கேள்வி: அந்நிய பாஷை பேசலாமா ? அந்நிய பாஷை குறித்து வேதம் என்ன சொல்கிறது ? பேசினால் அதன் பொருள் சொல்ல வேண்டுமா ? 1 கொரிந்தியர் 14:6 விளக்கவும் ?
பதில்:
அந்நிய பாஷை பேசவேண்டும். "புதிய ஏற்பாட்டில்" பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு அடையாளமாக இப்படியே அநேக இடங்களில் வாசிக்கிறோம். நீங்கள் உன்னதத்தின் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் காத்திருங்கள் என்று இயேசு சொல்லிவிட்டுச் சென்றபின்பு, அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் இப்படியாக வாசிக்கிறோம்: பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
பேதுரு கொர்நேலியு சம்பவம்:
அப்போஸ்தலர் 10:44-46 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
பவுல்:
அப்போஸ்தலர் 19:6 பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்
சில சபைகளில் அந்நியபாஷைகளில் பேசும் அனுபவம் இல்லை. அவர்கள் நீங்கள் எப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களோ அப்பொழுதே பரிசுத்தாவியினை பெற்றுவிட்டீர்கள் என்று சொல்லுகின்றார்கள். இது தவறாகும்.
ஜெபிக்க ஆரம்பித்தால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நியபாஷைகளில் பேசவேண்டும். அப்படி அந்த அனுபவம் இல்லையெனில் ஒரு ஆவிக்குரிய சபைக்கு செல்லுங்கள். அநேகர் தேவனின் வல்லமையினால் தொடப்படும்போது தங்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் போக நேரிடும். நான் முதன் முதலில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற நாள் மே மாதம் முதல் தேதியாகும். இந்தியாவில் அன்று நடந்த ஜெபக்கூட்டத்துக்கு உபவாசத்துடன் சென்றிருந்தேன். முழங்காலில் நின்று பாடல்களை உற்சாகமாக கைகளைத்தட்டி பாடிக்கொண்டிருக்கும்போது அந்த உன்னதமான ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது நான் தேவனுடைய வல்லமையினால் துள்ளி நிரப்பட்டவனாக வேறெங்கோ சென்றுவிட்டேன். கண் திறந்தபோது நான் இருந்த இடம் ஒரு 15 அடி தள்ளி இருக்கும். நாவு வேறு ஏதோ பாஷையில் பேசியது. இதுவே பரிசுத்த ஆவி பெற்ற ஒருவருக்கு அடையாளமாகும்.
என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம்:
2000ம் வருடம் சில நாட்களாக ஒரு மனதில் ஒரு சந்தேகம். தேவன் என்னை கண்டுகொள்வது இல்லையே, அப்படியானால் நான் ஒருவேளை தேவனுடைய பிள்ளை இல்லையோ என்று ஒரு எண்ணம் என்னை வாட்டியது. அடுத்த நாள் (அமெரிக்காவில்) நான் வழக்கமாக வேலைக்குச் செல்ல ஜெபித்துவிட்டு என்னுடைய காரில் சென்றேன். பொதுவாக தெற்கு கலிஃபோர்னியாவில் ரோட்டின் ஓரத்தில் ஜனங்களை அதிகமாக காணமுடியாது (எல்லாரும் காரில் செல்வதால்). ஆனால் அன்று மேகமூட்டமாக இருந்தது. ரோட்டின் ஓரத்தில் ஒருவர் நன்கு உடையணிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ உதவி தேவைப்படுமோ என்று எனக்கு தோன்றியது. அவரும் தனக்கு முன் செல்லும் வாகனங்களை ஏதோ எதிர்பார்ப்புடன் நோக்கினார். நான் உடனே காரை நிறுத்தி அதை பின்னே-செல்லும்படி(Reverse) செய்து அவரிடம் நிறுத்தி "Do you need any help?" (ஏதேனும் உதவி தேவையா?) என்று கேட்டேன். அவர் ஆம் வீட்டுக்கு போகவேண்டும். பேருந்து இனி வர மணிநேரம் ஆகும் என்றார். உடனே நான் வாருங்கள் நான் கொண்டுபோய்விடுகிறேன் என்றேன். நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, தான் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் செய்பவர் என்று சொல்லிவிட்டு, என்னுடைய காரில் இருந்த "God cares for you" (தேவன் உங்களைக் குறித்து அக்கறை உள்ளவராயிருக்கிறார்) என்று பெரிதாக ஒட்டப்பட்டிருந்த வாசகத்தைப் பார்த்து, நீங்கள் தேவனுடைய பிள்ளையா என்றார். நான் ஆம் என்றேன். உடனேயே அவருக்கு ஒரு மகிழ்ச்சி, உடனே தன்னுடைய இரு கரங்களை உயர்த்தி தேவனை துதிக்க ஆரம்பித்தார். அடுத்த சில வினாடிகளில் அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி அந்நிய