பதில்:
இல்லை. சிலர் செலுத்தினான் என்று தவறாக சொல்கின்றனர்.
முன்னோட்டமாக: ஆபிரகாமைத் தேவன் பரீட்சித்தார் (trial). அவனிடம் ஈசாக்கை மோரியா மலையில் பலியிடு என்று சொல்லி அவன் கீழ்ப்படிகிறானா என ஒரு பரீட்சை வைக்கப்பட்டது. ஆனால் ஒரு ஆட்டை தேவன் புதரில் தயாராக வைத்திருகிறார். தேவன் ஆபிரகாமை தடுத்தி நிறுத்தினார் என்று வாசிக்கிறோம். இது நமக்கு தேவன் யெப்தாவை அப்படி செய்ய அனுமதித்திருக்கமாட்டார் என்பதற்கு மிகவும் சிறந்த ஆதாரம்.
யெப்தாவின் மகள் சொன்னதை வாசிப்போம்:
நியாயாதிபதிகள் 11:37-40. "பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி, இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று."
இங்கே அவள் பலியிடப்பட்டாள் என்று எங்குமே சொல்லப்படவில்லை. யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளுடன் தன் கன்னிமைக்குறித்துதான் துக்கம்கொண்டாடினாள், தனக்கு வரப்போகும் மரணத்தை நினைத்து அல்ல என்பது அவள் அங்கே மரிக்கவில்லை என்று காட்டுகிறதல்லவா?
டேக்ஸ் என்னும் பைபிள் விளக்கவுரையில் (Dakes annotated bible) இப்படியாகச் சொல்கின்றது: "அவளுடைய வேண்டுதல் என்னவெனில் தனக்கு இரண்டுமாதம் கன்னிமை நிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகளுடன் துக்கம்கொண்டாடவேண்டும் என்பதாகும். ஏனெனில் அவள் யெப்தாவுக்கு ஒரே குமாரத்தி என்பதால் யெப்தாவின் வம்சம் அதன்பின்பு பூமியில் இருக்கப்போவதில்லை. இதினிமித்தம் தனக்கு வரப்போகும் கன்னிமைக்குறித்து துக்கம்கொண்டாடபோனாள்; தந்தைக்குப்பின்பு வம்சம் இல்லாமல் போவதால் அவளுடைய வாழ்வில் அது ஒரு பெரிய தியாகம் (sacrifice), இஸ்ரவேலில் ஒரு பெரிய துக்கமான செய்தி (34ம் வசனம்)." மேலும் டேக்ஸ் கூறும்போது, "அவள் தன் வாழ்நாள்முழுதும் ஒரு ராஜகுமாரத்திபோன்ற வாழ்வை விட்டு ஆசரிப்புக்கூடாரத்தில் ஒரு வேலைக்காரிபோல இருக்கவேண்டும். மீதியானியருடன் யுத்தத்துக்குப் பின்பு கன்னியர்கள் தேவனுக்கென்று இப்படியாக முழுக்க அர்ப்பணித்துகொண்டனர். (எண் 31:35-40). இப்படி அர்ப்பணித்துக்கொண்டபின்பு கூடாரத்தைவிட்டு தங்களுடைய தோழிகளுடன் வெளியே போகமுடியாது. எனவே இதுவே தோழிகளுடன் இரண்டுமாதம் மலைகளில் போய் வந்ததன் காரணமாக இருந்திருக்கக்கூடும்"
NIV மொழிபெயர்ப்பில் "இரண்டுமாதம் தோழிகளுடன் .... எனக்கு தாருங்கள், ஏனெனில் நான் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லையே" என்று கூறப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுதும் கன்னியாக இருந்தாள் என்பதற்கு இன்னொரு சிறந்த ஆதாரம் 11:39ல் வாசிக்கிறோம். "அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாமல் இருந்தாள்." இந்த இரண்டு தனித்தனி வாக்கியங்களில் அவள் புருஷனை அறியாமல் வாழ்ந்தாள் என்று சொல்லலாம்.
Living Bible-ல் "அவள் திரும்பி தன் தகப்பனிடம் வந்தாள், அவன் பொருத்தனியின் படியே அவளுக்குச் செய்தான். எனவே அவள் ஒருபோதும் திருமணம் செய்யாமல் இருந்தாள்." என கூறப்பட்டுள்ளது; அதாவது அவள் கர்த்தருடைய பங்கு என்று அர்ப்பணிக்கப்பட்டாள்.
அடுத்ததாக: "இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று".
எபிரெய பாஷையில் புலம்புவது (lament) என்னும் இடத்தில் "tanas" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது துதிப்பது அல்லது நன்றி செலுத்துவது என்று பொருள். எனவே அவள் செய்த தியாகத்தினிமித்தம் வருடந்தோறும் துதித்தார்கள் என்று பொருள். அவள் உயிரோடு இல்லாவிட்டால் King James மொழிபெயர்ப்பில் வருடந்தோறும் சென்று அவளுடன் பேசினார்கள் (Talk with) என்று எப்படி சொல்லப்படும்?
இஸ்ரவேல் ஜனங்கள் பின்மாற்றம் அடைந்து சிலர் தங்களுடைய பிள்ளைகளை தீயில் எரித்தபோது தேவன் எரேமியா 7:31ல் சொல்லுகிறார்: "இப்படி நான் கட்டளையிடவும் இல்லை, என் மனதில் தோன்றியதுமில்லை". மேலும் "கொலை செய்யாதிருப்பாயாக" என்று சொல்லிய தேவன், ஆபிரகாமை தடுத்து நிறுத்திய தேவன் அப்படிச் செய்ய அனுமதிக்கமாட்டார்.
யெப்தா தேவனுக்கு விரோதமாக செய்திருந்தால் விசுவாச வீரர்களின் பட்டியலான எபிரெயர் 11ல் இடம் பெற்றிருக்கமாட்டார்.
யெப்தா தன் மகளை பலியாக செலுத்தவில்லை.