Monday, December 27, 2010

66. எப்படி, எப்போது உபவாசிப்பது?

கேள்வி: உபவாசம் எப்படி இருப்பதென்று விளக்கம் கொடுங்கள். எப்படி, எப்போது உபவாசிப்பது? காலை 6:00 மணிக்கு சூரியன் உதிக்கும் முன்பு சாப்பிடலாமா? புனித நாள்கள் எவை (செவ்வாய், வெள்ளி...)? 40 நாள் எப்படி உபவாசிப்பது?

பதில்:
உபவாசம் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆவிக்குரிய ஒழுங்குகளில் மிகவும் முக்கியமான ஒழுங்கு ஆகும். உபவாசம் மற்றும் ஜெபத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் நமது ஜீவியத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

[1] ஏன் உபவாசம் இருக்கவேண்டும்?
-- பழைய ஏற்பாட்டு காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் உபவாசமானது தேவையான ஒரு ஒழுங்கு ஆகும். உதாரணமாக மோசே இரண்டுமுறை 40 நாட்கள் உபவாசத்துடன் இருந்தான். இயேசுவும் 40 நாட்கள் உபவாசம் இருந்தார். மேலும் இயேசு சொல்லும்போது: "நீங்கள் உபவாசிக்கும்போது" என்று சொல்கிறார். "நீங்கள் உபவாசித்தால்" என்று சொல்லவில்லை!

-- இழந்துபோன "ஆதி அன்பை" மீண்டும் திரும்ப பெற உபவாச ஜெபம் செய்தால், கிறிஸ்துவுடன் நெருங்கிச் சேர இயலும்.

-- தேவனுடைய பார்வையில் நம்மை தாழ்த்தும்படி:

எஸ்றா 8:21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்...அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
தாவீது சொல்லும்போது, "நான் உபவாசத்தினால் தாழ்த்தினேன்" என்கிறார். தானியேல் 9:3ல் "நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி" என்பதில் தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தும்படியும், தேவனைத் தேடவும் உபவாசிக்கிறோம்.

-- தேவன் நம்மை எச்சரிக்கும்போது:
I இராஜாக்கள் 21:27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
II நாளாகமம் 20:3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.

-- உபவாசம் என்பது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய அல்லது நம்முடைய ஆவிக்குரிய நிலவரத்தை நமக்கு உணர்த்தி, நாம் மனமுடைந்து, மனந்திரும்பி ஒரு புதிய ஜீவியம் செய்ய உதவுகிறது. யோவேல் 2:12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார் யோனா 3:5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

-- பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் புதுப்பிப்பார். தேவனுடைய வார்த்தை மிகவும் அர்த்தமுள்ளதாக உங்களுக்கு காணப்படும்.

-- உபவாசம் நமது ஜெபஜீவியத்தை மேலும் கட்டி எழுப்பவும் உயர்த்தவும் ஒரு அனுபவமாகும்.

-- உங்களை எழுப்புதல் அடையச் செய்து, மற்றவர்களையும் உங்கள் மூலமாக எழுப்புதல் அடையச் செய்ய ஏதுவாக சில சமயங்களில் இருக்கும்.

-- II நாளா 7:14ல் சொல்லப்பட்டுள்ளபடி செய்யவேண்டுமென்றால் உபவாசம் இருந்து ஜெபிப்பதின்மூலமே ஆகும்:
"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்."

-- தேவனுடைய சமுகத்தை அதிகமாக தேட உங்களுக்கு உதவும். உங்களுடைய குறைகளையும், மறைந்து காணப்படும் பாவங்களையும் கண்டறிய உதவியாக இருக்கும்.

--
மகா பெரிய துக்கம், கஷ்டம் வரும்போது:
எஸ்தர் 4:3 "ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.


-- பிசாசுகளை விரட்ட:
மத்தேயு 17:21 இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.


