Wednesday, March 30, 2011

71. நாம் ஒரு சபைக்கு போய்கொண்டு வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாமா? இப்படி நாம் போனால் ஆவிக்குரிய வாழ்கையில் ஏதாவது தடங்கல் ஏற்படுமா?

இதற்கு பொதுவான பதில் போகலாம், ஆனால் எந்த சபைக்கு போகிறோம் என்பது முக்கியம். ஏனெனில் சில வேதபுரட்டர்கள் இருக்கும் இடங்களுக்கு போகக்கூடாது. பைபிளுக்கு முரண்பாடாக இருப்பின் அந்த சபைக்கு செல்லவேண்டாம்.

சில இடங்களில் "செல்வச் செழிப்பு பற்றிய சுவிசேஷம் (Prosperity Gospel)" போதிக்கின்றனர். இப்படிப்பட்ட போதர்களை நாம் தொலைக்காட்சிகளில் (குறிப்பாக அமெரிக்காவில்- Joel Osteen ஜோயல் ஆஸ்டீன், ) காணலாம். இவர்கள் "கர்த்தர் உங்களை பணக்காரராக்குவார்" என்ற ஒரே கருத்தை மையமாக வைத்து போதிக்கிறார்கள். இரட்சிப்பைக்குறித்து பேசுவதில்லை. சரியாகச் சொன்னால்: இவர்கள் தங்களது பரமதரிசனத்தை தொலைத்தவர்கள். இவர்கள் கிறிஸ்து இயேசுவின் சிந்தையை இழந்து தங்களுக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்கிறார்கள். பேதுரு சொல்லும்போது (II பேதுரு 2:1) கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள் என்று சொல்கிறார்.


உதாரணமாக, சில சபைகளில் குறிசொல்வதற்கு தீர்க்கதரிசிகள் என்ற பெயரில் ஒருவரை அழைத்துவந்து ஒருவருடைய வாழ்வில் இருந்த/இருக்கிற (பிறந்ததேதி, விலாசம், தொழில் போன்ற) காரியங்களைக்குறித்து சொல்லுகின்றதான ஒரு மாயையில் சிக்கியிருக்கிறார்கள். சுவிசேஷம் அங்கே இல்லை. தங்கள் பெயரை பெருமைபடுத்தும் மனிதர்கள் அவர்கள். குறிப்பாக ஆப்பிரிக்காவில் பில்லிசூனியம் மாந்தரீகம் தலைவிரித்து ஆடுகிறது, அங்கே அநேக போதகர்கள் இப்படி குறிசொல்வதில் பேர்பெற்று இரட்சிப்பு, பாவம் குறித்து ஏதும் சொல்லுவதில்லை. அவர்கள் தேவசித்தம் செய்யாத கள்ளதீர்க்கதரிசிகள். கடைசி நாட்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று இயேசு முன்கூட்டியே சொன்னவர்கள்.

திரித்துவ தேவனை மறுதலிப்பவர்கள் சபைக்கு செல்லவேண்டாம். (Jehovah Witness - இவர்கள் மிகாவேலும் இயேசுவும் ஒருவரே என்றும், இயேசு என்பவரும் கடவுள்களில் ஒருவர், இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, ஒரு கம்பத்தில் மரித்தார் என்று பைபிளுக்கு முரண்பாடாக சொல்பவர்கள்.)



இன்னும் சில போதகர்கள் தொலைக்காட்சிகளிலேயே புகைபிடித்து (Cigar), சிலர் எப்போதாவது குடித்தால் தவறல்ல என்றும் பிரசங்கம் செய்கின்றனர். சிலர் சபைக்கு கூட்டத்தை இழுக்க அங்கேயே பந்தயம் கட்டி விளையாட்டுகள், ஆடையலங்கார போட்டிகள்... போன்றவைகளுக்கு இடம் கொடுக்கின்றனர். அங்கே சென்றால் இது சபையா அல்லது கடைத்தெருவா (Shopping Mall) என்று தோன்றும் அளவுக்கு உலகம் உள்ளே நுழைந்துள்ளது. ஷாப்பிங் போவதற்காக சபைக்கு போகிற சிலர் ஒருபுறம் இருக்க ஜனங்களுக்கு எதற்கு சபைக்கு வருகிறோம், நாம் ஏன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம், நம் வாழ்வின் நோக்கம் என்ன, என்பதெல்லாம் மறந்து உலகத்தார் போல இருக்கும் இடங்களும் உண்டு. ஒருமுறை அமெரிக்காவில் அப்படிப்பட்ட இடம் ஒன்றுக்கு தற்செயலாய் சனிக்கிழமை சென்று, இருதயத்தில், ஜனங்கள் இப்படி தரிசனம் இல்லாமல் சீர்கெட்டுபோகிறார்களே என்று மிகவும் வருத்தப்பட்டேன்.



