இப்படி மிகச்சீராக இசைவிணைக்கப்பட்டு உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது என்பதை விளக்கியதுண்டா? சற்றும் அருகில் வரவில்லை.

o இயற்பியல் விஞ்ஞானிகளும், உயிரியல் விஞ்ஞானிகளும், மதம் சார்ந்தது அல்ல என்கிற எந்த விஷயத்தையும் நம்ப தயாராக இருக்கிறார்களா? அருகில் வந்திருக்கின்றனர்.

o பகுத்தறிவுவாதமும் தார்மீக சிந்தனைகளும் (rationalism & moral thoughts) நமக்கு எது நல்லது, எது சரி மற்றும் நீதியானது என்று அறிந்துகொள்ளும் தன்மையைக் கொடுத்துள்ளனவா? சற்றும் அருகில் வரவில்லை.

o மதச்சார்பின்மை (secularism) இந்த 20ம் நூற்றாண்டில் நன்மைக்கு விசையாக அமைந்ததா? சற்று அருகிலுக்கும் அருகேகூட வரவில்லை.

o விஞ்ஞானத்தில் ஒரு குறுகிய மற்றும் ஒடுக்கும் வைதீகம் (orthodoxy) உள்ளதா? சற்றே அருகில் வந்திருக்கின்றனர்.

o விஞ்ஞானத்தில் ஏதாகிலும் அல்லது அவர்களது தத்துவங்களில் ஏதாகிலும் மத நம்பிக்கையாயிருப்பது பகுத்தறிவற்றது என்று விளம்பியது உண்டா? பூங்காவின் எல்லைகள் தூரம்வரை எங்கும் அருகில் வரவில்லை.

o விஞ்ஞான
நாத்திகம் (scientific atheism) என்பது அறிவுசம்பந்த பயிற்சியில் அற்பமாக மரியாதையின்றி நடந்துகொள்கிறதா? நெத்தியடியாக ஆம்.

விஞ்ஞானம் மற்றும் பொருள்வாத உலகப்பார்வையானது
(scientific and materialistic worldview) நீங்கள் சொன்ன அதே காரியத்தைத்தான் சொல்லும், அதே முடிவுக்குத்தான் வரும்.  நீங்கள் முன்தீர்மானிப்பு மற்றும் சுயசித்தம் ஆகிய இரண்டுக்கும் இடையில் தவறான இடத்தில் உள்ளதால்  சந்தேகம் எழும்பியுள்ளது. 1990-ம் வருடம் கேம்பிரிட்ஜ், லேடி மிட்சல் வளாகத்தில் (Lady Mitchell hall, Cambridge) ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (Stephen Hawkins) என்பவர் பேசிய பேச்சைக் கேட்டேன். இவர் யாரென்று உலகுக்கு சொல்லத்தேவையில்லை. உங்களுக்கு தெரிந்தபடி அவரால் பேசமுடியாது, ஆனால் ஒன்றிணைப்பிகளைக்கொண்டு (synthesizers) அவர் பேசினார். அந்த பேச்சின் தலைப்பு “முன் தீர்மானம் மற்றும் தனிச்சுதந்தரம்”. அவர் என்ன சொன்னார் தெரியுமா? விஞ்ஞான பொருள்வாதத்துவத்தின் துயரம் என்னவெனில் நாம் சுதந்தரமற்றவர்கள், நாம் முழுதுமாக முன்தீர்மானிக்கப்பட்டவர்கள் (அதாவது நாம் இப்படித்தான் நடப்போம் இருப்போம் பேசுவோம் என்று நமக்குள் குறியீடுகள் ஏற்கனவே உள்ளன). இதைத்தான் அவர் உங்களுக்கு சாதகமாக பதிலாக சொன்னார். நீங்கள் வேண்டுமென்றால் இணையதளத்தில் Lady Mitchell hall, Cambridge, Stephen Hawkins என்று தேடிப்பாருங்கள். அவர் பேச்சின் முடிவில் "எனக்குள்ள ஒரேஒரு தப்பித்தல் என்னவெனில், என்னைக்குறித்து என்ன முன்தீர்மானிக்கப்பட்டுள்ளன என்று எனக்கு தெரியாது. எனவே நான் அப்படி முன்தீர்மானிக்கப்பட்டவனாக இராமல் இருப்பவானாக இருக்கலாம்" என்று சொல்லி ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

இதுவே பெர்லின்ஸ்கியின் பிரச்சனை, இதுவே ஸ்டீவன் பிங்கரின் பிரச்சனை,  டாக்கின்ஸ் என்பவரும்  தாங்கள் முன்தீர்மானம்/திட்டம்/குறியீடு கொண்ட உயிரினங்கள் என்று நம்புகிறார்.