-- கர்த்தருடைய ஊழியர்களை எடுக்கும் முன்பு, விசேஷமான நிகழ்வு:
அப்போஸ்தலர் 14:23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
அப்போஸ்தலர் 13:3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

-- பழக்க வழக்கமான உபவாசம்:
"
லூக்கா 18:12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

-- உபவாச ஜெபத்திற்கு ஒரு பதில் உண்டு:அப்போஸ்தலர் 10:30 "அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில்(3pm) வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த ஒரு மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது என்றான்"

[2]
கீழே சொல்லப்பட்டவர்கள் உபவாசம் இருப்பதை தவிர்க்கவேண்டும்:
-- நரம்பு தளர்ச்சியால் உடல் நடுக்கம், பசியால் சரீரத்தில் குணங்கள் மாறுபடுபவர்கள்.

-- சரீரத்தில் மிகவும் மெலிந்து காணப்படுபவர்கள் .
-- இரத்த சோகை அல்லது உடலில் இரத்தம் குறைவாயிருப்பவர்கள் (anemic)
-- வயிற்றுப்புண் (ulcer), இரத்தவியாதி, மாரடைப்பு, கட்டிகள்(tumor) மற்ற இருதய வியாதியுள்ளவர்கள்.

-- நீரிழிவு (diabetic) நோயினால் இன்சுலின் எடுக்கும் அளவில் உள்ளவர்கள்.
-- சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், நுரையீரல், இருதயம் மற்றும் முக்கியமான சரீரபாகங்களில் கோளாறு உள்ளவர்கள்.
-- சர்க்கரை வியாதியுள்ளவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள்
-- பால்கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிப்பெண்கள்.
-- காய்ச்சல் உடையவர்கள், படுக்கையில் இருக்குமளவுக்கு வியாதியுடையவர்கள்.


[3] எப்படி, எவ்வளவு நேரம், காலம் இருப்பது?

-- இயேசு எப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்: மத்தேயு 6:16 "நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு". 
-- எரேமியா 36:6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
==> கர்த்தருடைய வசனம் அன்று வாசிக்கவேண்டும்.

-- II சாமுவேல் 1:12 சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
-- நியாயாதிபதிகள் 20:26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
==> இங்கே சாயங்காலம் மட்டும் உபவாசித்து என்று வாசிக்கிறோம்.


I சாமுவேல் 31:13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
I நாளாகமம் 10:12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
==> இங்கே ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.

தானியேல் 21 நாள் என்றும், மோசே 40 நாள், இயேசு 40 நாள் என்றும் வாசிக்கிறோம் இவைகள் விசேஷமான உபவாசங்கள்.


எனவே:
[அ] வழக்கமாக (வாரந்தோறும்) உபவாசம் இருக்கும்போது:
1- சாப்பிடாமல் இருக்கவேண்டும். தண்ணீர் குடிக்கலாம். (இட்லி மட்டும் சாப்பிடுவேன், கறி, மீன் விலக்கி வைப்பேன் என்பது உபவாசம் அல்ல).

2- அன்று சரீரத்தில் சுத்தமாக இருக்கவேண்டும், குளியுங்கள் அல்லது முகம் கழுவுங்கள்.
3- மனைவியினிடத்தில் சேராதிருங்கள். (யாத் 19:15) சரீரத்திற்கு மகிழ்வூட்டும் காரியங்களில் ஈடுபடாதிருங்கள் (விளையாட்டுகள், டி.வி., சுற்றுலா...).
4- சாயங்காலம் வரை உபவாசம் இருக்கலாம் (மலை 6-மணிக்கு மேல் சாப்பிடலாம்) . அதேபோல் காலை 6-மணிக்கு முன் சாப்பிடவேண்டாம். முந்தின நாள் இரவு உணவு கடைசியாக இருக்கட்டும். சிறுவர் சிறுமியர் காலை ஒருவேளை உபவாசம் இருந்தால் போதும்.
5- வேலை ஏதும் செய்யக்கூடாது. ஜெபிக்கவேண்டும். ஜெபிக்காமல் போனால் பட்டினி இருப்பதற்கு சமம். ஜெபிக்கும்போது நம்முடைய குறைகளை ஆராய்ந்துபார்த்து அறிக்கைசெய்யவேண்டும். இப்படிசெய்வதின்மூலம் தேவனிடம் கிட்டிச்சேருகிறோம். இதுவே உபவாசம் இருப்பதின் முக்கிய நோக்கமாகும். "நான் உபவாசம் இருக்கிறேன். எனவே தேவன் கண்டிப்பாக கேட்பார்" என்ற எண்ணம் தவறு. அது தற்பெருமை. நம்மைத் தாழ்த்தும் காரியத்தில் அப்படிப்பட்ட எண்ணம் கூடாது. அப்படி எண்ணம் இருப்பின் ஜெபத்திற்கு பதில் கிடைக்காது. பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்.
6- வேதம் வாசிக்கவேண்டும்.