பாஷைகளில் பேசினார். எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. மேலும் அவர்: தேவனுடைய பிள்ளை ஒருவரை கொண்டுவந்து எனக்கு உதவிசெய்யும் ஆண்டவரே என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்ததாக கூறினார். தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு வந்ததாகவும் கூறினார். ரஷ்யாவிலே வீட்டிலே நானும் என் மனைவியும் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அந்நிய பாஷையுடன் பெற்றோம் என்றார். ரஷ்யாவில் யாரும் இவருக்கு போய் ஜெபிக்கவில்லை தேவனே இவரை பரிசுத்த ஆவியால் நிரப்பியிருக்கிறாரே என்று எண்ணி ஆச்சரியமடைந்தேன். நானும் நாங்கள் எப்படி இந்துக்களாயிருந்து இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தோம் என்று எங்களுடைய சாட்சியையும் சொன்னேன்... நான் அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்து பைபிளை திறந்து இவைகளை நினைத்துக்கொண்டிருக்கும்போது என்னுடைய விழிகளில் சில கண்ணீர் துளிகள்; காரணம் தற்செயலாக வேதத்திலிருந்து தேவன் ஒரு வசனத்தைக் கொடுத்தார் "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்". (ரோமர் 8:14) இதுவும் தேவன் பேசும் வழிகளில் ஒன்று.
இங்கே முதலாவதாக என்னுடைய சந்தேகத்தை நீக்கும்படி, நான் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன் என்று காட்டும்படி ஒரு தேவனுடைய பிள்ளைக்கு நான் உதவியிருக்கிறேன். இரண்டாவதாக ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்து அந்நிய பாஷைகளில் பேசுகிறார். பரிசுத்த ஆவியை அவர் பெற்றிருந்தார் என்பதற்கு அவர் அன்று அந்நியபாஷையில் பேசியதே எனக்கு அடையாளமாகும் என்று நான் ஒரு உண்மை சம்பவத்தை இன்று முன்வைக்க முடிகிறது.
ஏசாயா 28:11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். என்று வாசிக்கிறோம். இதுவே பரிசுத்த ஆவியின் பொழிந்தருளுதலின் முன்னுரைப்பு அல்லது தீர்க்கதரிசனம் ஆகும். மேலும் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசி சொன்னபடி இன்றும் நடை பெறுகின்றது. சீனாவில் அநேகர் பரிசுத்த ஆவியில் நிரம்பி அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
அடுத்ததாக அந்நியபாஷையில் பேசினால் அதற்கு அர்த்தம் சொல்லவேண்டுமா? அநேகமாக நீங்கள் பேசும் அந்தபாஷைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. (அதான் அந்நியபாஷை ஆயிற்றே). அருகில் இருக்கும் ஒருவருக்கு அதின் அர்த்தம் தெரிந்தால் அவர் சொல்லலாம். வியாக்கியானம் (interpretation) என்னும் வரம் இருப்பவர்களுக்கு அதின் அர்த்தம் தெரிய வாய்ப்புகளுண்டு. 1 கொரி 14:6 ல் நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என்று பவுல் சொன்னதின் அர்த்தம் நீங்கள் பேசுவது புரியாது எனவே அதினால் மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லை, உங்களுக்கோ பிரயோஜனம்தான்; உங்களுடைய உள்ளான மனுஷன் பெலப்படவும் தேவனுடைய ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படவும் (Sanctification through the Spirit) அவசியம்தான்.
எனவே அந்நிய பாஷையில் பேசவேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுவே முதன்முதல் பரிசுத்தாவி பெற்ற அனைவருக்கும் உண்டான அனுபவம் என்று வேதத்தில் மேலே வாசித்ததுபோல், இன்றும் நீங்களும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும்.
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க ஆவியினால் பிறக்கவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறவேண்டும். கர்த்தருடைய வருகையில் போகவும் பரிசுத்த ஆவியில்ன் அபிஷேகம் பெற வேண்டும் . ஏனெனில் "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்" (எபேசியர் 4:30 )என்று வாசிக்கிறோமே. மேலும் "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்..." என்றும் வாசிப்பதால், நம்முடைய சரீரம் கண்ணிமைக்கும் பொழுதில் மறுரூபமடைய பரிசுத்த ஆவி அவசியம்.