அப்படிப்பட்ட இடங்களை விட்டு விலகவேண்டும் என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.  இயேசுவைக் குறித்து பார்க்கும்போது: இவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன். அப்படிப்பட்ட தேவன் பூமியில் எப்படிப்பட்ட இடத்தில் பிறக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பல பதில்கள் கொடுத்து, அதில் ஒன்றை தேர்வுசெய்யச் சொன்னேன்: இவர் ஒரு பளிங்கினால் உண்டாக்கப்பட்ட மாளிகையில் வைரம், இரத்தினம் என விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்ட ஒரு அறையில் பிறந்திருக்கவேண்டும் என்று எல்லாரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இவர் தான் பிறக்க தேர்வு செய்த இடம் என் இருதயத்தை தொட்டது! வானங்கள் மற்றும் பூதலத்தின் மன்னாதி மன்னவன் பாதங்கள் தொட்ட இடம், சத்திரத்தில் இடமில்லை, எனவே ஒரு தொழுவத்தில் [Manger - கால்நடைகளுக்கு தீவனம் போடும் இடம்] பிறக்கிறார். தனது பிறப்பில் தாழ்மையின் உச்சத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.  சீஷர்களுக்கு எளிமையை சொல்லிக்கொடுத்தார்: "வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்... உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார். காரியம் இப்படியிருக்க "இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களை பணக்காரராக மாற்றுவார்" என்ற கருத்தையே பிரசங்கம் செய்வது தவறு. கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதத்தை தருவார். இது உண்மைதான். ஆனால் அதையே மையமாகவைத்து பிரசங்கம் செய்தால். சுவிஷேசம் அதுவல்ல. சுவிஷேசம் என்பது யோவான் 3:16 - தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல், நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். சிலுவைதான் சுவிசேஷத்தின் மையப்பகுதி, அது தவிர வேறு காரியங்களைமட்டும் பேசுபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.எனவே தவறாக பிரசங்கம் செய்யும் இடங்களுக்கும் சபைகளுக்கும் செல்லவேண்டாம்.

நாம் வேறு சபைக்கு போகவேண்டும் என்றால், ஒன்று அந்த சபை இதைவிட ஆவிக்குரிய காரியங்களில் மேலாக இருக்கவேண்டும், அல்லது தற்போது இருக்கும் சபையில் ஏதோ உங்களுக்கு பிடிக்கவில்லை. அல்லது சில சபைகளில் சமுகசேவை, சுவிசேஷ ஊழியம் சிறப்பாக செய்கின்றனர். அப்படிப்பட்ட காரியங்கள் சிலரை ஈர்க்கலாம். அப்படி சேர்ந்து சுவிசேஷம் ஊழியம் செய்யலாம்.
தேவனுடைய வரம் பெற்ற போதகரை சந்திக்க போவது தவறல்ல.  

 உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் தடங்கள் வருமா வராதா என்பது செல்லும் சபையைப் பொறுத்தது.

தூரமாக பிரயாணம் செய்யும்போது (இடம்/மொழி தெரியாத இடங்கள்) வேறு சபை ஆராதனைகளுக்கு போகலாம். ஏனெனில் நமக்கு ஆராதனைக்கு செல்வது முக்கியம்; Billy Graham என்பவரின் சுவிஷேச பிரசங்கம் San Diego-ல் ஒரு விளையாட்டு மைதானத்தில்(Stadium) வைத்திருந்தபோது ஒருநாள் போய்வந்தேன்.

மேலும் இது சம்பந்தமாக வெறொரு கேள்வி ஏற்கனவே கேட்கப்பட்டது; அதை கீழே உள்ள இணைப்பில்(link) Part [B]
ல் காணலாம்.
http://tamilbibleqanda.blogspot.com/2009/10/water-baptism.html

எபேசியர் 4:14 "நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்" என்று வாசிக்கிறோம்.
==> ஜாக்கிரதையாயிருக்கவேண்டும்.

எபிரெயர் 5: 12-14 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
==> ஆழமான சத்தியங்களை போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள். சத்திய வசனத்தில் தேறுங்கள். உதாரணமாக:

  • [பாவத்தினின்று] இரட்சிப்பு
  • பிதா, குமாரன், பரிசுத்தாவி ஞானஸ்நானம்
  • அந்நியபாஷையுடன் பரிசுத்தாவியின் அபிஷேகம்
  • மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தல்
  • மாறுபாடான உலகினின்று வேறுபட்டு ஜீவித்தல்
  • பரிசுத்தமாக்கப்படுதல்
  • ஜெயமுள்ள வாழ்க்கை (பாவம், பிசாசு, உலகம்)

எனவே பதிலானது எப்படிப்பட்ட சபை என்பதைப் பொறுத்தது. அடிக்கடி ஒரு சபை என்று செல்லாமல் இருங்கள். நன்றாக ஜெபித்து தேவனிடம் கேட்டு நிலைத்து இருங்கள். அவர் நல்ல மேய்ப்பன். உங்களை வழிநடத்துவார்.

தியானிக்கவும்:
மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

8 comments:

blesssoft said...

prosperity is the will of God.so i cant accept this

Sham said...

I agree that we should not listen to the garbage gospels such as prosperity gospel.

marie mahendran said...

brother ungal padil arumai...
anugum kalvigal erugu..
my mail deu
s_m_ran@yahoo.com
mariemahen@gmail.com

frpm srilanka
marie mahendran

madipakkam vetriselvan said...

bible virpanai podhagargalaal appavigal sikki thavikiraargalae avargaluku maatru vayi yenna

Unknown said...

ஆழமான சத்தியங்களை போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள். சத்திய வசனத்தில் தேறுங்கள்.
பந்தொகோஷ்த சபை பொங்க

Unknown said...

சத்திய வசனத் போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள்

Unknown said...

ஆழமான சத்தியங்களை போதிக்கும் சபைகளுக்கு செல்லுங்கள்

Anonymous said...

Prosperity is not the will of god...Preaching Gospel is the will of god..
Tell me one verse spoken by JESUS regarding your worlds prosperity...
Dont get deceived by the prosperity..

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.