[ஆ] துக்கம் அல்லது கஷ்டமான சமயத்தில்:
-- புசியாமலும், குடியாமலும் ஒருநாள் இருங்கள். அதிகபட்சம் மூன்று நாள் வரை குடிக்காமல் உபவாசம் இருக்கலாம் (எச்சில் கூட விழுங்காமல்).
-- அழுது ஜெபம் பண்ணுங்கள்.
-- மேலே உள்ள [அ] 2-6 பின்பற்றுங்கள்.


[இ] சில வகையான பிசாசை விரட்ட உபவாசம் இருந்து ஜெபிக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்.
அப்படி ஜெபிக்கும்போது நம்முடைய விசுவாசம் கூடும் என்று ஒரு போதகர் சொன்னார். மூன்று நாள் உபவாசம் இருந்து ஜெபித்தபின்பு தேவன் அவரை சாப்பிடு என்றாராம். பின்பு அவர் சாப்பிட்டபின்பு, அன்று இரவு ஒரு வெளிப்பிரசங்கம் செய்துமுடித்தபின், பிசாசு பிடித்த ஒரு பெண் கொண்டுவரப்பட்டாள். அவளுக்குள் இருந்த பிசாசை விரட்டும்போது அந்த பிசாசு: "இந்த வகை பிசாசு உபவாசத்தினாலன்றி போகாது" என்று சொன்னதாம். அப்போது போதகருக்கு ஒரு வினாடி தூக்கிவாரிபோட்டதுபோல் இருந்ததாம். ஆனால், தேவன்தானே என்னை சாப்பிடு என்றார் என்று புரிந்துகொண்டு, பிசாசை நோக்கி: "நீ பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறாய்; இயேசுவின் நாமத்தினாலே புறப்பட்டுப்போ" என்று அதிகாரமுடன் விரட்டினேன், போய்விட்டது என்றார். எனவே பிசாசு விரட்ட உபவாசத்தைவிட விசுவாசம் முக்கியம் என்றார்.

[ஈ] தேவன் சில சமயம் உங்களை 21 நாள் அல்லது 40 நாள் என்று உபவாசம் இருக்கச் சொல்லுவார். (அப்போது இரவுகளில் கூழ் அல்லது கஞ்சி போன்று குடித்துக்கொள்ளலாம். பகலில் தண்ணீர், காபி, டீ குடிக்கலாம். இது என்னுடைய அறிவுரை. தேவன் உங்களுக்கு விசேஷமான கட்டளை கொடுத்திருப்பின் அது இவைகள் எல்லாவற்றையும் தாண்டும்.) ஏனெனில் தேவன் உங்களுக்கு ஒரு விசேஷமான வரம் தருவார். உதாரணமாக பிசாசுகளைதுரத்தும் வரம், வியாதியஸ்தர்களை சுகமாக்கும் வரம், தீர்க்கதரிசன வரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மிக மிக முக்கியமாக நீங்கள் நீண்ட நாள் உபவாசம் இருந்து முடித்தபின்பு மிகப்பெரிய அளவில் சோதனை வரும். உடனே வராவிட்டாலும ஓரிரு மாதங்களுக்குள் வரும். அந்த சோதனை ஜெயித்துவிடுங்கள். பின்பு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு.

