Thursday, June 10, 2010

41. பெண்கள் தங்கம் அணிவது தவறா? மூக்குத்தி அணிவது தவறா?

கேள்வி: பெண்கள் தங்கம் அணிவது தவறா? அதே தங்கத்தில் இந்தியாவின் கலாச்சாரம் நிறைந்த சின்னம் இருந்து அதை நாம் அணிவது தவறா? உதாரணமாக ஒரு மோதிரத்தில் கோபுரம் இருந்து அதை நாம் அணிந்தால் தவறா? கர்த்தருக்கு நாம் ஊழியம் செய்யும்போது அதை ஏன் கூடாது என்று சொல்கின்றார்கள். நான் பிறப்பில் இந்தியனாக இருந்தாலும் நான் கர்த்தருக்கு விசுவாசமாக இருக்கிறேன். மூக்குத்தி போடுவது தவறு என்று சொல்கிறார்கள். எனக்கு இதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. விளக்கம் தாருங்கள்.

பதில்:இந்த தலைப்பும் ஒரு விவாதத்திற்கு உரிய தலைப்பாகும்.

கிறிஸ்தவர்களில் நகை அணிபவர்கள் மற்றும் நகை அணியாதவர்கள் என்று இருக்கின்றார்கள்.
பழைய ஏற்பாட்டில் யாக்கோபின் குடும்பத்தார் குறித்து அறிவோம். அவன் தாயாகிய ரெபெக்காள் குடும்பத்தில் சிலைகளை வணங்கும் பழக்கம்,
நகை அணியும் பழக்கம் இருந்தது. ரெபெக்காள் ஈசாக்குக்கு மனைவியாக வரும்போதுகூட அவளுக்கு காதணிகளும், கடகங்களும் வெகுமானமாக கொடுக்கப்பட்டது. யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானின் பெண்களை மணம் முடிக்கிறான். ஒரு நாள்...

ஆதியாகமம் 35:1-4:
1. தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
2.அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
3. நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
4. அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.


இங்கே யாக்கோபுக்கு தேவன் தரிசனமாகி பேசியபின்பு, தேவனுக்கென்று தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு அந்நிய தெய்வங்களையும், காதணிகளையும் புதைத்துப்போட்டார்கள். நாமும் கர்த்தருக்கு பரிசுத்தமாயிருக்கவேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டு காலத்தின் யாக்கோபுக்குமேல் இன்னும் எப்படியெல்லாம் பரிசுத்தமாயிருக்கவேண்டும்?

ஆனால் இந்த இஸ்ரவேல் ஜனங்கள் வரலாற்றில் இவர்கள் எகிப்துக்குப் போய் அங்கே 430 வருடம் எகிப்திய கலாச்சாரத்தில் இருந்து பின்பு புறப்பட்டு வரும்போது தேவன் யாத்திராகமம் 11:2ல் "இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல்" என்றார். இங்கே பின்பு வனாந்தரத்தில் அவர்கள் செய்த
ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்காக பொன், வெள்ளியை முன்பே தேவன் தயார் செய்தார். மேலும், யாத்திராகமம் 20:23ல் "வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்." என்றார்.

இந்த உலகத்தில்:

இந்தியா, அரேபியா தேசங்களில் தங்கம் நகைகளை பெரிதாக விரும்பி அணிகின்றார்கள். அவர்களுக்கு ஆசை பேராசையாக உள்ளது.
அமெரிக்காவிலும் (ஐரோப்பாவிலும்) பொதுவாக தங்கம் அணிவது இல்லை. இங்கே அமெரிக்காவில் இருப்பவர்களில் பெரும்பாலானோரின் காதுகள் காலியாகவே உள்ளன. ஆனால் அவர்கள் முத்து, வைரம் மற்றும் விலையேறப்பெற்ற கற்கள் என்று அணிகின்றனர். நாம் வெளிநாடுகளில் அநேக தங்க நகைகளை அணிந்து சென்றால் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவே தோற்றமளிப்போம். அவர்களும் நம்மை ஒரு வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இருப்பினும் இவர்களின் மத்தியிலும் ஒரு சிறு அணிகலன்களை நாக்கு, காதுக்கு பின்னே, உதடு, வயிறு, நெற்றி, தாடை என்று குத்திக்கொள்ளும் விநோதமான பழக்கம் சிலர் (விசேஷமாக இளைஞர்கள்) மத்தியில் உள்ளது. நம்மில் அநேகருக்கு இதைப் பார்த்தால் பிடிக்காமல் போகும். படத்தில் இடது ஒருஆண், வலது ஒருபெண். இன்னும் இதைவிட கொடூரமாக குத்திக்கொள்ளும் ஆட்களும் உள்ளனர்.
லேவியராகமம் 19:28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.


ஆப்பிரிக்காவில் பெண்களிடம் "மயிரைப் பின்னுதல்" என்னும் பழக்கம் உள்ளது.
இப்பழக்கம் தற்போது உலகின் எல்லா இடங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் சிலர் பாசிகளை கோர்த்து முடிகளில் அணிகின்றனர். கழுத்துகளில் அநேக வளையங்களை மாட்டிக்கொள்கின்றனர்.

புதிய ஏற்பாட்டில்:
பேதுரு, தீமோத்தேயு மற்றும் பவுல் ஆகியோர் அலங்கரிப்பினைக் குறித்து சொல்கின்றனர்.

I பேதுரு 3:3-5 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

I
தீமோத்தேயு 2:9,10 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.

I கொரிந்தியர் 12:23,24 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.

1. தங்கத்தினை ஒரு முதலீடுக்காக (Investment) வீட்டில் வாங்கி வைத்திருக்கலாம். தவறில்லை.

2. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்படி வெளிப்படையான ஆடம்பரத்தினால் தங்களை அலங்கரிக்கக்கூடாது. தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. லூக்கா 9:3 "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்." தேவனுக்கு ஊழியம் செய்ய ஆடம்பரம் தேவையில்லை என்பது இங்கே கருத்தாகும்.

3. நகையணியும் கலாச்சாரத்தில் ஒரு பெண் தேவனைப் பின்பற்றும்போது அவரது கணவர் உலகத்தாராக இருந்தால் அந்தப் பெண் சில பிரச்சனைகளைத் தவிர்க்கும்படி அவைகளை அணிந்திருக்கலாம்.

4. திருமணம் ஆனதற்கு ஒரு மோதிரம்தான் (Wedding ring)
அடையாளம் என காரணம் இருந்தால் அதை அணிந்திருக்கலாம்.

5. கலாச்சாரத்தைக் காரணம் காட்டி கோபுரம், பாம்பு, கோவில், சிலுவை, இயேசுவின் படம் என்று எல்லாம் மோதிரம் அணியக்கூடாது. அடுத்து ஒரு சிறு கோபுரம் கட்டலாமே என்ற பேச்சுக்கு சிலர் போனாலும் போவார்கள். பழைய ஏற்பாட்டில் பொன்னால் செய்த கன்றுக்குட்டி சம்பவங்களும் அதின் விளைவுகளும் போதுமே.
6. தேவனைக் காட்டிலும் எதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோமோ அது நமக்கு விக்கிரகமாகும். தேவனுக்கும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வரும் அது ஒரு நிலையில் அதிக கவனத்தை ஈர்ப்பதால் விக்கிரகமாகிவிடுகிறது.
மூக்குத்தியும் தேவையில்லை. மூக்குத்தி பற்றி இரண்டு இடங்களில் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏசாயா 3-லும், நீதிமொழிகள் 11:22ல் "மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்" என்றும் வாசிக்கிறோம்.

அழகாக தோற்றம் அளிக்கவேண்டும் என்ற ஆசையே இவையனைத்திற்கும் காரணமாகும்.

ஆனால் இயேசுவைக் குறித்துச் சொல்லும்போது "நாம் விரும்பத்தக்க ரூபம் அவரில் இல்லை" என்று ஏசாயாவில் வாசிக்கிறோம். "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை" என்று சொல்லி எளிமையான வாழ்வை வாழ்ந்து காட்டியவர் இயேசு.


நகை அணிந்து காது, கைகளை திருடர்களால் இழந்தவர்கள் அநேகர். சிலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் அங்கே திருடர் கண்ணமிடுவதுமில்லை, பூச்சி அரிப்பதுமில்லை. அதாவது ஏழைகளுக்கு உதவவேண்டும், அப்போது நாம் பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்கலாம் என்று இயேசு ஒரு மிகுந்த ஆஸ்தியுள்ள ஒருவனுக்கு "உனக்குள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைக்குக் கொடு. பின்பு நீ என்னைப் பின்பற்றி வா. அப்போது பரலோகத்திலே உனக்கு மிகுந்த பலன் உண்டாயிருக்கும் " என்
று சொன்னதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

நீங்கள் மற்றவர்களுக்காகவா அல்லது உங்களுக்காகவா... யாருக்காக இவைகளை அணியவேண்டும் என்று இருக்கிறீர்கள் என்று பார்த்தால் உண்மையான காரணம் வெளிவரும். நகைகளின் மேலுள்ள ஆசையா? இல்லை எல்லாரும் அணிகிறார்கள் எனவே நானும் அணியவேண்டும் என்ற காரணமா? தான் இன்னும் அழகாக தொற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையா?

இயேசு சொன்னார்:
மாற்கு 7:22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

பவுல் சொன்னார்:
I கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
காந்தியடிகள் வெளிநாட்டில் கோட்/சூட் என்று அணிந்து படித்தார். தன்னுடைய வாழ்வின் பிற்பகுதியில் ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு எளிய உடைக்கு மாறினாரே. ஏன்?

நாம் மூக்குத்தியா, தோடா, மோதிரமா என்று இங்கே கேட்பது, அநேகர் பசியினால் சாகும்போது வசதியுள்ளவர்கள் சிலர் பிரியாணியா, வறுவலா என்று கேட்பது போலாகும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்று
வாசிக்கிறோமே.
கர்த்தருடைய வருகைக்கு போகும் கூட்டத்தார் கறை (spot), சுருக்கம் (wrinkle) இல்லாமல் இருக்கவேண்டும் என்று வேதத்தில் ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு சொன்னார் "
நான் இவ்வுலகத்தான் அல்லாதது போல நீங்களும் இந்த உலகத்தார் அல்ல". இந்த உலகமும் அதின் வேஷமும் கடந்து போகும். இவைகளால் நம்மை கறைப்படுத்தாமல் இருப்பது மேலான ஜீவியம் ஆகும்.

4 comments:

colvin said...

அருமையான விளக்கங்கள். தமிழ் கத்தோலிக்க பெண்கள் தாலி அணியும் பழக்கம் மிக்கவார்களாகவும் உள்ளனர். இது தேவாலங்களிலேயே சடங்காக நடப்பதால் இதுவும் தவறான காரியமாகது என்பது என் எண்ணம்.உங்கள் கருத்தறிய ஆவல்.

கொல்வின்
இலங்கை

money4u said...

Yes personally i prefer to "not wear" jewels. But when it comes to the critical situation of being surrounded with gentiles and with unsaved husband, we have no potion to say no. But when it centers on show up and token of pride and beauty, its good to condemn.

Anonymous said...

நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்

ஸ்வீட்டி said...

பெண்கள் அழகு நிலையம் செல்லலாமா ?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

New comments are not allowed.