மத் 16:28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோவான் 21:22,23 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
எனவே யோவான் இன்னும் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா?
பதில்:
மேலே உள்ள படமானது துருக்கியில் எபேசுவிலே உள்ள யோவானின் கல்லறை என்று சொல்லப்படுகின்றது. ரோமர்கள் யோவானை கொதிக்கும் எண்ணெய்சட்டியில் போட்டபோது அவருக்கு ஒன்றும் ஆகாமல் போனதால், அவரை கிரேக்க நாட்டிற்கு சொந்தமான பத்மோஸ் என்னும் தீவுக்கு நாடுகடத்தினார்கள்.
பத்மு தீவில்தான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை யோவான் எழுதியாக நம்பப்படுகின்றது. இந்த கொதிக்கும் எண்ணெய் சட்டி சம்பவம் அன்று ரோமாபுரி காலசீயம் (Colosseum) அரங்கம் முழுதும் கிறிஸ்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அந்த அற்புதமான சம்பவத்தை அவர்கள் பார்த்தனர்; அவர்கள் அதற்கு சாட்சிகளாயிருந்தனர். இப்படியாக தெர்துல்லூ என்பவன் எழுதியிருக்கிறான். ரோமர்களின் இராயனாகிய தொமித்தன் என்பவன் காலத்தில் முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அப்போதுதான் அந்த சம்பவமும் நடந்தது.
யோவானுக்கு வயதாகும்போது சிமிர்னா சபையில் பாலிகார்ப் என்னும் போதகருக்கு பயிற்சியூட்டினார். இது முக்கியமாகும் ஏனெனில் பாலிகார்ப் என்பவர் இந்த செய்தியை தனக்கு பின்வந்த தலைமுறையினருக்கு கொண்டுபோயிருக்கிறார். பாலிகார்ப் என்பவர் ஐரேனேயுஸ் என்பவனுக்கு யோவானைப்பற்றிய தன்னுடைய அனுபவங்களைச் சொல்லிவிட்டு சென்றார்.
யோவான் இறந்தபோது அவருக்கு வயது சுமாராக 94 என்று சொல்லப்படுகின்றது.
[1] மாற்கு 9:1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணும்முன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 9:27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இவையனைத்திலும் 'தேவனுடைய ராஜ்யம் பலத்துடன் வருவதைக் காணும் நாள்' என்று சொல்லப்படுவது "பெந்தெகொஸ்தே தினமன்று பரிசுத்த ஆவி வந்திறங்கியதைக் காணும் நாள்" என்று சில வேதபண்டிதர்கள் கூறுகின்றனர். அன்றுதான் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல என்று வாசிக்கிறோம் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. அப்படியே நானும் நம்புகின்றேன்.
[2] யோவான் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கு என்ன என்றார். யோவான் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று ஏழாம்நாள் ஓய்வுக்காரர்கள் நம்புகின்றார்கள். யோவான் 21:22,23 வாசிப்பவர்களும் யோவான் உயிரோடிருக்கவேண்டும், ஆனால் உயிருடன் இருந்தால் நமக்கு தெரிந்திருக்குமே என்றும் யோசிக்கிறார்கள். முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில் "யோவான் மரிக்கமாட்டான்" என்று இயேசு சொல்லவில்லை. இயேசு உவமையாக பேசியபோதெல்லாம் அநேகருக்குப் புரியவில்லை, சிலர் அவர் சொன்னதை தவறாகவும் புரிந்துகொண்டார்கள். இங்கேயும் இயேசு ஒரு புதிர்போன்று பேசியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். மனுஷனுடைய நாட்கள் [சராசரியாக] நூற்றிறுபது வருஷம் என்று தேவன் சொன்ன பின்பும் யோவான் 2000 வருடம் இருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது.
இயேசு தான் சொன்னபடியே யோவானுக்காக வந்தார் என்பது என்னுடைய விளக்கம்.
- யோவான் அவருக்கு அன்பான சீஷன்.
- அந்நாட்களில் அவருடைய சீஷர்கள் இரத்தசாட்சிகளாக மரித்தார்கள்.
- யோவானையும் கொல்லும்படி பார்த்து பின்பு முடியாததால் அவர் பத்முதீவுக்கு நாடுகடத்தப்படுகிறார்.
- அங்கே அவர் பட்ட கஷ்டங்கள் என்னவோ தெரியவில்லை. பாவம் யோவான்!
- இந்த சமயத்தில்தான் இயேசு வருகிறார். அவருடைய ரூபம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது. இதை யோவான் கண்டு அழுகிறார் என்று வெளி 1, 5 ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
எனவே நான் வருமளவும் இவனிருக்க சித்தமானால் என்பது இங்கேதான் நிறைவடைகிறது.
யோவானுக்காக மாத்திரமல்ல இன்றும் அநேகருக்கு இயேசு தரிசனமாகிறார். அப்போஸ்தலனாகிய பவுலும் "அகால பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்" என்கிறார். என்னுடைய தந்தையும் இயேசுவை நேருக்குநேர் சந்தித்தார், இயேசுவுடன் பேசினார்; பின்பு இந்து மார்க்கத்தை விட்டு இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தார். எனவே இயேசு அங்கே வந்தார் என்று சொல்வதும் சரிதான்.
நாம் இயேசு சொன்னதில் "நான் வருமளவும்" என்பதை இரண்டாம் வருகை என்று புரிந்துகொண்டால் யோவானின் புதிர் புதிராகவே இருக்கும்.யோவான் ஒருவர்தான் இரத்தசாட்சியாக மரிக்காமல் பூரண வயதில் மரித்தார்.
.