[உ] பிரயாணம் செய்யும்போது உபவாசம் இருக்கத்தேவையில்லை. குறிப்பாக: ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு அல்லது நேரம் மாறும் இடங்களுக்கு பிரயாணம் செய்யும்போது.

[ஊ] உடல்நிலை சரியில்லாதபோது உபவாசம் இருக்கத்தேவையில்லை.

[எ] செவ்வாய், வெள்ளி என்பதெல்லாம்
மனிதன் உண்டாக்கிய விசேஷித்த நாட்கள். தேவன் உண்டாக்கிய ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான். மனிதன் தனக்கென்று ஒரு நாளை விசேஷித்துக்கொள்கிறான் என்று வாசிக்கிறோம். (ரோமர் 14:6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான்.)

சிந்தனைக்கு:
- ஏசாயா 58:3-7 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.


Friday, December 10, 2010

65. "காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளது" என்ற செய்தி பற்றி?



பதில்
: காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை அல்ல.

ஒரு சுற்றுலா வழிகாட்டி கிளப்பிய "காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை" என்ற செய்தியால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவியத் தொடங்கினர்.

அது ஒரு இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். அது தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இருக்கும் "யூஸா ஆசாஃப்" என்பவரின்
ரோஸபல் (Rozabal) புனித ஸ்தலம் என்பது தற்போது யாரும் வரக்கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் வருபவர்கள் அங்கு இருக்கும் சமாதியில் எஞ்சியிருப்பதை எடுத்து DNA சோதனை செய்ய விரும்பினார்கள். அங்கிருக்கும் எலும்புகளை எடுத்து கார்பன் தேதி குறிப்பீடு செய்யவும் விரும்பி வேண்டினர்(request).

ஆனால் ரியூட்டர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனத்துக்கு முகமது அமின் ரிங்ஷால் என்பவர் சொல்லும்போது, "நாங்கள் அப்படிப்பட்ட வேண்டுதலை நிராகரித்துவிட்டோம்" என்றார். மேலும், "இப்படி ரோஸ்பல் சமாதியை "இயேசுவின் கல்லறை" என்றழைக்கும் வெளிநாட்டவரின் கூற்றுகள், இஸ்லாமியர்களின் புனித உணர்வுகளை (sentiments) புண்படுத்துகின்றன. எனவே இந்த தொந்தரவுகளையெல்லாம் தவிர்க்கவே நாங்கள் இந்த புனித ஸ்தலத்தை பூட்டிவிட்டோம்" என்றார்.

1973ம் வருடம் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரான அஸிஸ் காஷ்மீரி என்பவர் கிறிஸ்து சிலுவையில் உயிர்பிழைத்து காஷ்மீருக்கு வந்து அங்கே புதைக்கப்பட்டார் என்று வாதம் செய்தாராம். அவருடைய புத்தகத்தில் "யூஸா ஆஸாஃப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்தார்; அவர் ஒரு தூதுவர். அவர் இஸ்ரவேலிலிருந்து வந்தார். அவர் தனது கொள்கைகளை பரப்பும்படி வந்தார். அங்கே வாழ்ந்து மரித்தார். யூஸ் ஆஸாஃப் என்பவர் ஈசா என்னும் இயேசு. யூஸ் ஆசாஃப் என்றால் குணமாக்குபவர்
, போதகர் என்று பொருள்" என்கிறார்.

==> இது பைபிளுக்கு முரண்பாடாக உள்ளது. இயேசு என்றால் ஜனங்களை பாவங்களிலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பவர் என்று பொருள். மேலும் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு, 40 நாட்கள் கழித்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று இரண்டு தேவதூதர்கள் சொன்னார்கள். மேலும் அங்கே இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு
அநேகர் சாட்சிகளாக இருந்தனர். அவர் மீண்டும் வரும்போது, ஒலிவமலையில் வந்து இறங்குவார் என்று மிகவும் தெளிவாகவும் தீர்க்கதரிசனம் உள்ளது.