எனக்கு உங்களிடம் ஒருகேள்வி: நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க உங்களுக்
கு சுதந்திரம் இருந்ததா? அல்லது தாங்கள் ஒரு கணினிபோல் (முன்கூட்டியே-குறியிடப்பட்டதுபோல்) பேசுகிறீர்களா? நீங்கள் ஆம் நான் முன்தீர்மானிக்கப்பட்டவனாக கேள்வி கேட்கிறேன் என்று நீங்கள் சொல்லும்போது, நீங்கள் கூறுவது உண்மையான கூற்றா? என்ற கேள்விக்கு பதில் "ஆம்" என்று சொன்னாலும், "இல்லை" என்று சொன்னாலும் நீங்கள் உள்ளுணர்வு-அடிமைத்தனத்தின்று (bondage of subjectivity) மேலே வந்துவிட்டீர்கள். முன்தீர்மானம் என்ற கோட்பாடுக்கு மேலாக எழுந்துவிடுகிறீர்கள்! 

பகுதி II

பைபிளில், நமக்கு சுயசித்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட நாம் அநேக ஆதாரங்களை வைக்க முடியும். நோவாவின் நாட்களில் பூமியில் பாவம் பெருகியபோது தேவன் மனிதர்களை உண்டாக்கியதற்காக வருந்தினார் என்றால், இங்கே எல்லாம் முன்தீர்மானிக்கப்பட்டது என்று கூறுவது அர்த்தமற்றது. நமக்கு சுயசித்தம் இல்லாவிட்டால் இயேசு சிலுவையில் பாவிகளாகிய நமக்கு மரித்தார் என்பதும் அர்த்தமற்றது. நமக்கு சுயசித்தம் இல்லாவிட்டால் நியாயத்தீர்ப்புநாளும் அர்த்தமற்றது. பல இடங்களில் தேவன் இதைச் செய்யாதீர்கள் என்று சொல்லியும், அவர்களோ அவருடைய வழியில் நடக்கவில்லை என்று பல இடங்களில் பார்க்கிறோம். ஜனங்கள் கீழ்ப்படியாமல்போய் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு உதாரணமாக இஸ்ரவேல் ஜனங்களின் வரலாற்றையே சொல்லலாம். நாம் எடுக்கும் முடிவுகளில் தேவன் பொதுவாக குறுக்கிடுவதில்லை. முழுவாழ்க்கையும் அதின் ஒவ்வொரு அசைவுகளும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்றால் தேவன் அவர்கள் பாவம்செய்யும்போது கோபப்படுவதற்கு அர்த்தமேயில்லை. நம்மேல்  கொண்ட அன்பினிமித்தம் நம்மை நல்வழியில் நடத்த அப்படிச் செய்கிறார். உபாகமம் 30:19,20-ல் "நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு...அவரைப் பற்றிக்கொள்வாயாக" என்று வாசிக்கிறோம். இங்கே அவர் நம்மைத்தான் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். எனவே இங்கே முன்தீர்மானம் அல்ல என்று தெளிவாக காணலாம்.

நீங்கள் நாம் எல்லாம் முன்குறியீடு இடப்பட்டு, இயந்திரம்/கணினி போல் செயல்படுகிறோம் என்ற முடிவுக்கு வரும்போது, நீங்கள் கடவுள் இல்லை என்று ஆபத்தான முடிவுக்கு (மறைமுகமாக) வருகிறீர்கள். ஏனெனில் கடவுள் நமக்கு தனிச்சுதந்திரம்/சுயசித்தம் கொடுத்திருக்கிறார். நீங்கள் விஞ்ஞானத்தின்படி தற்செயலாக தோன்றியவர், முன்தீர்மானிக்கப்பட்டவர் என்றால், அதே விஞ்ஞானத்தின்படி உங்களுக்கு இந்த உலகில் எந்த மதிப்பும் (value) இல்லை . ஏனெனில் நீங்கள் வெறும் அணுக்களின் கோர்வை என்று அந்த கோட்பாடு சொல்கிறது. ஆனால், வேதத்தின்படி (பைபிளின்படி) நீங்கள் விலையேறப்பட்டவர். தேவன் உங்களை நேசிக்கிறார். உங்களைத் தம்மிடம் அழைக்கிறார். அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். அவரை ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் தம்முடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுக்கிறார்.  வேறு தெய்வங்கள் நீங்கள் அவைகளுக்கு அடிமை என்று போதிக்கலாம். ஆனால் இயேசு: தாம் ஒரு தகப்பனாகவும், நாம் அவரது பிள்ளைகளாகவும் இருக்கிறோம் என்கிறார்.  அவர் அன்பு மிகுந்தவராக இருக்கிறார். ஜனங்களுக்கு  சுயசித்தத்தையும் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறோம். 

நாம்தான் நமது செயல்களுக்கும், முடிவுக்கும் பொறுப்பு. எனவேதான் நாம் மரித்தபின்பு தேவனுக்கு நமது வாழ்க்கையைக்குறித்து நியாயத்தீர்ப்பு நாளன்று கணக்குகொடுக்கவேண்டும்.  இயேசுவைப் பின்பற்றினால் நீங்கள் நியாயத்தீர்ப்பைக்குறித்து பயப்படத்தேவையில்லை. நரகத்தைக்குறித்தும் பயப்படத்தேவையில்லை.

சம்பந்தபட்டவை கேள்வி பதில் 30