Monday, October 4, 2010

57. புதிய ஏற்பாடு சபைக்கு தசமபாகம் கட்டளையாக கொடுக்கப்பட்டதா?


பதில்: ஆம் ! தசமபாகம் (tithe) செலுத்தவேண்டும்.

முன்னோட்டமாக:
தசமபாகம் என்றால் பத்தில் ஒரு பங்கு. தசம் என்றால் பத்து. (ஹிந்தியில் தஸ் என்றாலும் பத்து). கணிதத்தில் வரும் எண்களிலும் புள்ளி வரும் இடத்தை "தசம ஸ்தானம்" என்பர். தேவன் நமக்கு கொடுப்பதில் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு திரும்ப செலுத்தவேண்டும். புதிய ஏற்பாட்டில் தசமபாகத்தைக் குறித்து பற்றி பார்ப்போம்.

[A] தசமபாகம்:
[1] லூக்கா 11:42ல் இயேசு சொல்லும்போது: "பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே".

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும் என்பதில் தசமாகம் என்ற கட்டளையை விடாதிருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் காணலாம். கட்டளை என்றால் கைக்கொள்ளவேண்டும் அல்லவா?

[2] இயேசு சொன்னார்: லூக்கா 18:10-12 "இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."

மேலே சொல்லப்பட்டதில் இவர்கள் ஜெபித்தது புதிய ஏற்பாட்டு காலத்தில்தான். அங்கே தசமபாகம் செலுத்தும் பழக்கம் இருந்தது என்பது மறுக்கப்படமுடியாதது.

[3] அப்போஸ்தலனாகிய பவுல் மெல்கிசெதேக் பற்றி எபிரெயர் 7ல் சொல்லும்போது. ஆபிரகாம் இவனுக்கு "எல்லாவற்றிலும்" தசமபாகம் செலுத்தினான் என்று சொல்லுகிறான். நாம் நன்கு அறிவோம் பவுல் புதிய ஏற்பாட்டுகாலத்தை (கிறிஸ்து பிறந்த பின்பு வரும் காலத்தைச்) சேர்ந்தவர். பவுலின் காலத்திலும் தசமாகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரிந்ததால் அதைக்குறித்து அவர் தைரியமாக் எழுதுகிறார். இது பவுலுடைய காலத்தில் தசமபாகம் கொடுக்கும் பழக்கம் இருந்ததை உறுதிசெய்கிறது.


மல்கியா 3:8-10ல் "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

தேவனையே சோதித்துப் பாருங்கள் என்று இந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் பைபிளில் உள்ளது. எனவே தசமபாகம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் அப்படி நீங்கள் கொடுக்காவிட்டால், வீண்செலவுகள் மருத்துவர் செலவு, வாகனச் செலவு ... என்று வரும். ஏனெனில் நீங்கள் தேவனுடைய பணத்தை திருடிய குற்றவாளிகள் ஆகிறீர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட விளக்கம். மேலும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாமல் காணப்படும்.


[B] காணிக்கை
இது போக, நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். ஏழைகளுக்கு உதவுவது என்பதும் இதை உள்ளடக்கும்.

பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.

சிந்தனைக்கு:
1998 ம் வருடம் ஒரு போதகர் திடீரென்று என் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலையில் வந்தார். சற்றுநேரம் பேசிவிட்டு நான் அவரை வழியனுப்பிவைக்கும் போது என்னிடம் இருந்த 20 டாலரை காணிக்கையாக அவரிடம் கொடுத்து அனுப்பினேன். அச்சமயம் அவ்வளவுதான் என்னுடைய பணப்பையில்(Wallet) இருந்தது. அதை கொடுத்துவிட்டேன். என்னிடம் இருந்ததை கொடுத்துவிட்டதால் என்னிடம் அப்போது வேறு பணம் ஏதும் இல்லை. அவர் சென்றபின் சாப்பிட என்னசெய்வது...என்று யோசித்தேன். என்னிடத்தில் வாகனம் இல்லாத காலம் அது. வங்கிக்குப் போகவேண்டுமென்றால் சற்றே தூரம். சரி அருகிலுள்ள கடைக்கு சற்றே நடந்து போய்வரலாம் என்று சொல்லி "Lucky's" (தற்போது அதன் பெயர் Albertsons) என்ற ஒரு கடைக்கு உள்ளே சென்றேன். அங்கே மிகவும் வயதான ஒரு மூதாட்டி என்னிடம் வந்து, "Here.., this is for you" என்று சொல்லி கையில் ஏதோ கொடுத்துவிட்டு சென்றார்கள். கையை திறந்துபார்த்தேன் 20 டாலர். ஏறெடுத்து அவர்களைத் தேடியபோது அந்த மூதாட்டி எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. மனதில் ஒருவித ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியும், அதே சமயம் தேவன் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறாரே என்பது நெஞ்சைத் தொட்டதால் உள்ளே அழுகை கலந்த உணர்வும்.

"கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்பதற்கு இது ஒரு சிறிய சாட்சி. நிச்சயமாக உங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவங்கள் இருக்கும் என்று எண்ணுகிறேன்.


7 comments:

deva said...

thank good message

Anonymous said...

Very Nice.Thank you for your brief explanation by ACMSuresh.

rkabc561 said...

ஐயா,

உங்கள் பதில் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனாலும், தசமபாகம் யாரிடம், எங்கே, எப்போது, எப்படி கொடுக்கவேண்டும் என்பதை கூறினால் மிகவும் பிரயோஜனமாயிருக்கும். நன்றி!

Anonymous said...


3 வித்தியாசமான தசம பாகங்கள்.

December 13, 2013 at 11:00pm


◾லேவியருக்கான தசம பாகம்

லேவியருக்குக் கொடுக்க, லேவியருடைய பட்டணங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்தத் தசம பாகத்தில், பத்தில் ஒரு பங்கை, ( உபதசம பாகம் ) ஆசாரியர்களுக்கு லேவியர் செலுத்தினர். பணமாகத் தசம பாகம் ஒரு போதும் கொடுக்கப் படவில்லை. விளைந்த பயிர் வகைகள், பழ வகைகள் மற்றும் கோலின் கீழ் கடந்து சென்ற 10 வது மிருகமும், மட்டுமே தசம பாகமாகச் செலுத்தப்பட்டன. எல்லா 6 வருடங்களும், அறுவடை முடிந்த பின்னர் செலுத்தப் பட்டன.
◾பண்டிகைத் தசம பாகம்

எருசலேமுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. உபதசம பாகம் இல்லை. பணமாகத் தசம பாகம் ஒரு போதும் கொடுக்கப் படவில்லை. விளைந்த பயிர் வகைகள், எண்ணை, திராட்சை ரசம் மற்றும் முதல் பிறந்த மிருகங்கள் செலுத்தப் பட்டன. தசம பாகம் கொண்டு செல்லும் உரிமையாளர்கள், வேலைக்காரர்/காரிகள் மற்றும் லேவியர்கள் எருசலேமில் தசம பாகத்தை உண்டு, அருந்தினர். எல்லா 6 வருடங்களும், 3 பயணப் பண்டிகைகளில் செலுத்தப்பட்டது.


◾தான தர்மத் தசம பாகம்

நகர எல்லைக்குள் தசம பாகம் வைக்கப்பட்டது, வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. உபதசம பாகம் இல்லை விளைந்த தானியங்கள் மட்டும். (செப்டுவாஜின்ட் பழங்கள் என்று சொல்கிறது) விலங்குகள், பணம் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் மற்றும் ஆறாம் வருட இறுதியில் மட்டும் இத் தசம பாகம் கொடுக்கப் பட்டது. நகர எல்லைக்குள் வாழ்ந்த லேவியர், விதவைகள், ஏழைகள், அனாதைகள், ஊரில் வசித்த அந்நியர்கள் இந்தத் தசம பாகத்தை சாப்பிட்டனர். இந்தத் தசம பாகத்தைக் கொடுத்த பின், உரிமையாளர் ஒரு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும்.

mahimairaj sinnarajah anton said...

m

Helan said...

சிறந்த விளக்கம். ஆனால் உழைப்பின் பலனில் மட்டுமா கொடுக்க வேண்டும்? நான் ஒரு மாணவி. இன்னும் உழைக்கத் தொடங்கவில்லை. நான் தசமபாகம் கொடுப்பது சரியா?

Tamil Bible said...

மாணவர்கள் கொடுக்கத்தேவையில்லை.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

தள-அடையாளம் இல்லையெனில் "Name/URL" பயன்படுத்தி கருத்து இடவும்.