Tuesday, November 23, 2010
63. மனிதர்களை தேவர்கள் என யோவான் 10:34ன்படி அழைக்கலாமல்லவா?
கேள்வி:
யோவான் 10:34, 35-ல் "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க" என்று வாசிக்கிறோம். எனவே நாம் மனிதர்களை தேவர்கள் என அழைக்கலாம். பிசாசும் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று அழைக்கப்படுகிறான். அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார். எனவே இயேசுவை தேவன் என்பது தவறல்லவா?"
பதில்: இல்லை
செய்தி: "இந்தியாவைச் சேர்ந்த ராமன் என்பவர் ஒரு கடையில் கைக்கடிகாரத்தை (wrist watch) திருடிவிட்டார்".
இந்த செய்தியைப் படித்துவிட்டு: "இந்தியர்கள் திருடர்கள்" என்றும், "ராமன் என்ற பெயர் உடையவர்கள் கைக்கடிகாரத்தை திருடுபவர்கள்" என்றும் சொல்வது "அவசரத்தில் பொதுவாக்குதல்" (Hasty generalization) என்ற விவாதப்பிழையின்கீழ் வரும்.
முதலாவதாக, "தேவ வசனத்தைப்பெற்றவர்கள் தேவர்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது; எல்லாரையும் அல்ல. அந்த வசனமானது சங்கீதம் 82:6-லிருந்து இயேசுவால் எடுத்து குறிப்பிடப்பட்டது. இதை புரிந்துகொள்ளும் முன்பு சங்கீதம் 82 இங்கே...
சங்கீதம் 82
1. தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4. பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7. ஆனாலும் நீங்கள் [மற்ற] மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
8. தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
அங்கே அவர்கள் குற்றவாளிகள் என்று தேவன் நியாயாம்தீர்க்கும்வகையில் சொல்கிறார்.
முதலாம் வசனத்தில் "தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். (God presides among the gods)"
==> இங்கே தேவர்கள் யார் ? தேவன் யார்?
நம்முடைய கண்களுக்கு முன்னே ஒரு நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தில் ஏழைக்கும் திக்கற்றவர்களுக்கும் சரியாக நியாயம் விசாரிக்காமல், துன்மார்க்கனுக்கு முகதாட்சணியம் பண்ணி அநியாயத்தீர்ப்பு செய்யும் நியாயாதிபதிகளாகிய இவர்களும் "தேவர்கள்" (Elohim) என்றழைக்கப்பட்டனர். தேவன் இங்கே மற்ற தேவர்கள் தன்னைப்போலொத்தவர்கள் அல்ல, தன்னைப்போல் நீதியுள்ளவர்கள் அல்ல என்று அங்கே உள்ள நியாயாதிபதிகளைத்தான் சொல்கிறார். பழைய ஏற்பாட்டில் நியாயாதிபதிகள் (Judges) தேவனுடைய கட்டளைகளைப் படித்தவர்கள்; அதாவது தேவனுடைய வசனத்தைப் பெற்றவர்கள். தேவன் தான்செய்வதில் ஒரு சிறு பகுதியை இவர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்ததால் அவர்களுக்குத் தேவர்கள் என்ற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. இதை எபிரெய மொழியில் உள்ள வேதாகமத்தில் படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். நாம் இப்படியாக வாசிக்கிறோம்:
யாத்திராகமம் 21:6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி,
==> தமிழில் மொழிபெயர்த்தவர்கள் நியாயாதிபதிகள் என்று கொடுத்துள்ளனர்.யாத்திராகமம் 22:28. நியாயாதிபதிகளை (தேவர்கள் - Elohim) தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
Thou shalt not revile the gods, nor curse the ruler of thy people. (KJV)
==> ஆங்கிலத்தில் "gods" என்பதைக் காணவும்.
யாத்திராகமம் 22:8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் (தேவர்கள் - Elohim) அவனைக் கொண்டுபோக வேண்டும்.
மேலே எல்லாம் தேவர்கள் என்று நியாயாதிபதிகளை குறித்து சொல்லப்பட்டுள்ளது.
சங்கீதம் 138:1-லும் "உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு (நியாயாதிபதிகள் / ஆளுபவர்களுக்கு) முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்று வாசிக்கிறோம். எனவே அக்காலத்தில் சங்கீதம் 82:1-ன்படி நியாயாதிபதிகள் என்பவர்களையே தேவர்கள் என்றனர்.
யோவான் 10:34ல் தேவ தூஷணம் என இயேசுவை யூதர்கள் (நியாயாதிபதிகள், பரிசேயர்கள்) குற்றப்படுத்த முயற்சிக்கும்போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு: "உங்கள் வேதத்தில் நான் உங்களை (நியாயாதிபதிகளை) தேவர்கள் என்று சொன்னதாக வாசிக்கவில்லையா" என்கிறார். நியாயாதிபதிகள் தேவ வசனத்தை, தேவனுடைய கட்டளைகளைப் பெற்றவர்கள். நானோ உங்களுக்கு தேவனுடைய வார்த்தையாகவே வந்திருக்கிறேன், எனவே நான் தேவனுடைய குமாரன் என்பதில் என்ன பிழை? ஆதியாகம் 9:6-லேயே நான் மனிதனுக்கு நீதிசரிகட்டும் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேனே. தேவனுடைய வசனம்/கட்டளை/பொறுப்பை பெற்றவர்கள் தேவர்கள் என்றால், தேவனுடைய வார்த்தையாகிய நான் ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே இருக்கிறேன் என்றால் நான் யார்?
