Thursday, January 7, 2010

28. உயிர்களைக் கொலை செய்யாதே என்று கூறப்பட்டுள்ளது. மிருகமானாலும் அது ஒரு உயிர் தானே? கொல்லுதல் பாவம்தானே?

கேள்வி: வேதாகமப்பகுதியில் ஆண்டவர் சிலவற்றை சாப்பிடக்கூடாது என்றும், சிலவற்றை (ஆடு,மாடு போன்றன) சாப்பிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. உயிர்களைக் கொலை செய்யாதே எனறும் கூறப்பட்டுள்ளது. மிருகமானாலும் அது ஒரு உயிர் தானே? அது கூட அம்மா என்று தானே வாய் விட்டுக் கூறுகிறது. உயிரைக் கொலை செய்வது பாவமல்லவா? இதனால் என் மகள் மாமிச உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விட்டாள்.இதற்கான விளக்கம்?
ஆதியாகமம் 1:28-30
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் (have dominion over them) என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

ஏதேனில் மனுஷனுக்கும்-மிருகங்களுக்கும், மிருகங்களுக்கும்-மிருகங்களுக்கும் இடையில் ஒரு சமாதானம் இருந்தது. 29, 30 வசனத்தின்படி
மனுஷனுக்கு:கனிமரங்கள், சகலவித விதைதரும் பூண்டுகள்தான் ஆகாரம்.
விலங்குக்கு: பசுமையான எல்லா பூண்டுகளும் ஆகாரம். மனிதன் மிருகத்தைச் சாப்பிடவில்லை.

பாவத்திற்குட்பட்டபின்பு மனுஷன் ஏதேனிலிருந்து துரத்தப்பட்டான். இதன் பின்தான் இந்த ஒன்று மற்றொன்றை சாப்பிட்டு வாழக்கூடிய நிலை வந்தது. முதலாக தேவன்தான் தோல் உடையை உண்டாக்கினார்.
இதன் பின்பு ஆபேல் முதன் முதலில் தன் மந்தையிலிருந்து தேவனுக்கு காணிக்கை செலுத்தினான். இது தேவனை கனம்பண்ணவேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பமாயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து வாசிக்கும்போது, லேவியராகமத்தில் பாவநிவாரண பலி, குற்றநிவாரணபலி, தகனபலி, சமாதான பலி என்ற பரிகாரம் என்னும் முறையில் தேவன் மிருகங்களை எப்படிக் கொல்லவேண்டும், அதின் இரத்தம் எப்படிச் சிந்தப்படவேண்டும் என்று என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவைகளைச் சாப்பிடலாம் என்றும் தேவனே கூறியிருக்கிறார்.

"உயிர்களைக் கொலை செய்யாதே" என்று இல்லை. "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லப்பட்டது, இது மனுஷனைக் குறித்துதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனுஷன் வேறு மனுஷனை கொன்றால், அல்லது சில கற்பனைகளை மீறினால், அவன் நிச்சயமாகக் கொல்லப்படவேண்டும் என்று தேவன் சில விதிவிலக்கு வைத்திருக்கிறார். ஒரு மாடு மனுஷனை முட்டி அவன் இறந்து போனால் அந்த மாடும் கொல்லப்படவேண்டும் என்றும் தேவன் சொல்லியிருக்கிறார். இன்று கூட
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரத்தை தேவன் நீதிபதிகளுக்கு கொடுத்துள்ளார். இது மோசே காலத்தில் ஆரம்பமானது. எனவே மேலே கொல்லுதல் என்பது இடம், பொருள், ஏவல் என்பவகைளைப் பொருத்தது.

இயேசு சொன்ன ஒரு உவமையில் (லூக்கா 15)ல் ஒரு கொழுத்த கன்றை அடித்தார்கள் என்று வாசிக்கிறோம்.
மாமிசம் சாப்பிடுவது தவறல்ல.

அது ஒரு உயிர்தான். தேவன் சுத்தமான மிருகங்களைச் சாப்பிடலாம் என்றும், அசுத்தமான மிருகங்களைச் சாப்பிடவேண்டாம் என்று கூறியிருக்கிறார் (லேவியராகமம் 11, உபாகமம் 14 ). உதாரணமாக பன்றி அசுத்தமான மிருகம். இதை ஒரு பண்ணையில் வளர்த்தாலும் அது அசுத்தமான மிருகம்தான். ஏனெனில் விஞ்ஞான முறைப்படி நோய் எதிர்ப்புத்தன்மை மிகமிக குறைவாயுள்ள மிருகம் பன்றி. மேலும் இதின் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் மனித மூளைக்கு சென்று அங்கு சேதத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகின்றது. (Read Wikipedia) .
மாமிசம் சாப்பிடாமல் இருந்தாலும் தவறல்ல.

இதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும் சொல்லியிருக்கிறார்: ரோமர் 14:2,3 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.


.

1 comments:

Colvin said...

நானும் மாமிசம் சாப்பிடுவதில்லை. மற்றும் உடலுக்கு தீங்கிழைக்கும் எந்த பண்டத்தையும் பானத்தையும் கிறிஸ்வர்கள் உட்கொள்ளாதிருப்பதே சிறந்தது. மாமிசம் சாப்பிட்டாலும் தீங்கிழைக்காத முறையில் சரியாக சுத்திரிக்கப்பட்டு உண்பது நல்லது

ஏனெனெனில் நீங்கள் தேவனின் ஆலயமாயிருக்கிறீர்கள். ஒருவன் தேவனின் ஆலயத்தை தீட்டுப்படுத்தினால் தேவன் அவனைக் கெடுப்பார்

வசனத்தை மனதில் கொள்வது நல்லது.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.