உள்ளூர்வாசிகளாகிய இஸ்லாமியர்களிடம் விசாரித்தபோது, ரோஸபல் என்னும் புனித ஸ்தலமானது, "உண்மையிலேயே சில நூற்றாண்டுகளுக்கு
முன்பு ஸ்ரீநகருக்கு வந்த இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமியர்களாகிய யூஸா ஆஸாஃப் (Youza Asaf) மற்றும் சையத் நஸீர்-உத்-தின் (Syed Naseer-ud-Din) என்பவர்களின் கல்லறையே என்றனர். சில நூற்றாண்டுகள் எங்கே? 2000 வருடங்கள் எங்கே?

நாளைக்கு
சுற்றூலாப் பயணிகளை இழுக்க "தாஜ்மகாலில் முகமது நபி புதைக்கப்பட்டார்" என்றோ, "இயேசுவின் கல்லறை எகிப்தின் பிரமிடு" என்று புரளி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இயேசு : [சிலுவையிலே] மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோலை உடையவராயிருக்கிறேன் என்றார். சதா காலமும் இருப்பவர் தேவன் ஒருவரே.
இயேசுக்கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எனவே காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறையல்ல.
இயேசுவின் கல்லறை எருசலேமிலே உள்ளது.
அந்தக் கல்லறை இன்றும் காலியாகத்தான் உள்ளது.

Added 27 Dec 2010:
http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.html-ல் நான் மேலும் விவரங்கள் கொடுத்திருக்கிறேன் என்று ஒரு சகோதரர் குறிப்பிட்டார். நன்றி!

Saturday, December 4, 2010

64. அத்திமரத்தை இயேசு ஏன் பட்டுப்போகும்படி செய்தார்?


பதில்:
அந்த மரத்தில் கனிகள் அப்போது இல்லை. மேலும் அக்காலம் அத்திப்பழக்காலமுமல்ல. இருப்பினும் அதை பட்டுப்போகும்படி செய்தார். அத்திப்பழக்காலத்தில் அந்த மரம் அதற்குமுன் காய்த்ததா? என்ற கேள்விக்கு பதில் "தெரியாது". இயேசு அந்த மரத்தை
ஏன் "எருசலேமிலே" பட்டுபோகும்படி செய்தார், ஏன் வேறே ஊரில் அதைச் செய்யவில்லை என்று சற்றே யோசித்துப்பார்ப்போம். என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி இந்த நிகழ்விற்கு சில காரணங்களை நான் வைக்கிறேன்.

[1] லூக்கா 13:6-9, யோவான் 15:2, மத்தேயு 7:19
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.

யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

மத்தேயு 7:19 நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

==> இங்கே கனி கொடாத மரமும், நல்ல கனிகொடாதமரமும் வெட்டப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதுதான் அங்கே நடந்திருக்கவேண்டும். மேலும் இங்கே ஒரு மேலான ஆவிக்குரிய அர்த்தமும் உள்ளது; குறிப்பாக யோவான் 15ம் அதிகாரத்தில் நான் திராட்சைச்செடி நீங்கள் கொடிகள், என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர்(பிதா) அறுத்துப்போடுகிறார். எனவே நாம் கனிகொடுக்கும் ஜீவியம் செய்யாவிடில் அல்லது நாம் கெட்ட கனிகள் கொடுத்தால் நாமும் அப்படியே நிலைபெறமாட்டோம்.

நீ தூரத்தில் ஒரு கனிகொடுக்கும் பெயர் கிறிஸ்தவனாக வாழலாம். இயேசு உன்னிடம் வந்து பார்க்கும்போது உன்னில் ஆவியின் கனி இல்லாமல் (அன்பு,...தயவு, நீடியபொறுமை...இச்சையடக்கம் இல்லாமல் ) இருந்தால், நீ சபிக்கப்பட ஏதுவாக இருக்கிறாய். எனவே நீ மனந்திரும்பு.


[2]
மாற்கு 13:28
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.