------------------------
இரண்டாவதாக, பிசாசானவன் "இப்பிரபஞ்சத்தின் தேவன்".
இயேசு சொல்லும்போது: "இதோ இவ்வுலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்கிறார்.
ஒரு [நல்ல] தலைவன் என்பதற்கும், "கொள்ளைக்கூட்டத் தலைவன்" என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? இரண்டிலும் தலைவன் என்ற வார்த்தை இருப்பினும் நமக்கு புரிகிறதே. சீரகத்துக்கும் பெருஞ்சீரகத்துக்கும் (சோம்பு) வித்தியாசம் தெரிகிறதே! வெங்காயத்துக்கும் வெள்ளைவெங்காயத்துக்கும்(பூண்டு) வித்தியாசம் தெரிகிறதே! ஆனால் தேவனுக்கும், "இப்பிரபஞ்சத்தின் தேவனுக்கும்" உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.
------------------------
மூன்றாவதாக, "அப்படித்தான் இயேசுவும் தன்னை தேவன் என்றார்" என்பதும் பிழையாகும்.
"அப்படி அல்ல" என்பதை அறிந்துகொள்ளவும்.
- இயேசு பிலாத்துவிடம் விசாரிக்கப்படும்போதும்: "நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவா?" என்ற கேள்விக்கு அவர் "நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்" என்றார். (மாற்கு 14:61)
- மோசேயிடம் தேவன்: நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்; "இருக்கிறேன்(I AM)" என்பவர் அனுப்பினார் என்று சொல் என்றார். இயேசு: ஆபிரகாமுக்கு உண்டாவதற்கு முன்னமே நான் "இருக்கிறேன்(I AM)" என்று சொன்னார்; (யோவான் 8:58) அங்கே நான்தான் அவர் என்று சொல்கிறார்.
- தேவன் ஏசாயாவில் "நான் முந்தினவரும் பிந்தினவரும்தானே" என்று சொன்னதை இயேசு நான்தான் அவர் என்று வெளிப்படுத்தலில் "நான் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்கிறார்.
- மேலும், ஆதியிலே வார்த்தையிருந்தது....அந்த வார்த்தை தேவனாயிருந்தது ... அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்பதிலிருந்து இயேசுதான் அந்த தேவன் என்றும் புரிகின்றதல்லவா? இன்னும் பல வசனங்களை எடுத்து விளக்கிக்கொண்டு போகலாம்.
இயேசு தேவனுடைய குமாரன் என்றும், தேவன் என்றும் ஏற்கனவே கேள்விபதில் 21ல் விளக்கப்பட்டுள்ளது. இயேசு தேவனல்ல என்று சொல்வது பல கூற்றுகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல் சொல்லும் பிழையாகும்.
தமிழில் எத்தனையோ கிராமங்களில் தங்கள் பேரபிள்ளைகளை “சாமி” என்று பாட்டிகள் அழைக்கின்றனர். அதினால் அவர்கள் சாமியா? மனிதன் குட்டி தேவன் அல்ல, தேவனுமல்ல. ஏதேன் தோட்டத்தில் நீங்கள் தேவர்களைப்போல ஆவீர்கள் என்ற ஆசையை தூண்டிவன் பிசாசு. கர்த்தராகிய இயேசுவாகிய தேவன் ஒருவரே மனிதனாக வந்தார்.
பரலோகத்திலும்: "அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை" என்று வாசிக்கிறோம். இங்கே பரலோகத்திலும் மனிதன் தேவனாக வாய்ப்பே இல்லை, ஜனங்களாகவே இருப்பார்கள் என தெளிவாக உள்ளது. எனவே பரலோகத்தில் தேவனாக இருப்போம் என்கிற போதகம் எல்லாம் பிசாசினால் உண்டானது.
சிந்தனைக்கு:
சங்கீதம் 8:5ல் "நீர் அவனை(மனிதனை) தேவதூதர்களிலும் (தேவர்கள் - Elohim என்று சொன்னால்) சற்று சிறியவனாக்கினீர்" என்பதில் உங்கள் கணக்கின்படி மனிதன் குட்டி தேவர்கள், தேவதூதர்கள் பெரிய தேவர்கள் என்பதாகிவிடுகிறது. என்றால் தேவன் யார்?
ஏசாயா 40:25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். ஏசாயா 44:8 என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே;
4 comments:
well said.
இந்த விடயம் எனக்கு புதிது. நல்ல எடுத்துக்காட்டுக்களுடன் அருமையாக விளக்கியிருந்தீர்கள் சகோதரரே. மிக்க நன்றி. கர்த்தர் ஆசிர்வதிப்பார்.
yes there is truth. i am blessed and pleased by this answer un a biblical perspective. pastor gideon abiramam
YES CLEAR ANSWER