-------
Part II (updated 28 Apr 2010)I கொரி 12:30 ல் "எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? " என்று வாசிக்கிறோம். மேலே சொல்லப்பட்டது ஆவியின் வரங்கள் (Charisma) ஒன்பதில் ஒன்றாகிய பற்பலபாஷைகளை பேசுவதைக்குறித்து (diverse of tongues) சொல்லப்பட்டுள்ளது. 1 கொரி 12 முழுவதிலும் Charisma என்னும் கிரேக்க வார்த்தையும், பரிசுத்த ஆவியின் வரம் என்று அப் 2:38ல் dorea என்னும் கிரேக்க வார்த்தையும் பவுல் பயன்படுத்தியுள்ளார். எனவே எல்லாருக்கும் ஒன்பது வரங்களும் உண்டா? ஆவியானவர் தமக்கு இஷ்டமானபடியே அளந்து கொடுக்கிறார் என்று சொல்கிறார். எனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் வரங்களில் ஒன்றாகிய diverse of tongues என்பதைப்பற்றி சொல்லப்பட்டுள்ளது.பரிசுத்த ஆவியின் வரத்தைப் (dorea) பெறும்போது அதற்கு அடையாளமாக அந்நிய பாஷைகளில் நீங்கள் பேசுவீர்கள். ஆனால் அந்த ஆவியிலே நீங்கள் நிரப்பபடும்போது ஆவியானவர் உங்களுக்கு ஆவியின் வரங்கள் (charisma) ஒன்பது என்பதில் ஒன்றாகிய பற்பல பாஷைகளில் பேசும் வரத்தை உங்களுக்கு தரமுடியும். இதையும் அந்நியபாஷையையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.பவுல் பரிசுத்த ஆவியில் நிறையும்போது அந்நியபாஷையில் பேசினாரா என்று கேட்கும்போது, ஆனால் "உங்கள் எல்லாரைக் காட்டிலும் அதிமாக அந்நியபாஷை பேசுகிறேன் என்கிறார்" (1 கொரி 14:18)
தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்தாவி என்று நாம் வாசிப்பதால் அனைவரும் தேவனிடம் கேட்டு அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்பதில் "நவமான பாஷைகளைப் பேசுவார்கள்" என்றும் வாசிக்கிறோம்.
1. முதல்படியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது ஏதோ ஒரு வல்லமை [மின்சாரம்போன்றோ அல்லது தங்கள் மயிர்சிலுக்கும் ஒரு அனுபவம் போன்றோ] தங்களை தொடுவதை உணருகின்றார்கள்.
2. அடுத்த நிலையாக அந்நியபாஷைகளை பேசுகின்றார்கள்.
ஒருவர் தன்னுடைய வாழ்வில் பரிசுத்தாவியினால் நிரம்பி அந்நியபாஷை பேசும் அனுபவம் இல்லாதவராயின் அவர் பரிசுத்தாவியினை பெற்றிருக்க வாய்ப்பில்லை. இப்படி அந்நியபாஷைபேசும் அனுபவமில்லாதவர்கள் இக்கருத்துக்கு மறுப்புதெரிவிக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல ஆவிக்குரிய சபைக்கு சென்றால் அங்கே நான் சொல்லும் அனுபவங்களை காணவும் உணரவும் பெறவும் முடியும்.
ஒரு ஆராய்ச்சி இங்கே செய்தியாக :
.
5 comments:
Please reply, Is it true, that those who got the anointing of the Holy Spirit can only go to heaven. And what about other christians who live holy life without the anointing of the Holy Spirit.
Joseph.
நன்றி சகோதரரே , உங்களுடைய பதில்கள் மிக சிறப்பாகவே அமைகின்றன ,மேலும் எனக்கு BLOGSPOT இல் இரண்டு தளங்கள் தான் பிடிக்கும் ஒன்று
http://tamilbibleqanda.blogspot.com மற்றொன்று http://jjministries.blogspot.com/, நீங்கள் சிறப்பாக பதில் தருகிறீர் ,கூடி ஊழியம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறதே , ஏன் நீங்கள் இரண்டு பெரும் சேர்ந்து ஊழியம் செய்ய கூடாது , இது என்னுடைய பணிவான விண்ணப்பம் , மிக்க நன்றி BROTHER
நன்றி சகோதரரே. நான் இதுவரை அபிஷேகம் பெறவில்லை ஜெபத்தில் கேட்கிறேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சில பாஷ்டர் என்னை ஆண்டவர் தொடுகிறார் என்கிறார்கள் என்னால் உணரமுடியவில்லை.எனக்கு ஜீவனை கொடுத்தவர் இயேசப்பா அவரின் அன்பையும் அபிஷேகம் பெற என்ன செய்ய வேண்டும். உதவி செய்யுங்கள்.
நானர சில கேள்விகள் உங்களிடம் கோ
கேட்கலாமா
Go to www.tamil-bible.com and click thre contact on the top. Thanks.