==> இந்த வசனம் ஒரு தீர்க்கதரிசனம். பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் யூதர்கள் அத்திமரத்துக்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்பட்டுள்ளனர். அந்த அத்திமரம் பட்டுப்போன நிகழ்வு என்பது யூதர்கள் முழுதும் ("வேர் முழுதும் சீக்கிரமாய் பட்டுப்போயிற்று") சீக்கிரமாய் சிதறடிக்கப்படப்போகின்றனர் என்பதன் அடையாளமான செயல் என்று விளக்கம் கொடுக்கலாம். அப்படியே அவர்கள் சிதறடிக்கப்பட்டபின்பு "இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது" என்பது அவர்கள் மீண்டும் ஒன்றாககூடுவர் என்பதன் முன்னுரைப்பு ஆகும். அநேக வேதபண்டிதர்களும் இதே விளக்கம் கொடுக்கின்றனர். அப்படியே இஸ்ரவேல் என்னும் தேசம் 1948ம் வருடம் உருவானது. இன்னும் சிதறடிக்கப்பட்ட யூதர்கள் பல நாடுகளில் வசிக்கின்றனர். இருப்பினும் அந்த "அத்திரம் துளிர் விட்ட நிகழ்வு" நம்முடைய நூற்றாண்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே "எருசலேமிலே" இயேசு செய்தது அந்த தீர்க்கதரிசனத்திற்கு ஒரு அடையாளச் செயல் எனலாம்.

[3] "இத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்றே" என்ற ஆச்சரியத்துக்கு இயேசு மிகவும் முக்கியமான பதில் தருகிறார்:


இங்கே அத்திரமரம் இறந்துபோனபின் அதை தாண்டிதான் வருகிறார். பாவத்தினாலும் அக்கிரமத்தினாலும் மரித்த நம்மை தேவன் தேடிவந்தார்.

வசனம் 21, 22. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 

[4] இதன் மூலம் அநேக ஞானிகளும், அறிவியல் துறை வல்லுநர்களும் குழம்பி போய் இருக்கிறார்கள். எத்தனை மொழிகளில் வார்த்தைகளை ஒரு செடி அல்லது மரத்துக்கு முன்பாக பேசினாலும் அது சாவதில்லையே, இது எப்படி சாத்தியம் என்று பதில் இல்லாமல் அலைகின்றனர்.  நமது தேவன் மகத்துவமானவர், ஞானமானவர்,  அவருடைய  செய்கைகளையும் ஞானத்தையும் அறிந்துகொள்ள ஒருவராலும் இயலாது!

==> இந்த சம்பவத்தின் மூலம் நாமும் ஒரு மரத்துடன் பேசமுடியும் என்று புரிகிறது. ஒரு மலையை பெயர்ந்து கடலில் தள்ளுண்டுபோ என்பது நிஜத்தில் சாத்தியமில்லை என்று சிலருக்கு தோன்றினாலும், அது இயேசு சொன்னபடிதான்; ஏனெனில் இயேசு பொய் சொல்லவில்லை. இது விசுவாசத்தின் உயர்நிலையைக் குறிக்கிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் எவைகளைக் கேட்பீர்களோ அவைகளைப் பெறுவீர்கள் என்ற வசனமும் இந்த அத்திமர நிகழ்வுக்குபின்புதான் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இல்லாவிடில் ஏது அந்த வசனம்?

சிந்தனைக்கு:
மத்தேயு 6.
காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?
நோவாவின் காலத்தில் எத்தனையோ விலங்குகள் ஜலப்பிரளயத்தில் இறந்துபோயின. ஆனால் அவைகளைக்குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு மரத்தைக்குறித்து உலகில் ரொம்பவேதான் கவலைப்படுகின்றனர். இந்த சம்பவமில்லாவிடில் மலையைப் பெயர்க்கும் விசுவாசத்தின் உயர்வான படியை நான் அறிந்திருக்கமாட்டேன். தேவன் சகலத்தையும் நன்மைக்காகவே செய்கிறார் என்று வாசிக்கிறோமே. ஏனெனில் 2000ம் வருடங்கள் கழித்து இன்றும் அந்த மரம் விசுவாசத்தைக்குறித்து பேசப்படும் ஒரு சின்னமாக உள்ளதே என்பதில் அந்த மரத்துக்கு அது ஒரு சிறப்புதான்!